லாகூர்: பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு, துப்பாக்கிச் சூடு தாக்குதலில் வீரர்கள் சமரவீரா, சங்ககாரா, மெண்டிஸ், சமந்தா வாஸ் உள்பட 7 பேர் படுகாயமடைந்தார். இலங்கை அணிக்கு பாதுகாப்புக்கு வந்த 5 போலீசார் பலியாயினர்.
சமரவீராவுக்கு நெஞ்சி்ல் குண்டு பாய்ந்துள்ளது.
பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்று வந்தது. லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து கொண்டுள்ளது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடக்க இருந்த நிலையில் ஸ்டெடியத்துக்கு வெளியே இலங்கை அணியினர் பஸ்சில் வந்து இறங்கியபோது தீவிரவாதிகள் திடீரென 4 கிரனைட் குண்டுகளை வீசினர். இதில் அந்த அணியில் நிலை குலைந்து ஓட ஆரம்பித்த நிலையில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இதில் திலன் சமரவீரா, குமார சங்கக்காரா, அஜந்தா மெண்டிஸ், திலன் துஷாரா, தரங்கா பிரனவிதனா மற்றும் சமிந்தா வாஸ் உள்பட 7 வீரர்கள் படுகாயமடைந்தனர். இதில் சமரவீராவின் நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளது. இன்னொரு வீரரின் கழுத்தில் குண்டு பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சங்கக்காராவுக்கு தோள்பட்டையில் குண்டு பாய்ந்துள்ளது.
இந்த தாக்குதலில் இலங்கை அணிக்கு பாதுகாப்புக்கு வந்த 5 போலீசார் பலியாயினர். இதையடுத்து கிரிக்கெட் பார்க்க வந்த ரசிகர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
இந்தச் சம்பவத்தையடுத்து இலங்கை அணியின் சுற்றுப் பயணம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுவிட்டது.
தாக்குதலில் இலங்கை வீரர்கள் வந்த பஸ் பெருத்த சேதமடைந்தது. பஸ் முழுவதும் குண்டுகள் துளைத்துள்ளன. இந்த பஸ்சுக்கு முன் பாதுகாப்புக்கு வந்த கார் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அதிலிருந்த 5 போலீசார் பலியாயினர்.
12 தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். பொது மக்கள் கண் எதிரிலேயே அவர்கள் மிக சாவகாசமாக தாக்குதலை நடத்தினர்.
காயமடைந்த வீரர்கள் உடனடியாக ஹோட்டலுக்கு திரும்ப அழைத்துச் செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சமந்தா வாஸ் ஸடிரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார். நேற்று 214 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் சமரவீரா என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இலங்கையின் பேட்டிங் முடிந்து இன்று பாகிஸ்தான் அணி பேட் செய்ய இருந்தது.
தாக்குதலில் காயமடையாத இலங்கை வீரர்கள் இன்னும் கடாபி ஸ்டேடியத்தில் தான் உள்ளனர். அவர்களை சுற்றி பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் போட்டிக்கான நடுவர்கள் சென்ற வேனும் தீவிரவாதிகளின் குண்டுகளுக்குத் தப்பவில்லை.
உலக அளவில் சர்வதேச கிரிக்கெட் அணியினர் மீது தீவிரவாத தாக்குதல் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நடுவர் காயம்:
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு அம்பயர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாரும் அபாய கட்டத்தில் இல்லை-ஜெயசூர்யா:
இதற்கிடையே தாக்குதலில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா அளித்துள்ள பேட்டியில், எந்த வீரரும் அபாய கட்டத்தில் இல்லை. கவலைப்படும்படியான நிலையில் எந்த வீரரும் இல்லை. இதை நான் உறுதிப்படுத்துகிறேன்.
அனைவரும் பாதுகாப்புடன் இருக்கிறோம். இந்த தாக்குதலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. முதலில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் நாங்கள் இருந்த வேன் மீது தாக்குதல் நடத்தினர் என்று ஜெயசூர்யா கூறியுள்ளார்.
(நன்றி : தட்ஸ்தமிழ்.காம்)
2 comments:
We would very much appreciate if you use only the first para of the original article from thatstamil and add a link to it
What you are doing is wrong and unethical. You are only hurting the careers of the people who are generating the original content
Mahesh
Mr.Mahesh
Thanks for your visit and comments. Will do so, in future.
But, i have given due credit to the site at the bottom of the said posted article.
Post a Comment