மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 8)துபாய் சூரியன்!!! சரிந்து, மெல்ல தவழ்ந்து மேற்கை முத்தமிட்டது. இரை தேடி அலுவலகம் வந்து அடை பட்ட மனித பற‌வைகள், தம் கூட்டுக்கு செல்லும் ஆயத்ததில் மும்முரமாய் இருந்தனர். நாளை வந்தவுடன் முதலில் இந்த வேலை முடிக்க வேன்டும் என்று மனதில் குறித்துக் கொண்டு, வண்டிகள் நோக்கி தளர் நடை இட்டனர். எங்களுக்காக காத்து இருந்து எல்லோரும் அமர்ந்ததும் மெதுவாய் வண்டி கிளம்பியது.

வண்டியில் ஏறி அமர்ந்தவுடன் ஸ்விட்ச் போட்ட மாதிரி தலை பின்னோக்கி சாய்த்து, ஒரு சுகமான குட்டி தூக்கம். உச்ச ஸ்தாயியில் சில குறட்டை வேறு. ஏன் இது. சுவாரசியமாய் வெளியில் வேடிக்கை பார்க்க நம் ஊர் போல சுவரொட்டிகளோ, பேனர்களோ இல்லை, மற்றது இந்த ஊர் சீதோஷணம், பளீர் வெயிலும் சூடும், இமைகளை வந்து மூடி விடும் நம்மைக் கேட்காமலே.

சக பிரயாணிகள் அத்தனை பேரும் உறக்கத்தில். டிரைவரை தவிர ( நல்ல வேளை) என்னையும் தவிர. முதல் நாள் அலுவலகம் முடித்து வீடு திரும்பும் போது, வீட்டு ஞாபகம். பிரிந்து வந்த உறவுகள் எல்லாம் மனக்கண் முன்னால் ஒடியது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழி மனதில், உடன் இருந்த போது தோன்றாத பாசம் வாட்டி, இப்போதே பார்க்க வேண்டும் என்று ஆவல் தூண்டும். பணமோ, நேரமோ, தூரமோ மாத்திரம் அல்லாது, அலுவலக அனுமதி என்னும் உச்சகட்ட தடைக்கல் நம் இயலாமையை ஏள‌னம் செய்யும்.

மீண்டும் அதே சாலை, வழுக்கிக் கொண்டு ஒடும் வண்டிகள். வழ‌க்கமான வாகன நெரிசல். எல்லா சாலையும் ஒரே மாதிரி தெரியுது. இத்திஹாத், பர்ஷா, கிசேஷ், உம் சிக்ஹிம், போன்ற உள்ளூர் ஏரியாக்களும், சாலை பெயர்களும், நேற்று சுட்ட வடை போல‌ வாயில் நுழைய மறுக்கிறது. முதலில் தோன்றும், இது எல்லாம் தெரிந்த ஒட்டுனர் பெரிய பிஸ்தா வென்று. ஆறு மாதம் ஆனால் நமக்கே இதெல்லாம் தெரியும் என்பது அப்போது தெரியவில்லை.

ரோடில் போகும் போது, போக்குவரத்து பற்றி கொஞ்சம் விரிவாய் பார்ப்போம். சாலை வழியே பிரதானம். பொது போக்குவரத்து பஸ்களும், டாக்ஸிகளும் கவைக்குதவாததால், நம் கால்களையே.... சாரி நம் கார்களையே நம்ப வேண்டிய நிலை. அதனால் தான் ஒற்றை ஆளாய் உட்கார்ந்து லாரி சைசில் உள்ள வண்டி ஓட்டி கொண்டு போவார் நம் அமீரகத்தின் ஆள்.
ஒற்றை ஆளாய் உட்கார்ந்து ஒட்டும் வண்டியின் எண்ணிக்கைதான் சாலை நெரிசலின் பிள்ளையார் சுழி.

ஓட்டுனர் உரிமம், அதாங்க நம்ம ட்ரைவிங் லைசன்ஸ் வாங்குவது ரொம்ப கஷ்டம். அழ அழ வைத்து பின்னர் தான் கொடுப்பார். ஓட்டுனர் உரிமம் வேண்டும் என்றால் பயிற்சி பள்ளிக்கு சென்று அட்மிஷன் வாங்க வேண்டும். அனுமதிக்கு முன் உங்கள் கண்ணை பரிசோதித்து கண் நல்லா தெரியுது என்ற சான்றிதளோடு செல்ல மறக்க கூடாது.

முதலில் சாலை விதி முறைகள் மற்றும் சாலை குறியீடுகள் எல்லாம் வகுப்பறையில் சொல்லி கொடுக்கப்பட்டு பின்னர் வண்டியில் ஏற வேண்டும். இதில் இரு நிலை. முதலில் நான்கு சுவர்களுக்கு உள்ளே ஓட்ட தெரிகிறது வண்டியை நிறுத்த தெரிகிறது என்று நிச்சயம் ஆனதும் சாலைக்கு வர அனுமதி. சாலையில் வாத்தியாரோடு பாடம் நடக்கும். பின்னர் வாத்தியார் (எம்.ஜி.ஆர்.அல்ல) ஓகே என்ற உடன் நமக்கு பரிட்சை.

எப்படி தான் அந்த தேர்வு பயம் கொண்டு வருவார்களோ அந்த ஆண்டவருகே வெளிச்சம். எத்தனை பெரிய சூரனும் படபடத்து பயத்தில் மூழ்குவான். மிக குறைவாய் பேசும் பரிசோதகர், எளிதாய் நம்மை பெயில் செய்வார். எட்டு பத்து தேர்வு எழுதியும், ஒரு லட்சம் ரூபா செலவழித்தும் இன்னும் கிடைக்கல என்ற மனித புலம்பல்கள், எங்கும் நிறைந்து இருக்கும்.

சரி ஏன் இத்தனை கெடுபிடி.

வண்டி வாங்கி ஒட்ட துவங்கிய முதல் இரு மாதத்தில், நாம் எப்படி ஓட்டினோம். அதுவே ஒரு இரண்டு மாதத்தில் பழகி, அனாயாசமாய் இது ஒரு வேலையே இல்லை என்று நினைத்தோம் அல்லவா. வண்டி ஓட்ட மூளையை பயன் படுத்தாமல், தன்னிச்சை உணர்வுக்கு விட்டு விடும் போது, கார் தானாய் ஓடும் அல்லவா. அப்படி ஒரு உயர்ந்த நிலை வரும் வரை உரிமம் இல்லை, உக்கி போடு தான். 120 கீ.மீ. வேகத்தில் செல்லும் சாலையில் முதல் நாளே நாம் ஓட்ட வேண்டாமா. க‌த்துகுட்டிக‌ளின் த‌வ‌று அவ‌ர்க‌ளை ம‌ட்டும் அல்லாது, அடுத்த‌வ‌ரையும் கொல்லும் அல்ல‌வா.

கார் வாங்குவது கத்திரிகாய் வாங்குவது போலதான். பழையது, புதியது, எல்லாம் எளிதில் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும், புதுப்பித்து 63 டெஸ்ட் பாஸ் செய்தாலே வண்டி ஓட்ட அரசு அனுமதி கிடைக்கும். அதாவது புள‌க்கத்தில் உள்ள வண்டிகள் எல்லாம் தங்க கம்பிகளே. எனவே தைரியமாக போய் வண்டி வாங்கலாம். ஒட்டை உடைசலை நம் தலையில் கட்டும் வேலை நடக்காது.

நம் ஊரில் லெக்ஸஸ் கார் வாங்க முடியுமா. ஜாகுவார், ரேஞ்சு ரோவெர் வாங்க முடியுமா. மிக பெரிய செல்வந்தர்களால் மட்டுமே வாங்க முடிகிற ஒரு கோடி ரூபா கார் இங்கே கொஞ்சம் இஷ்டமும் கொஞ்சம் கஷ்டமும் பட்டாலே போதுமானது. நம்ம ஊர் கணக்கிலே பிரமாதம் என்று கருதும் லான்செரும் டொயோட்டா கொரேல்லாவும் தான் இங்கே ஆரம்பம்.


சரி சாலையை விட்டால் நூறடி தூரம் கடலைக் கடக்கும் ஆப்ரா (ABRA) எனும் கடல் வழி போக்குவரத்தை சொல்லலாம்.

துபாய் சரித்திர பிரசித்தி பெற்றதற்கு காரணம் இந்த கிரீக் தான். நிலத்துக்கு நடுவில் தோள் துண்டு போல் கடல் வருவது கிரீக். (தீபகற்பம் என்று நினைக்கிறோம், பின்னூட்டத்தில் சரியான தமிழ் பதம் சொல்லி உதவுங்களேன், கலைஞரை எல்லாம் விவாதிக்காமல்....) இதில் என்ன என்பவருக்கு: கப்பலில் வருபவர், ஊர் உள் வரை வந்து சரக்கு இற‌க்கலாம், இளைப்பாரலாம், கூடி கும்மி அடிக்கலாம்....அடுத்தது ரயில் மார்க்கம்: இப்போது இல்லை. விரைவில் வருகிற‌து, அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த தேதிதான் சூப்பர்.
09.09.09 : அதாவது, 9ம் தேதி செப்டெம்பர் மாதம், 2009.

கட்டுமான பணிகள் முடிந்து வெள்ளோட்டம் ஓடிக் கொண்டு இருக்கிறது. இவ்வளவு நாள் இல்லையா, என்ற நம் வாசகரின் மனக் கேள்விக்கு, வெள்ளைக்காரன் புண்ணியத்தில நமக்கு எல்லாம் கிடைத்த ரயில் போக்கு வரத்து, பாவம் வளைகுடா வரை எட்டவில்லை. துபாய் மற்றோரு கோண்த்தில் பார்த்தால் புது பணக்காரன் என்றும் சொல்லலாம். சிலாகித்து சொல்ல வரலாறு இல்லை. 1950-களில் தோண்டி எடுத்த எண்ணையில் வண்டி ஒடும் என்று கண்டு பிடித்தவன் பிடி புதையல் என்று கொடுத்த வரம் இது.

பாலை வனம் உண்டானது எப்படி? வாத்தியார் கேட்ட கேள்விக்கு விடை தெரியாமல் "ஞே" என்று விழித்த போது, காது முறுக்கி, "ஆ" என்று அலறவிட்டு, வாத்தியார் சொன்னது "வளமையான காடுகள் மண்ணில் புதைந்ததனால், வறட்சி ஏற்பட்டு பாலைவனம் ஆனது. புதைந்த காடுகளே பெட்ரோலியம் பொருட்களாக உருமாறி, .... தெரியுதா சோமாரி!!!சில சமயம் இப்படித் தோன்றும். ஒரு காலத்தில், சில பல‌ நூற்றாண்டுகளுக்கு முன் நிச்சயம் துபாய் பூத்து குலுங்கி இருக்க வேண்டும். உயர்ந்த மரங்களும், பச்சை இலைகளும் நிறைந்து நம் ஊர் போல் இருந்து இருக்க வேண்டும். பின்னர் காடுகள் பூமி உள் சென்று பெட்ரோலாய் விளைந்து (??) இருக்க வேண்டும். இன்று அடர்த்தியாய் உள்ள கேரளா நாளை பாலைவனம் போல் ஆகுமோ ???? துபாய் அப்போது பச்சையாய் இருக்குமோ??? வேலை தேடி ஷேக் எல்லாம் சேட்டனிடத்தில் வருவாரோ????

கடுகை துளைத்து ஏழ் கடலை அடக்கிய குறள் நம் தமிழுக்கு அழகு என்றால், சாலையை துளைத்து ஸ்டேஷனை அடக்கிய மெட்ரோ துபாய்க்கு அணிகலனே. சாலைக்கு மேலே சில, பூமிக்கு கீழே பல என்ற ரயில் இருப்புப் பாதைகளும், ஸ்டேஷன்களும் ஜொலி ஜொலிக்குதே, கண்ணைப் பறிக்குதே!!.
ஆனால் துபாய் சூட்டில் ஒரு பிரச்சனை உண்டு. ஐந்து நிமிடம் சூரியனோடு உறவாட முடியாது. (இதில் அரசியல் உள் குத்து ஒனறும் இல்லை) நடந்தாலோ, நின்றாலோ தலை சுத்தி விடும். பாருங்களேன் இல்லை என்றால் குளுகுளுவென சாலை ஓர பஸ் ஸ்டாப் தேவையா. பின்னர் எப்படி ஸ்டேஷன் விட்டு வெளியில் வந்து நம் இலக்கு அடைய முடியும் என்று தெரியவில்லை. பொறுத்து இருந்து பார்க்க வேண்டியது தான்.
மக்கள் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க எல்லா அரசாங்கமும் இதுபோல் செய்தால், என் போன்றோர், அரசியலுக்கு வர தேவை இல்லை - உருளை நாயகன்


கல்யாணம் ஒரு பெரிய தமாசு. எப்படி. நம் ஊரின் நேர் மாதிரி. நம்ம ஊரில் வரதட்சணை கொடுக்க முடியாமல் வாடி வதங்கும் முதிர் கன்னிகள் வடிக்கும் கண்ணீர் போல் இங்கு ஆண்கள் வடிப்பார். விளக்கத்துக்கு போகும் முன்னால் ஒரு இளம் அரேபியனின் புலம்பலை கேளுங்கள்.

"நான் ஏழை குடும்பத்தை சார்ந்தவன். அப்பா அம்மா சேர்த்த சொத்து இல்லை. மண வயது தாண்டி விட்டது. என் சோட்டு பையன்கள் எல்லாம் இரண்டு மூன்று கல்யாணம் முடித்து விட்டார்கள். நான் மட்டும்..... " (விசும்பல் ஒலி அங்கு கேக்குதா??).

கல்யாணத்தின் போது, மணமகன், மணமகளுக்கு தனியாக ஒரு வீடு, 3-5 லட்சம் வரை பேங்க் பேலன்ஸ்...மற்ற பல வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.... சுருங்க சொல்லின், பையன் தான் கல்யாணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டும்...... இது கட்டாயம்....


திருமணத்துக்கு முன் பெண் பார்க்கும் பாக்கியம் அமீரக ஆண்களுக்கு இல்லை. மாப்பிள்ளை வீட்டு பெண்கள் சென்று பார்க்கலாம். தேர்ந்தெடுத்து முடிவு செய்து, திருமணம் முடிந்த்ததும் தான் நேர் (கோ)காணல். இத்தனை விசயம் பேசினோம், கேளிக்கை, பொழுது போக்கு பற்றி பேசலையே, என்ற கேள்விக்கு விடை தெரிய வார இறுதி வரை பொறுத்திருப்போம்.

................... தொடரும்.

முடிக்கும் முன்: உஸ்... ஆ!!!!

வேறோன்றுமில்லை, முதல் ஆறு பதிவில் நல்லா எழுதுறீங்க, நாங்க அனுபவிக்கிறோம் என்றெல்லாம் முதுகில் ஷொட்டு.அதுவே ஏழாவது பதிவில் தகவல் குறைவு, உணர்ச்சி குறைவு என்று தலையில் குட்டு.
நல்ல நண்பர்களின் உள்ளார்ந்த அன்பும் அக்கறையும் இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் கிடைக்கும். இந்த உறவின் பலம், மேன்மை எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

கேட்டு வாங்கி சாப்பிடும் குழந்தையை, பரிவோடும் பாசத்தோடும் பார்த்து, வயிறு நிரம்பியதால் விடும் ஏப்பத்தின் சத்தத்தை ரசிக்கும் தாய் உள்ளம் உணர்கிறோம்.

இலக்கியம் எனும் ஊரில் தமிழ் எனும் ராஜ பாட்டையில் தவழ்ந்து நடை பயிலும் எங்களுக்கு நாளை நிமிர்த்தி கை வீசி நடக்க இந்த உறவின் பலம், மேன்மை உதவும்.(இன்னும் வரும்.......)

மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 7)

முதல் நாள் அலுவலகம் வந்த போது சந்தோசமாய் ஒரு புன்னகை. ஆ...ஹா..நல்லா இருக்கே. குளு குளு சூழல், பள பளவென தரை, மெத்து மெத்துன்னு குஷன் சோபா, பெரிய தோரணையில் மேசை நாற்காலி. இந்தியாவில் மேல் தட்டு மேனேஜருக்கு மட்டுமே கிடைக்கும் சௌகரியம் இங்கே சாதாரணமாய் எல்லாருக்கும் கிடைக்கும். அது என்ன?

அழுது புரண்டு வாங்கும் நமக்கே நமக்காய் உள்ள கணிணி / கம்ப்யூட்டர் உச்ச கான்பிகுரேஷன் இங்கு நாம் கேட்காமல் கிடைக்கும். பேனா, பென்சில், நோட், பன்சிங்க் மெசின், இந்த கூட்டத்தில் ஒரு கம்ப்யூட்டரும் கிடைக்கும். விலை ரொம்ப சல்லிசு ஒரு காரணம் என்றாலும், வேலை செய்ய உபகரணம் அவசியம் என்ற நம்பிக்கையும் இருப்பதால்.

வேலை நேரத்தில் கசக்கி பிழிவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. எட்டு மணி நேர வேலையை நம் ஊரில் அழுது அழுது... (மூக்கால் அழுதுதான் - அது எப்படி மூக்கை வைத்து அழுவது) செய்யும்போது சர்வ சாதாரணமாய் இங்கு 12, 15 மணி நேரம் வேலை செய்வார்கள்.

தசாவதானி என்று (கமல்ஹாசன், ராஜேந்தர் அல்ல) கேட்டு இருக்கிறோம். ஆனால் இங்கே பார்த்து விடலாம். கையில் ஒரு தொலைபேசி, கழுத்துக்கும் தோளுக்கும் இடையில் முட்டு கொடுத்து ஒரு கைபேசி, கை விரல்கள் ஓட விட்டு கணிணியின் தட்டுதலில், கண்கள் பக்கத்தில் உள்ள ஃபேக்ஸ் இயந்திரத்தில் வரும் சேதியை வாசித்துக் கொண்டும், என கதகளி ஆடி கொண்டு இருப்பார்.

அலுவலகத்தில் உள்ள நம் மனமோ, அத விட்டுட்டோமே (வடை போச்சே), அத மூணு பகுதியா பிரிச்சு, ஊரு கவலை ஒரு பக்கம், ஆபிஸ் கவலை ஒரு பக்கம், தினசரி வாழ்வு கவலை ஒரு பக்கமுன்னு ஓடிகிட்டு இருக்கும் .

சாலை ஒரத்தில் ஒரு வங்கியின் விளம்பரம் பார்த்த போது சட்டென ஒரு ஆச்சரியம் வந்தது. ஆமா!! சரிதான் இல்லே என்று தோன்றியது. அப்படி என்ன. அதன் வாசகம் இதுதான். லட்சியம் - மொழி, கலாச்சாரம் வேறுபட்டு இருந்தாலும், ௨00-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்து , ஒற்றுமையாய் வாழ்வதற்கு, தனி மனித லட்சியமே காரணம்.

மிக சரி. மாசம் பூராவும் உழைத்து நாம் ஏங்குவதெல்லாம் அந்த சம்பள தினம் எதிர்பார்த்துதானே. கையில் கிடைக்கும் அந்த தருணம் எத்தனை கடினத்தையும் தள்ளி வைக்கும். சம்பளம் பற்றி சொன்னதுமே அடுத்து, ரூபாயின் மதிப்பு பற்றி பேசுவோம்.

ஒரு யூ.ஏ.ஈ.திராம் கொடுத்து நம்ம ஊர் இந்திய பணம் கேட்டால், ரூ.13 ரூபாய் எண்ணிக் கொடுப்பான். இலங்கை ரூ.31/-, பாகிஸ்தான் ரூ.22/-, நேபாளம் ரூ.21/-, பங்களாதேஷ் ரூ.16.75......பிலிப்பைன்ஸ் ரூ.13/- (ஏறத்தாழ...).

ஒவ்வொரு நாளும், நரக வேதனையுடன், ஒரு யுகமாக ஓடி, அந்த முப்பதாவது நாளின் முடிவில் சம்பளம் வாங்கும் போது, ஏதோ பெரிய போரில் வெற்றி பெற்றவர்களின் மனநிலையில் இருப்போம் என்பது மட்டும் உறுதி...

இந்த நாணய மதிப்பின் காரணமாகவே, ஆசியாவின் அனைத்து ஏழை நாடுகளை சேர்ந்த மக்கள், இங்கு அடிமை (சொல்லவே மனசு வலிக்குது, ஏறக்குறைய அடிமைதான்...) போல வேலை செய்து, பணம் ஈட்டுகின்றனர்.


பெரும்பாலோர், அதை நல்ல முறையில் சேமித்து, தாய்நாட்டிற்கு அனுப்பினாலும், சிலர், கஷ்டப்பட்டு ஈட்டிய பணத்தை இங்கேயே தொலைக்கும் கதைகளையும் நாங்கள் கண்டதுண்டு..... (அது ஒரு நாற்றம் பிடித்த கதை.... அதை பற்றி, இங்கே பெரிய அளவில் சொல்ல கூட என் மனம் கூசுகிறது.....)...

இன்னொரு மனம் பதைபதைக்கும் விஷயம்.... இரண்டு அறை உள்ள ஒரு வீட்டில், இரண்டு குடும்பங்கள் சேர்ந்து வாழ்வது...... சில வீடுகளில் 1 1/2 டாய்லெட் மட்டுமே இருக்கும்.... சில வீடுகளில் ஒரு ஒரு பாத்ரூம் மட்டுமே இருக்கும். ஒரு பொதுவான சமையலறை.... ஒரு பாத்ரூம் இருக்கும் நிலையில், இரு குடும்பங்களுமே அதையே உபயோகிக்க வேண்டி வரும்..... இது ஒரு பெரிய கொடுமை.....

இந்த நிலையை நாம் விரும்பாமலேயே ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது.... ஏனெனில், கொடுக்க வேண்டி இருக்கும் மாத வாடகையை மனதில் வைத்து..... மிகைப்படுத்தாமல் சொன்னால், இரண்டு படுக்கை அறையை கொண்ட ஒரு வீடு வாடகை மாதம் ரூ.90,000/- (மிகவும் குறைவாக மதிப்பிட்டால்) என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். இதற்கு கீழும் கிடைக்கும், ரூ.75,000 - ரூ.80,000/- கொடுத்தால் (மிகுந்த வசதி குறைவோடு.....)

இந்த விஷம் போல ஏறிய வாடகையை பற்றியும், அதற்கான காரணத்தையும் ஏற்கனவே நாம் பார்த்து விட்டோம்.

வரும் பகுதிகளில் வேறு பல சுவாரசியமான விஷயங்களுடன் சந்திக்கிறேன்.....

(தொடரும்........)

அயன் - 100 நாட்கள் ஓடி வசூல் சாதனைSuriya - Prince of Chennai Box Office

Suriya’s, KV Anand directed Ayan is completing 100 days run today in four Chennai screens.
It is not only the biggest hit in the career of Suriya but also 2009’s first blockbuster, that will do business worth Rs 45 to 50 crore worldwide from theatricals and other rights.

It is an open secret that Suriya is the clear number one star in Kollywood and commands a huge opening especially in up market territories, the 3 C’s- Chennai City, Chengalpet (Chennai suburbs) and Coimbatore.

As per our sources in the trade Ayan has taken a share of Rs 4.05 Crore from Chennai , the third highest share for a Tamil film in the city.

At number one position and the record holder is Superstar Rajinikanth’s Sivaji- The Boss, with Rs 6.85 crore share, and in the second position is ‘Ulaganayagan’ Kamal Hassan’s Dasavatharam with Rs 5. 60 crore!

If Rajini is “the Emperor” and Kamal “the King”, then we can call Suriya “the Prince” of Chennai Box Office!

(source : sify.com)

மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம்- (பாகம் - 6)

வந்தோம் துபாய்க்கும்.. வீட்டுக்கும்...... பெட்டி படுக்கை வைத்து விட்டு சாப்பிட சென்றோம். சாப்பிட்டும் முடித்தாயிற்று. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்ற பழமொழி மனதில் ஓட கால் தயங்க ஒரு கிறங்கிய அன்ன நடை....
கையில் உள்ள பாஸ்போர்ட் லேசாய் கனத்தது. நம் ஊர் விட்டு அயல் நாடு வரும் போது இது ஒரு தொல்லை. எப்போதும் நாம் யார் என்று சொல்லும் எதாவது ஒரு அடையாள சீட்டு கையில் வைத்து கொண்டு இருக்க வேண்டும். இல்லை என்றால் காவலர் வசம் சிக்கி, திக்கி பின் விக்க வேண்டி இருக்கும்.

இந்த தொல்லை இவருக்கு இல்லையே. அது ஏன். உடன் வந்த நண்பர் சொன்னது. நாளை காலை நம் அலுவலகம் சென்றதும் பாஸ்போர்ட் கொடுத்து மெடிக்கல் டெஸ்ட் செய்து முடித்து விட்டால் நம் பாஸ்போர்ட்டில், நாம் பணிபுரியப்போகும் அலுவலகத்தின் பெயரை விசா வடிவில் ஸ்டாம்ப் ஆனதும் நம் கையில் பத்தாகா (PATHAKA) கிடைக்கும்.

ஞே! என்று இருந்தது. ஒன்றும் புரியவில்லை. விசா... பத்தாகா. எந்த லாலா மிட்டாய் கடையில் கிடைக்கும் என்று கேட்க வாய் வரை வந்தது, கேட்கவில்லை.

அன்னிய நாட்டில் தங்க அனுமதி தருவது விசா (Visitors Intention to Stay Abroad என்பதின் சுருக்கம் தான் விசா என்பது).

அந்நிய நாட்டின் உள்ளே வந்தவர், விசா மெடிக்கல் முடித்து, வேலை செய்ய தகுதியானவர் என்று ஆஸ்பத்திரி அத்தாட்சி வழங்கியவுடன் இந்த வேலைக்கான விசாவை கம்பெனியின் பெயருடன் பாஸ்போர்டில் சீல் குத்தி, ஒரு அடையாள அட்டை வழங்குவது ஆங்கிலத்தில் லேபர் கார்டு. தமிழில் பணி அட்டை. இதற்கு தமிழில் இப்படி சொல்லி விடோம். பணி அட்டை என்று சொன்னால் கடிக்கவா செய்யும். பத்தாக்கா என்று செல்லமாய் அமீரகத்தில் அழைப்பார்கள்.
இதே அட்டையை இக்காமா என்ற பெயரில் சவுதி அரேபியாவில் அழைப்பார்கள். ஒரே அரபி மொழியில் ஏன் இரண்டு வேறு வார்த்தைகள் என்ற கேள்விக்கு பதிலை சாய்சில் விட்டு விட்டேன்.

இங்கு இன்னும் ஒரு கொடுமை உண்டு. நம் பாஸ்போர்ட் நம் வேலை செய்யும் நிறுவனத்தில் கொடுத்து விட்டு அவர்கள் தரும் பணி அட்டையை சுமந்து கொண்டுதான் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டி வரும். நாடு விட்டு நாடு செல்ல பாஸ்போர்ட் வேண்டும். அதை பணயம் வைத்து விட்டு தான் வேலை தொடங்க வெண்டும். நிறுவனங்கள் பாதுகாப்புக்காக செய்யும் தகிடு தத்தம் இது.
அரபு நாடுகளில் கூட இது போன்று ஒருவரின் பாஸ்போர்ட்டை கம்பெனி வைத்துக்கொள்ள கூடாது என்ற ஒரு சட்டம் உண்டு. அப்படி செய்ய கூடாது என்று. யார் மதிக்கிறார்கள். தான் போடும் சட்டங்களை தானே மீறுவது தானே மனிதனுக்கு அழகு.
அந்த வேலையை இங்கு உள்ளவர்களும் கடைப்பிடிக்கிறார்கள். விசா என்னும் விஷயத்தை கொஞ்சம் விரிவாய் பார்த்தால். பல தரப்பட்ட வகைகள் உண்டு.
வேலை செய்வதற்கான பணி விசா (EMPLOYMENT VISA).
மூன்று வருட ஒப்பந்த்தில், குறிப்பிட்ட கம்பெனியில் பணி செய்ய அனுமதி. மூன்று வடுடங்களுக்கு பின், மறுபடியும், விசா மெடிக்கல் முடிக்க வேண்டும், பணி செய்ய தகுதியானவர் என்ற சான்றிதழ் வாங்க வேண்டும்..... (ஏன், இவ்வளவு கெடுபிடி....அவர்கள் செய்யும் அனைத்துவிதமான செயல்களிலும் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது அய்யா...)
சுற்றுலா விசா - (TOURIST VISA)
ஊர் சுற்றி பார்க்க வருபவர்களுக்காக மூன்று மாதங்கள் வரை தங்க அனுமதிக்கும் விசா இது.
மாணவர்களுக்கான விசா (STUDENTS VISA)
இங்கு பல்வேறுபட்ட இந்திய (பிட்ஸ் பிலானி) , அமெரிக்க கல்லூரிகள் உள்ளது. இதில் படிக்க, இங்கு தங்க இந்த வகை விசா பயன்படும்.
தொழில் தொடங்குபவர்களுக்கான பிசினஸ் விசா (BUSINESS VISA).
மற்றும் பல வகையான விசாக்கள் உண்டு. நாம் இங்கு பார்த்தது முக்கியமான சில வகையான விசாக்கள் மட்டுமே.
இன்னொரு முக்கியமான விஷயம்... ON ARRIVAL VISA என்ற சங்கதி வெள்ளைத்தோல் உள்ளவர்களுக்கு மட்டும் தான் என்பதான ஒரு விஷயம் உண்டு. இவர்கள் தங்கள் நாடுகளில் இருந்து இங்கு வந்து இறங்கியவுடன், அந்த ON ARRIVAL VISA தங்க தாம்பாளத்தில் வைத்து தரப்படும்.

இவ்வளவு பெரிய இந்திய நாட்டிலிருந்து நமக்கு எல்லாம் அந்த கொடுப்பினை இல்லை.

வீடு வரை செல்ல ஒரு வாடகை கார் அமர்த்திக் கொண்டோம். வகை தொகையில்லாமல் வீட்டு வாடகை என்று முன்னோரு அத்தியாயத்தில் பார்த்தோம்.

அடுத்தது இந்த டாக்ஸி தான். ஏறி அமர்ந்ததும், 3.50 திராம் என மீட்டர் ஆரம்பித்தது. நம் ஊர் கணக்குக்கு ஒரு 45 ரூபாய்க்கும் மேல் (தற்போதைய மதிப்பு 1 திராம் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் Rs.13/-) . அதெல்லாம் சரி, பத்தடி தூரம் நகர்ந்து மீட்டர் 4 திராம் என்று காண்பிக்கும்போது நாம் இறங்குகிறோம் என்றாலும் குறைந்தபட்சமாக 10 திராம் எண்ணிக்கொடுக்க வேண்டும். அது ஏன். 10 திராம் குறைந்த கட்டணம்.

ரொம்ப தூரம் இல்லை, ஒரு 20 கீ.மீ தூரம் சென்றால், சில நேரம் செல்ல வேண்டி இருக்கும். 100 திராம் வரை தர வேண்டி இருக்கும். இந்த தொகையில் சிக்கனமாய் சாப்பிட்டால் ஒரு மாதம் முழுக்க காலை வேளை உணவை சாப்பிடலாம்.

விமான நிலையத்தில் இருந்து கிளம்பினா மீட்டர் 20 திராமில்தான் தொடங்கும். இது ஏன் இவ்வளவு என்றால் இந்த டாக்ஸி கம்பெனியின் ஓனர்தான் இந்த சட்டத்தை போட்டவர். அவருக்கு என்று வரும்போதும் விட்டு விடுவாரா என்ன??
அவ்வளவு ஏன், துபாயின் ப்ளேன் கம்பெனி ஓனர் தான், அந்த துறை மந்திரி. அவரே சட்டம் போட்டுட்டு அவரே கடை பிடிப்பார், அல்லது கடை விரிப்பார்.
வெண்ணை போல் வழுக்கிட்டு ரோட்டுல கார் ஓடுனாலும் நம்ம வயத்துல டன், டன்னாக புளி கரைக்குது. ஏன்?
சரி நகர்ந்து செல்லும் வாகனத்தின் கண்ணாடி வழியே கொஞ்சம் வெளியே நடக்கறத பார்ப்போம். வேகமா ஓட்டுற ஒட்டுனர். ஒரு சில இடத்திலே மட்டும் ப்ரேக்கை அமுத்தி கொஞ்சம் மெதுவா போறார். அப்புறம் ஸ்பீடா போறார். கொஞ்ச நேரம் ஆனதும் இதே குத்து... அல்லது கூத்து தான் (இது என்ன உள்குத்து, வெளிகுத்து?). பாத்துடுவோம்.....ஏன் இப்படின்னு?.
வண்டியின் வேகம் பரிசோதித்து, அறிவிக்கபட்ட வேகத்திற்கு மேலே இருந்தால் ஒரு போட்டாவும் எடுத்து நம்ம வண்டி பெயர் பலகையோட சேர்த்து உடனே நம்ம கணக்கிலே ஒரு அபராதமும் விழும். அதுவும் எவ்வளவு தெரியுமா நம்ம ஊர் கணக்கிலே 25000 ரூபாய். மிக விரைவில் நடக்க இருக்கும் மற்றொரு கூத்து இது.

சரி, யாரு நம்மள போட்டோ எடுக்கறது என்றால், சாலைகளில் ஆங்காங்கே பொறுத்தப்பட்டு இருக்கும் ரேடார் கேமராதான்...

இது என்ன பகல் கொள்ளையால்ல இருக்கு என்று நேயர்கள் மனதில் ஒடுவது தெரிகிறது, இதெல்லாம் ஜுஜூபி கண்ணா....வெறும் ட்ரைலர், இன்னும் கொஞ்சம் கேளுங்க... ... அதான் மெயின் பிக்சர்......

சாலிக் : இது புதுசு கண்ணா புதுசு. 100 திராம் செலவழிச்சி நம்ம ஒரு ஸ்டிக்கர் வாங்கி நம்ம வண்டியிலே ஒட்டணும். அப்புரமா வண்டி ஓட்டணும் (இப்போது துபாயில் சாலிக் ஸ்டிக்கர் ஒட்டாத வண்டி ஒண்ணு கூட பாக்க முடியாது).
சரி, மேல என்ன?

வண்டி ஓடும் போது சில ரோடுகள்லே தோரணம் மாதிரி டோல்கேட் இருக்கும் (இவர்தான் துபாயின் இன்றைய தேதியின் கலக்ஷன் கிங். நம்ம சூப்பர் ஸ்டார் நடிச்ச "சிவாஜி தி பாஸ்" ஒலகம் முழுக்க கலக்ஷன் பண்ணின அமௌன்டை இவரும் ஒவ்வொரு வாரமும் நெருங்கி வர்றார்)..

சத்தம் எதுவும் போடாம அது பாட்டுக்கு நம்ம வண்டியில் உள்ள ஸ்டிக்கர் கிட்ட ஒரு முத்தம் கொடுத்துட்டு நம்ம கணக்கிலே ஒரு 4 திராம் கழிச்சுக்கும். வார்த்தையை கவனியுங்க. கழிச்சுக்கும். ஒரு கணக்குல பார்த்தா எங்க வீட்டிலே இருந்து ஆபிஸ் போயிட்டு வீட்டுக்கு வந்தா ஒரு 32 திராம் தினத்துக்கு கணக்குல கழியுது..... பேண்ட் கிழியுது.......கிழிஞ்சு தொங்குது......

(PHOTOS : SALIK / TOLL & RADAR CAMERA)

(தொடரும்........)