ஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - நிறைவு பகுதி

பகுதி – 2
ஸ்ரீரங்கத்து தெருக்களில் குளிராறு பொங்கி பிரவாகமாகி ஓடிக் கொண்டிருந்தது. சூரியன் சொல்லி, கோழியும் கூவிக் கூட விடிந்ததை இன்னும் ஓப்புக் கொள்ளாமல் அந்த தினம் சோம்பேறியாய் இருந்தது,. 

விவேகானந்தர் வீதியில் மூன்றாவது வீட்டில் மேல் தளத்தில் ஒற்றையாய் நின்ற ஒரு முதல் மாடியில் மூலையில் அந்த அறை இருந்தது. உள்ளே தூங்கிக் கொண்டிருப்பது நம் கண்ணன் என்பதால், நமக்கு ஏற்கனவே அறிமுகமானதால், தைரியமாக செல்வோம் வாருங்களேன்…

கண்ணன் காலையில் தூக்கம் கலைந்து எழுந்து பார்த்தான். அறையில் யாருமில்லை. வேதா கீழே போயிருப்பாளோ… புதிய அறை, புதிய ஊர், புதிய காற்று என புத்துணர்ச்சியாக இருந்தது. கண்கள் துளாவி, க்ளாக் தேடி தோற்று போய், தலையணை கீழே இருந்த மொபைலில் நேரம் பார்த்தான். 7.08. இப்போதே எழுந்து என்ன செய்யலாம். மாமனார் வீட்டில் யாரிடம் பேசுவது, என்ன பேசுவது, என தயக்கமும் கூச்சமும் கொஞ்சம் குடையவே… கண்கள் மறுபடியும் மூடி தூங்காமல் படுத்து கிடந்தான்.

புதிய இலவம் பஞ்சு தலையணை உப்பி, பெரிசாக இருந்தது. புதிய படுக்கை விரிப்பு கஞ்சி மொடமொடப்பில், பிங்க் கலரில் புதிய மணம் சூடியிருந்தது. வேதா தலையில் இருந்து தப்பித்து உதிர்ந்த மல்லிகைகள் உதிரியாய்… கொஞ்சம் உபரியாய் பெட்ஷீட்டில் புதிய டிசைன் போட்டிருந்தது.

அந்த கலவையான மணம் மனதை கிறங்கடித்தது, கண்ணனுக்கு பிடித்தது. தலை தூக்கி பார்த்து, சும்மாயிருந்த இன்னொரு தலையணையை எடுத்து கால்களுக்குள் கொடுத்து விட்டு கையை மார்பில் இருக்க கட்டிக் கொண்டு மறுபடி கண்களை இறுக்க மூடினான்.

விருந்தினராக இருக்கும் போது ஒரு சௌகரியம். பொறுப்புக்கள் இல்லை. நம் வீடாக இருந்தால், காலிங் பெல் ஒலித்தால் ஓட வேண்டும். இன்று வீட்டை சுத்தம் செய்யலாமா என யோசிக்க வேண்டும், இன்று வேறு என்ன செய்யலாம் என திட்டமிட வேண்டும்.  ஆனால், விருந்தினராய் அடுத்த வீட்டில் இருக்கும் போது ச்ச்ச்ச்சும்மாவே கால் நீட்டி படுத்து இருக்கலாம்....

செயல் படுதலை யாராவது செய்வார்கள், வீடு தேடி வந்தவரை, காலிங் பெல் அடிப்பவரை என எவர் வந்தாலும்..... யாராவது பார்ப்பார்கள், என்னவாவது செய்வார்கள். விருந்தினராக இருப்பதில் ஒரு சுகம், அதிலும் மாமியார் வீட்டில் மாடியில் கால் நீட்டி படுத்து கிடப்பது பரம சுகம்…

ஆஃபீஸ் போகணும் என அவசரம் அவசரமாய் எழுந்து பழக்கப்பட்டதால் சோர்ந்த உடம்பு, இன்று அப்படி செய்யாமல், முடங்கிக் கிடப்பதில் ஒரு இனிமை கண்டது.

வாசல் பக்கம் ஆளரவம் கேட்டது. மல்லிகை மணமும், நெய் காய்ச்சிய மணமுமாக ஒரு நெடி. தலை திருப்பி பார்த்த போது வேதா சிரித்தபடி வந்து கொண்டிருந்தாள். காலையிலேயே குளித்திருந்தாள். வசீகரமாய் சிரித்தவளுக்கு இத்தனை அழகா என கண்ணன் வியந்தான். பட்டுப்புடவை சரசர சத்தம், வளையோசை கலகல, கொஞ்சம் மெட்டி ஒலியின் மெட்டு சேர்த்து இனிமைப்பாடல் ஒன்று பாடியது.

குட்மார்னிங்… என்ன ஸ்ரீரங்கத்து காத்து தாலாட்டுதோ… இன்னும் பள்ளியெழுச்சி ஆகலியே… ஹா ஹா ஹா.....

பேசினால் இந்த இதம் கலையும் என நினைத்தோ என்னவோ, கண்ணன் அமைதியாய் ஆமோதித்து, தலையை மட்டும் ஆட்டி.... சிரித்தான். வேதா தொடர்ந்தாள், காலைல பக்கத்து கோவிலுக்கு அம்மாவும் நானும் போனோம், அதான் உங்கள டிஸ்டர்ப் பண்ணாம போயிட்டு வந்திட்டேன். அப்புறம் பத்து மணிக்கா, ஜவுளி எடுக்கலாம், தில்லை நகர் போலாம்ன்னாங்க… சரியா இருக்கும்ல….

அகலமாக சிரித்து, உடலை இன்னும் குறுக்கி கொண்டு கண்களை மூடினான் கண்ணன். வேதா கை நீட்டி, இடுப்பு பிரதேசம் தேடி, சதை கிடைத்ததும் திருகி, எந்திரிங்க… நல்ல மருமவன்னு பேரு வாங்கியிருக்கீங்க… 

சோம்பேறின்னு சேர்த்து கொடுத்துறப் போறாங்க… என்றாள்… கண்ணனுக்கு லேசாய் வலித்தது. கை நீட்டி, வேதாவின் மேல் பொளிச்சென அடித்தான். அது எங்கோ அவள் சேலை தலைப்பில் பட்டது… சேலை அதை ரசித்து காற்றோடு சேர்ந்து கொண்டு ஆடி தாவியது. வேதா தலை குனிந்து அவனை நெற்றியில் முட்டினாள்.

குழந்தையின் பாவனையில் இரு குருத்துக்கள் அங்கே கொஞ்சி கொண்டிருந்தன. இங்கிதம் கருதி, நாமும் கதை சொல்வதை நிறுத்தி விட்டு அவர்களுக்காக கீழே சென்று காத்திருப்போமா…

மாமி, முற்றத்திற்கும் திண்ணைக்கும் பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் மாதிரி பறந்து கொண்டிருந்தாள், காலை பட்சணங்கள் முடிந்து விட்டன, கொஞ்சம் சுத்தம் செய்ய வேண்டிய வேலை மட்டும் பாக்கி. மாமா வேறு நேரம் கெட்ட நேரத்தில் பேப்பர் வாங்க போகிறேன் என போய் விட்டாரே….. 

மனதிற்குள் நினைத்து கொண்டிருந்த போது, மாடிப்படியில் மாப்பிள்ளையும் வேதாவும் வருவது தெரிந்தது.

உயரமும் உருவமும் பொருந்தி, ஆதர்சன தம்பதிகாளாய் அவர்கள் இருப்பதாய் மாமிக்கு மனதில் பட்டது. நல்ல ஜோடி, இறைவன் எல்லா ஆசிரும் தரட்டும் என மனசுக்குள் கூவினாள். ஐந்து நிமிடத்துக்கு முன் மேலே நடந்தது தான் நமக்கு தெரியுமே. அந்த குஷியும் கும்மாளமும் தந்த மகிழ்ச்சி, இருவர் முகத்திலும் அப்பட்டமாய் தெரிந்தது. மாமி அதை கவனித்தாள், மகிழ்ந்தாள். தன் பெண்... இன்பமாய் இருப்பது, தாயுள்ளம் வேண்டி விரும்புவதுதானே...

படிகளில் இறங்கி வந்த கண்ணன், குட்மார்னிங் என மாமி இருந்த திசைக்கு எதிரில் பார்த்த படியே சொன்னான், மாமியும் மெல்லிய குரலில் பதில் வணக்கம் சொன்னாள். கண்ணன் கண் பட்ட திசையில் விறகுக்கட்டைகள் குவிந்து இருந்தன.

ஒரு கணம் பழைய நினைவு வந்தது. இது போன்ற ஒரு விறகு கட்டையில் தானே அன்று அடி வாங்கினான், இன்று அதே வீட்டுக்கு மருமகனாக, சகல மரியாதையுடன்,…  நினைப்பு ஒரு அவஸ்தையை மனதிலும், சிரிப்பை வாயிலும் உற்பத்தி செய்தது.

மாமியும் அதை கவனித்தாள், லேசாக அவஸ்தையில் நெளிந்தாள். ‘சமைக்க, குடிக்க எல்லாம் கேஸ்லயே போட்டுடறேன்… குளிக்க சுடு தண்ணிக்கு மாத்திரம், விறகுதான்.

இம்மர்ஷன் ஹீட்டர் டிரை பண்ணலாமே… ஈசி, பின்ன பெஸ்ட், ஏதாவது பேச வேண்டுமல்லவா, கண்ணன் எங்கோ உள்ள ஹீட்டர் கம்பெனிக்கு சேல்ஸ் மேன் மாதிரி பேசினான். கரெக்ட்டு தான், கரண்டுன்னாலே பயம், நீங்க வாங்கோ. காபி கலந்துட்டு வர்றேன்…

மாமி உள்ளே செல்ல யத்தனித்த போது, மாமா அவசரமாய் உள் நுழைந்தார். வேதா இங்க கிடைக்கலம்மா, அதான் டவுன் வரைக்கும் போயி, ஹிண்டு பேப்பர் வாங்கிட்டு வந்துட்டேன். இந்தாங்க மாப்பிள்ள. தன் முன் நீட்டிய தினசரியை பார்த்து புரியாமல் விழித்தான். எதுக்குப்பா, அவ்வளவு சிரமம், இங்க இல்லேன்னா வந்துருக்க வேண்டியதுதானே. கண்ணன் திரும்பி மாமாவை பார்த்த போது, பதட்டமும் கொஞ்சம் சோர்வாகவும் அவர் நிற்பது தெரிந்தது. வேதா கண்ணனை நோக்கி திரும்பி சொன்னாள். இல்ல காப்பி குடிக்கும் போது, இங்கிலீஷ் பேப்பர் வாசிப்பீங்கன்னு தற்செயலா சொன்னேன், இங்க வீட்டில தமிழ் பேப்பர் தான் வாங்குறாங்க, அதான் அத வாங்குறதுக்கு.

கண்ணனுக்கு புரிந்தது. அவனது தேவைகளை புரிந்து, மனம் கோணாது நடக்க வேண்டும் என இரு ஜீவன்கள் தன் வயசையும் தள்ளாமையையும் மீறி நடப்பது புரிந்தது. என்ன சொல்வது என தெரியவில்லை, தேங்க்ஸ் என சொல்லி விட்டு, மாமி… மாமாவுக்கு காப்பி கொடுங்க, அவங்க டயர்டா இருக்காங்க என்றான். மாமா, தன் தோளில் இருந்த துண்டால் முகம் துடைத்தார், வேனுக்கு சொல்லியிருக்கேன், 9.30 வந்துருவான், எல்லோரும் போயிட்டு, மத்தியானம் காசி பவன்லயே மீல்ஸ் சாப்பிடலாம் என்றார்.

சங்கோஜம் சங்கடப்படுத்தியது. கொஞ்சம் கூச்சமாக இருந்தது. மாமியார் வீட்டு கவனிப்பு, மாப்பிள்ளை கவனிப்பு என்பது கலாச்சாரத்தின் சாரம் என்றாலும், அதை பெற்றுக் கொள்ளும் போது தயக்கம் தண்ணி குடிக்கிறது. என்ன சொல்லி இதை நிறுத்துவது என தெரியவில்லை, என் இருப்பை இயல்பாக்குவது எப்படி, என கண்ணன் யோசிக்க துவங்கினான். ம்… நல்லவிதமாய் பேசி, இன்னும் நிறைய பேசி, கதைகள் சொல்லி, நகைச்சுவை சொல்லி… இயல்பாய் இருக்க வைக்க முயலுவேன் என மனதினுள் திட்டமிட துவங்கினான்…..

மாமி கொடுத்த காஃபியை சுவைக்க துவங்கி, அங்கிருந்த திண்டில் அமர்ந்த போது, கண்ணனுக்கு உலகம் இனித்தது. உறவுகளின் வலிமை புரிந்தது, வாழ்வின் அர்த்தம் தெரிந்தது, அதோடு கூட, இரண்டு நாட்களுக்கு முன் வேதாவுடன் பேசிய அந்த நிகழ்வும் மனதிலாடியது.

மாமா, பொங்கலுக்கு வரச்சொல்லியதை எப்படி வேதாவிடம் சொல்லுவது என தயக்கத்துடன் வீட்டுக்கு வந்தவன், அதே சிந்தனையாய், ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு, வீட்டுக்குள் நுழைந்தான்.

வேதா, அதே தயக்கத்துடன், பரபரப்புடன் கொஞ்சம் படபடத்து, முற்றம் நோக்கி வந்தாள். ‘இன்னும் அதே மூட்ல தான இருக்க, நாலைஞ்சு மணியாகியும் குறைஞ்சுடலயே… கையில் இருந்த ஹெல்மட்டை கழற்றிக் கொண்டே கேட்டான். கை நீட்டி ஹெல்மட்டை வாங்கி கொண்ட, வேதா சொன்னாள், காஃபி ஆறிட போகுது, முதல்ல அத குடிங்க.. அப்புறமா மத்தத பார்ப்போம்…

காஃபி குடிக்க ஆரம்பித்த போது, வேதா தொடங்கினாள்… இது வரைக்கும் எதையும் உங்ககிட்ட மறைச்சதில்ல, இப்ப ரெண்டு வாரமா, அம்மா ஃபோன் பண்ணி பேசுறாங்க, எப்படி சொல்றது… எப்ப சொல்றதுன்னு தயக்கம்… கோபப் படுவீங்களோ… ன்னு நினைச்சுக்கிட்டு, அப்ப சொல்லலாம் இப்ப சொல்லலாம்ன்னு அப்படியே தட்டி போச்சு… ஐயாம் சாரி.

லேசாய் அதிர்ச்சியானான், என்ன இது நான் தயங்கி தயங்கி சொல்ல வேண்டியதை அவளே சொல்கிறாளே எனும் திகைப்பு. தன்னைப்போல் அவளுக்கும் ஒரு வேதனை இருந்திருக்கிறதே… வேதாவை நெருங்கி அவள் கைபற்றி, இன்னொரு கையால் அவள் கையை வருடினான்.

கண்ணனின் இந்த ஒற்றை செயல், அவளுக்கு அங்கீகாரத்தை கொடுத்தது. பெரூமுச்சு விட்டு நிமிர்ந்த போது, கண்கள் கலங்கியது. யூ ஆர் கிரேட்.. நீங்க ஒரு ஜெம், உங்கள புருசனா கொண்டது என்னோட மிகப் பெரிய லக் என்றவுடன் கண்ணன் அவள் கையை லேசாய் இறுக்கினான். அந்த அழுத்தலில் அன்பு தெரித்தது.

தன்னை பெரிசா நினைச்சுக்கிறது மட்டுமில்ல ஈகோ…. தன்னை காயப்படுத்தாம காப்பாத்தணுமேன்னு நினைக்கிறது கூட ஈகோ…
புரியல….

நான் தான் பெரியவன், என்னை குறை சொல்லக்கூடாது என நினைக்கும் நினைப்பையே…. என்ன ஆனாலும் அவனோட பேச மாட்டேன் என சொல்வதோ.. அல்லது மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் மனசு இல்லாமல் இருப்பதை மட்டுமே ஈகோ என இந்த உலகம் சொல்கிறது.

ஆனால், என்னைப்பற்றி தவறாய் நினைத்து விடுவாயோ…. என அடுத்தவரின் ஈகோவை சார்ந்து சிந்திப்பதும் தவறாகிறது… அடுத்தவரை பற்றிய நமது கணிப்பில் ஒரு மெல்லிய திரை விழுந்து, நம்மை விலக வைக்கிறது. ஈகோ என்பது நம் உள்ளுக்குள் மட்டுமில்லை, 
அடுத்தவரிடத்திலும், அவர் என்ன நினைப்பார் எனும் எண்ணும் நிலையிலும் ஆழம் இருக்கிறது. அதை வேறோடு களைவதிலேயே வாழ்க்கையின் சூட்சமம் இருக்கிறது.

இந்த போகியில், இந்த ஈகோவை எறியூட்டுவோம், டயர் கொழுத்தி, அடுத்தவனுக்கு இம்சை தராமல், பலகீனப்படுத்தும் உணர்வுகளை மட்டும் கொழுத்துவோம்.

இன்று நான் இதை கற்றுக் கொண்டேன், என கண்களின் உள் பார்த்து கண்ணன் சொன்னான். வேதா அதன் அர்த்தம் புரிந்தாள். மெல்லிய விசும்பலில், கண்ணனின் கைகளை கண்களில் ஒத்திக் கொண்டு, அவனை பார்த்தாள்….

காற்று அடம் பிடித்து, சன்னல் திரைகளை கடந்து கூடம் வரை வந்து கூக்குரலிட்டது. இரு ஜீவன்கள், தங்கள் உயிரை உரசி, இந்த உலகின் உச்சகட்ட உணர்ச்சியில் கட்டவிழ்ந்து, காதல் புரிந்தன….இறை அந்த உணர்வில் மின்னியது. வாழ்வே அவர்களுக்கு புதியதாய் தோன்றியது.