மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 3)






நம் விசா வந்து விட்டதா இல்லையா என்ற படபடத்த நெஞ்சத்துடன் ஏஜண்டை கேட்ட போது, விசா வந்து விட்டதாக சொன்னதும் மனதார அனைத்து கடவுளுக்கும் நன்றி சொல்லி பயணத்திற்கு தயாராகினேன்.

ஏர்போர்ட் அடைந்து, அங்கிருக்கும் அனைத்து விஷயங்களையும் முடிக்கும் முன் நாக்கில் நுரை தள்ளிவிட்டது. எத்தனை எத்தனை கேள்விகள்... எத்தனை எத்தனை சோதனைகள் .........

அனைத்து சோதனைகளும் முடிந்து, விமானம் உள்ளே ஏறி அமர்ந்ததும், கண்ணில் அவனை அறியாமல் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

இப்போது அயல்நாடு போனால், தன் சுற்றம், சூழத்தை பார்க்க, எப்போது திரும்பி வருவோமோ?? என்றெல்லாம் எண்ணியது மனது.

விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு கிளம்பியது. சொசுசான விமான பயணம். வண்டி போற மாதிரியே தெரியலையே நம்ம ஊரு பல்லவன் பஸ் 40 கிலோமீட்டர்ல போற போது எப்படி இருக்கும். தூக்கி தூக்கி போடும், சிவ்வுன்னு காத்து அடிக்கும். ஆனா, இது 400 கீமி வேகத்திலே போனாலும் ஒண்ணுமே தெரியலையே... ஒரு சத்தம். வயித்து வலி வந்தா முச்சு பிடிச்சு விடுற மாதிரி ஒரே முக்கல்.... அதே முக்கல்தான் கடைசிவரை.

வந்து இறங்கி தலை நிமிர்த்தி பார்த்தால் என்ன இது, விமான நிலையமா இல்லை இது தான் சொர்க்கபுரியா??. ஆச்சரியத்தில் விரிந்த வாயில், ஒரு நூறு ஈ போய் வந்தால் கூட தெரியாது. என்ன ஒரு வாசனை, சுத்தம் என்று நாட்டின் மதிப்பை இந்த இடத்தை வைத்து மனம் எண்ணி கொள்ளும்.

நாம் அதிர்ஷ்டசாலி என்று உள்ளுணர்வு கூக்குரல் இடும். மிக உயர பறந்து வந்ததால் காது லேசாய் அடைத்து, வயிறு லேசாய் குழம்பி, அசதி சேர்ந்து உடல் சற்று அவஸ்தையாய் இருக்கும்..

புரியாத மொழி, மனிதர்கள், நடப்புகள் என்று எத்தனை படித்தவர் ஆனாலும் சிறு பிள்ளை போல் திருவிழா கூடத்தில் தொலைந்த தோரணையில் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய வேண்டி இருக்கும்.
சவுதி அரேபியா அளவு (போதை மருந்து கடத்தலுக்கு மரண தண்டனை)இல்லையென்றாலும், துபாயிலும், போதை மருந்து வைத்து இருந்தாலோ, கடத்தினாலோ, பெருங்குற்றம். ஆயுள் தண்டனை நிச்சயம் (நம்மூர் போல் 14 வருடங்கள் இல்லை, இங்கு ஆயுள் தண்டனை என்பது 25 வருடங்கள்).

முதல் அதிர்ச்சி, மத்திய கிழக்கு நாடுகளின் வெப்பம் தான். வெயில் காலத்தில் வந்து இறங்கும் அத்தனை பேருக்கும் இந்த அதிர்ச்சி உண்டு. இத்தனை சூடும், இதனை பளீர் என்று சூரியனும் நாம் பார்த்திராதது. கண்கள் இந்த பளீர் ஒளி கண்டு அனிச்சையாய் மூடி கொள்ளும். தோல் இந்த சூடு பார்த்து லேசாய் சொரியும். இந்த அசௌகரியங்களையும் மீறி ஊரின் பணம் பளபளப்பு தெரியும்.

வழுக்கி ஓடும் சாலைகள் மிக பறந்து விரிந்து பிரமாண்டமாய் இருக்கும். இது தாரில் செய்த ரோடா அல்லது பளிங்கில் செய்ததா. ஒரு குண்டு, குழி இல்லையே?? இங்கேயே இல்லை விரித்து, கல்யாண பந்தி போடலாமே??

மிக நேர்த்தியான கார்கள். நம் ஊரில் சொகுசு கார் என்று நாம் சொல்லிய டப்பா வண்டிகள் (கரகாட்டக்காரன் படத்தில் வருவது) போல் இல்லை. ஆடாமல் அசையாமல் படகு போல் மிதந்து செல்லும் குளு குளு வண்டிகள்.

இங்கு ஓடும் வண்டிகளில், ஜப்பான் வண்டிகளுக்கே முதலிடம்.. நல்ல வண்டிகளாக இருந்தாலும், ஐரோப்பிய வண்டிகளின் விலையும், ஓடும் எண்ணிக்கையும் குறைவே. இல்லை என்று சொல்லமால் நம் ஊர் பியட் கார் ஒன்று ஐந்து வருடத்திற்கு முன்னால் ஓடி கொண்டு இருந்தது.. இப்போது அது இல்லை. மஹிந்திரா, ஹுண்டாய் வண்டிகள் சொற்ப அளவில் ஓடுகிறது.

ஒட்டு மொத்த துபாயை பார்த்தால், மிக மிக சிறிய ஊர்தான். சென்னையின் டி.நகர் (T.NAGAR) அளவுதான் இருக்கும்.. இதை படிக்கும் போது, மிகைப்படுத்திய வாக்கியம் என்று நினைக்க வேண்டாம்.

எங்கெங்கு காணினும் ஒருவர் மட்டுமே ஒட்டி செல்லும், படகு கார்கள். ஏனெனில், இங்கு பெட்ரோல் விலை, குடிநீர் விலையை விட குறைவு. பஸ்கள் குறைவு, சாமான்கள் ஏற்றி செல்லும் வாகனங்களும் குறைவு. நகரத்தின் சாலை நெரிசலுக்கு இதுவும் ஒரு காரணம். இதில் ஆச்சரியம் என்னவென்றால், சாலை விஸ்தரிப்புகள் நடந்து கொண்டே இருக்கிறது.

சரி, சாலை வழி கடந்து, தங்குமிடம் வந்து சேர்ந்து விட்டோம். என்ன, அந்த பிரம்மாண்டம் மட்டும் இன்னும் மனதிலும், கண்ணிலும் தேங்கி இருக்கிறது.

இங்கே என்ன !! .............

மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 2)








அன்னிய தேசம் வந்து திரவியம் தேடும் ஆசையில் தங்கள் வாழ்வை தொலைத்த எத்தனையோ கண்ணீர் கதைகள் உண்டு.

கட்டிக் கொடுத்து கரை ஏத்த இரண்டு பெண்கள், சரியான படிப்பு இல்லை, வேலையும் இல்லை. இனி என்ன செய்யலாம் என்று திகைத்த போது,வாழ்வே கேள்வி குறி ஆனது. சமுகத்தின் கேலிப் பேச்சு இதயத்தை துளைக்கும்.

அக்கம் பக்கத்து வீட்டு அனுபவம், தீர்வு போலே தோன்றும். எங்க பையன் துபாய்ல வேலை செய்யறான், மாசத்துக்கு இத்தனை பணம் அனுப்புரான் என்பது போன்ற நம்பிக்கை வார்த்தைகள்.

அப்படியா !!! வாழ்வு சிறிது நம்பிக்கை தரும்.

சரி எப்படி போவது. எவ்வளவு பணம் வேண்டும், பார்ப்போம்.....அங்கும், இங்கும், இங்கும், அங்கும் சுற்றி ஒரு வழியாக ஒரு பயணத் தரகர் அறிமுகம் கிடைத்துவிடும். அவரின் அலுவலகத்தின் உள்ளே போகும்போது, ஏதோ சொர்க்கத்தின் கதவுகளையே திறந்து கொண்டு போவது இருக்கும்.

ஆச்சரியம், பிரமிப்பு...... இந்த அலுவலகத்தின் வாசலை மிதித்த எத்தனையோ ஆயிரம் பேர், இப்போது, உங்களின் பல பகுதிகளிலும் பறந்து விரிந்து காணப்படுவார்கள் என்றெல்லாம் எண்ணியபடி.

அவரது குளுகுளு அறையும்,சுவரில் உள்ள ஆகாய விமான படமும், தலை சுற்றி ஏதோ ஒரு உலகுக்கு இழுத்து செல்லும்.

அது ஏன், என்னன்னு தெரியல எல்லா ஏஜெண்ட் ஆபிஸ்லயும் ஒரு பொம்மை விமானம் இருக்கும். … வரவேற்பறையில் கூட்டமாய் சில மனிதர்கள். நம்பிக்கை முகத்தில் ஒளிர் விட உலகையே வென்ற தோரணையில் அங்கே அமர்ந்திருக்கும் பயணம் செய்ய காத்திருக்கும் கூட்டம். இந்த கூட்டத்தில் நிச்சயம் ஒரு ப்ரஹஸ்பதி இருப்பார். அவர் முன்னமே இது போல் பல நாடுகள் சுற்றிய உலகம் சுற்றும் வாலிபர்.

அவர் அளந்து விட்ட கதைகள் நாம் முந்தைய பாகத்தில் விவாதித்தது. எது... பெட்ரோலும், பிரியாணியும். விசா, இக்காமா என்று புதிய வார்த்தைகள் சொல்லி மசாலா தடவி… போட்டு தாளிப்பார். நாடுகளை பற்றியும், நடப்புகளை பற்றியும் விளக்கம் தந்து பாடம் எடுப்பார். வேறு வேறு நாட்டின் பல காசுகளை (நோட்டையும் தான்) எடுத்து காண்பிப்பார். இந்த ரூபாய் ஒண்ணு குடுத்தா, நம்ம ஊர்ல, 10 ரூபாய், இதோ இருக்கே, இத குடுத்தா, நம்ம ஊர்ல, 130-140 ரூபாய் என்று ..........

சரேலென, சட்டை பையில் கை விட்டு, பாரின் சிகரெட் எடுப்பார். ஸ்டைலாய் பத்த வைத்து, நமக்கும் தானம் செய்வார்.

ஊரில் செய்யது பீடி குடித்தவர் சொல்லுவார், இப்போல்லாம் அது என்னவோ, "பாரின் சிகரெட் தான் ஒத்துக்குது. இல்லேன்னா, தொண்டை பிடிச்சிகுது". கனவுகளோடே இவன் சிகரெட் பிடிப்பான். துளைத்து துளைத்து கேள்விகள் கேட்பான். அவர் சட்டை பையில் திருப்பி வைத்த, அந்த நோட்டுக்களையே பார்த்து கொண்டிருப்பான். அவன் மனதில் தோணும் .....நாமும் இதுபோல் நிறைய சம்பாதிக்கணும் .........

உள்ளே சென்றால் ஏஜெண்ட், முக்காலே மூணு வீசம் தொலைபேசியிலே பேசுவார். நமக்கு சொல்ல விரும்பும் சேதிகளை அவர் போனில் பேசுவார். (இந்த காட்சி நம் கவுண்டமணி சூரியன் படத்தில் பேசும் டகால்டி தொலைப்பேசி காட்சி போலவே இருக்கும்). ஆனாலும், ஒட்டு கேட்டது உண்மை என்று நம்பியும் விடுவோம்.

நாம் அவரை உன்னிப்பாக கவனிக்கிறோமா என்று ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, தாறுமாறாக, என்ன என்னவோ பேசுவார். "நாளைக்கு ஐம்பது பேர் சவுதி போயி ஆகணும், .... என்னது, விசா கிடைக்காதா, ஹலோ, கிடைக்கலேன்னா, சவுதி ராஜா கிட்ட சொல்லு, கொல்லிமலை சோலமலை சார் கண்டிசனா சொல்லிட்டாருன்னு... ஆமா .... நாளைக்கே வந்தாகணும் ....... ஊர்ல எல்லாரையும் நாளைக்கே வர சொல்லிட்டோம்ல .....நமக்கு ஒரு நாக்கு ஒரு வாக்கு." அது என்னிக்கும் மாறாது....

அவர் பேச்சு இன்னும் தேன் தடவியது போலே இருக்கும். தம்பி, இப்போ நீங்க குடுக்கற இந்த பணம், செலவு இல்ல, முதலீடு என்று ("சிவாஜி"யில் நடிகர் சுமன் சொல்வது போல) .. ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், பயணம் நிச்சயம். ஊருக்கு போன 8-10 மாசத்துலயே அந்த லட்ச ரூபாய் சம்பாதிச்சுடலாம். நாளைக்கே பணத்தோடு வந்துடுங்க...... அடுத்த பேச்சுல (BATCH) அனுப்பிடறேன்.

அப்புறம் என்ன, பளபளப்பாய் உடை அணியலாம், பாரின் செண்ட் போடலாம். விதம் விதமாய் உண்ணலாம். சமுதாய மதிப்பு பெருகும். வீட்டின் கடன்களும், கடமைகளும் ஒரு ஐந்து வருடத்தில் முடித்து விடலாம். இதை விட வேறு என்ன வேண்டும். லேசாக கண்ணை மூடினால், புகையுடன் கூடிய கனவுதான்...........

இது போக, ஒரு 1-2 வருசத்துல, ஊருக்கு திரும்பி வந்தீன்னா, ஊர்க்கார பய அம்புட்டு பேரும், தன் பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ, கல்யாணம் பண்ணிக்கோன்னு வரிசைல வந்து நிப்பானுவ. இப்படி, கல்யாண பேச்சை கொணர்ந்து, பையனை வளைத்து விடுவார். பையனின் முகமும் 100 வாட்ஸ் பல்ப் போல பிரகாசமாகும். இதையும் கவனித்து, பையனுக்கு இப்போவே கல்யாண களை வந்துடிச்சி என்று சொல்லுவார்.

அதே மப்பில் திரும்பி வந்து, கடனை, உடனை வாங்கி, காடு கரையை வித்து, எப்படியோ பணம் தேத்தி, பாழாய் போன ஏஜெண்டிடம் தந்து ஏமாந்தவர் நிறைய பேர்.

'எனக்கு அப்பவே தெரியும் இதெல்லாம் பாரின் போற மூஞ்சியா' என்ற பொறாமையின் உச்சகட்ட வசவுகளையும் கேட்டு வாடிய மலர்கள் பல.

இதை விட கொடுமை. பயணம் எல்லாம் ஏற்பாடு ஆகி வீட்டில் எல்லாம் பிரியாவிடை பெற்று ஜம்மென்று கிளம்பி விடுவார். "இன்னைக்கு சென்னை பம்பாய் ப்ளைட், நாளை மறுநாள் பம்பாய்ல இருந்து நேர பாரின்".

இதை கேட்டதும், அன்றைய ராத்தூக்கம் போச்சு. தன் மனதுக்கு பிடித்த, நடிகைகள் கனவில் (இது கண் முழித்தே காணுவது) வந்து, நம் நாயகனின் கை பிடித்து டூயட் பாடுவார்கள்.

சில சமயம் நடப்பது என்னவோ பம்பாய் சென்று மாத கணக்கில் காத்திருக்கும் கொடுமை உண்டு. அங்கேயும் நிறைய நம்மை போலவே ஆட்கள் உண்டு. காலை விடிந்தால் இன்று விசா வரவேண்டும் என்று பிரார்த்தனைகள்.

போயிட்டு வாரேன் என்று சந்தோசமாய் சொல்லி விட்டு செல்லும் பக்கத்து அறை தோழன் . இவன் இன்று நான் என்று என்ற ஏக்கம். இந்த நிச்சயமிலாத நரகத்தில் வாழ்ந்த நிகழ்வுகளும் உண்டு.

ஒரு வழியாக விசா வந்துவிடுகிறது. ஆனால் ...............

(தொடரும்.........)

மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 1)








துபாய்.

இது என்ன ஒரு ஊரின் பெயரா, இல்லை ஒரு நாட்டின் பெயரா. ஒரு வட்டாரத்தின் பெயரா என்ற தெளிவு இல்லாது, பெயர் சொன்னதுமே மனதில் மரியாதை. கொப்பளிக்கும் மகிழ்ச்சி. ஒரு சொர்க்க புரி கண்ணில் விரியும்.

ஐக்கிய அரபு நாட்டில் உள்ள ஒரு ஊர் தான் துபாய் என்றால் நிறைய பேருக்கு தெரியாது. அதிலும் குறிப்பாக கிராமங்களில் உள்ள மக்களுக்கு, குவைத், சவுதி என்ற மத்திய கிழக்கு நாடுகள் எல்லாமே கூட துபாய் தான்.

சரி, இது என்ன புது பெயர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

அபுதாபி (தலைநகரம்) துபாய், சார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராஸ் அல் கைமா (நம்மூர் மட்டன் கைமா அல்ல), புஜைரா, அல் அய்ன் என்று நம் தமிழ் வாயில் நுழையாத அரபி பெயர்களை கொண்ட 7 குட்டி ஊர்கள் சேர்ந்த நாடே அமீரகம் என்றும் அழைக்கப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

இந்திய தேசத்திற்கு மட்டும் அல்லாது வெள்ளைக்காரனுக்கும் இந்த ஊர் பிடிக்கும். இந்த ஊரை பற்றி மரியாதையான ஒரு எண்ணம் உண்டு. வெள்ளைக்காரன் என்ற ஒரு சொல்லிலேயே, ஐரோப்பிய, சீன, மங்கோலியா வழிவகைகள் அனைத்தையும் அடக்கி விட்டேன்.

நம் தங்க தமிழ்நாட்டிலே "துபாய்" என்ற பெயருக்கும், இங்கிருந்து வாங்கிப்போகும் தங்கத்திற்கும் கொஞ்சம் (ரொம்பவே) மவுசு உண்டு. இதுவே எல்லை தாண்டி சேர நாடு (கேரளா) சென்றால் இன்னும் மவுசு, உபரியாய் பவுசு, சொகுசு எல்லாம் கிடைக்கும். சற்று மேலே நகர்ந்து வடநாடு சென்றால்... சாரி அவ்வளவு இல்லை.

துபாய் பற்றி நமக்கு தெரிந்தது, இந்த துபாய் சென்று திரும்பி வந்த சில "தலைகள்" சொன்னது. அவர்கள் சொன்ன செய்தி கேட்டு, நாம் கூட பல சமயங்களில் அதிசயித்து இருக்கிறோம்.

போய் கொண்டே இருப்போம். பெட்ரோல் காலி ஆச்சுன்னா ரொம்ப கவலை பட மாட்டோம். சரின்னு சொல்லி வண்டிய நிறுத்திவிட்டு ஒரு தண்ணிர் பாட்டில எடுத்துட்டு, ரோட்டோரமா போய், மண்ணை தோண்டி பெட்ரோல் எடுத்து ஊத்தி வண்டியை ஓட்டிடுவோம்.

இதை அட்டகாசமாக நாம் அனைவரும் நம்பும்படி சொன்ன அதிபுத்திசாலி என்ற "அதிமேதாவி அங்குராசு" போன்றவர்களை உங்களுக்கு நிச்சயம் வேறு பெயரில் வேறு ஒரு நிகழ்வில் பரிச்சயம் இருக்கும்.

இன்னொரு விஷயம், இங்கு டீக்கடைகளில் எல்லாம் ஒட்டகப்பாலிலே தான், டீயே போடுவார்கள் (இது வடிவேலு, ஒரு படத்தில் சொன்ன டகால்டி), ஆனால், உண்மையில் பல அங்காடிகளிலே ஒட்டகப்பாலை பார்த்து இருக்கிறோம், அவ்வளவுதான், பருகிய அனுபவம் இல்லை.

எங்க ஊரு மச்சான் சொன்ன கதை இது. "இங்கே சாப்பாடு எல்லாம் பைப்புல வரும். ஒரு பைப்பு தொறந்தா பிரியாணி வரும், இன்னொரு பைப்பு தொறந்தா சாம்பார் சாதம் வரும்" என்று என் பொறாமை தீயை தூண்டியதும் அல்லாமல், "மட்டன் பீசு சிக்கிக்காது" என்ற போது "அது பெரிய பைப்பு" என்ற டகால்டி எல்லாம் நமக்கு அறிமுகம்.

இறை அருளால் துபாய் மண்ணை நேரில் பார்த்து, அங்கேயே வருடங்களாய் வாழும் பாக்கியம் வாய்த்ததால், பெட்ரோல், பிரியாணி தவிர வேறு பல விஷயங்களை பற்றியும் நேரடி தகவல் தர ஆசையும், அக்கறையும் உண்டு.

இத்தகைய தாக்கம் ஏன் வந்தது.

உள்ளுரில் விலை போகாத சரக்கு, துபாய் வேலை வாங்கி அரபு மண்ணில் கால் பதிக்கும். வெப்பக்காத்து காதை உரச, சாதிக்கும் மற்றும் பாதிக்கும் சில பல, பல, சில விடயங்களை இங்கு பட்டியல் இடுகிறேன்.

***************

முதலில், சொல்ல வேண்டுமானால், யார் யார் எல்லாம் இந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு வருகிறார்கள்? எப்படிப்பட்ட வேலைக்கு வருகின்றார்கள்? இங்கு தற்போது நிலவும் சூழல் என்ன? தோள் தட்டி, புஜ பராக்கிரமம் காட்டி புறப்பட்ட அனைவரும், வெற்றி வீரர்களாக தாயகம் திரும்புகிறார்களா? மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இங்குள்ள நிறை மற்றும் குறை என்னென்ன என்ற பல விஷயங்களை விரிவாக பார்க்கலாம்.

சாப்ட்வேர் எஞ்சினியர்கள் எல்லாம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு படை எடுக்கிறார்கள். கட்டுமானம் சம்பந்தப்பட்ட படிப்பாளிகள், மற்றும் கடின உழைப்புக்கு தயாரான உழைப்பாளிகள் துபாய் (யு.ஏ.ஈ. என்ற நாட்டின் ஒரு நகரம்), கத்தார், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு படை எடுக்கிறார்கள்.

(தொடரும் ............. )

ஆண்டு விடுமுறை - பொங்கும் உற்சாகம்


அயல்நாட்டு வேலைவாய்ப்பு, கை நிறைய சம்பளம், பை நிறைய சேமிப்பு. ஆண்டுக்கு ஒரு முறை தாயகம் திரும்பலாம். விடுமுறைக்கு தாயகம் வரும்போது, வேலை செய்யும் நாட்டில் இருந்து, அனைத்துவிதமான பொருட்களையும் தாயகத்திற்கு அள்ளி செல்லலாம்.

ஒவ்வொருவருக்கும் (தன் நாட்டையும், தன் குடும்பத்தையும் பிரிந்தவர்கள்), ஆண்டு விடுமுறை என்பது மிகவும் குதூலிக்கதக்கதாக இருக்கும். இதற்கு அயல்நாடுகளில் வேலை செய்யும் யாரும் விதிவிலக்கு அல்ல. சொந்த பந்தம், நண்பர்கள் என அனைவரையும் காணும் வாய்ப்பு பெறுவோம்.

மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவோர், பல்வேறு சிரமங்களுக்கிடையில்தான் பணிபுரிகின்றனர். நீண்ட வேலை நேரம், வாரத்திற்கு குறைந்தது 6 நாட்கள், அதிகபட்சம் 8 நாட்கள் (ஒரு நாளைக்கு 12 மணிநேரம்) வேலை. விடுமுறைகள் குறைவு. வெயில் காலம் நரகம். வெயிலின் உக்கிரம், நம்மை சுட்டெரிக்கும் (அதிகபட்ச வெப்பநிலை 50 டிகிரிக்கும் மேல்).

இந்த குளோபல் க்ரைசிஸ் வேறு இங்கு பணிபுரியும் அனைத்து தரப்பு மக்களையும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது. இன்று அட்டன்டன்ஸ் போட்டு விட்டோம், அதனால் இன்றைய சம்பளம் நிச்சயம், நாளை என்ன ஆகும் என்பது நிச்சயம் இல்லை என்பது தான் இன்றைய கசப்பான உண்மை நிலை.

கடின உழைப்பை மட்டுமே நம்பி வாழும் லட்சோப லட்சம் குடும்பத்தார் இங்கு உள்ளனர். தற்போது, அவர்களின் முகத்தில் ஒரு வெறுமையும், ஏமாற்றமும், நம்பிக்கையின்மையும் தான் தென்படுகிறது.

விடுமுறைக்கு விண்ணப்பம் அளித்ததும், அப்போதுதான் தங்கள் தேவை மற்றும் சேவை கம்பெனிக்கு தேவை என்பதுபோல், 3-4 மாதம் கழித்து போங்களேன் என்ற பதில் வரும். வேலை செய்வது மட்டும் அல்ல, விடுப்புக்கு போவது கூட, கம்பெனியின் கையில் (முடிவில்) தான் இருக்கும். சரி என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

வேண்டுமானால், விடுமுறையை ஒரு மாதத்திலிருந்து 20 நாட்களாக குறைத்து கொள்கிறேன் என்று சொல்லி, நாம் நினைத்த நாளிலேயே பயணம் செய்யலாம்.

மொத்தத்தில் நாம் அனைவரும் சூழ்நிலை கைதிகளாகவும், பணிபுரியும் அலுவலகங்களின் அடிமைகளாகவுமே இருக்கிறோம் / இருப்போம்.

இன்று சிரித்த முகத்தோடு வேலை செல்பவர், எங்கே யாராவது தம்மை அழைத்து விடுவார்களோ என்று பயந்த படியே அலுவலகத்தில் அமர வேண்டி இருக்கிறது. அப்படி, யாரேனும் கூப்பிட்டால், ஒரு கவர் அன்றி வேறு எதுவும் கையில் தரப்படுவதில்லை. அந்த கவரில், கண்டிப்பாக ஊக்கத்தொகையோ, சம்பள உயர்வுக்கான தகவலோ இருக்கப்போவதில்லை. ஒரு மாதம் நோட்டிஸ் போன்ற ஏதாவதொரு அணுகுண்டு தான் இருக்கும்.

இங்கு விஷம் போல ஏறி வரும் வீட்டு வாடகை, சாப்பாடு விலை, டெலிபோன் கட்டணம், டாக்சி கட்டணம் (குறைந்த பட்ச மீட்டர் கட்டணம் திராம் 10, நீங்கள் 4-5-6 திராம் அளவு பயணித்து இருந்தால் கூட), ஸ்கூல் கட்டணம் (குடும்பத்தோடு இருப்பவர்கள் பாடு பெரும் திண்டாட்டம்) ........ இப்படி, உங்களை சேமிக்க விடவே மாட்டேன் என்பது போன்ற ஒரு சூழல்.

இதனால், உங்கள் சேமிப்பு என்ற ஒன்று, தற்போதைய சூழலில், பெரிய அளவில் ஒன்றும் இருப்பதில்லை. கைக்கும், வாய்க்குமாக பெரும்பாலோரின் வாழ்வுநிலை உள்ளது.

மகிழ்ச்சியாக ஊர் செல்லும் அனைவரின் மனநிலையை சொல்லும் ஒரு கவிதை இதோ, உங்கள் பார்வைக்கு.

ஊர் சென்றதும் மனமெங்கும்
மகிழ்ச்சியில் நிரம்பியது
சென்று திரும்பியதும் மனமெங்கும்
வெறுமை நிரம்பியது.

(இந்த நிலை வெகுவிரைவில் மாற வேண்டும் என்று நான் உளமார கடவுளை பிரார்த்திக்கிறேன்).

தலைவர்களின் கலக்கல், அதிரடி, சூறாவளி தேர்தல் பிரச்சாரம்


நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும், மிகவும் கடுமையாக தங்களுக்காகவும், தங்கள் உற்றார் உறவினர்களுக்காகவும் (நாட்டிற்காகவோ, நமக்காகவோ இல்லை....) உழைக்க (!!??) துவங்கி உள்ளார்கள்.

இதன் எதிரொலியாக, நாட்டின் அனைத்து வகையான போக்குவரத்து வாகனங்களும் (சைக்கிள், மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார், பேருந்து, சிற்றுந்து, ஹெலிகாப்டர் கட்டை வண்டிகள் உட்பட) அடுத்த ஒரு மாதத்திற்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளன. சிறு குழந்தைகள் நடை பழக பயன்படுத்தும், நடைவண்டிகள் கூட பெரிய அளவில் விற்பனை ஆவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

அனைத்து கட்சிகளின் கொடிகளும் தயார் நிலையில், அவற்றை கட்டுவதற்கு, கம்புகள், கயிறுகள் தயார். பல வண்ணங்களில் போஸ்டர்கள் ரெடி. அந்த போஸ்டர்களில் கண்கொண்டு காண சகிக்காத தலைவர்களின் செயற்கை புன்னகை. ஓட்டு கேட்டு கூப்பிய கைகள். ஓட்டு போட்டு முடிந்தவுடன் அந்த கூப்பிய கைகள் தானே பிரிந்து, ஓட்டு போட்டவரின் மூக்கில் ஓங்கி ஒரு குத்து குத்தும். என்னே கயமைத்தனம்??
போஸ்டர்களை ஓட்டுவதற்கு பசை கூட காய்ச்ச ஆரம்பித்து விட்டார்கள். இந்த பசை காய்ச்சும் சாக்கில் ஆங்காங்கே "கள்ள சரக்கு" கூட காய்ச்சப்படுகிறது . போஸ்டர் ஓட்டும் பசை காய்ச்சும் மைதாவுக்கு கூட ஏக கிராக்கி. ஒருவேளை அந்த நடிகர் புது படம் தொடங்கி விட்டாரோ, என்னவோ ??
அனைத்து வீடுகளின் சுவர்களும் இவர்களால் சுண்ணாம்பு அடிக்கப்பட்டு (அதாங்க தேர்தல் விளம்பரம் எழுதத்தான்), பளிச்சென காணப்படுகின்றது. இருபுறமும் மதில் சுவர் உள்ள வீடுகளின் பாடு திண்டாட்டம். ஒரு பக்கம் ஒரு கட்சியும், மறுபக்கம் அதன் எதிர்க்கட்சியும், விளம்பரங்களை எழுத ஆரம்பித்து விட்டார்கள்.

மைக் செட்டு காரர்கள் தங்கள் கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைத்துள்ளார்கள். கரகாட்டகாரர்கள் (ராமராஜன் தவிர்த்து) எந்த கட்சியினர் வந்தாலும், நன்கு வரவேற்று, புதிதாக வந்துள்ள குத்து பாட்டுக்களுக்கு ஆடுவதற்கு எடுத்த ட்ரைனிங் பற்றி விளக்குகிறார்கள். இவர்கள் பிசினசும் கூட ஒகே.

பெட்ரோமாக்ஸ் லைட்காரர்கள் (ஆல் இன் ஆல் அழகுராஜா கவுண்டமணி, செந்தில் அல்ல) கூட மிக பளிச்சென இருக்கிறார்கள். சில இடங்களுக்கு தலைவர்கள் பிரச்சாரம் பண்ண போகும்போது, மின்விளக்குகள் வெறுமே பல்லிளிக்கின்றன (எல்லாம் அண்ணன் ஆர்க்காட்டார் புண்ணியத்தில்) .... அந்த இடங்களில் பெட்ரோமாக்ஸ் விளக்குகளே உபயோகபடுத்தப்படுகிறது.
இந்த தேர்தல் களத்தில் :

தி.மு.க.,
அ.தி.மு.க.
பா.ம.க
கம்யூனிஸ்ட்
காங்கிரஸ்
தே.மு.தி.க.
விடுதலை சிறுத்தைகள்
சமத்துவ மக்கள் கட்சி
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி
லட்சிய தி.மு.க

இப்படி தலை சுற்றும் அளவுக்கு............. பல நூறு கட்சிகள் களத்தில் உள்ளன.
எப்போதும் போல் "தல" தன் சுறுசுறுப்பான அதிரடி பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். நக்கல், நையாண்டி, புள்ளிவிபரம் உள்ளிட்ட தன் அனைத்து சாகசங்களையும் காட்டி பிரச்சாரம் செய்வதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. விஜயகாந்த், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இவரிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

இந்த அரசியல் பரபரப்புக்கிடையே

கார்த்திக்
விஜய டி.ராஜேந்தர்
மன்சூர் அலிகான்
சரத்குமார் உள்ளிட்டோர் நம்மை கிச்சு கிச்சு மூட்ட தவறுவதில்லை.

வாக்காள பெருமக்களே, தங்கள் பொன்னான வாக்குகளை ஒரு நல்ல வாக்காளருக்கு (அப்படி யாருமே இல்லேன்னு சொல்றீங்க.......), இருப்பதிலேயே குறைவான ஊழல் செய்தவரோ, அல்லது புதிய முகமாக இருந்து, குறைவான ஊழலே செய்வார் என்று நீங்கள் கருதுபவருக்கு இடுங்கள். நல்லாட்சி மலர ஒத்துழையுங்கள்.

(வாழ்க பணநாயகம், வளர்க இவர்கள் அராஜகம்)

தமிழ் புத்தாண்டு 2009 நல்வாழ்த்துக்கள்






புத்தாண்டாம் இனிய தமிழ் புத்தாண்டு
கொண்டாட்டமாய் பிறந்த புத்தாண்டு
அதை மகிழ்வுடன் வரவேற்போம் - நாமின்று

கடந்தகால சோதனைகளை துடைத்துவிட்டு
சூழ்ந்துள்ள வேதனைகளை தொலைத்துவிட்டு
தமிழ் புத்தாண்டில் பதிப்போம் சாதனை கல்வெட்டு

ஐந்தறிவு கொண்டவைகள் ஆச்சரியமாய் இணைந்திருக்க
ஆறறிவு கொண்ட நாம் எப்போதும் பிரிந்திருக்க
மதமும், ஜாதியும் துரத்தி அடிக்கும் தூரத்தில்
துரத்தி அடிப்போம், அதை இந்த நேரத்தில்

மரம் வளர்ப்போம், நல்ல செடி வளர்ப்போம்
சுற்று சூழல் பாதுகாத்து, மழை வேண்டுவோம்
மனிதம் வளர்ப்போம், மனித நேயம் வளர்ப்போம்

நல்ல எண்ணங்களை மனதில் நாளும் விதைப்போம் - ஏனெனில்
விதைப்பது நல்விதையானால், மலர்வதும் நன்றாகும்
மலர்வது நன்றானால், நறுமணமும் உண்டாகும்
நறுமணத்தின் சுகந்தத்தை நம் மனமும் கொண்டாடும்
ஆயுதங்களை புறக்கணிப்போம் -
நம்மை அஹிம்சைக்கு அர்ப்பணிப்போம்
தீயவைகள் கண்டறிந்து ஒதுக்கி வைப்போம்
நல்லவற்றின் தடம் அறிந்து செதுக்கி வைப்போம்

கடின உழைப்பிற்கு இல்லை ஈடு இணை
இதை என்றும், எப்போதும் நீயும் நினை

தானத்தில் உள்ளதோ பலதானம்
அவற்றில் சில - அன்னதானம், கண்தானம், ரத்த தானம், வித்யாதானம்
ஆயினும் - உலகின் தேவை இக்கணம் - சமாதானம்
தீவிரவாதம் வேரறுக்க பாடுபடுவோம்
அமைதியை நிலைநாட்டி ஆனந்தம் கொள்வோம்
நம் வாழ்வில் அமைதி என்றும் நிலைத்திருக்க
அந்த ஆண்டவனை வேண்டுவோம்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சென்னை பாக்ஸ் ஆபீஸ் - டாப் 5 - (09.04.09)

இந்த வார லேட்டஸ்ட் சென்னை பாக்ஸ் ஆபீஸ் டாப் - 5 படங்கள்.

1. அயன்

A.V.M.மின் தயாரிப்பில் வந்துள்ள படம் "அயன்" மிகப் பெ‌ரிய ஓபனிங்கை பெற்றிருக்கிறது. சூர்யா, கே.வி.ஆனந்த், ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் என எல்லாமே பெ‌ரிய பெயர்கள். படத்தின் முதல் பாதி அனைவரையும் கவர்ந்திருக்கிறது. இரண்டாவது பாதியில் சின்ன சொதப்பல். பாடல்கள் பெ‌ரிய அளவில் ஹிட்டாகாதது ஒரு குறை. சன் பிக்சர்ஸின் விளம்பரம் குறைகளை நிவர்த்தி செய்துவிடும். இதன் முதல் மூன்று நாள் வசூல் ஏறக்குறைய அறுபத்தியெட்டு லட்சங்கள்.

2. அருந்ததீ

கடந்த சில வருடங்களில் தெலுங்கிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட எந்தப் படமும் பாக்ஸ் ஆபிஸில் சோபித்ததில்லை. விதிவிலக்கு அருந்ததீ. இரண்டு வாரங்களில் சென்னையில் ஒன்றரை கோடிகளை வசூலித்துள்ளது. வார இறுதி வசூல் ஏறக்குறைய பதிமூன்று லட்சங்கள்.

3. யாவரும் நலம்

மாதவனின் யாவரும் நலம் இன்னமும் ரசிகர்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியில் கணிசமான பங்கு பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவுக்கு உண்டு. நான்கு வாரங்களில் 1.8 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளது. வார இறுதி வசூல் பதினொன்றரை லட்சங்கள்.

4. பட்டாளம்

முதல் மூன்று நாட்கள் சுமாரான வசூலை பெற்ற பட்டாளம் வார இறுதியில் பிக்கப்பாகியுள்ளது. இதன் சென்றவார இறுதி மூன்று நாள் வசூல் ஏழரை லட்சங்கள். ஒருவார முடிவில் 75 லட்சங்களை நதியாவின் இந்தப் படம் வசூலித்துள்ளது.

5. சிவா மனசுல சக்தி

காதலும், போதையும் ச‌ரிவிகிதத்தில் கலந்த ‌ஜீவாவின் இந்தப் படம் இன்னும் சென்னை ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. படத்தின் லோக்கல் வசனங்கள் காமெடி கிச்சு முச்சு. ஏழுவாரங்கள் முடிவில் சென்னையில் மட்டும் 1.6 கோடிகள் வசூலித்துள்ளது. சென்றவார இறுதி வசூல் மூன்றரை லட்சங்கள்.

(நன்றி : வெப்துனியா)

மதுரக்கார ரோசக்கார பய "குடிவேலு"


டேய்,

நீ சரியான ஆம்பளையா இருந்தா, என் மேல கை வச்சு பாருடா....... அப்புறம் தெரியும் நான் யாருன்னு ....... இப்படி வீராவேசமா குரல் கொடுத்தவரின் படம் இதோ இங்கே (சரக்கு கடையில வச்சு எடுத்தது, அதாங்க டாஸ்மாக் கடை).....
அப்படி குரல் கொடுத்ததற்கு காரணம், அவர் கையில் உள்ள மருந்து குப்பிதான் என்று நான் சொன்னால் நீங்கள் நம்பத்தான் வேண்டும்.

நான் மதுரக்காரண்டா ........ ரவுசுக்கும், லந்துக்கும் பொறந்தவண்டா ...... என்கிட்டயேவா ...... நீ எந்த ஊர்ல போய் பிரச்சாரம் பண்ணினாலும், என் சங்கத்து ஆளு அங்க வருவாண்டா...... நீ என்கிட்டே கூட பதில் சொல்லாம தப்பிச்சுடலாம் ..... ஆனா என் சங்கத்து ஆளுகிட்ட தப்பிக்க முடியாது.,..........

ஒன்னிய நான் நெக்ஸ்ட் மீட் பண்றேன்............ இந்த எலக்சன்ல ஒன்னிய பாத்தா எனக்கு பாவமா இருக்குடா ...... நீயும் போண்டி, உன்னிய நம்பி வந்தவனும் போண்டி ............ ஐயோ ஐயோ ..............
நான்கூட நாலாம்பு படிக்கறப்போ 40-க்கு 4 மார்க் வாங்கினேண்டா ..... ஆனா நீ இப்போ 40-க்கு பெரிய முட்டை தாண்டா வாங்கபோற.......... அத வச்சு, நான் அடிக்கற சரக்குக்கு ஒரு ஆம்லெட் கூட போட முடியாதுடா சல்லிப்பயலே என்று கோபமாக திட்டி தீர்த்தார் (யாரை திட்டினார் என்று கேட்க வேண்டாம்).
(சற்றுமுன் வந்த செய்தி - வடிவேலுவை "குடிவேலு" என்று அன்பாக அழைத்ததாக கேப்டன் விஜயகாந்த் கூறினார். அப்போ இது உண்மை இல்லையா என்று கேட்டபோது, சும்மா லுல்லுல்லாயிக்கு என்று கூறினார். ஆயிரம் இருந்தாலும் வடிவேலு தன் ஊர்காரபய என்று பாசமாக தெரிவித்தார். இந்த லுல்லுல்லாயி மேட்டரில் தான் கலைஞரை பின்பற்றுவதாகவும் தெரிவித்தார்).
திடுக்கிடும் உண்மை - விஜயகாந்த் தன் பிரச்சாரத்தை முடித்தவுடன் நேராய் சென்று வடிவேலுவை சந்தித்ததாகவும், பின் இருவரும் இணைந்து அருகிலுள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று 4-5 மணி நேரம் போதையில் மிதந்ததாகவும் "டாஸ்மாக்கார்" தெரிவித்தார்.

காங்கிரஸ் கூட்டணிக்கு "டாஸ்மாக்" கபாலி பிரச்சாரம்


இங்க வந்து குந்திகினு கீற கோடிக்கணக்கான ஜனங்களுக்கு வணக்கம். நாந்தான் "டாஸ்மாக் கபாலி", கபால்னு வந்து கூவறேன்.

நான் இந்த சந்துல வந்துகினு இருக்க சொல்ல, ஒரு பேமானி நம்மளாண்ட சோக்கா போட்டான் ஒரு மேட்டரு. அத்த கேட்டேன்... பேஜாராயிடேம்ப்பா ... என் கண்ணு பனிச்சு போச்சு. நெஞ்சு கனத்து போச்சு (நம்ம "தல" சொன்ன அதே இஷ்டைல் தான் ....).
அது இன்னான்னா, நம்ம சோனியா காந்திக்கு இந்தியாவுல சொந்தமா ஒரு வூடு கூட இல்லையாம், அத்த வுடுங்க, ஒரு காரு கூட இல்லையாமே?

இன்னாபா இது படா அக்குருமா கீதே. இந்த நாட்டுக்கே தங்க தலைவி அவுங்க, அவுங்களுக்கு இல்லேன்னா, எப்டிப்பா? நம்ம கைல கூட ஒரு ரிக்சா கீது.... அதுவும் மோட்டார் வச்ச ரிக்சா.
பாவம்பா, அந்தம்மாவுக்கு ஒரே ஒரு வூடுதான் கீதாம், அதுகூட இங்க இல்லப்பா........ இத்தாலில .... அதுவும் சின்ன வூடுப்பா ...... ஐய்யே... இன்னாபா சிரிக்கற .... சின்ன வூடுன்னா வேற அர்த்தம்ப்பா ....... தம்மாத்தூண்டு வூடுப்பா ........ வெல கூட வெறும் 19 லட்சம்தானாம்.

அவுங்க மொத்தமா வச்சுகீற துட்டு கூட வெறும் 1.8 கோடிதானாம். நம்ம கதைய வுடுங்க... நம்மளுக்கு எப்போவும் இந்த தெருக்கோடிதான்..... பாவம்பா அந்தம்மா .......... இன்னோவோப்பா, என் மனசுல இன்னா தோணிச்சோ அத்த சொல்லிட்டேன்.
பாவம், இந்த ஏழைக்கு ஓட்டு போட்டு வுடுங்க. எனக்கு இல்லேப்பா, நம்மள வுட பெரிய ஏழை சோனியா அம்மாவுக்கு..... இன்னாதான் இருந்தாலும், நம்ம தலீவிய வுட்டு குடுக்க முடியுமா.......
நான் சுருக்கால போய், "டாஸ்மாக்" வுட்டுகினு வரேன். நான் எந்த ரவுசும் பண்ணல. அதனால சொல்றத ஒயுங்கு மருவாதியா கேளுங்க..
போடுங்கம்மா ஓட்டு, கை சின்னத்த பாத்து ........
போடுங்கம்மா ஓட்டு, கை சின்னத்த பாத்து ........
(அந்த பக்கமா போயி நோட்டு வாங்குங்க ....... இந்த பக்கமா போயி ஓட்டு போடுங்க. ....... இத்த சொல்லிகினது - "டாஸ்மாக்" கபாலி).