"தல" சிறப்பு அதிரடி கேள்வி பதில்கள்

”தல” அவர்கள் வாழ்வின் முக்கிய கடமையான நமக்கு நாமே திட்டம் என்ற வழியில், தனக்கு தானே கேள்விகள் எழுப்பி, அதற்கு பதில் சொல்லும் “தல சிறப்பு அதிரடி கேள்வி-பதில்கள்” என்ற பகுதியில் எழுதியுள்ள லேட்டஸ்ட் “சிறப்பு கேள்வி-பதில்கள்” உங்கள் பார்வைக்கு.....

கேள்வி : ஜெ.ஜெ. உண்ணாவிரதம் இருந்தால்?
பதில் : உண்டு கொழுத்தவர்கள், உடல் இளைக்க இது ஒரு வழி. தேர்தலுக்காக போடும் நாடகத்தின் புதுமொழி.

கேள்வி : வை.கோ?
பதில் : அவர் பொய்க்கோ ஆகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. அவரை நம் மக்கள் போய்க்கோ என்று சொல்லும் நாள் வெகுதூரம் இல்லை.

கேள்வி : பகுத்தறிவு??
பதில் : அறிவுரைகளின் முதன்மை வார்த்தை. நாம் அடுத்தவரை பின்பற்ற சொல்வது. சொல்பவர்களாகிய நாங்கள் எப்போதுமே பின்பற்றாதது.

கேள்வி : சமீபத்தில் கிடைத்ததில் பிடித்தது?

பதில் : "பகுத்தறிவு பகலவன்" என்ற பட்டம்.


கேள்வி : மு.க.முத்து

பதில் : அகில உலக நாயகனாக வலம் வந்திருக்க வேண்டிய எங்கள் குடும்பத்தின் சொத்து....


கேள்வி : பிடித்த நிறம்

பதில் : மஞ்சள் நிறம் மட்டுமே அல்ல

கேள்வி : அடிக்கடி நினைவில் வந்து இம்சிக்கும் ஒரு வார்த்தை?
பதில் : ஐயோ, கொல்ராங்கோ, அய்யய்யோ கொல பண்றாங்கோ.........


கேள்வி : பிடிக்காத ஒரே நபர்

பதில் : ஜெ.ஜெ. என்று என் வாயால் சொல்ல மாட்டேன்.....

கேள்வி : எரிச்சலூட்டும் வார்த்தை
பதில் : மைனாரிட்டி அரசு.

கேள்வி : ஆற்காடு வீராசாமி?
பதில் : தொட்டால் ஷாக் அடிக்கமாட்டார். இடது புறம் சென்று பேசினால், பதிலளிக்க மாட்டார். மொத்தத்தில் நல்லவர். கழகத்தில் ஒரு மூத்தவர்.

கேள்வி : டி.ஆர்.பாலு?
பதில் : வழிப்போக்கர்களுக்கு வழிகாட்டி, பாலங்களின் நாயகன். பல கப்பல்களுக்கு சொந்தக்காரர் (எனக்கு கப்பம் கட்டியவர்களில் முதலிடம் இவருக்கு).

கேள்வி : அன்பழகன்?
பதில் : எனக்கு பின் என் இடம் இல்லை என்றாலும், என் இதயத்தில் அவருக்கு நிச்சயம் இடம் உண்டு (இல்லை என்றால், என் இடத்தையே கேட்டு விடுவார்).

கேள்வி : டி.ராஜேந்தர்??
பதில் : ஓயாமல் அடுக்குமொழி பேசி அடுத்தவரை இம்சிப்பவர். இப்போது நம்மை பார்த்து துடுக்குமொழியும் பேசுகிறார்... மிகப்பெரிய உடம்புக்கு சொந்தக்காரர். கூடவே, மிக சிறிய மனசுக்கும்......இந்த வயதிலும் திரையில் குத்தாட்டம் போடுவதில் வல்லவர்...இன்னமும் முதன்மை நாயகனாக நடிப்பேன் என்று சொல்லி அனைவரையும் எல்லோரையும் பயமுறுத்துபவர்.


கேள்வி : விஜயகாந்த்??
பதில் : அரசியலில் அரிச்சுவடி படிக்க வந்துள்ள குழந்தை. இருப்பினும் அதனிடம் இருக்கு நிறைய அகந்தை. நேற்றைய மழையில் முளைத்த காளான்... என்றும் பிறர் சொல் கேளான்....

கேள்வி : கையூட்டு என்றால்??
பதில் : கையூட்டு என்றால் என்ன?? என் தாய் என் சிறு வயதில் என் கையில் வைத்து ஊட்டிய சோறுதானே??

கேள்வி : தமிழ்??
பதில் : தாய்மொழியாம் தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சு, தமிழ் என் வாட்சு.......

கேள்வி ; ஆங்கிலம்??
பதில் : வாணிபம் செய்ய புகுந்த அன்னியரின் பகட்டு மொழி.... நாம் எப்போதும் புறக்கணிக்க வேண்டிய ஒரு மொழி... ஆயினும், அவ்வப்போது நானும், எப்போதும் என் வீட்டு இளையவர்களும் கைகொள்ளும் ஒரு அற்புத மொழி...

கேள்வி : கருப்பு கண்ணாடி??
பதில் : அழகிற்கு அழகு சேர்ப்பதற்காக மட்டும் அல்ல என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்.....

கேள்வி : பிடித்த சுவை?
பதில் : கருப்பட்டியும் அதனுடன் சேர்த்து சிறிதளவு தேனும்........

கேள்வி : பிடித்த உணவு?
பதில் : கேப்ப களி மற்றும் குறு மிளகாயுடன் சேர்த்து சில சிறிய வெங்காயங்கள். முன்பு, நிறைய தின்றாகி விட்டது. இப்போது தின்று சிறிது நாளாகி விட்டது. விரைவில் கிடைக்கும் என்று குறுங்கிளி ஒன்று காதில் சொல்லி விட்டு செல்கிறது........

கேள்வி : கலைஞர் டி.வி??
பதில் : உலக தொலைக்காட்சி வரிசையில் முதலிடம். உலக தமிழர்களின் தேவை, அதற்கு நாங்கள் செய்யும் சேவை. ஆஹா.... இந்த சேனலை பார்க்கத்தான் உலகிலுள்ள அனைத்து தமிழர்களும் காத்திருக்கின்றனர்... உலகின் பல கோடி தமிழர்கள் இலவசமாக மகிழ்விக்கும் ஒரு புதிய முயற்சி தான் இந்த கலைஞர் டி.வி... இந்த சேனல் யாருடையதாக இருந்தாலும், அவர்களின் நல்ல உள்ளத்திற்காக, அந்த சேவை செய்யும் மனப்பான்மைக்காக அவர்களை வாழ்த்துகிறேன்...


கேள்வி : ஜெயா டி.வி??

பதில் : அப்படி என்றால் என்ன?? புதியதாக வந்துள்ள ஒரு டி.வி.மாடலா?? இது வரை நான் கேள்விப்படவில்லை.....

கேள்வி : கடவுள் பக்தி??
பதில் : நான் இதுவரை நீங்கள் சொல்பவரை கண்ணால் கண்டதில்லை.... காதால் கேள்விப்பட்டதும் இல்லை... ஆனால், என் மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் எப்போதும் நீக்கமற நிறைந்திருப்பது....

கேள்வி : பிரச்சனை??
பதில் : கோயில்களில் என் வீட்டார் எனக்காக, என் பெயரில் செய்த அர்ச்சனை (இது வெளியில் தெரிந்தால் பிரச்சனை).

கேள்வி : பிடித்த பாடல்??
பதில் : சர்க்கர இனிக்கிற சக்கர, இதில் எறும்புக்கு என்ன அக்கறை??

கேள்வி : உங்கள் குரு??
பதில் : என்னை என் இதயத்தில் தாங்கி பிடித்த அறிஞர் அண்ணா....

கேள்வி : தேர்தல் கூட்டணி.
பதில் : இதயத்தில் இடமளித்தவர்களுக்கு தொகுதிகளிலும் கொஞ்சமாக இடமளிக்கும் ஒரு விளையாட்டு.

கேள்வி : இலவச கலர் டி.வி??
பதில் : மக்களை மகிழ்விக்கும்... ஆனால், சேனல்கள் பார்க்க சேர்த்து தனியே கட்டணம் வாங்கி விடுவோம்.

கேள்வி : ஒரு ரூபாய் அரிசி??
பதில் : ஒரு வேளை சாப்பிட்டவர்கள், இனி மூணு வேளையும் வயிறு முட்ட சாப்பிட நான் செய்த யோசனை.... (இந்த திட்டம் மட்டும் வராமல் இருந்திருந்தால் நான் மத்திய அரசை எதிர்த்து காலை டிஃபன் முடித்து விட்டு, உண்ணாவிரதம் இருந்திருப்பேன்).

கேள்வி : ஜல்லிக்கட்டு??
பதில் : வீரமிகு கட்டிளம் காளையர்கள், பருவ சிட்டுகளை, கட்டழகு கன்னியர்களை தன் வீரதீர செயல்கள் மூலம் தன் வசம் ஈர்க்க உதவும் ஒரு அற்புதமான விளையாட்டு....

கேள்வி : தொகுதி பங்கீடு??
பதில் : அதிகம் ஆசைப்படுபவர்களிடம், அதிக ஆசை ஆபத்து என்பதை வலியுறுத்தி, சொற்பமாக கொடுக்கப்படும் ஒரு விஷயம்... அதிலும் கண்டோம் பேரம் பேசும் சில அற்பம்....

கேள்வி : உங்கள் தேர்தல் வாக்குறுதிகள்??
பதில் : தேன் தடவிய கசப்பு மருந்து. மருந்து வேலை செய்வதற்குள் நாங்கள் ஆட்சி கட்டிலில் அமர்ந்து விடுவோம்.

கேள்வி : தமிழக மக்கள்??
பதில் : குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

கேள்வி : இதை எதற்கு சொன்னீர்கள்??
பதில் : ஏதாவது சொல்லவேண்டுமே என்று சொன்னேன். மற்றபடி, அவர்கள் போடட்டும் எனக்கு ஓட்டு. இல்லை என்றால், அவர்களுக்கு நான் வைப்பேன் வேட்டு.

கேள்வி : மக்களிடம் பிடித்தது?
பதில் : அவர்களின் ஞாபக மறதி.

கேள்வி : பிடித்த வார்த்தை??
பதில் : நாளை நமதே, 234-ம் நமதே.....

டாக்டர் விஜயகாந்த் நடிப்பில் விருத்தகிரி - அசத்தல் பாடல்கள்


இதுவரை நான் செய்யவே செய்யாத ஒன்றை (ஆடியோ விமர்சனம், திரைப்பட விமர்சனம்) செய்ய வைத்த நம் “கேப்டன்” டாக்டர் விஜயகாந்த் அவர்களுக்கு முதலில் நன்றி சொல்லி இந்த பதிவை
அவருக்கு சமர்ப்பிக்கிறேன்... (டெர்ரர் ஸ்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்........)

விஜயகாந்த் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் விருதகிரி. இப்படத்தை எல்.கே.சுதீஷ் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியிட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் திங்கள்கிழமை நடந்தது.

விழாவில் தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி, ஏ.வெங்கடேஷ், மாதேஷ், எழில், தயாரிப்பாளர்கள் முரளிதரன், சாமிநாதன், டி.சிவா, சீனிவாசன், எல்.கே. சுதீஷ் மற்றும் அருள்பதி, கலைப்புலி சேகரன், அனகை டி.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விஜயகாந்த் பாடல் சி.டி.யை வெளியிட நடிகர் சத்யராஜ் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய விஜயகாந்த்,

எனது முந்தைய படங்களான தர்மபுரி, சுதேசி, சபரி போன்ற படங்களை வெளியிட முடியாமல் நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன். அதே பிரச்சினைகள் விருதகிரி படத்துக்கும் ஏற்பட்டு உள்ளது.


இந்த படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. இந்த படத்தை தடுத்தால் விஜயகாந்த் யார் என்பதை காட்டுவேன். எனக்கு தொண்டர்கள் இருக்கிறார்கள். படத்தை எப்படி ரிலீஸ் செய்கிறேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தியேட்டர் கிடைக்கவில்லை என்றால், நடுரோட்டில் வேட்டி கட்டி அதில் படத்தை திரையிடுவேன் என்றும் விஜயகாந்த் கர்ஜித்தார்.....

இந்த விழாவுக்கு என்னை வாழ்த்துவதற்காக திரையுலகைச் சேர்ந்தவர் பலர் வந்து

இருக்கிறார்கள். கவிஞர் வாலியின் பாடல்களை வெகுவாக ரசித்தவன் நான். அவருக்கு எனது படத்தின் முதல் பாடலை எழுத கொடுத்தேன். விருதகிரி படம் 25 சதவீதம் சென்னையிலும், 75 சதவீதம் வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டு உள்ளது. அடுத்தவர்களை நம்பாமல், நானே டைரக்சன் செய்துள்ளேன்.... விருத்தகிரிபடம் ஆஸ்கருக்கு அனுப்பப்படுமா என்ற கேள்வியை தன்னை கேட்க வேண்டாம் என்று அடக்கத்துடன் பேசினார்....


நான் அ.தி.மு.க.வையும், காங்கிரஸ் கட்சியையும் விமர்சிப்பதில்லை என பேசுகிறார்கள். பத்திரிகை

களிலும் எழுதுகிறார்கள். அப்படியென்றால் இந்த கட்சிகளுடன் நான் கூட்டணி அமைப்பேன் என்றும் கூறுகிறார்கள்.

ஒரு விஷயத்தை தெளிவாக கூறிக்கொள்கிறேன்.

நான் யாரையும் நம்பி அரசியலுக்கு வரவில்லை. மக்களையும், தெய்வத்தையும் நம்பித்தான் அரசியலுக்கு வந்தேன். எனது மடியில் கனமில்லை. அதனால் எனக்கு பயமும் இல்லை.

காங்கிரஸ் கட்சியிடம் நான் ரூ. 100 கோடி வாங்கி விட்டதாக பேசுகிறார்கள். அ.தி.மு.க.விடமும் ரூ. 100 கோடி வாங்கி விட்டேன் என்கிறார்கள். அப்படி பணம் வாங்கி இருந்தால் விருதகிரி படத்தை ரிலீஸ் செய்ய இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கமாட்டேன். கேப்டன் டி.வி.யையும் எங்கேயோ கொண்டு போய் இருப்பேன்.

பெரியார் பெயரில் சமத்துவபுரங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றின் நிலைமை இப்போது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். 59 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீடுக

ள் கட்டித்தரப்படுவதாக சொல்லப்படுகிறது. அப்படியென்றால் 1967ல் ஆட்சிக்கு வந்தவர்களால் இன்னும் வறுமையை ஒழிக்க முடியவில்லை என்றுதானே அர்த்தம்.

பிச்சைக்காரர் ஒழிப்பு திட்டம், கண்ணொளி திட்டம் போன்றவற்றால் பயன் அடைந்தவர்கள் யார் என்பதை காட்டுங்கள். நான் வறுமையை ஒழிப்பேன் என்று பேசி வருகிறேன்.

அப்படியென்றால் தனி மனித வருமானத்தை பெருக்குவேன் என்றுதான் அர்த்தம். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்

இந்த விழாவில் சொல்லப்பட்ட இன்னொரு விஷயம்.....

இந்திய அபோஸ்தல கிறிஸ்தவ பேராயர்களின் திருச்சபை டிசம்பர் 3ம் தேதி விஜயகாந்துக்கு சென்னையில் நடக்கும் விழாவில் டாக்டர் பட்டம் வழங்குகிறது.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் சார்பில் எஸ்.எம். ஜெயகுமார் தலைமையில் ஜான் வில்லியம்ஸ் இந்த விருதினை வழங்குகிறார்.

இந்த அறிவிப்பு நேற்று நடந்த விஜயகாந்த் நடித்து இயக்கிய விருதகிரி பாடல் வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது.

விஜயகாந்தின் சிறந்த சமூக சேவை மற்றும் சிறுபான்மை மக்களுக்கு செய்து வரும் சேவையையும் பாராட்டும் வகையில் இந்த டாக்டர் விருது வழங்கப்படுகிறது...

இவ்விழாவில் கலந்துகொண்டு தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசிய போது :

அவர், ‘’காலம் தந்த கொடை விஜயகாந்த். புரட்சி தலைவரை நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டது காலம். அய்யோ! காலம் பறித்துக்கொண்டதே புரட்சித்தலைவரை என கலங்கிய நமக்கு காலம் தந்த கொடைதான் வள்ளல் விஜயகாந்த்.

எம்.ஜி.ஆருடன் இறுதிவரை இருந்தவன் நான். யார் யாரெல்லாம் எம்.ஜி.ஆரை. பார்த்து பயந்தவர்கள் எல்லாம் அவர்கள் தான் இப்பொழுது விஜயகாந்தை பார்த்து பயப்படுகிறார்கள்.


நாடாளுவதற்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டியதில்லை. மக்களுக்கு சேவை செய்யும் மனம் ஒன்றே போதும்’’என்று பேசினார்

மேலும் இவ்விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியபோது :

நான் விஜயகாந்தை 32 வருட காலமாக விஜி என்று தான் கூப்பிடுவேன். முதன் முறையாக ரசிகர்களின் முன்னால் நானும் அவரை கேப்டன் என்று அழைக்க ஆசைப்பட்டேன்.


அவருக்கு டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டதால் இனி டாக்டர் கேப்டன் என்று அழைக்க வைத்துவிட்டார்.

எனக்கு ஒரு சிரமம் என்றால் ஓடோடி வந்து உதவி செய்து நான் உன் நண்பேன்டா என்று சொல்ல வைத்துவிடுவார். எதிர்காலத்தில் நானும் அவருக்கு உதவுகிற வகையில் நண்பேன் டா எனச்சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அள்ளிக்கொடுத்தவர் புரட்ச்சித்தலைவர். அதை நமக்கெல்லாம் சொல்லிக்கொடுத்தவர் புரட்சிக்கலைஞர்’’என்று பேசினார்.

இவ்விழாவில் முத்தாய்ப்பாக (இப்போது எந்த கட்சியில் இருக்கிறோம் என்றே தெரியாத) எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர் பேசும்போது,

’’தமிழக அரசியலை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி வாய்ந்த மிகப்பெரிய மக்கள் சக்தியை விஜயகாந்த் பெற்றிருக்கிறார். இந்தப் படம் எப்படி வெளியே வரும் பார்த்து விடலாம் என சவால் விட்டிருக்கிறார்கள்.

இதற்கு எல்லாம் பயப்படும் ஆள் அல்ல விஜயகாந்த். உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை. போஸ்டர் கூட ஒட்ட முடியவில்லை. இவற்றையெல்லாம் மீறி எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபனை வெளியிட்டார்.

அந்தப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது. விஜயகாந்த் படமும் வெற்றி வாகை சூடும். நாடாள முடியுமா என்று எம்.ஜி.ஆரைக்கேட்டார்கள். நாடாள முடியும் என நிரூபித்துக்காட்டினார் எம்.ஜி.ஆர். அதுபோல விஜயகாந்தும் நாடாளுவார்’’என்று தெரிவித்தார்

விருத்தகிரி படத்தில் 5 அசத்தல் பாடல்கள் உள்ளன.....

மனதில் உறுதியும், தைரியமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட பாடல்களை கேட்க முயற்சிக்கலாம்.... எங்கே கேட்கலாம் என்று என்னையே கேள்வி கேட்டு யாரும் பின்னூட்டம் இட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...

1) மக்கள் ஒரு புறம் - சங்கர் மகாதேவன்

2) தேவதை ஒன்று - ஹரிஹரன், சின்மயி

3) மன்னவனே மந்திரனே - செந்தில் தாஸ், ஸ்ரீலேகா, மாணிக்க விநாயகம்

4) பூக்கள் என்றோம் - சாதனா சர்க்கம்

5) ஏழைகள் தோழா வா வா - எஸ்.பி.பாலசுப்ரமணியம்

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

உங்களின் மன உறுதியை நீங்கள் சோதித்து பார்க்கும் ஒரு முயற்சியாக இந்த விருத்தகிரி படத்தின் பாடல்களை கேட்கலாம்... ஆகவே, மக்களே..... பாடல்களை கேட்டு மகிழுங்கள்............

(பின் குறிப்பு : விழாவில் படத்தின் பாடல்கள் ஒலிக்கவில்லை... பதிலாக வந்திருந்தவர்களின் ஜால்ரா ஒலிபட்டையை கிளப்பியது.....)

உடன்பிறப்புகளுக்கு ஒரு உருக்கமான கடிதம்

ஐயா வணக்கம்.....

வணக்கம்..... என்னய்யா காலைலயே வந்துட்ட இன்னிக்கு.... (குரல் உப்புக்காகிதத்தை எடுத்து கிழிந்த தகரத்தில் வைத்து தேய்க்கிறது.... கேட்கும் அனைத்து காதுகளும் கண்டிப்பாக டர்...டர் டார்ர்ர் தான்)......

ஒண்ணும் இல்லய்யா.... இன்னிக்கு செயற்குழு கூடுது.... அங்க, நம்ம கழக கண்மணிகள் எல்லாம் வராங்க... மதுரையில அம்மாவுக்கு கூடின கூட்டம் பார்த்து, எல்லாரும் பேயடிச்சு போயிருக்காங்க...அவங்களுக்கு ஊக்கம் தர்ற மாதிரி நாம ஏதாவது பேசியாகணும்....

அப்படியா... சரி.... ஊக்கத்தொகை கேட்டா தான் கொஞ்சம் யோசிக்கணும்.... வெறும் ஊக்கம் தானே தந்துடுவோம்.... நான் சொல்றத அப்படியே எழுதி அங்க வர்ற எல்லார்க்கும் காப்பி எடுத்து கொடுத்துங்க......


சரிங்கய்யா.... அப்படியே செஞ்சுடுவோம்....


“தல” தன் உடன்பிறப்புகளுக்காக எழுதிய அந்த மடல்.....இதோ உங்கள் பார்வைக்கு......

அங்கெங்கெனாதபடி.. .... எங்கெங்கும்

நீக்கமற நிறைந்திருக்கும் அன்பு உடன்பிறப்பே..


”தேர்தல்” என்ற நான்கெழுத்து

விரைவில் வரவிருக்கிறது..

எப்போதும் ”வெற்றி” என்ற மூன்றெழுத்தை பெற

”உழைப்பு” என்கிற நான்கெழுத்தை பிரயோகித்தால்

”வாக்கு” என்கிற மூன்றெழுத்து நம் வசமாகும்

”மக்கள்” என்கிற நான்கெழுத்து

”மறதி” என்ற மூன்றெழுத்தை

கைகொள்ளும்போது

”பணம்” என்னும் மூன்றெழுத்தை கொடுத்து,

”ஓட்டு” என்ற மூன்றெழுத்தை பெற்றால்,

”வெற்றி” என்ற மூன்றெழுத்து

எப்போதும் நம் வசமே என்பதை

நினைவில் கொள்.....

என் அன்பு உடன்பிறப்பே.....

சிந்தித்து பார்க்க நம்மிடம்

”நேரம்” என்ற மூன்றெழுத்து இல்லை...

ஆகவே....

சிந்திக்காதே.... செயல்படு....

வீறு கொண்டு எழு....

வெற்றி நடை போடு

”கருணை” என்ற மூன்றெழுத்தை

வெறும் வார்த்தை என்ற நாலெழுத்தோடு நிறுத்தாமல்

”நிதி” என்ற இரண்டெழுத்தையும் நினைவில் வை

அதை ”கழகம்” என்கிற நாலெழுத்தின்

காலடியில் வை....

வாழ்க அண்ணா நாமம்.....