உண்ணாவிரதத்தை நிறுத்த உண்ணாவிரதம்


இந்த உலகம் எவ்வளவோ விசித்திரமான காமெடிகளை கண்டுவிட்டது. அதை நாமும் கண்டு களித்தோம், களித்துக்கொண்டு இருக்கிறோம். வரும் காலங்களில் கண்டுகளிப்போம்.

சமீபத்தில் நடந்த பல காமெடிகளின் உச்சமாக இன்று இதோ இந்த காமெடி காட்சி உங்கள் பார்வைக்கு அரங்கேறுகிறது.
*****************
முதல் அமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தால், சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார் (உண்ணாவிரதத்துக்கே உண்ணாவிரதமா??)

முதல் அமைச்சர் கருணாநிதி இலங்கையில் அப்பாவி தமிழர்கள் சிங்கள அரசால் சுட்டுகொல்லப்படுவதை அறிந்து மனவேதனையோடு இருந்த நிலையில், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டு அரசியல் தீர்வு காண மத்திய அரசை நடவடிக்கை எடுக்க சொல்லி பல கட்ட போராட்டங்களை நடத்தினார். (அதில் ஒன்றுதான், கொட்டும் மழையில் எல்லோரையும் மனிதசங்கிலி போராட்டம் நடத்தசொல்லி தன் வாகனத்தில் இருந்தபடியே அதை பார்வை இட்டது).

தற்போதுள்ள கடுமையான முதுகு வலியையும் பொருட்படுத்தாமல், டாக்டர்களின் ஆலோசனைகளையும் கேட்காமல் தன்னை மிகவும் வருத்தி வருகிறார்.

இங்குள்ள சிலர் (ராமதாஸ், திருமாவளவன் அல்ல) அவர் மீதும் அவரின் கழக ஆட்சியின் மீதும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வசைபாடி, குறைகூறி அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். அவர் தன் உடல்நிலையை பொருட்படுத்தாமல் உழைத்தும், வீணர்கள் தொடர்ந்து அவரை குறைகூறி கொண்டிருக்கிறார்கள்.
தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் இறுதி முயற்சியாக தான் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். இது எங்களையும், அவரின் மேல் பாசமும், அவரின் தமிழின் மேல் நேசமும் கொண்டுள்ள கோடானுகோடி தமிழர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது (என்னே வாழும் வள்ளுவனுக்கு வந்த சோதனை?!!)

அவர் பூரண நலம் பெற ஒய்வு மட்டுமின்றி, உண்ணாவிரதத்தையும் தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் (ராமதாஸ் மற்றும் அன்புமணி அல்ல) குழு ஆலோசனை அளித்துள்ளது.

தமிழக மக்களுக்காக ஒரு நாளைக்கு 20 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைத்திடும் முதல் அமைச்சர் கருணாநிதி தமிழ் மக்கள், தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ் சமுதாயம் வளர ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கிற காரணத்தினால் மருத்துவக்குழுவின் ஆலோசனையை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வேண்டுகோளை அவர் ஏற்காத பட்சத்தில், நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதை தவிர வேறு வழி இல்லை என்று வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார். (தல ஆறுமுகம், இதுதான்யா அல்டிமேட் ஸ்டேட்மெண்ட்).

No comments: