ஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - பகுதி 1

இந்த பொங்கலுக்கு மாப்பிள்ளைய கூட்டிக்கிட்டு நீயும் வாயேன்…. தயக்கமாகவும் வேண்டுதலாகவும் மாமி சொன்னாள்…
வேதா கைபேசியை அழுத்தமாக பிடித்தாள் கண்கலங்கினாள், தொண்டை அடைத்தது…. அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல்… ‘அப்பா….’ என கேள்வியாய்…. தயக்கமாய் பலகீனமாய் காற்று கலந்து கேட்டாள்.

ம்.. அவரு சொல்லித்தானே சொல்றேன், என்ற அம்மாவின் பதிலால் மேலும் நிலை குலைந்தாள். ‘அப்புறமா பேசுறேம்மா, ஒரு அஞ்சு நிமிசம் கழிச்சு…. பதில் கேட்காமலேயே கைபேசியை துண்டித்தாள்…

அழுகை முட்டிக் கொண்டு வந்தது. எட்டு வருசம், ஒண்ணா ரெண்டா, எட்டு வருசம் முழுதாக எட்டு வருசம்.

பார்க்கவில்லை, போனதில்லை,.. லெட்டரியதில்லை.. இப்பத்தான் கொஞ்ச நாட்களாக அம்மாவோடு மட்டும் இந்த குரலுறவு…. டெலிபோன் உறவு. இல்லாமல் மொத்த உறவும், பிறந்த ஊரும் அப்படியே அல்லவா சட்டென விட்டு போனது. என் வீடு, என் ஊர் என்றிருந்த ஸ்ரீரங்கம் இன்று எனக்கு அன்னியமாக அல்லவா போனது. போனது போகட்டும், அம்மா இன்றைக்கு அழைக்கிறாள் எனும் ஒற்றை நினைப்பே ஆறுதலாக இருக்கிறது. தனக்கென ஆட்கள் இருக்கிறார்கள் எனும் நினைப்புத்தான் வாழ்க்கையோ.

கண்ணன் என்ன சொல்வான், வரச் சம்மதிப்பானா…. அடேயப்பா, எத்தனை உரம் நிறைந்த கணவன். காதலனாகவும் கணவனாகவும் அவன் இருப்பது என் அதிர்ஷ்டம். அன்று அந்த ஸ்ரீரங்கத்து தெருவில் பற்றிய என் கையை இன்று வரை தளர்த்தவே இல்லை. காதலன் என்ற பந்தம் கடந்து, கணவன் என உயர்ந்தானே. ரத்தம் வழிந்தோட, அமைதியாய் ஆனால் தீர்க்கமாக என் கை பற்றி ‘வா…’ என ஒற்றை சொல்லுடன் தன்னுடன் அழைத்து வந்தானே… காதலித்த கடமைக்காக, பொறுப்புள்ள குடும்பத்தலைவனாக மாறி, என் ஒவ்வொரு தேவையையும் குறிப்புணர்ந்து செய்தானே… அதன் பிறகு ஒரு வார்த்தை கூட குற்றமாய் சொல்லவில்லை.

ஆனாலும் இன்றைக்கு போகலாமா என கேட்டால் என்ன சொல்லுவான். நடு ரோட்டில் என்னை அடித்த ஒருவர் வீட்டுக்கு வரச் சொல்கிறாயா என சீறுவானோ… தப்புத்தான் … 

அப்பா அப்படி கை நீட்டியிருக்க கூடாது. என்ன தான் கோபம் இருந்தாலும் அதற்கென இப்படியா செய்வார், விறகுக்கட்டை எடுத்து என்னை அடித்தார், போகட்டும் நானாவது பெற்ற பிள்ளை, என்ன உரிமையில் கண்ணன் மீது கை வைத்தார்.

ஆனால் கண்ணன் தீர்க்கமானவன். கண்ணன் தன் நிலை தவறாது, ஒரு வார்த்தை பேசாது, அமைதியாய் நின்றானே. உறுதியாய் உயரமாய் இந்த உலகமே புரிந்தது போல நின்றானே. அன்றுதான் அவன் மிக அழகாக தெரிந்தான். தன் மனம் கவர்ந்த பெண்ணுக்காக, 

அமைதியாய் கண்ணியம் காத்து, பொறுமையுடன் நின்றானே, இப்போது நினைத்தாலும் பெருமை மிக்க கணங்கள் அவை. சரி அதிருக்கட்டும் பொங்கலுக்கு என்ன செய்வது... அம்மா அழைப்பை எப்படி கண்ணனிடம் சொல்வது...  வீட்டுக்கு பொங்கலுக்கு போகலாம் என எப்படி அழைப்பது.

இவ்வளவு நாளாய் அம்மாவிடம் பேசுகிறாயா நீ…. என குதிப்பானோ… சே… நாம் ஒரு தப்பு பண்ணி விட்டோம். அம்மாவிடம் போனில் பேசுகிறோம் என சமயம் பார்த்து சொல்லியிருக்க வேண்டும்.

மீண்டும் ஸ்ரீரங்கத்து வீதிகளில் கண்ணனின் கை கோர்த்து நடக்க வேண்டும். வீடு இருக்கும் அந்த முனையில் கரும்பு விற்க ஒரு தற்காலிக கடை இருக்கும்,.. அந்த முக்கு கடையில் நின்று பொங்கலுக்கு கரும்பு வாங்கினால்…. கண்ணணோடு நெருங்கி நின்று தோள் உரசி நின்று… நினைப்பே கரும்பை விட இனித்தது.

காணும் பொங்கல் என சொல்லி, கொள்ளிடத்துக்கு டெம்போவில் சென்றால், கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவன் மேல் அதீதமாய் சாய்ந்தபடி கோடி இன்பமல்லவா…. அப்பா அம்மா குரலோடு, கொண்டவன் மெய் தீண்டலும்… என கற்பனை சிறகு விரிக்க, வேதா இன்னும் குழம்பினாள்.

கைபேசி மறுபடி உயிர்பெற்று ரிங்கியது. சிறிய டிஸ்பிளேயில் என்னவன் என மின்னியது… அடடா, கண்ணன் அழைக்கிறானே….

‘உங்களப்பத்தி தான் நினைச்சிக்கிட்டு இருந்தேன்…’
‘சாப்பிடும்போது, பொதப்புல தட்டி, ஒரே இருமல், நீதான் நினைச்சுருப்பன்னு தெரியும். என்ன சொல்லு’ இன்னும் பாக்கியிருந்த இருமலோடு கண்ணன் பேசினான்.

என்ன சொல்ல, எதைப்பற்றி சொல்ல… அம்மா ஊருக்கு கூப்பிட்டத சொல்லலாமா… இப்படித்தான் சொல்வது என யோசிக்க கூடவில்லையே. வேதா அமைதியாக இருந்தாள்.
’எனக்குத்தான் இருமல், உனக்கென்ன, சொல்ல வேண்டியதை சொல்லலாமே..’ கண்ணன் மெல்லிய குரலில் கேட்டான்.

வேதா வெட்கப்பட்டாள், அவன் குரலில் இருந்த அன்னியோன்யம் அவளை வெட்கப்பட வைத்தது. அவனை பிடித்தது, அவன் குரல் இனிமையாக தோன்றியது, அவளுக்கு தன்னையும் பிடித்தது இந்த உலகை பிடித்தது. வெற்று அமைதியில் ஒன்றும் சொல்லாமல், மெல்லிய வாய் திறந்து, சொன்னாள் ‘ஐ லவ் யூ’

கண்ணன் அமைதியானான். அவனும் உணர்ச்சி வசப்பட்டான். ‘ஹே… நல்லாயிருக்கு… குரல் சூப்பரா இருக்குது’ அப்புறம்… இதே மூட்ல இன்னும் ஒரு நாலு மணி நேரம் இருந்துரு… ஆபிஸ்ல வேலை முடிச்சுட்டு வந்துர்றேன்….

தொலைபேசியை வைத்து விட்டு, அவன் கண் மூடினான். மூடிய கண்ணின் உள் நீர் திரண்டது. உலகம் இனிமையாய் கண்டான். காதல் இவ்வுலகின் மிதமிஞ்சிய இனிமை. மனதை கிறுகிறுக்க வைக்கும் உச்சகட்ட போதை. அந்த சுகத்தில் கண்கள் இன்னும் கிறங்கியது. கண்ணீர் கண்களை தாண்டி, உஷ்ணமாய் இறங்கி கன்னத்தை நனைத்தது. அந்த கன்னத் தீண்டலில் அவனுக்கு சுகம் தெரிந்தது. வழிந்த நீரை துடைக்காமல் அவன் அப்படியே இருந்தான்.

மனம் சற்று முன் பேசிய தொலைபேசிக்கு சென்றது. ஸ்ரீரங்கத்தில் இருந்து அழைத்த மாமாவிடம் சென்றது. எத்தனை வயது பெரியவர், எவ்வளவு தன்மையாக பேசினார்.
‘சாரி சார், உங்க கால்ல விழுந்து கேட்டுக்கிறேன், அன்னிக்கு ஏதோ புத்தி கெட்டு நடந்துக்கிட்டேன். ஜென்ம ஜென்மமா தேடினாலும் உங்க மாதிரி ஒரு மருமகன் என் மகளுக்கு கிடைச்சிருக்க மாட்டான். நீங்க தெய்வம் மாதிரி. இந்த பொங்கலுக்கு நீங்க அவளையும் கூட்டிகிட்டு வருவீங்களா’

வேதா கூப்பிட்டால் என்ன சொல்வாள். ஏன் சினந்து அறுத்திட்டு, சிரிச்சுக்கிட்டு ஓட்டினா சரியாச்சா… ஊருல ரோட்டுல என்ன ஆட்டம் போட்டார். இப்ப மட்டும் என்னவாம் புதுசா பொண்ணு பாசம், குடும்ப பாசம்… என சீறுவாளோ….

சே… போன வாரம் ஒரு நாள் அலுவலக மீட்டிங் சம்பந்தமாய் சென்னை சென்றிருந்த போது, அவரை பார்த்ததும். அவராய் வந்து, கை குலுக்கி சாரி என ஒற்றை வார்த்தை சொல்லி விட்டு சென்றதையும் வேதாவிடம் சொல்லியிருக்க வேண்டும். இன்று நாளை என சந்தர்ப்பம் தேடியது தப்பாக போய் விட்டது.

இருக்கட்டும், இன்று எப்படியும் பேசி விடலாம். திக் திக் இதயத்துடன், ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போட்டு விட்டு கண்ணன் வீட்டுக்குள் நுழைந்தான். வேதா அவனை எதிர் கொண்டு முற்றத்தில் இறங்கினாள்.

தொடரும்…

பொங்கலோ பொங்கல்

நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் மனம் கனிந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மார்கழி முடிந்து பிறந்தது தை
மனதில் நாளும் நம்பிக்கை வை

புதிதாய் வாங்கிய பானை இங்கு
அதை சுற்றி கட்டிய மஞ்சள் கிழங்கு

சந்தையில் வாங்கிய அடிக்கரும்பு
அதனுடன் வாங்கிய பூவும் அரும்பு

மாவால் போட்ட பல வகை நெளிக்கோலம்
அது காட்டியது கன்னியர்களின் கைஜாலம்

உமி களைந்து எடுத்த சம்பா அரிசி
அது நீரோடு நீராக ஒட்டி உரசி
அதனுடன் உடைத்து சேர்த்தது வெல்லம்
அதை இதமாய் பதமாய் சமைத்தது இல்லம்


மேக கூட்டம் களைந்து, வானத்தை பிளந்து
சூரிய கதிர்கள் பளீரென பிரகாசம் காட்ட

இருண்ட சூழல் விலகி வெளிச்சம் கூட்ட
சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியை அடைய

நம் பூவுலகின் இருள் விலகியது.
அதுபோல் நம் வாழ்வின் இருள் விலக
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்

அனைவரும் ஒன்று கூடி உரக்க கூவுவோம் -
"பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்"