2009 – 2010 சிறப்புப் பார்வை – (பகுதி – 2)

கலைத்துறைக்கு அதுவும் திரைத்துறைக்கு நம் தமிழ் நெஞ்சத்தில் சீரிய சிம்மாசனம் உண்டு. கடந்து வந்த வருட்த்தின் சில துளிகளை பார்ப்போமே...

· ஆஸ்கார் சாதனை: இசைப் புயல் ரகுமான், ஒலி மேதை ரசூல் பூக்குட்டி என களம் இறங்கி நம் ”ஆஸ்கார் விருது” ஏக்கத்தை தணித்தார்கள். 52 வருடங்களாய், முட்டி மோதி கிடைக்காத்து, இந்த வருடம் தென்னகத்துக்கு சொந்தமாக்கி கொண்ட நிகழ்வு சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டது... நாம் விழாவில் எட்டிப்பார்த்து கொட்டாவி விட்ட காலம் போய், இப்போது நம் கதவு தட்டி ஆஸ்கார் விருது தரும் காலம் கனிந்து வந்திருக்கிறது.

· இங்கிலாந்தின் மிக பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான “பிக் பிரதர்” போட்டியில் பல்வேறு நாட்டை சேர்ந்த பல போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி, வெற்றி பெற்று லண்டன் மக்களின் அங்கீகாரத்தை தனதாக்கி நம் எல்லோரையும் பெருமை பட வைத்தார் ஷில்பா ஷெட்டி... இந்த சாதனை படைத்த கையோடு திருமணம் செய்து கொண்டார்...

* அக்கட பூமியில் வெளிவந்த சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நடித்த “மகதீரா” என்ற சரித்திர படத்திற்கு நல்ல வசூல் மகசூல்... ஒச்சாயி பாட்டி காலத்து ஓராயிரம் முறை கேட்ட புராண கதையை லேட்டஸ்ட் க்ராஃபிக்ஸில் குழைத்து கொடுத்து பார்ப்பவர்களை பரவசப்படுத்திய ”அருந்ததி” என்ற படமும் பாக்ஸ் ஆஃபீஸில் பட்டையை கிளப்பியது... கூடவே அதன் தமிழ் டப்பிங் வடிவம் தமிழ்நாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டியது...

இவ்விட சேர நாட்டில் மம்மூட்டி நடிப்பில், பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியான “பழசிராஜா” படம் வசூலில் தூள் கிளப்பியது... இதில் சரத்குமாரின் வேடமும், நடிப்பும் நன்றாக பேசப்பட்டது... ஆனால், அது அவரின் தமிழ்ப்படமான “ஜக்குபாய்” ரிலீஸுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை... (இத்தனைக்கும் சூப்பரா இருக்காம்.... ஆந்தையார், கழுகார் நியூஸுங்கோ.....)

ஹாலிவுட்டில் தயாராகி வசூல் சாதனை படைத்த, படைத்து கொண்டிருக்கும் ”2012” மற்றும் ஜேம்ஸ் கேமரூனின் மெகா பட்ஜெட் படம் ”அவதார்” வெளியானது இந்த 2009 ஆண்டில்தான்... அதிலும் அவதார் படம் மெகா வசூலிலும், விஷுவலாக 3D யிலும் கலக்குகிறது.... ”அவதார்” படத்தின் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் யுவராஜ்சிங் போல 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து விட்டார் என்கிறது உலக பாக்ஸ் ஆஃபீஸ் ரிப்போர்ட்....

* குறைந்த பட்ஜெட்டில், எளிமையான திரைவடிவத்தில், தரத்தில் உயர்ந்து வெளிவந்த படங்கள் சில பட்டையை கிளப்பின. இத.... இத .... இதத்தான் நாங்க எதிர்பார்த்த்தோம் என சினிமா ரசிகன் வசூலில் வக்கணையாச் சொன்னார்கள். உன்னைப் போல் ஒருவன், பசங்க, நாடோடிகள் .............. படங்களை பார்த்து...

* என்னைப்பாரு, என் பட்ஜெட்ட பாரு, என் படத்த பாரு, வசூல்ல பிச்சிக்கும் பாரு”, என டகால்டி விட்டு, மிகுந்த பொருட் செலவில் தயாரான “வில்லு” “குருவி”, “தோரணை”, “கந்தசாமி” ”வேட்டைக்காரன்” போன்ற எதிர்பார்க்கப்பட்ட படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் பிச்சுக்கும் என களத்தில் நின்றவர்கள், அடிச்ச ஆடிக்காத்துல உச்சி குடுமி பிச்சிக்கிட்டு போச்சு. படங்கள் பப்பரப்ப என்று சொல்லி பப்படம் ஆனது. எதுவும்னா, அட மெய்யாலுமே எதுவுமே மிஞ்சலியாமே... அதிலும், ஒரு படத்தோட நடிகர் படம் ரிலீஸான 3வது நாளே படம் இமாலய வெற்றி, இதுவரை எந்த படமும் காணாத வெற்றி என்று பத்திரிக்கைகள கூப்பிட்டு சொன்னது, கோவில் படத்தில் வடிவேல் சிலம்ப சண்டையில் வெற்றி பெற்றதாக சொன்னதை போல் இருந்தது... இந்த நகைச்சுவை காட்சி பிரமாதமாக இருக்கும்... நேரம் கிடைக்கும் போது பார்த்து மகிழுங்கள்... அப்போது, அந்த நடிகர் சொன்னதையும் நினைத்து பார்த்தால், டபுள் கிச்சு கிச்சு உத்தரவாதம்...

அயன், ஆதவன் என்ற இரண்டு படங்களிலும் வெற்றி பெற்று ஒப்பனிங் ஓவரில் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸர் விளாசிய வீரேந்திர சேவாக் போல், வெற்றி வீரனாய் வலம் வருகிறார் சிவகுமாரின் மூத்த புதல்வர் சரவணன் அலையஸ் சூர்யா... இந்த இரண்டு வெற்றி படங்களை தொடர்ந்து முறுக்கிய மீசையோடு ஹரி டைரக்‌ஷனில் “சிங்கம்” என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்...
இது தவிர 2009 ஆம் வருடம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் “எங்கள் ஆசான்” மற்றும் “மரியாதை” , சரத்குமார் அவர்கள் நடிப்பில் “1977” போன்ற டெர்ரர் படங்களும் ரிலீஸ் ஆகி நம்மை திகில் அடைய செய்தது...


( வாசகருக்கு ஒரு புதிர் போட்டி: அருகில் காணப்படும் படத்தில் ஏதாவது தவறு தெரிகிறதா.... விடை : இறுதி பத்தியில்)

வரும் ஆண்டை வரவேற்ப்போம்.
2010 ஆம் ஆண்டின் எதிர்பார்ப்பு நீண்ட நெடுங்காலம் அரசியலில் பணியாற்றி, தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாய் அறிவித்த மூத்த அரசியல் தலைவர் டாக்டர் கலைஞருக்கு பாராட்டும் பூமாலையும். இனி அவர் ஓய்வில் இருக்கும்போது, கதை வசனம் எழுதும் காவியங்கள் ”பொன்னர் சங்கர்”, பெண் சிங்கம்” போன்றவை வரிசையாய் வரிசையில் (இந்த வார்த்தை கரெக்டா??!!) நிற்கும்.... அந்த கலை படைப்புகளுக்கு தார்மீக ஆதரவு தரும் மாபெரும் பொறுப்பு 2010 ஆம் ஆண்டில் நமக்கு இருக்கிறது...

சிலருக்கு பிடிக்கல என்றாலும் உண்மை இதுதானே. ரஜினியின் புதிய படமான ”எந்திரன்” (தமிழ், தெலுங்கு, ஹிந்தி) ரீலீஸ் (ஏப்ரலில் இல்லையென்றால், கண்டிப்பாக ஜூன் மாதத்தில்) உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்தமாக படத்தில் பங்கு கொள்ளும் அத்துணை பெயர்களின் மிக கடின உழைப்பில் உருவாகும் இந்த படத்தின் மூலம் தமிழ் படங்களுக்கு உலகளாவிய அளவில் மார்க்கெட்டும், பெயரும், புகழும், வியாபாரமும், பணமும், வீச்சும், நம் கோடம்பாக்கத்தை தேடி வரப் போகிறது. “சிவாஜி” படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றி கூட்டணி, இந்த “எந்திரன்” படத்தின் மூலம் அகில உலகையும் திரும்பி பார்க்க வைக்கும் என நம்புவோம்... “எந்திரன்” வெற்றி பெற வாழ்த்துவோம்.

கூடவே சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியாவின் முதல் ஹீரோ அனிமேஷன் படமான “சுல்தான் தி வாரியர்” படமும் தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்கு அழைத்து செல்லும் என எதிர்பார்ப்போம்... அனிமேஷன் படம் என்பதால், சாத்தியப்படும் அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்ய ஏதுவாகும்...

இந்தியாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பு மற்றும் டைரக்‌ஷனில் வெளிவர இருக்கும் “ராவண்” என்ற மும்மொழி படம் (தமிழ், தெலுங்கு, ஹிந்தி) பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது...

சராசரி சினிமா ரசிகனாய் செல்வாவின் ஆயிரத்தில் ஒருவன், சௌந்தர்யா ரஜினியின் “கோவா”, மிஷ்கினின் நந்தலாலா ஆகிய படங்களை எதிர்பார்ப்போம். நம்மை குஷிப்படுத்தும் என விஷ்ஷூவோம்.

இது தவிர மிருக சம்பந்தப்பட்ட தலைப்புகளை கொண்ட பல படங்கள் வரவிருக்கின்றன... உதாரணமாக “சுறா” மற்றும் “சிங்கம்”... அதனால, இந்த படம் நேஷனல் ஜியாக்ரஃபி சேனலில் ஒளிபரப்புவார்களா என்று “நக்கல் நாகமணி” கேட்ட கேள்விக்கு நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்...
ரஜினி ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி... (நன்றி நண்பர் சூப்பர் சுந்தர் (www.onlyrajini.com) )

சிவாஜி தி பாஸ் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது, ”சிவாஜி தி பாஸ்” படத்தின் ஹிந்தி பதிப்பை உலகெங்கும் ஜனவரி 8ம் தேதி 2010 அன்று வெளியிடுகிறது... ”அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சானே” பாடலில் தமிழின் ஜாம்பவான் நடிகர்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை இமிடேட் செய்து நடித்த ரஜினிகாந்த், இதன் தெலுங்கு பதிப்பில் பிரபலமான தெலுங்கு நடிகர்களை (என்.டி.ராமாராவ், ஏ.நாகேஸ்வர ராவ், சிரஞ்சீவி) இமிடேட் செய்து நடித்திருந்தார். அந்த பாடலின் வீடியோவை இங்கே பார்த்து ரசியுங்கள் : http://www.youtube.com/watch?v=hD916uVydqI&feature=related ஹிந்தி பதிப்பிலும் பிரமலமானவர்களை இமிடேட் செய்து நடித்திருக்கிறார்... அது சஸ்பென்ஸாக உள்ளதால், அதை பார்க்க அனைவரும் ஆவலாக இருக்கிறார்கள்...

நல்ல திரைப்படைப்புக்கள் வந்து நம்மை குஷிப்படுத்தட்டும், திரை வியாபாரமும் தளைக்கட்டும் என வாழ்த்துவோம்.

(புதிர் விடை : நிர்வாக இயக்குனர், தன் போர்டில் கை வைத்தால் பிசினஸ் பிச்சிக்கும்)

நன்றி !! வணக்கம்.

2009 – 2010 சிறப்பு பார்வை – (பகுதி 1)

நம்மோடு இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்திருந்த வருசம் 2009 நம்மிடம் விடை பெற்று, நான் போயிட்டு வர்ரேன், என் தம்பி 2010 வர்ராறு, அவர் ரொம்ப நல்லவரு, வல்லவரு.

நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்கும்னு, கையிலிருக்கிற உடுக்கையை ஆட்டி, குறி சொல்லிட்டு போறார்.

தோழமையே!! ஒவ்வொரு வருடமும் மிக நல்லா இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தானே நாம் ஆரம்பிப்போம். வரும் 2010 வருடமும் வளமான வாழ்வை தர அந்த ஆண்டவனை மனதார வேண்டுகிறோம். தோழமைகள் மற்றும் அவர்தம் குடும்பத்தார்க்கும் எங்களின் மனங்கனிந்த 2010 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கடந்து சென்ற 2009 ஐ பொது, அரசியல், சினிமா எனும் அடிப்படையில் பார்த்து முக்கிய நிகழ்வுகளை அசை போடுவோம்.

பொது

* வங்கியின் முதல்வர்கள், அரசியல் முதல்வர்கள், பொருளாதார மேதைகள் தொடங்கி பொட்டி கடைக்காரர் வரை பயந்து கால் நடுங்கி இந்த ரிசஷன் எப்பப்பா சரியாகும்! அடுத்த ஆறு மாசத்தில சரியாகுமா என கவலை பட வைத்தது. தொடங்கியது என்னவோ போன வருடத்தின் இறுதி என்றாலும், துள்ளிக் குதித்து குத்தாட்டம் போட்டது இந்த வருடந்தான். இந்த ஜிஞ்சினக்கா சிக்கா... சிக்கா ஆட்டம் நிக்க இன்னும் ஓரிரு வருடங்கள் ஆகும் எனும் அஜால்குஜால் ஆரூர்தாஸின் ஆருடம் தான் ஈரக் குலைய பதற வைக்குது.

*நம்மாளு விஞ்ஞானி வெங்கட ராமகிருஷ்ணன் இயற்பியலுக்காக வாங்கிய நோபல் பரிசு, இவரு எங்காளுய்யா என நம் அனைவரையும் காலரை தூக்கி விட வைத்தது.

* சத்தமில்லாம செஞ்ச டகால்டி வேலைகள் வெளியில் தெரிந்ததாலும், 26/11 மும்பை மேட்டருக்கு பின் அமெரிக்கா சப்போர்ட் செய்வதிலிருந்து சற்றே பின்வாங்கியதாலும்,, உலக நாடுகள் கொஞ்சம் உன்னிப்பாய் பார்த்ததாலும், பலவீனமான, லேசா அசந்தாலும் கால் வாருகிற அரசியல் அமைப்பினாலும், அண்டை நாடு பாகிஸ்தான் கொஞ்சம் அமுக்கி வாசித்தது. அந்தப்புறம் “சீனா” சீண்டிப்பார்க்கிறது... இந்தப்புறம் ”இலங்கை” பிரச்சனை தீராமல் இருக்கிறது... (இது நிரந்தரமாக தீர வேண்டும் என்பதே நம் அனைவரின் அவா....).

அரசியல்

* குடும்பத்துக்குள்ள குத்து வெட்டா இருக்குது, ஒட்டவே ஒட்டாது, என ஆருடம் சொல்லப்பட்ட முக்கிய கட்சி, மிகவும் வெற்றிகரமாய் பாகப்பிரிவினை செய்து, இன்னும் கொஞ்ச காலத்துக்கு சுமுகமா ஒடும் என்பதாய் தீர்க்கப்பட்டது. டிவி யாவாரம் எங்கனயும் போப்புடாது, எல்லாக் காசும் எங்களுக்கே எனும் செல்ல தத்துவத்தில் , இரண்டாவதிலும் இவர்களே.

சேனல் வரிசையின் இரண்டாவது இடம் வேறு யாருக்கும் போய்விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இப்போது, இவ்விடமும் பல சேனல்கள் புதிது புதிதாய் முளைக்க துவங்கியுள்ளது. இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி கூட, மக்கள் அதை அங்கீகரித்ததாகவே தெரிகிறது. நாளொரு மேனியும் பொழுதொரு ஸ்பெக்டரமுமாய் (வண்ணமுமாய்) வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது மெய்யாலுமே, அசுர வளர்ச்சிடா யப்போய்ய்ய்ய்ய்ய்...... அதுவும் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் மு.க.வின் யுக்தி நல்ல பலன்களை தந்தது... நோட்டை நீட்டி, வோட்டை பெற்று, நாட்டை பிடித்து, ஆட்டையை போடு என்ற நல்லெண்ணம் தான், வேறென்ன நல்ல நினைப்பு இவர்களுக்கு...

* புரட்சித்தலைவர் வென்றெடுத்த மு.க. எதிர்ப்பு எனும் சக்தியை, ஒருங்கிணைக்கத் தவறி, பொது மக்களின் நம்பிக்கையை பெற தவறியதால், எக்ஸாம் ஸ்கூட் அடிக்கும், தேர்தலை புறக்கணிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு கொடநாட்டில் ரெஸ்ட் எடுக்கறோமுங்கோ ரெஸ்ட் என்று சொல்லி ரெஸ்டோ ரெஸ்ட் என்று முடங்கியது.... இந்த முடங்கலே தோல்விக்கு வழிவகுத்தது... (நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர், நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் என்று புரட்சி தலைவர் பாடினார் என்பதை அம்மையாருக்கு யாராவது ஞாபகப்படுத்தினால் தேவலை... (பாடல் எழுதியவர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்).

* ஹேய்.. லெப்ட்ல போ, அப்பாலிக்கா ரைட்ல போ, இல்லென்னா நேர போ என மூத்த அரசியல் கழகங்களின் கண்ணில் விரல் விட்டு ஆட்டின, மாம்பழக் கட்சி, தேர்தல் தோல்வியில் மக்கள் மற்றும் கழகங்களின் ஆதரவை ஒரே நேரத்தில் இழந்து மோட்டுவளை பார்த்து கொண்டு அடுத்து என்ன செய்யுறதுன்னு தீவிர ஆலோசனை.

* எதிர்கால தமிழகம், வருங்கால விடிவெள்ளி, இளைய தலைமுறைத் தலைவன், என அதிரடியாய் களம் இறங்கிய முரசு, கொஞ்சம் கொஞ்சமாய் வால்யூம் குறைந்து, நிறைய அடி வாங்கி (முடியல..... என்று அலறுவது காதில் கேட்குதா!!) லேசாக தெளிந்து, நேற்றைய நிலவரம் படி டெபாசிட்டை தானம் செய்தது.

* தொலைக்காட்சியின் அரசி என் மனைவி, இத்தனை நாள் அரசியல் அனுபவம், நான் மிஸ்டர் மெட்ராஸ் வேற, 20 மொழி எனக்கு தெரியும், நம்மகாந்த் வளர்ச்சி எல்லாம் பார்த்து, நான் டாஸ்மாக் இல்லை, பாஸ்
மார்க் என கொடி ஏத்திய குமாரன், பாவம் காற்றில் விட்ட கோட்டையை நினைத்து கன்னத்தில் கை வைத்து இருக்கிறார். கழகத்தில கூப்பிடுவாங்களா என காதை காத்து வாக்கில் வைத்திருக்கிறார். இன்னும் ”ஜக்குபாய்” வேற ரிலீஸ் ஆகல... யாரும் வாங்கல... கடை விரித்தேன் கொள்வாரில்லை கதை தான் இங்க....

• ஜனங்களே நல்லா கேட்டுக்கோங்க, நாங்கள் தான் 2011ல் பிரதமர், அதில்லயா நாங்கதான் முதல்வர் என்று அடித்து கூறிய “தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி” நடிகரும், வளவள, கொழகொழ என்றே எப்போதும் பேசும் ”நவரச சிங்க நடிகரும்”, வடிவேல், விவேக் போன்ற காமெடியன்களுக்கு சவால் விடுவதாய் பஞ்ச் டயலாக்ஸ் பேசி நம்மை கிச்சு கிச்சு செய்தார்கள்...

(ஆர்.கோபி / லாரன்ஸ்)

தொடரும்....

இதன் தொடர்ச்சி/ இறுதி பகுதி நாளை பதிவேறும் . வந்து படித்து தங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.
தொடரும் பகுதி - சுடச்சுட ஒரு சினிமா கண்ணோட்டம்.

வாழ்க்கை (பகுதி – 9)

தூக்கத்தின் அவசியமும், முக்கியமும் சொல்லிவிட்டு குறட்டை விட்ட நம் முந்தைய பகுதி, ஃப்ரெஷ்ஷா தூங்கி முழிச்சு, வாழ்வின் இன்னொரு முக்கிய பகுதியை எட்டி பார்க்கிறது. தூக்கத்த பத்தி எழுதறதுக்கு ஒரு பகுதியா, அப்போ துன்னுறத பத்தி ரெண்டு பகுதியும், குளிக்கறத பத்தி மூணு பகுதியும் எழுதுவீங்களோ என கேட்டார் ஒரு நண்பர். பெயர் ”உகாண்டா உசிதமணி”.

போர்வையில நாம் கழித்த நேரம் போக, வாழ்வின் மீதி நேரம் எங்கே போகுது என பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தால், தூங்கி போக்குன ஒரு பாதிய விட்டு புட்டோம்னா ஆபிஸ்ல போய் குப்பைய கொட்டுறது, இன்னொரு ஒன்றில் மூணு. ஆமாம்ல !!!! ஒரு எட்டு பத்து மணி நேரம் ஆபிஸ்ல போகுதுல்ல.

இப்போ பாருங்க, மீட் மை பிரெண்ட் ராகவ்... ஹாய்!!! என்றதும், பேர் தெரிந்து போச்சு, அடுத்து தாவுவது எங்கே. என்ன செய்யுறீங்க. எங்க வேலை... இது தானே. நம் அடையாளமாய் நாம் கொண்டிருப்பது நம் அலுவல் தானே. அலுவல் இல்லை என்றால் அழுவல் தானே. (கண்ணீரை சொல்கிறோம்... அழுகுவதை அல்ல) மைக்ரோ சாப்ட்ல பில் கேட்ஸ்சுக்கு பில் கிளார்க்கா இருக்கேன்... அப்படியா, நிக்குறீங்களே.. உக்காருங்க சார், என வரும் கமர்கட்டு பதில், இவர் டோல் கேட் வாட்ச்மேன் வடிவேல் என சொல்லும்போது. கமர்கட்டு கப்பலேறும். செய்யும் தொழிலில் நம் வாழ்க்கையை வைக்கும் விநோதம்.

சுருங்கச் சொன்னால்.... வாழ்க்கையில் பிடிக்குதோ பிடிக்கலையோ தூங்கோணும், வேலையும் செய்யோணும். கூட்டி கழிச்சு பாத்தா முக்காலே மூணு வீசம் எதுக்காகவோ, எவனுக்காகவோ வாழ வேண்டி இருக்கே..... ரொம்ப கொஞ்ச நேரம் மட்டுமே நமக்கே நமக்காய். என்ன கொடுமை இது சரவணன்னு நம்ம ”கமர்கட் கம்ருதீனும்”, ”கடலை உருண்டை கந்தசாமி”யும் புலம்பி கொண்டே சொல்றாய்ங்க.

ஏண்டா உனக்கு அறிவே இல்லையா! உன்னெயெல்லாம் நடுக்கடல்ல நட்ட வைக்கணுண்டா, உன்னிய எல்லாம் ஏண்டா இன்னும் சுனாமி தூக்கல. என உறுமிவிட்டு இது போதாதென்று பதிவில் சொல்ல முடியாத அக்மார்க் கெட்ட வார்த்தையில் அர்ச்சனை. யாரு... யார திட்டுறா... சம்பளம் கொடுக்கும் பாஸ். இவ்வளவையும் கேட்டுகிட்டு நம்மாளு எதுவுமே நடக்காதது போல் கண்டிசனா.... மூஞ்சிய சிரிச்ச மாதிரி வைச்சுகிட்டு, "அலார்ட் ஆறுமுகம்" போல் இருக்க வேண்டும். இல்லேன்னா, முதல் தேதி சம்பளம் சங்கு ஊதிடும்.

காசு கொடுப்பவன் பாஸ் என்பதால், அவர் சொல்லும் அரை குறை காமெடிக்கு விழுந்து விழுந்து சிரிக்கணும். போலியான ஒரு லிப்ஸ்டிக்கை நம் மூஞ்சி முழுதும் களிமண் மாதிரி பூசிக் கொண்டு சே... அடப் போங்கப்பா... என்ன வாழ்க்கைடா இது, என எரிச்சலோடு சலித்து கொள்பவரே நம்மில் பலர்.

மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர் மாத்திரமே, எப்படா ஆஃபீஸ் தொறக்கும் என்றோ, சே... எதுக்கு லீவெல்லாம் விடுறாங்க, எத்தனை வேலை பெண்டிங்ல இருக்கு என்றோ "டிங்கி டாங்கி ரப்பப்போ, சிங்கி சாங்கி ரப்பப்போ" என்று பாடுவார்கள். வேலைக்கு போறதெல்லாம் அவுட் ஆப் ஃபேஷன், யாருப்பா போவா, படு போரு என்று சொல்லிக்கொண்டு திரியும் "அன்எம்ப்ளாய்ட் ஆவுடையப்பாக்களையும், இர்ரெஸ்பான்ஸிபிள் இக்னிகூம்பிகளையும்" அப்பாலிக்கா பார்ப்போம்.

கல்விச் சான்றிதழ், இன்ன பிற சர்டிஃபிகேட்டுகள் எல்லாம் சீராக அடுக்கி, நம் தகவலை அடுத்தவர் சொன்ன ஃபார்மெட்டில் அடித்து சி.வி. என சீவி சிங்காரித்து பூவும் பொட்டும் வைத்து புதுப்பொண்ணு மாதிரி நம்ம இதயத்துல வைக்கோணும். வாண்டட் காலம், முழுக்க படித்து அட்ரஸை கட் அவுட் , விண்ணப்பம் தயாராக்கி, முன்னாளில் தபால் செய்ததை இன்று மின்னஞ்சல் செய்யோணும். அக்கம்பக்கத்தில் அவசரமாய் வேலைக்கு செல்பவரை, ஆச்சர்யமாய் ஆயாசமாய்.... ஏன் கொஞ்சம் பொறாமையோடு (காதில் புகைவர) பார்க்கும் என தவிர்க்க முடியாத வேலை தேடும் படலம். நம் எல்லோரையும் செதுக்கி விட்ட சிக்கல் பருவம் இதுதான்.

வேலை தேடுவதில் அடிப்படை கோளாறு ஒன்று உண்டு. நான் பி.எஸ்.சி.... என நாம் சொல்ல, அது இருக்கட்டும்யா நீ என்ன வேலை செய்வ என நிர்வாகம் கேட்க... புரியாத பாஷையில் நாம் பே பே...பெப்பெப்பே என்று நமக்கு தெரிந்த பாஷையில் சொல்ல, உடனே எதிர்முனையில் இருந்து வரும் பதில்தான் ‘sorry to inform you, you are not selected’. வேலை இல்லேன்னு சொன்னாலும், we shall consider you for a suitable opening in future என இங்கிதத்துக்காக சொன்னதை சங்கீதமாய் கேட்பது நம் சிறு பிள்ளைதனம். அவ்வ்வ்வ் என்று "வடிவேல்தனமான அழுகை" எந்த நிறுவனத்திலும், எந்த வேலையையும் நமக்கு வாங்கி கொடுக்காது...

பணியில் அமர அல்லது வேலை கிடைக்க என்ன வேண்டும். ஆங்கிலம் தெரியுமா! சரளமாய் பேச, சங்கீதமாய் எழுத என. சரி அது இல்லையா, எங்க ப்ராடெக்டை விக்க முடியுமா.... இல்லேன்னா, கஸ்டமர பார்த்து அவர கன்வின்ஸ் செய்ய முடியுமா.... சரி இல்லையா.... கணக்கு எழுதுவியா.... இல்ல..... என்னதான்யா பண்ணுவே என்று கேட்டு இவன் எனக்கு எந்த விதத்தில் உபயோகம் என கம்பெனி பார்க்கும்.

இருபது வருசம் மக்குரு போட்டு எக்ஸாம் எல்லாம் பாஸ் பண்ணி ஃபர்ஸ்ட் க்ளாஸ் வாங்கினது நமக்கு பெருமையா இருக்கும். வேலைக்கு ஆவுமா... ஆவாதா... யாருக்கு தெரியும்!!?? சரி பிரச்சனை புரியுது. தீர்வு என்ன: ரொம்ப சிம்பிள். வயனாடு வயக்காட்டில் வேட்டியை வரிந்து கட்டி வரப்பில் வலப்புறம் வலம் வரும் வஜ்ரகும்பன் சொல்றார். முன்னேரு போன வழி பின்னேரு போக வேண்டியதுதான.

ஒரு அஞ்சு வருசம் சீனியர், முன்னால நடந்த முன் ஏரை போய் பார்க்கணும். அவரு முன்னேற என்ன செய்தாரு. எங்க இருக்காரு. இப்போ என்ன செய்யுறாரு..... என்ன செஞ்சதுனால அவருக்கு வேலை கிடைச்சுது. இப்படி அவர பத்திய தகவல் திரட்டணும். அதே வழியை ஃபாலோ பண்ணனும்... இல்ல, என் வழி தனி வழின்னு சொல்லிட்டு, மோட்டுவளையை பார்த்துகிட்டே உட்கார்ந்துட்டு "மௌன மோகனரங்கமா" இருக்கணும்...

ஒண்ணுன்னு இல்ல ஒரு அஞ்சாறு சீனியர்கிட்ட கேட்டா, நமக்கு தோதான ஒரு முறை எப்படியும் கிடைக்கும். ஆனாலும் உஷார், நம்மை முடக்கும் ஒரு முட்டுக்கட்டை, அந்த நேரத்தில் குத்தாட்டம் போடும் கூச்சம் தான்.

வேலை இல்லாதது ஜன்ம சாபம் இல்லை. எல்லா மனிதனும் கஷ்டப்பட்டு சம்பாதித்ததுதான் வேலை வாய்ப்பு. எனவே, கேட்கும் உதவியை உரிமையாய் உண்மையாய் கேட்டால் நிச்சயம் தட்டிய கதவு அகலமாய் திறக்கும், வாய்ப்புகள் உங்களை அப்படியே விழுங்கும், உள்ளே அழைத்து போய் உங்களின் சிம்மாசனத்தில் அமர வைக்கும்.

“கஷ்டப்பட்டு உழைச்சு முன்னேற பாரு இஷ்டப்பட்டு எல்லாரும் பின்னால் வருவார்”

“உன் கையை நம்பி உயர்ந்திட பாரு உனக்கென எழுது ஒரு வரலாறு
உனக்குள்ள சக்தி இருக்கு அதை உசுப்பிட வழி பாரு”


அப்படியும் இல்லையா, கொஞ்சம் அழுத்தமா சொல்லணும்னா

“வேலை உன்னை தேடி வருமா வேலை தேடி விரைந்து போ”

இப்படி திரையில் சொல்லப்பட்ட அறிவுரைகளில் ஏதாவது ஒன்றை மனதில் ப்ளே செய்யலாம்.... உழைத்து முன்னேறியவரை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.... உழைத்து வாழ்வில் பெருவெற்றியும், நிலையான ஒரு இடத்தை பெற்ற எந்த ஒருவரையும் நாம் பின்பற்றலாம்...

அவரு நம்ம கட்சி இல்ல என்றோ, நான் அவருக்கு ரசிகன் இல்லை என்று ஜகா ஜகன்னாதன் ஆக இல்லாமல், வளமான வாழ்வை பெறலாம்... வாழ்க்கையில் யார் சொல்பேச்சையும் கேட்காமல் ”சொல்பேச்சு கேளா சோகப்பன்” மாதிரி இருப்பதைவிட, வெற்றியடைந்த யாராவது ஒருவர் சொல்லும் பேச்சையாவது கேட்டு, அவர் சொன்ன நல்ல வழியை பின்பற்றினால் ”மகிழ்ச்சி மருதப்பன்” ஆகி நாம் வாழ்வு சிறக்கும்....

யக்காவ் ... ஏ டு இஸட்லேயே எந்த எழுத்துக்குக்கா எப்பவும் ஜலதோஷம் பிடிச்சிருக்கும் என ஃபுல் பிளேடு ஃப்ராங்கிளின் கேக்க, பிச்சுப்புடுவேன் ’பி’ன்னு சொன்னா. ஏ.சிக்கு நடுவுல இருக்காம்னு எத்தனை நாளாட சொல்லுவ, என அடிக்க போவார் நம்ம அக்கா, எகிறி ஓடுவார் நம்ம ஃப்ராங்கிளின்.

எப்பவோ கேட்ட அரத பழசு ஜோக் இது என கேட்டவுடன் நம் மனம் சலிக்கும். புதுசா எதாவது சொல்லு என தூண்டும். பழசு சரியில்ல புசுது கண்ணா புதுசுதான் சரி எனும் நினைப்பை நிக்க வைத்துவிட்டு அடிப்படைகளை அருகில் வைப்போம்.

ஆர்.கோபி / லாரன்ஸ்

சொல்வது என்னன்னா. வெட்கம் தவிர், வேகம் கொணர், வெற்றி நமதே. என தன்னம்பிக்கையுடன் சகஉலக மனிதனையும், நம்பிக்கையும் இணைத்து வெற்றி வாகை சூட முறசை ஓங்கி ஒலிக்க செய்வோம்.....

(ரோமானியர்கள் விமர்சையாய் கொண்டாடிய சூரியனின் திருவிழாவை உலகம் முழுதும் உள்ள கிருஸ்துவர்கள் ஏசுநாதர் பிறந்த நாளாக கொண்டாடுகிறார்கள்...

இந்த நன்னாளில் ஒளியை வணங்கி "கிருஸ்துமஸ் பண்டிகை"யை விமர்சையாக கொண்டாட தோழமை மற்றும் குடும்பத்தார்க்கு மனம் கனிந்த கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.....)

வாழ்க்கை (பகுதி– 8)

மனுச உடம்புல நீளமானது குடல்தான், மூணடி மனுசனுக்கு கூட , குடல் மட்டும் 20 அடில சுருட்டி மடக்கி தொப்பைக்குள்ள பத்திரமா இருக்கு. கறி சாப்பிடாதீங்கன்னு ஒரு மேட்டரும் அதுக்கு ஒத்து ஊத குரங்கு உதாரணமும் சொல்லி அடி உதைக்கு தப்பிய போன பகுதி, முக்கியமான இன்னொரு நீளமான வாழ்வின் பகுதிக்கு தாவுகிறது.

எதப்பத்தி வத்தி வைக்கிறீங்க என கொட்டாவி கோவிந்தராஜ் கேக்கிறாரு. தூக்கத்தில் பாதி, ஏக்கத்தில் பாதி போனது போனதில் ஏது மீதம் என வாழ்க்கை பத்தி சொன்னாரே சினிமாவில, அதே மேட்டர் தான்.

ஒரு நாளைக்கு இருபத்தி நாலு மணி நேரம். அதுல மூன்றில் ஒரு பங்கு தூங்கணும், நான் தூங்க மாட்டேண்ணு அடம் பிடிச்சா, வேர வழியேயில்ல, அண்ணா/ அக்கா! உங்கள தூக்குறதுக்கு நாலு பேரு வேணும். அதனால நல்லா தூங்குங்க. ஆஹா... மாப்பு இதுவரைக்கு சொன்ன அட்வைஸ்லயே இதுதாங்க டாப்பு.

சோறு இல்லண்ணா கூட வண்டிய ஒட்டிறலாம், தூக்கம் இல்லன்னா ஒரு பத்து நாள்ல சாவு நிச்சயம். சங்கு நிச்சயம். அதுல கூட முதல் இரண்டு மூணு நாள்லயே பேதலிச்ச புத்தி சேது புல் மேக்கப்ல வந்து ஆக்ட் குடுக்க ஆரம்பிச்சுடும்.

அப்படியா, மெய்யாலுமா.

இது மட்டுமா.... பத்து நாள் தூங்கலேன்னா சங்கு என்பது ஒரு மேட்டர். காணாமப் போன எலும்ப தெரியுமா. குழந்தையா நாம பிறக்கிறப்போ எலும்பு மொத்தம் 300, (எலும்ப எண்ணிட்டாங்க !!!! ) ஆனா அதே நாம் இளம் பருவத்தில எண்ணினா மொத்தம் 206. டேய் சரியா எண்ணுங்கடான்னாக்கூட அதேதான். அதெப்படி 94 எலும்பு காணாம போச்சு என ஏங்கி ஏங்கி அழுகுறார் நம்ம டொம்பர்க்கா கோப்பெருந்தேவி.

வாழ்வு என்பது ஒரு தகவல் புதையல். ரகசியங்களின் கழஞ்சியம். நம்மைப் பற்றி சில தகவல்கள் தெரிவது நம்மை தெளிவாக்கும். அதன் மாற்றம் நமக்கு வாழ்வை புரிய வைக்கும். புடிக்க வைக்கும். நோக்கம் புரியும்.

சரி, எத்தனையோ விசயங்கள் இருந்தாலும், 1/3 தூக்கம் ரொம்ப முக்கியம்னுட்டீங்க, அதை பத்தி தெரிஞ்சுக்கலாமே என கியூரியாஸிட்டி கிருஷ்ணம்மா கேக்கிறாங்க.

வாய் நிறைச்சு ஒரு கொட்டாவி விட்டு, கண் கலங்க பார்வை நெறிக்கும் போது, நம்ம தெரிஞ்சுக்குறோம்... ஆஹா... தூங்க டைம் ஆச்சுடான்னு. அதுவே நம்மள்ல சில பேரு, படுக்கையில படுத்து லைட்ட அணைச்சுக்கிட்டு எப்படா தூங்கலாம், எப்படிரா தூங்கலாம் எனவும் நித்திரைய தொடங்கலாம்.

எது எப்படின்னாலும் தூக்கம் தொடங்கினதும் என்ன நடக்குது படிப்படியா ; என படம் பார்த்து, பாடம் படிப்போமே.

மூளை தன் ஆட்ட்த்த கொஞ்சம் குறைச்சுக்கிட்டு ஒரு போக்கு காமிச்சு, நான் தூங்கப் போறேண்டான்னு ஒரு சவுண்டும் ஒரு திரவமும் சமிக்கையாக் அனுப்பிச்சு விடுது. உடம்பு பூராத்துக்கும். இதெல்லாம் உண்மைன்னு நம்பிக்கிட்டு நரம்பு மண்டலத்தின் அநேக டிப்பார்ட்மெண்ட் டீயூட்டி ஒவர் என சொல்லி விடுவதால் நம்ம முழிச்சுக்கிட்டு இருக்கிற வாழ்க்கை எனும் கடைய மூடிடுறாங்க...

முழுச்சுக்கிட்டு இருக்கப்போ 14 ஹெர்ட்ஸ் தொடங்கி 21 ஹெர்ட்ஸ் வரைக்கும் வேலை செய்யுற மூளை தொபுக்கடீர்ன்னு கீழ குதிச்சு 7 ஹெர்ட்ஸ் தொடங்கி 0 ஹெர்ட்ஸ் வரைக்கும் கும்மியடிக்க போவுது தான் இந்த ஸ்லீப்பிங் சிக்னல். (உபரித் தகவல்: 7 முதல் 14 வரை – தூக்கமும் இல்லாமல் முழிப்பும் இல்லாத நிலையே தியானம். சராசரி மனுசனுக்கு ரொம்ப கஷ்டம் இந்த தியான பிரிக்குவென்ஸில பிலிம் காட்டுறதுக்கு- ஒண்ணு முழிப்பு இல்லயா சரசரன்னு கீழே இறங்கி தூக்கம். )

எல்லாரையும் தூங்க வைச்சுட்டு, கடைய சாத்துனத்துக்கு அப்புறந்தேன் அண்ணாச்சி வேலய தொடங்குவார். யாரு நம்ம மூளை அண்ணாச்சி. முழிச்சுக்கிட்டு இருந்த நேரம் மாதிரி இல்லாம டபுள் ஸ்பீடுல வேலை செய்வார். பாருங்களேன் கடய மூடினவுடன கடைக்காரர் கணக்கு பாக்கிற மாதிரி.

அண்ணாச்சிக்கு இரண்டு வேலை. மனம் ரிப்பேர், பின்னர் உடல் ரிப்பேர்.

முதல்ல நினைவு பகுதி வந்து போஸ்ட் மாஸ்டர் வேலை பாப்பார்.

மூளையின் ஒரு சிறு பகுதி அவசரத்துக்கு குறிச்சு வைக்கன்னு நோட் பேட் மாதிரி இருக்கு. காலைல எந்திரிச்சதுல இருந்து படுக்கிறது வரைக்கும் நாமளும் காட்சிகளா, தகவல்களா சில விசயத்த குறிச்சு வைச்சுருவோம்.

இத ஒவ்வொரு குறிப்பா பார்த்து, நமக்கு தேவையா, தேவை இல்லையா என தரம் பிரிக்கும். அப்பாலக்கா தேவைன்னா, அதோட தொடர்புடைய மற்ற நினைவோட ஒரு எலக்ட்ரிக்கல் கனெக்‌ஷன் கொடுத்துட்டு, பியூஸ் கட்டை ராமசாமி மாதிரி டெம்பரவரிய தூக்கி போட்டுரும்.

கத்திரிக்கா வாங்கும் போது கடைக்காரன் பார்வை சரியில்ல. இது ஒரு தகவல். இது தேவைன்னு நம்ம வேல்யூ சிஸ்ட்த்தில பிரோக்ராம் பண்ணியிருந்தா, ஏற்கனவே கடை, ஷாப்பிங்குன்னு, பிலாசபின்னு சேர்த்து கோர்த்து வைச்சிருக்கிற இடத்தில இதயும் போட்டு வைச்சுறும். வைச்சுட்டு டெம்பரவரி மெம்மரில இருந்து இத டிலிட் பண்ணிரும்.

இப்ப தெரியுதா ஏன்னு, தூங்காத மூணே நாள்ல சேது.... புல் மேக்கப்... சமாச்சாரம். இன்னொரு சுவாரசியமான தகவல் பார்ப்போமே...

இங்க போஸ்ட் மாஸ்டர் போல சார்ட்டிங் நடக்கிற அதே வேளையில், இந்த விவரம் எதுவும் தெரியாம, மூளையோட ஒரு பகுதியில ஒரு டிபார்ட்மெண்ட் இருக்கு. இது வேலை என்ன்ன்னா, டீடெய்ல்லா கோனார் நோட்ஸ் போடுறது. (Logical side)

இப்படி வைச்சுக்குவோமே, கண் பார்த்த சமாச்சாரத்த கலரா, வடிவமா தகவலா நரம்புல அனுப்பும். வந்த தகவல அலசி ஆராய்ந்து, இது என்னடா என நினைவுகளிடம் ஹிண்ட் கேட்டு தீர்மானிச்சு, ’யப்பா... இது தாம்பா என அர்த்தம் சொல்லுவது இதன் வேலை. 24 ஹவர்ஸும் இதுக்கு இதுதான் வேலை.

அந்த டிப்பார்ட்மெண்ட், இந்த போஸ்ட் மாஸ்டர் சார்ட்டிங் வேலை எதுவும் தெரியாம, அப்புராணியா அவசரம் அவசரமா நோட்ஸ் போடும். இந்த கண்றாவி தேன் கனவு. எதுவுமே நடக்காம, எலக்டிரிக்கல் பல்ஸ் வைச்சுக்கிட்டு ஸ்கிரின் ப்ளே எழுதி டைரக்‌ஷனும் பண்ணி, ரீலிஸ் பண்ணிரும் நம்ம கோனார் டிப்பார்ட்மெண்ட்.

நம்மாளு டீரிமீங் டிங்குடாங்கு கூட, ஏதோ உண்மைதான் போல இருக்கு, நான் கோடீஸ்வரனாயிட்டேன். டீலா..... நோ டீலா என பீலா விட்டுக்கிட்டு இருப்பார்.

நீண்ட நினைவே நித்திரையில் கனவு, அல்லது அடங்காத ஆழ்மனதின் வெளிப்பாடுதான் கனவு என்றோ சொன்ன மேட்டர் இது தான்.

கனவை பத்தி புரிஞ்சுக்கிட்டா டென்ஷன் குறையும். அட போங்கப்பா தூக்கு கயிறு விழுந்தாலும் சரி, பண மூட்டை விழுந்தாலும் சரி கனவுன்னா என்ன்ன்னு எங்களுக்கு தெரியும் என எகத்தாளமாய் நாம் சொல்லலாம். இன்னும் ஒரு படி மேல போயி நோட் பேட்ல குறிக்கும் போதே சில மாறுதல் செஞ்சா இன்னும் சூப்பர்.

கார்ல ஏறி, காய்கறி கடை போவோம், பாஸ் அங்க காய் வித்திக்கிட்டு இருப்பார், கத்திரிக்கா பக்கத்தில லேப்டாப் என அர்த்தமே இல்லாம, கனவுல நடக்குறது இதுனால தான்.

இன்றைய நிகழ்வு, நேற்றைய நினைவு இரண்டும் கலந்து இருக்கிறது, கோடிட்ட இட்த்த நிரப்பும் கோனார் நோட்ஸ் டிப்பார்ட்மெண்ட் விளக்கத்தில, பில் இன் த பிளாங்க்ஸ் பீலீங்தேன் கனவு.

தூக்கத்தில இரண்டு நிலை. ஒண்ணு இந்த போஸ்ட் மாஸ்டர் வேலை பாக்கிற ரெம் ஸ்டேஜ் (rapid Eye movement) இன்னொன்னு நான் ரெம் ( Non Rapid eye movement ). தூங்கிறவன் பக்கத்தில நின்னு உத்து பார்த்தா லேசா திறந்து இருக்கிற இமைக்கு உள்ள கண் கதகளி ஆடுறது தெரியும். பாத்துட்டு, தொந்தரவு செய்யாம, ஓடி வந்திடுறது நல்லது.

நல்ல தூக்கத்துக்கு ஒரு சிறு அட்வைஸ். படுத்தவுடன தூங்காம, முழிச்சு இருந்துக்கிட்டு காலைல இருந்து என்ன நடந்த்துன்னு நாம நினைச்சு பார்த்தா, போஸ்ட் மாஸ்டருக்கு வேலை சுலபம். அட்டே பரவாயில்லயே எல்லாம் அடுக்கி நீட்டா இருக்கே என சந்தோசமாய் போஸ்ட் மாஸ்டர் வேலைய தொடங்குவார். இல்லயா முதல்ல கீளீன் பண்ணிட்டு, அல்லாத்தயும் அடுக்கி வைச்சுட்டு அப்புறந்தேன் தபால் பாக்கிற வேலைம்பார்.

அடுத்த ஸ்டேஷ், இந்த நான் ரெம் ஸ்டேஷ்ல தான் உடல் ரிப்பேர் நடக்கும். மனசு வேலைய முடிச்சுப்புட்டு, பாடிய பதம் பாக்கிறது தூக்கத்தின் மறு கடமை. அங்க பாருடா மூக்கு துவாரத்தில ஒரு சிராய்ப்பு, அத டிங்கர் பண்ணுடா, இங்க பாருடா, நுரையிரல்ல ரத்தம் இல்ல, அங்க ரெண்டு பயல போய் சுரண்ட சொல்லுடா என மேஸ்திரி வேலை பார்ப்பது இரண்டாவது நிலை.

நல்லபடியா சர்வீஸ் முடிஞ்சு, போலாம் ரைட்ஸ் என டெலிவர் பண்ணிட்டா, காலைல நம்ம முழிக்கும் போது சுறு சுறுன்னு எந்திருச்சுருவோம். இல்லை... !!!! இன்னும் ஒரு பைவ் மினிட்ஸ் என சிணுங்குவது இந்த ரெண்டு வேலைல ஏதோ கொஞ்சம் பாக்கி இருக்குன்னு தான் அர்த்தம்.

மக்களே, குடி மக்களே தூங்கும் மக்களே... உறங்குபவனை எழுப்புவோம் என சிலர் முழங்குகிறார்களே, எழுந்தவனை உறக்குவோம் என முறசரைந்தால் எப்படி..... (போர்த்தி விட்டு... குட் நைட்....)

தூக்கம் ஒரு வரப் பிரசாதம். துக்கம், கவலை, சோர்வு, பிணி என எல்லாம் நீக்கும் ஒரு டிரிட்மெண்ட் செஷன். நல்ல தூக்கம், நமது அடுத்த நாளை வளமாக்கும்.

ஆர்.கோபி / லாரன்ஸ்
சத்தம் செய்யாமல், மெல்லிய முறசரைந்து விட்டு.... குறட்டை ஒலியின் சுரத்தில் குதித்து ஒடுவோமா....

"வாழ்க்கை (பகுதி– 8) முன்னூட்டம்

நண்பர் ஒருவர் தொலைபேசியில் கேட்டார், என்ன எட்டாவது பகுதி ரெடியா என.

ஹூம்... ஏறக்குறைய நாளை பதிவேற்றம் செய்து விடலாம்.

என்ன மேட்டரெல்லாம் எழுதியிருக்கீங்க,

என்றதற்கு... ஒண்ணே ஒண்ணு!!! ஒரே மேட்டர் தான். போர்வைய இழுத்திப் போர்த்து தூங்குறத பத்தி என்றேன்....

நே!!!! என விழித்தார்.... நாளை தெரிஞ்சுடும்டீ உன் பவுசு என கோபத்தில் போனை வைத்து விட்டார்.
ஆர்.கோபி / லாரன்ஸ்

வாழ்க்கை (பகுதி– 7)

பொறுப்பு பற்றி பேசிய முந்தைய அத்தியாயம் தன் விழுதுகளை பரவவிட்டு, திருமணத்தின் இன்னொரு பகுதிக்கு செல்கிறது. மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் அப்புறம் எல்லாம் அப்பிட்டுதேன்.... என சில பூச்சாண்டிகள் பயங்காட்டுகிற பருவம் எல்லாம் கடந்து, கால் வைத்த்தும் சிக்கிக் கொள்ளும் சாலையில் பயணிக்கிறது.

நமக்கே நமக்கே நமக்காய் கிடைக்கும் எதிர்பால் வாழ்க்கை துணை, துணையின் உறவுகள், இனிய இல்லறம், திடிரென கிடைக்கும் சமூக அங்கீகாரம் அல்லது மரியாதை எல்லாம், நம் காலரை நாமே தூக்கி விட துணை நிற்கும். மொட்டப் பயலா இருந்த முருகேசன, வாப்பா வீட்டுல கூட்டிட்டு வரலயா என சமூகம் மரியாதை தர துவங்கும்.

திருமணம் முடிந்து ஒரு மழலையும் இணைந்ததும்தான் குடும்ப பொறுப்புகள் பெரும் சுமையாக சும்மாடு தூக்க வைக்கும்... சிலருக்கு இந்த சுமை பயம்தான் பிள்ளைப் பேரை கொஞ்சம் சுணக்கி விடுகிறது.
இந்த மேட்டரத்தான்... எதுனாலும் ப்ளான் பண்ணி பண்ணனும்; நாங்க பிளானிங்ல இருக்கோம் என சொல்லவும் வைக்கிறது. என்னடா இது எத்தனை சம்பாதிச்சாலும் பத்தல, எவ்வளவு பிளான் பண்ணினாலும் பிச்சிக்கிட்டு போகுதே என நம்மிடமே பிலிம் காட்டும்.
பிலிம் பேரு நொந்தசாமி. தலைமுறை தலைமுறையாய் பட்டையை கிளப்பும் காவியம்.

பிறந்த குழந்தையை... பெத்தா மட்டும் போதுமா. நன்றாக, நல்லவனாக வளர்க்க வேண்டாமா, சிறந்த கல்வி அளிக்க வேண்டாமா... முடிந்த வரை, அடுத்தவர் ஏதும் அவதூறு கூறாத வகையில் ஆளாக்க வேண்டும்... எனும் நம் நினைப்பில் சுமையின் அழுத்தம் இன்னும் அதிகரிக்கிறது...

குழந்தையின் அறியாத மனதின் ஆசை, எண்ணங்களை பூர்த்தி செய்ய முடியலயே என மன கவலை...புத்தாடைகள்..கம்பியுட்டர் கேம்ஸ்... விண்ணை தொடும் விலைவாசியில், பிள்ளைகளின் ஆரம்ப கல்வி சேர்க்கைக்கான, நுழைவு விண்ணப்பம் வாங்கவே நுரை தள்ளுது, முதல் நாள் இரவே பள்ளிகளின் வாயிலில் தவமிருக்கும் நிலையிருக்கிறது... இன்னும் சில பெற்றோர்கள் பள்ளி சென்று பரீட்சை எழுதும் பவுசு கூட உள்ளது... இதை கேட்டுட்டு நம்ம மக்கப் மெகேபூப் சொன்னார் சோக்கா, ‘படிக்கிறது ரொம்ப கஷ்டங்க.... அதுவும் இந்த வயசில. ...முடியல... அழதுடுவேன்...ம்..ம்...
பிள்ளைகளின் படிப்பு, அன்றாட வாழ்வை வழி நடத்த பணம், எதிர்பாராத மருத்துவ செலவு. இதெல்லாம் போதாதுன்னு, வீட்டுக்கு வர்ர விருந்தினர்கள் காபி குடிச்சுட்டு கால் மேல கால் போட்டு சொல்லிருவாங்க (அவங்க கால் மேல அவங்க கால் போட்டு) மீயூச்சுவல் பண்ட், ஸ்டாக்ஸ், பிஸினஸ், இன்வெஸ்ட்மென்ஸ், பாரின் டூர்ன்னு

சினிமா சினிமா டிராமான்னு கூட்டி போயிட்டு ஹோட்டல்ல டின்னர் டாடி..ங்கும் போது சாப்பிடுறதுக்கு முன்னாலேயே வயத்த கலக்குது நம்ம சிக்கன சிங்ஸ்வானுக்கு. இதுல எங்கங்க சேவிங்ஸ். வரவு பத்தணா, செலவு எட்டணா , சேமிப்பு இரண்டணா என அடுத்தவனை பற்றிக் கவலைப்படாத திட மனது வெல்லும். அண்ணன் வாங்கினான் காரு, பர்சு படா டாரு எனும் நிலை வேணுமா.

வாழ்வு ஒன்றும் இன்றைய காலகட்டத்தில் (ஏன் முந்தைய நாளைய காலத்தில் கூட) ஒரு மலர் படுக்கை அல்ல... முள் நிறைந்த ஒரு கானகம்... குத்தி கிளிக்க முட்களும், விழுங்கி முழுங்க முதலைகளுமாய். ஆக‌வே, நாம் எடுத்து வைக்கும் ஒரு அடியும், நம்மை சேத‌ப்ப‌டுத்தாத‌ வ‌கையில் கவனமாக வைக்க வேண்டும்

பிள்ளை பிறந்தவுடன், அந்த குழந்தையை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், மனைவியின் கவனம், கவனிப்பு கணவனின் மேல் முன்பு போல் இருப்பதில்லை.. எப்போதும் எல்லா விஷயங்களையும் பார்த்து, பார்த்து செய்த மனைவி, தாய் ஆனவுடன், இப்போது, அந்த கவனத்தை முழுதுமாக பிள்ளைகளின் மேலாக செலுத்த துவங்குகிறாள்...

தப்பில்லீங்களே.... ஆண் பார்க்கத்தான் ஒங்கு தாங்காய் கடா மீசையெல்லாம் வைத்து இருக்கான். உள்ளுக்குள்ள இன்னும் பச்சப் பிள்ளைதான் என்பது சிலருக்கு நல்லாவே தெரியும். இப்போ சொன்ன அந்த சிலரில் நம்மாளு கடா மார்க் பயில்வான் கூட உண்டு....

அண்ணனுக்கு ஒரு சலிப்பு... நம்மை நாள் முழுதும் குழந்தை மாதிரி கவனித்த தலைவியின் கவனம் இப்போது குழந்தையின் மேலே உள்ளது என்பதை இவரால் ஜீரணிக்க முடியவில்லை... முடிவு.. மனைவியின் மேல் எரிந்து விழுதல்... எதை கேட்டாலும், நிதானமாக, சாதாரணமாக பதிலளிக்க இயலவில்லை...

போதாக் குறைக்கு குடும்பத்தில் புதிய வரவால், செலவும் ஜிஞ்சினிக்கா ஆடுது... வருவாயில் அதுபோன்றதொரு பெரிய மாற்றம் வரவில்லை... தலைவி குடும்ப செலவுக்கு சிறிது அதிகமாக பணம் எதிர்பார்க்க, தலைவர் அதை கொடுப்பதற்காக‌, முன்பினும் அதிக உழைப்பை இட வேண்டியிருக்கிறது...

பட்ட இட்த்திலேயே படும் எனும் பழமொழி தெரியுமோ... விதிக்கு. அதுவரை வளரும் அல்லது ஒங்கும் உடல் உறுப்புகள் சுணங்கத் துவங்குவது மத்திம வயதில். இது போதும்டா உனக்கு என்பதாய் நம் உடல் உறுப்புகள் ஓபி அடிக்க ஆரம்பித்து விடும். இப்படி முதுமை உடல் நிலையில் மாற்றம் செய்ய ஆரம்பிக்கும் பொழுதில், முன்பினும் அதிக உழைப்பை இடும் சூழம் வரும்போது, காணும் யாவும் எதுவும் எரிச்சலாய் தோன்றுகிறது... உஷாராய் நாமும் இருந்து நம் துணையையும் புரிந்தால் பூரிப்பு. வாலி சொன்னது போல் ஊக்குவித்தால் யாரும் தேக்கு விற்பார். (சட்டையில் குத்தும் ஊக்கு அல்ல ஊக்கம்)

வாழ்க்கைய பத்தி முள்காடு, முதல இருக்குன்னு பீதிய கிளப்பி விடுறது நல்லதா. பூத்துக் குலுங்கும் நந்தவனம் அல்லவா வாழ்க்கை. சரி, அப்படியே இல்லேன்னா கூட அத நந்தவனம் ஆக்குவது எப்படி என தோட்டக்கார தொம்மா குருஸ் கேக்க, அதுக்கு அறிவுரை ஆந்தக் கண்ணன் ஒரு நல்ல சீக்கிய அறிவுரைய அடிப்படையா வைச்சு இப்படி சொல்றார்.

மனிதனுக்கு உடல் வலிமை போல், மன ஆரோக்கியம் ரொம்ப அவசியம். அது கஷ்டம் இல்ல, ரெம்ப ஈசி, மிஞ்சி போனா ஒரு வாரத்தில சரி பண்ணிடலாம்னு தொடங்கும் போது!!! சீக்கிரம் சொல்லு நான் உடனே செஞ்சுடுறேன் என தோணுது.

மனம் என்பது நம் எண்ணங்களின் பிம்பமே. கண்ணாடி போல் இருப்பதை காட்டும். தங்கத்தட்டாய் மனதை நினைத்து கொண்டால், மலர் வைத்தால் மணம் தரும், மலம் வைத்தால்...... அருவா அக்கிரச்சாமிய கூட யேயப்பா உன் மீசை நல்லா இருக்கேன்னு நினைச்சா நமக்கு நல்லது. சாய்ஸ் நம்மகிட்ட, அன்னப்பறவையா... அலார்ட்டா விளாண்டா அற்புதம்.

சரி புரியுது. சரி செய்யுறது எப்படி. ஒரு நாளை தொடங்கும் முன் இந்த நாள சூப்பர் நாளாக்க என்ன செய்யலாம். ஒரு அஞ்சு விசயம் சொல்லுன்னு கேட்டு நம்மகிட்ட இருந்து பதில் வாங்கிக்கலாம்.. அண்ணாமலைக்கு காவடி எடுத்துட்டு அப்படியே அமெரிக்கா போய் ஓபாமா பாத்துட்டு வர்ர வழியில.... என நீண்ட திட்டம் எல்லாம் போடாம, செஞ்சு முடிக்கிற மாதிரி சின்ன சின்ன, முடியும் பிளான் செய்யலாம். அண்ணனுக்கு ஒரு மெயில், தம்பிக்கு ஒரு போன் என.

சரி இரண்டாவது என் குடும்பத்தை மகிழ்விக்க ஏதாவது மூன்று வழிகள்.
அவ்வளவுதான். மனசில ஆச்சா... அச்சா. (தேசிய ஒருமைப்பாடு. மூன்று மொழிகள் கொண்ட வாக்கியம்)
5 ம் 3 ம் சேர்ந்தா அறியா பொண்ணும் கறி சமைப்பா என பழமொழி சொல்வது இதுதானோ.
இந்த பத்தி எழுதும் போதே பயம் வருகிறது. அடி வாங்க போவது நிச்சயம், அதுவும் மாமிசம் சாப்பிடும் முனியாண்டி என்பதால் கூடுதல் பயம்.

அறிவியல் கூற்றுப் படி, மாமிசம் சாப்பிடும் குடல் அமைப்பு சிறிசு, அதான் சிங்கம் சிங்கிள் டைம் தான் சாப்பிடும். தினமும் ஒருக்கா சாப்பிட்டா போதுமானது. தாவர பழ வகைகளுக்கு குடல் நீளமாகவும் பெரிசாகவும் இருக்கோணும். அதான் குரங்கு நாள் பூரா சாப்பிடுது. (சொன்ன உதாரணத்துல கோளாறாச்சோ... சாரி ..)

மனிதர்களுக்கும் நீளமான, பெரிய குடல் அமைப்பு.
மாமிசம் தப்பில்ல, வெஜிடேரியன் நல்லது. அதுவும் நாப்பது வயசுக்கு மேல் அக்பர் பாதுஷா போல், என் வயிறை பிணங்கள் பிதைக்கும் ஈடுகாடாய் ஆக்க மாட்டேன் என சொல்லி மாமிசம் குறைத்தால்/ தவிர்த்தால் டாக்டர் பீஸ் மிச்சம். சிக்கனுக்கு லெக் பீஸும் தப்பும்.

ஆர்.கோபி / லாரன்ஸ்
அடி உதைக்கு முன்னால..... முரசை ஒங்கி அறைந்து விட்டு ஒடிடலாமா...

வாழ்க்கை (ப‌குதி‍ - 6)

சரி... இப்போ மறுபடி யூ டர்ண் எடுத்து, திருமண மேட்டருக்கு வருவோம்.

எடக்கு மடக்கு ”ஏக்நாத்”, தற்செயலாய் அடுத்தாத்து ”அலட்டல் அம்புஜம் மாமி”யை சந்தித்தார்.
அம்புஜம் மாமி கேட்டார்... ஏண்டா... தங்கச்சிய டெல்லியில கட்டிக் கொடுத்தியே, நல்லா இருக்காளா?.
ஏக்நாத் சொன்னார்....ஆமா மாமி, மாப்பிள்ளை கூட சொக்க தங்கம் (விஜயகாந்த் அல்ல..), ரெண்டு பேரும் ரொம்ப நல்லா இருக்காங்க.
அதெல்லாம் இருக்கட்டுண்டா, விசேஷம் ஏதாவது உண்டா?.
கேள்வியின் அடியில் பொதிந்து உள்ள விஷயத்தை உணர்ந்து லேசான எரிச்சல். ஆயினும் வெளியில் காட்டவில்லை. எடக்கு மடக்கு காரர் ஆயிற்றே.
ஆங்... நேத்து தான், அவங்க ஆபிஸ்ல பெரிய விஷேசம். டின்னர், பார்ட்டின்னு பின்னி பெடல் எடுத்துட்டாங்கன்னார்.
அட அது இல்லடா, அபிஷ்டு... தெரிஞ்சுண்டே சொல்றியா... இல்ல, வேணும்னு என்ன கிண்டல் பண்றியா... வீட்டுல விசேஷம் உண்டான்னு கேட்டேன்...ம்ம்ம்... அதான்... புரிஞ்சுதா?
ஓஹோ... நீங்க அத கேக்குறீங்களா, இருக்கே. நல்லா பச்சையா, பெயிண்ட் அடிச்சு, வீடு இப்போ பளபளன்னு இருக்குது...தூள் கெளப்பிட்டாங்க.
அட போடா அசமஞ்சம்... உனக்கு எந்த விவரமுமே இல்ல, நான் வர்றேன் என அவர் நகர, எனக்கா தெரியல, என மனதினுள் சிரித்தபடி இவனும் நகர்ந்தான்.
பிள்ளைப் பேறு என்ன நம் கையில் மட்டுமா உள்ளது. தாமதம் சிலரிடம் மாதங்களாகவும், சிலரிடம் வருடங்களாகவும் அல்லவா பூச்சாண்டி காட்டும். அதற்காக நாம் இறையிடம் இறைஞ்ச வேண்டுமல்லவா?!! மழலை செல்வம் என்பது ‌தவமிருந்து கிடைக்கும் வரமல்லவா!!

கல்யாணம் முடிஞ்சா உண்டாயிட்டியா, ஏன் குண்டாகல – சந்தோசமா இல்லையா என அடுத்த வீட்டு அந்தரங்கத்தை அலசி ஆராய ஓராயிரம் "அந்தரங்க காரியதரிசிகள்” உண்டு. இவிய்ங்க சிங்கிளா இல்ல, ஒரு பெரிய டெர்ரர் குரூப்பா சேர்ந்து அலையுவாய்ங்க... இவர்கள் தரும் புற அழுத்தத்தின் நிழல் கூட படாத தூரத்தில் கணவன் மனைவி அன்யோன்யமாய் இருக்க வேண்டிய அவசியம் உண்டு.

பிள்ளை பிறப்பின் தாமதத்தால் வடிக்கப்படும் கண்ணீரின் வெப்பம் நமக்கு தெரியும். வீட்டு விஷேசங்களிலும் சபையிலும் அதிர்ஷ்டம் கெட்டவள் என்ற அமில பார்வைக்கு தப்பி முடங்கிக் கிடக்கும் மனைவி, கை பிசைந்து நிற்கும் கணவன் என்ற உணர்வை இந்த கூட்டம் என்று தான் உணருமோ?
புருஷனாவது பரவாயில்ல, இந்த மாமியார் நாத்தனார் டெர்ரர் தான் தாங்க முடியல. குடும்பத்துக்கு வந்த மருமகளை குத்துவோமா, வெட்டுவோமா, போட்டு தாக்குவோமா என்றே பார்க்கிறார்கள், வேற வழி இல்லாம தான் தலையணை மந்திரம், தனி குடித்தனம்னு யோசிக்க வேண்டி இருக்கு. இதுக்கு எதாவது தீர்வு இருக்கா?.

உண்மை. மாமியார் அவர்களே.... நீங்களும் நேற்றைய மருமகள் தானே, வந்தவள் உங்கள் மகள் போல் அல்லவா என அவரிடமும், சொன்னா சொல்லிட்டு போறாங்க உங்க அம்மா மாதிரி நினைச்சுக்கோ என இவரிடமும் எத்தனை நீளத்தில் சொன்னாலும் இது தீராத பஞ்சாயத்து (என்ன...சொம்பும், ஆலமரமும் மட்டும் இல்லை...). காலம் காலமாய் கச்சை கட்டிக் கொண்டு நிற்கிறது. சண்டை, வன்மம் என கொலை வரை நீண்டு கொறவளை பிடிக்கிறதே. தீர்வு காண அதன் ஆணி வேரான பிரச்சனை புரிதல் நல்லது.

இதை விளக்க ஒரு குட்டி கதை.

கோபு, பாபு அபூர்வ சகோதரர்கள் (புத்தம் புதிய காப்பி). இவிய்ங்க பிரதர்ஸ் இல்லடா பிரண்ட்ஸ் மாதிரி என ஊரார் சிலாகிப்பார்கள. மூத்தவன் கோபு கல்யாணம் முடிந்த மறு நாள், புது மாப்பிள்ளை அண்ணனை பார்க்க சிங்கத்தின் குகைக்கு சென்றான்.
கோபுவின் மாமனார் வீட்டில் விழுந்து விழுந்து உபசரித்து காஃபி, பலகாரம் எல்லாம் கொடுத்தார்கள். அண்ணனை மட்டும் காணவில்லை. சாப்பிட வாங்க என்ற போது, அண்ணன் வரட்டுமே என்ற பதிலுக்கு புன்னகையை பரிசளித்தார்கள்.

வர லேட்டாகும் மத்தியான சாப்பாடே இப்பதான் 4 மணிக்கு சாப்பிட்டுட்டு ரூமுக்கு போனாங்க. பாபுக்கு புரியவில்லை. தேவுடு காத்து 10 மணி சுமாருக்கு கதவு திறக்க கோபு மனைவியுடன் வந்தான்.

வாடா பாபு, சாப்பிட்டியா. இவனிடம் பேசினாலும் அண்ணனின் கண்ணும் கருத்தும் இன்னும் புதுப் பெண்ணையே சுற்றி வந்தது. அண்ணனும் நோக்க, அண்ணியும் நோக்க, அவர்தம் பார்வை தவிர்த்து, தம்பி தன் பாக்கெட்டை நோக்க, உள்ளே இருந்த புது "நோக்கியா” இவனை நோக்கியது..

சாப்பிட அமர்ந்ததும் குனிந்து ரகசியமாய் மனைவியிடம் ஏதோ சொல்ல அவள் வெட்கி தலை குனிந்தாள். என்ன என்று அப்பாவியாய் பாபு கேட்க, அவர்கள் உரையாடலில் உள்ளே வர முயற்சிக்க, ஒன்றுமில்லை, இது வேற..... பாபுவுக்கு இந்த பதில் ”ரெம்ப புதுசு அண்ணா புதுசு”.

சாப்பிட்டு முடித்ததும், சரி நீ மேல ரூம்ல படுத்துக்கோ என சொல்லி விட்டு நகர முற்பட்டவனை, இல்ல நான் வீட்டுக்கு போறேன் என வெளியே வந்தான் பாபு.

உலகம் இன்று மிகவும் புதியதாய் இருந்தது. கோபுவே உலகம், வாழ்வு, வாழ்வின் ஆதாரம், ரகசியம், பொருளாதாரம், ரசனை என இருந்த இத்தனை காலம் இனி இல்லை. அவனோடு மகிழ்ந்திருக்க, உறவாட ஒரு புது ஜீவன். இனி நான் இல்லை. புறக்கணிப்பு புதிராகுதே. நான் என்ன செய்ய?.

இது தானே முறை. மனைவியை விடுத்து என்னோடு இணக்கமாயிரு என நான் நினைக்க முடியுமா. அது பாவம், துரோகம். இல்லை அவன் வாழ்வில் நான் இனி இல்லை. இரு அடி பின் நகர்ந்து அவனோடு நான் வாழ்வில் பயணிக்க வேண்டும். தெளிவு பிறந்தது.

நண்பர்களே, சகோதரனுக்கு நேர்ந்த இந்த மன ஓட்டம் புரிந்து இருப்பீர்கள்.
பெற்று, பாலூட்டி, வளர்த்த தாய் விலகி ஒரு அடி பின் நகர்ந்து அவனோடு பயணிக்க வேண்டும். முடியுமா. மிக கடினம். சரி பிரச்சனை புரிகிறது, தீர்வு என்ன.

இந்த போரில், அல்லது நாடகத்தில் மூன்று முக்கிய கதா பாத்திரங்கள். மனைவி, மாமியார் மற்றும் கணவன். யாராவது ஒருவர் இந்த ஆழம் புரிந்தால் போதுமானது, பூகம்பம் இல்லாது லேசான, சர / “குருவி” வெடியோடு சமாளிக்கலாம்.

குடும்பத்தலைவன், தலைவி என ரேஷன் கார்டில் பெயர் பெற்றால் மட்டும் போதுமா. ஒரு "சாமான்யனா" ரேஷன் கடை க்யூவில போய் ஐந்தாவது ஆளாய் நின்னு சர்க்கரை வாங்கினா ஆச்சா.. பின்னே...அட.. தலைவன் ஆக வேண்டாமா.
இயேசுபிரான் மற்றும் கிருபானந்த வாரியார் சொல்வது போல், தலைவன் என்பவன் தன் தொண்டர்களின் முதன்மை வேலைக்காரன். தலைமைப் பதவி என்பது சொகுசான பஞ்சு தொப்பி அல்ல, அது பொறுப்பான முள் கீரிடம். கெட்ட பையனையோ, பொறுக்கியையோ கூட போனால் போகுது என்று ஒப்புக்கொள்ளும் பொண்டாட்டி பொறுப்பில்லாதவனை கால் காசுக்கு கூட மதிக்க மாட்டாள். இது வாழ்வில் நிதர்சனமான உண்மை...

மேலை நாட்டு சிந்தையில் தலைமை பற்றிய இன்னொரு உவமை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். மின்னும் மணிகளை ஒன்றிணைக்க, வலுவான வெளியில் தெரியாத நூல் வேண்டும். செடியில் மலர்ந்த மலர்களை கொய்து மாலையாக்க அன்பு எனும் பந்தத்தில் இணைக்க உறுதியான நூல் வேண்டும். நூல் வெளியில் தெரிந்தால் மாலைக்கு அழகல்ல.

அது போல் தன்னை வெளிக்காட்டாது, அன்பினால் எல்லோரையும் அணைத்து செல்லும் பக்குவம் இருக்குதா, அப்போ நீங்கள் முரசறைந்து சொல்லலாம், நான் ”தலை” என.

தன்னலம் தவிர்த்த பொறுப்பு இனிய குடும்பம் சமைக்கும் உலகிற்கு நல்ல முன்னுதாரணம் முறசரையும்.

ஆர்.கோபி / லாரன்ஸ்

(முரசின் ஓசை விரைவில் நிறையும்....... அதன் அதிர்வு நம்மிடையே என்றும் தொடரும்....)