அவன் எப்படி இருந்தான்
மனிதன்தான் என சொல்லும்படி இருந்தான்
என சொல்லிக்கொள்ளும்படியாக இருந்தானா
என சொல்லத் தெரியாதபடி தான் இருந்தான் .....
விவரிக்க சுவாரசியமாக எதுவுமே இல்லாதது போல இருந்தான் ....
நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை ...
இப்படி ஏதுமின்றி , சற்றே கூன் முதுகுடன்,
ஒன்றரை கண்ணுடன் இருந்தான்......
தலையில் நன்கு எண்ணையிட்டு,
வகிடெடுத்து சீவி,
சிங்காரித்து - இப்படி ஏதும் இன்றி .....
எண்ணை என்றால் என்னவென்றே அறியாத,
சீப்பை சில மாதம் பார்க்காத, சிடுக்கு பிடித்த தலை .........
மூக்கு கூட, ஒரு ஒழுங்கு ஏதுமின்றி, கோணலாக இருந்தது. இரு புறமும் துவாரங்கள் இருந்ததால், அதன் வழியாக சுவாசிப்பான் என்று மட்டும் தெரிந்தது. அதில் பல பல டப்பாக்கள் பொடி போட்டு அடைத்ததற்கான அடையாளம் அழுக்குடன் காணப்பட்டது. கிழிந்த கோட்டின் ஊடே துரித்திய கணேஷ் பீடிக்கட்டு ஒன்று ....
காது என ஒன்று, இருபுறமும் நீட்டிக்கொண்டிருந்தது. எல்லோராலும் அதன் வழியே கேட்க முடியும். கேட்டதை கிரகிக்க முடியும். இவனுக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும்.
ஒழுங்கற்ற பல் வரிசையில், அவன் ஈ ஈ என இளித்தபோது, அந்த இளிப்பில் தெரிந்தது பத்து வருஷ பான்பராக் (நன்றி சுஜாதா) ....
ஒன்றரை காலை விந்தி விந்தி, இழுத்து இழுத்து நடந்து போகும் வழியில் .....
ஒரு குருட்டு பிச்சைக்காரன், உப்பு காகிதத்தை தகரத்தில் வைத்து தேய்த்த குரலில், உச்சஸ்தாயியில் ஏதோ ஒரு பாட்டை அபஸ்வரமாய் பாடிக்கொண்டிருந்தான் (ஈனஸ்வரத்தில் ஒரு அபஸ்வரம்). பசியின் வேகம் அவனை அழுத்த, அந்த அழுகுரலில், பசியின் வேதனை துல்லியமாய் தெரிந்தது .....
வருவோர், போவோர் மற்றும் போவோர் வருவோர் அனைவரும் அசுவாரசியமாய் அவரை கவனித்தும், கவனிக்காமலும், அவசர கதியில், கடந்து போய் கொண்டிருக்க .....
ஒரு வேளை சோத்துக்கு காசு எதுவும் தேறாத நிலையில்,
அவன் வயிறு காய்ந்து, சுருதி பிசகி,
சோகம் தாங்கி, தாளம் தப்பி பாடிக்கொண்டிருக்க ....
அதைக்கண்ட இந்த கதையின் நாயகன், தன் கசங்கிய கோட் பைக்குள் கை விட்டு, கிடைத்த மொத்த காசையும் எடுத்து அந்த குருட்டு பிச்சைக்காரனின் தட்டில் இட்டான் - தன் அடுத்த வேளை சோற்றைப்பற்றி கவலை இன்றி ......
கடந்து போன அனைவரின் விழிகளும் ஆச்சரியத்தில் விரிய
தலைகள் வெட்கத்தில் கவிழ்ந்து தரையை நோக்க
கதை நாயகன் தன் கூன் முதுகை நிமிர்த்த முடியாது, நிமிர்த்தி நடந்தான் ...
அவன் அங்கே உயர்ந்த மனிதன் ........
தூரத்தில் இன்னும் கேட்டு கொண்டிருந்தது அந்த குருட்டு பிச்சைக்காரனின் ஈனஸ்வர பாட்டு ...........
5 comments:
Sir, this is a fantastic narration. excellent use of words, keep up the spirit and write more
yours
raja, dubai
மிக மிக அருமையான படைப்பு !
இதுவரை இந்த ப்லோக் இல் டகால்டியையும் , சல்லிகளைளும் , சப்பிகலையும் ரசித்து வந்த எங்களுக்கு ஒரு வித்தியாசமான பாதைக்கு அழைத்து சென்ற உங்களுடைய இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இதுபோன்ற முயற்சி தொடரவேண்டும் என்பதே எனது வேண்டுகோள் !
அன்புடன்,
அபுதாகீர் , துபாய்.
நல்லா வந்துருக்கு!
சிறுகதையில் எதுக்கு சுஜாதாவுக்கு நன்றின்னு தெரியல! அது ஆசிரியனின் இருப்பை காட்டுது!
ரொம்ப அருமையான எழுத்து நடை. முத்துவில் வரும் சீனியர் ரஜினியை நினைவு படுத்தியது இந்த வர்ணனை!
//அநன்யா மஹாதேவன் said...
ரொம்ப அருமையான எழுத்து நடை. முத்துவில் வரும் சீனியர் ரஜினியை நினைவு படுத்தியது இந்த வர்ணனை!//
********
விடுகதையா இந்த வாழ்க்கை... விடை தருவார் யாரோ??
Post a Comment