யூகி பாம்ப்ரி - ஆஸ்திரேலியன் ஓபன் ஜூனியர் சாம்பியன்


Yuki Bhambri created history, becoming only the fourth Indian to win a junior Grand Slam singles title following his emphatic straight-set win over Alexandros-Ferdinandos Georgoudas of Germany in the boys' final in Melbourne on Saturday.
Top seed Yuki swept aside unseeded Georgousdas 6-3, 6-1 in 57 minutes to pocket his first Grand Slam singles title.
The other Indians in the elite list are Ramanathan Krishnan (1954 Junior Wimbledon champion), his son Ramesh Krishnan (1970 Wimbledon and French Open junior champion) and Leander Paes (1990 Junior Wimbledon and Junior US Open champion).
வெற்றி பெற்ற யூகி பாம்ப்ரி அவர்களுக்கு நம் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி - ரீடிப்.காம்

டெர்ரர் ஸ்டார் அண்ணன் ஜெ.கே.ரித்தீஷ்

இந்த பதிவை வேறு மாதிரி எழுத வேண்டும் என நினைத்து, டெர்ரர் ஸ்டார் அண்ணன் ஜெ.கே.ரித்தீஷ் படம் கிடைத்தவுடன், வேறு மாதிரி எழுத வைத்து விட்டது. பாருங்க, பாத்து, என்ஜாய் பண்ணுங்க. வாய் விட்டு சிரிங்க. நோய் விட்டு போகும்.

திரையுலகின் முடி சூடா மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இந்த இரு மாபெரும் நட்சத்திரங்களுடன் சில பல, பல சில டகால்டி நட்சத்திரங்களும் திரை உலகில் உள்ளன என்று நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

அவை எல்லாவற்றையும் விட, இந்த முக்கியமான டெர்ரர் ஸ்டார் பற்றி ஏதாவது தெரியுமா?? இங்கே மேலே இருக்கும் புகைப்படத்தை தனியாக பார்த்து விட்டு, நீங்களோ, உங்கள் வீட்டாரோ, நண்பர்களோ, குழந்தைகளோ பயந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.

டெர்ரர் ஸ்டார் அண்ணன் ஜெ.கே. ரித்தீஷ் அவர்களின் சூப்பர் ஹிட் பாடலான இருந்தா அள்ளிக்கொடு, இல்லேன்னா சொல்லிக்கொடு என்ற பாடல், யாருமே இதுவரை முழுதும் கேட்காத பாடல் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது என்பதை அறிவித்துக்கொள்கிறோம்.

முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் காலமானார்


முன்னாள் ஜனாதிபதி ராமஸ்வாமி வெங்கட்ராமன் அவர்கள் காலமானார்.
அன்னாரை பிரிந்து வாழும் குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறி, அவரின் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுவோம்.

"வேலு நாயக்கரும் பாட்ஷாவும் சுப்பிரமணியபுரத்துல மீட்டிங்!"

படித்தது, படித்ததும் பிடித்தது, உடனே உங்கள் பார்வைக்கு :

சமீபத்திய அவள் விகடனில் வந்திருந்த இந்த கட்டுரை மிகவும் சுவாரசியமாக இருந்தது. அதை உடனே உங்கள் பார்வைக்கு வைத்து விட்டேன்.
---------------------------------------------------------------------------
"வேலு நாயக்கரும் பாட்ஷாவும் சுப்பிரமணியபுரத்துல மீட்டிங்!"

''என்னப்பா ஆச்சு தமிழ் சினிமாவுக்கு?''னு ஆரம்பிச்சு விட்டா போதும்.. சரவெடியா பத்திக்கிறாங்க காலேஜ் பொண்ணுங்க. ''இந்தப் பொங்கலுக்கு சொல்லிக்கிறா மாதிரி ரெண்டே படங்கள்தான் ரேஸ்ல குதிச்சுது. ஏன் இந்தப் பஞ்சம்? எப்படியும் ஏற்கெனவே வந்த படங்களை அடிச்சுக் கலக்கிதான் ஆம்லெட் போடப் போறாங்க. அதுக்கு ஏன் இந்த பில்டப்பு?''னு ஆக்ரோஷமா கேட்டவங்க, தஞ்சாவூர் ஜோசப் இன்ஜினீயரிங் காலேஜ் பொண்ணுங்க.கேட்டது மட்டுமில்லைங்க.. 'கலக்கலா' ஒரு கதையும் கொடுத்திருக்காங்க பாருங்க..

வேலு நாயக்கரோட பொண்ணு, முத்தழகு. கார்ப்பரேஷன் ஸ்கூல்ல எட்டு வருஷமா ஏழாவது படிக்கிறா. அவளுக்கும் காலேஜ் பையன் சிட்டிசனுக்கும் லவ்வாயிடுது. இது வேலு நாயக்கருக்குத் தெரிஞ்சு சிட்டிசனை அடிக்கப் போய்ட்டாரு. சிட்டிசன் உடனே தன்னோட ஃப்ரெண்டு அழகர்கிட்ட சொல்லி, மும்பையில இருந்து 'மாணிக் பாட்ஷா'னு ஒரு தாதாவை பஞ்சாயத்து பண்ண கூட்டிக்கிட்டு வர்றான். வேலு நாயக்கரும் பாட்ஷாவும் சுப்பிரமணியபுரத்துல மீட்டிங் போட்டாங்க.

''கஷ்டப்பட்டு பொண்ணை வளர்த்து ஸ்கூலுக்கு அனுப்பி வச்சா, அவள லவ் பண்றான் பாரு.. அவன நிறுத்த சொல்லு.. நான் நிறுத்துறேன்..''னு உணர்ச்சி வசப்பட்டார் நாயக்கர்.

உடனே பாட்ஷா, ''ஹே.. ஹே.. ஹேய் பேசாத.. புடிக்காது.. பாட்ஷாவுக்கு பிடிக்காது!''னு டென்ஷனாயிட்டார். அவங்களுக்குள்ள செம சண்டையாயிடுச்சு.. அப்போதான் அந்த இடத்துக்கு கைப்புள்ள வந்தாரு. ''அண்ணன் கோவமா இருக்கேன்.. சின்னப் புள்ளைங்கள்லாம் அங்கிட்டுப் போய் வெளாண்டுக்கங்கடா''ன்னாரு. வேலு நாயக்கரும் பாட்ஷாவும் கைகோர்த்து கைப்புள்ளையை மொத்து மொத்துனு மொத்திட்டு, ''பேசாம படிப்ப கவனிங்கப்பா''னு முத்தழகுவுக்கும் சிட்டிசனுக்கும் அட்வைஸ் பண்ணிட்டுப் போய்ட்டாங்க.

அழகர் சிட்டிசனை சமாதானப்படுத்தினான். ''ஏ..ஏய்.. இன்மே நான் பேஸ் மாட்டேன். என் காதல் ஒரு கறுப்பு சரித்திரம்!''னு சொல்லிக்கிட்டே சிட்டிசன் மனசு வெறுத்து 'நான் கடவுள்' சூட்டிங் பார்க்கப் போயிட்டான். முத்தழகு ரொம்ப நாளா ஸ்கூலுக்குப் போகாம, தன்னோட வீடு இருக்கிற 7 ஜி ரெயின்போ காலனிக்குள்ளேயே அழுதுக்கிட்டிருந்தா. முத்தழகோட மாமா படையப்பா அவ அழுறதைப் பாத்துட்டு, ''அழுவாதம்மா! எப்பிடியாவது அந்தப் பையன் சிட்டிசனை தேடிக் கண்டுபிடிச்சு உன் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்தல.. இந்த படையப்பனோட மூச்சு.. நின்னு போச்சு..''னு அவளை சமாதானப்படுத்தினார்.

முத்தழகு கவலையை மறக்குறதுக்காக.. சந்திரமுகினு ஒரு டான்ஸ் டீச்சர்கிட்ட டான்ஸ் கத்துக்கப் போனா. சந்திரமுகியோட அண்ணன் சேதுபதி ஐ.பி.எஸ் அவளை தனியா விட்டுட்டு காஷ்மீர் தீவிரவாதிகளைப் பிடிக்கப் போய்ட்டாரு. அதனால முத்தழகு கொஞ்ச நாள் சந்திரமுகி வீட்டுலயே இருந்தா. ஒரு நாள் நைட்டு ஜாக், ரோஸ்னு ரெண்டு பேரு வந்து அவங்க வீட்டு கதவைத் தட்டுனாங்க. ''நாங்க ரெண்டு பேரும் வந்த டைட்டானிக் கப்பல் முழுகிருச்சு. நாங்க தப்பிச்சிட்டோம். எங்க லவ் பிடிக்காம எங்களை தொரத்திக்கிட்டு வர்றாங்க. எங்களைக் காப்பாத்துங்க''னு கெஞ்சினாங்க. அவங்க வீட்டுலயே ஜாக்கும் ரோசும் தங்கிட்டாங்க.

மறுநாள் சந்திரமுகியோட எதிரி வேட்டையனும் ரோஸோட மாமா முத்துப்பாண்டியும் வந்துட்டாங்க. ஜாக்கை போட்டு உதைச்சாங்க. சந்திரமுகிக்கு உடனே கோவம் வந்து ''ஒதலவா..? ஈ துர்காஷ்டமி லோக நின்னு சம்பிஸ்தானுரா.. லேக்க போத்தே.. நேனு சந்திரமுகி காதுரா..''னு கத்தி சிரிக்க ஆரம்பிச்சிட்டா. அப்போ வேகமா ஒருத்தர் ஓடி வந்தாரு.. ''நேனு பலராம் நாயுடு. சி.பி.ஐ ஆபிஸர். இங்க என்ன சத்தம்? அதுவும் தெலுங்குல யாரு கத்தினா? ஏய் பொண்ணு.. மீரு தெலுகா?''னு சந்திரமுகியைக் கேட்டாரு. ''ஆமாம்''னு அவ எல்லாத்தையும் சொன்னா. உடனே அவர் முத்துப் பாண்டியையும் வில்லன் வேட்டையனையும் ஜெயில்ல போட்டுட்டாரு.

அவங்களை பெயில்ல எடுக்க சிட்டியிலயே பெரிய வக்கீல் அம்பியைக் கூப்பிட்டாங்க. என்ன பிரச்னைனு தெரிஞ்சதுக்கப்புறம்.. ''என்னை விட்டுடுங்கோ சார்.. லவ்வர்சுக்கு எதிரா ஏதாவது செஞ்சா ரௌரவம்னு ஒரு கொடுமையான நரகம் கிடைக்கும்னு பாட்டி சொல்லுவா.. இதெல்லாம் சாஸ்திரப்படி தப்பு''னு சொல்லிண்டே.. ஸாரி சொல்லிக்கிட்டே கிளம்பிப் போய்ட்டாரு. அவங்க ஜெயில்லயே கிடந்தாங்க.

முத்தழகுவும் சந்திரமுகியும் ஜாக்கையும் ரோஸையும் சேர்த்து வெச்சாங்க. முத்தழகு, ''என்னால இன்னும் சிட்டிசனை மறக்க முடியல''னு ஃபீல் பண்ணி அழுதா. அப்போ அவங்க வீட்டு மாடியில ஹெலிகாப்டர் சத்தம் கேட்டுது. போய்ப் பார்த்தா, அங்க பிளாக் டிரெஸ் போட்டுக்கிட்டு கூலிங் கிளாஸோட ஒருத்தர் வந்து இறங்கி, ''எஸ்.. ஐ'ம் பேக்''னு சொன்னாரு. கூலிங்கிளாஸை கழட்டிட்டு, ''என்ன முத்தழகு.. தெரியலையா? நான்தான் சிட்டிசன்”னு சொன்னாரு. சந்திரமுகி அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சா. வேட்டையன் அடுத்த ஜென்மம் எடுத்து வந்தா சந்திரமுகிக்கு பாதுகாப்பு வேணும்கிறதால சிட்டிசனும் முத்தழகும் அங்கேயே தங்கிட்டாங்க. அப்புறம், எல்லாரும் சந்தோஷமா இருந்தாங்க.

கதையோட நீதி : அடுத்தவங்க லவ்வுக்கு ஹெல்ப் பண்ணினா தன்னோட லவ் தானே செட் ஆகும்!

கோடம்பாக்க டைரக்டர்களுக்கு.. உங்களுக்காகவே கிண்டின ஸ்பெஷல் கதை இது. பட்டுனு புரொட்யூஸரைப் பிடிச்சீங்கன்னா, 'வேலன்டைன்ஸ் டே' ரிலீஸா கொண்டு வந்துடலாம். அப்புறம் உங்க இஷ்டம்!

நன்றி : அவள் விகடன்

-----------------------------------------------------------------------
இந்த கால பசங்களும், பொண்ணுங்களும் படிக்கறாங்களோ இல்லையோ, இந்த மாதிரி கதை எல்லாம் சூப்பரா சொல்றாங்க.
நல்லாதானே போயிட்டு இருக்கு.

இன்றைய செய்திகள்

மாதவன் நாயர், அபினவ் பிந்திரவுக்கு பத்ம விபூஷன் :

இஸ்ரோ தலைவர் மாதவன் நாயருக்கு பத்ம விருதுகளில் முதல் நிலை விருதான பத்மவிபூஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. இவரைத் தவிர பல்வேறு துறைகளைச் சேர்ந்த மேலும் 9 நிபுணர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறைக்கான பிரிவில், துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு பத்ம விபூஷன் வழங்கப்படுகிறது.

---------------------------------------------------------------------------------------
டெல்லி: 2009ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கருக்கு பத்ம விபூஷன் விருதும், ஜெயகாந்தன் உள்ளிட்டோருக்கு பத்மபூஷனும், நடிகர் விவேக் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்மவிபூஷன் விருது பெற்றோர் ..

டாக்டர் அனில் ககோத்கர், டாக்டர் சந்திரிகா பிரசாத் ஸ்ரீவத்சவா, பேராசிரியர் டி.பி.சட்டோபாத்யாயா, கோவிந்த் நாராயண், பேராசிரியர் ஜஸ்பீர் சிங் பஜாஜ், டாக்டர் புருஷோத்தம் லால், சுந்தர்லால் பகுகுணா, மாதவன் நாயர், சகோதரி நிர்மலா, டாக்டர் ஏ.எஸ். கங்குலி.

பத்மபூஷன் விருது பெற்றோர் ..

வி.பி.தனஞ்செயன், வைத்தியநாதன் கணபதி ஸ்தபதி, ஜெயகாந்தன், காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரி சேஷாத்ரி, சரோஜினி வரதப்பன், அபினவ் பிந்த்ரா உள்ளிட்ட 30 பேர்.

பத்மஸ்ரீ விருது பெற்றோர் ..

நடிகர்கள் விவேக், திலகன், அக்ஷய் குமார், நடிகை ஐஸ்வர்யா ராய், பாடகி அருணா சாய்ராம், ஐராவதம் மகாதேவன், டாக்டர் சுப்ரமணியம் கிருஷ்ணசாமி, உதித் நாராயணன், பி.ஆர். கிருஷ்ணகுமார், டாக்டர் சிவராமன், டாக்டர் ஷேக் காதர் நூர்தின், தணிகாச்சலம் சடகோபன், ஹர்பஜன் சிங், மகேந்திர சிங் டோணி, பங்கஜ் அத்வானி, ஆறுமுகம் சக்திவேல் உள்ளிட்ட 93 பேர்.
------------------------------------------------------------------------------------------------

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஆனால், இந்த நேரத்தில், பல துறைகளில் பலப்பல சாதனைகளை நிகழ்த்திய எத்தனையோ பேருக்கு இன்னும் எந்த விருதும் கிடைக்க வில்லை என்பது தான் கசப்பான உண்மை. நம் நாட்டில், விருது வாங்க கூட, பிரதமர், முதல்வர்களின் சிபாரிசு வேண்டியிருக்கிறது .

பாலைவனத்தை போர்த்திய பனிப்போர்வை








அமீரகம் (யு.ஏ.ஈ) என்பது ஏழு ஊர்களை (அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, புஜைரா, உம் அல் குவைன்) உள்ளடக்கிய ஒரு சிறு நாடு. ஓமன் பக்கத்து நாடு. பாலைவனம் என்பதால், இங்கு குளிரும் அதிகம், வெயிலும் அதிகம்.
எப்போதும் இல்லாத அளவு இந்த வருடம், அமீரகத்தின் ஒரு பகுதியான ராஸ் அல் கைமாவில் நேற்று வெப்பநிலை -3 டிகிரீ என்ற அளவில் இருந்தது. அங்குள்ள ஜெபெல் ரைஸ் என்ற மலை, பூமியிலிருந்து 5,700 அடி உயரத்தில் உள்ளது. அந்த மலையை, பனி, போர்வை போல் போர்த்தி, சுவிஸ் நாட்டை நினைவு படுத்தும் விதமாக காட்சி தந்தது.

ஜெபெல் ரைஸ் மலையை பனி 10 cm அளவு போர்த்தி உள்ள காட்சியை காண கண் கோடி வேண்டும். நீங்களும் பார்த்து ரசியுங்களேன்.

இந்த காட்சியை பார்த்தவர்கள் நிச்சயமாக, பாலைவனம் என்பதை, சோலைவனம் என்றோ அல்லது பனிமலை என்றோ தான் சொல்வார்கள்.
இதற்கு முன் டிசம்பர் மாதம் 28, 2004 அன்று தான் இதுபோன்ற ஒரு பனிப்பொழிவும், தட்பவெப்பமும் நிலவியது என்று அங்கு வசிப்பவர்கள் கூறுகிறார்கள். ராஸ் அல் கைமாவில் நிலவும் இந்த இயற்கை சூழலை ஒட்டி, அங்குள்ள அரசாங்கம், ஒரு மலைவாசஸ்தலம் ஹோட்டல் மற்றும், பனிச்சறுக்கு அரங்கமும் அமைக்க யோசித்து வருகிறது. இது இங்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கவரும் விதமாக இருக்கும் என்றும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி : கல்ப் நியூஸ் - புகைப்படங்கள்

இன்றைய செய்திகள் - இது ஜால்ராவின் உச்சம்

தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று தமிழர் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சங்கத் தமிழ் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.இந்நிகழ்ச்சியில் தமிழை செம்மொழியாகவும், தை மாதம் முதல் நாளை தமிழ் புத்தாண்டாகவும் அறிவித்த முதல்வரை பாராட்டி கவிதை முற்றம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.கவிஞர் வாலி தலைமை தாங்கினார். புலவர் புலமைபித்தன், கவிஞர்கள் பழனி பாரதி, பா.விஜய், தமிழச்சி தங்கபாண்டியன், இளந்தேவன், கபிலன், விவேகா, நெல்லை ஜெயந்தா ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் கவிதை வாசித்தார்கள்.

நிகழ்ச்சியில் கவிஞர் வாலி அவர்கள் வாசித்த கவிதை (ஜால்ராவின் மறுபெயர் தான் இங்கு நாசூக்காக கவிதை என்று சொல்லப்படுகிறது).

கவிஞர் வாலியின் கவிதை ..

தமிழ் வணக்கம், தமிழின தலைவர் வணக்கம்.எதற்கு தனித்தனியாய் இரு வணக்கம்.வைப்பேன் என் தலைவனுக்கு மட்டும் ஒரு வணக்கம்.

எவரேனும் என்னுவரோ தலைவன் வேறாக, தமிழ் வேறாக. தலைவரல்லவா இருக்கிறார் தமிழுக்கு வேராக.கலைஞர் பெருமானே உன் வருகை, கண்டதும் தூக்குவேன் என் இருகை.

உயரிய தலைவா உனக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு வாயை திறந்தால் தான் என் வாய்க்கும் கவிதை வாய்க்கும்.

என் பாட்டுக்கு நீதான் பிள்ளையார் சுழி.உன்னை முன் வைக்காமல் என்ன எழுதினாலும்,என் பாட்டு வாங்கும் பெரிய சுழி.

அருமை தலைவா,ஆண்டு 2007-ல் எமனிடம் இருந்து நீ என்னை மீட்டாய். அதற்கு முன் ஆண்டு 2006-ல் ஓர் 'உமனிடம்' இருந்து தமிழ் மண்ணை மீட்டாய்.
தேர்தலுக்கு தேர்தல் 5 விரல்களை அகலக்காட்டி,
அஞ்சு அஞ்சு என்று அயலாரை ஓட்டி,
5 முறை அரியணை ஏறிய அஞ்சுக செல்வா.

தேர்தல் வரலாற்றில் உன்னை வெகுவாக விமர்சனம் செய்ய டில்லியில் ஒரு கோபால்சாமி,
திருமங்கலத்தில் ஒரு கோபால்சாமி.
நீயோ இந்த 2 கோபால்சாமிகளையும் புறம் தள்ளிய கோபாலபுரத்து சாமி.
எனவேதான் கும்மாளமிட்டு உன்னை கொண்டாடுகிறது இந்த பூமி.

அய்யா,50 ஆண்டு காலம் உன் சேவடிபட்ட சபை சென்னை சட்டசபை.
நாவில் தமிழ் ஏந்தி நீ நற்றமிழ் இட்ட சபை.
முதல் முதல் தேர்தல் குளத்தில் குளிக்க நீ தொடங்கிய ஊர்தான் குளித்தலை.
குளித்தலைக்கு பிறகு இதுவரை குனியா தலை உன் தலை.
இனியும் குனியாது வெற்றியை குவிக்கும் என்பதும் உன் தலை.

சாதாரணமாய் இருந்து சரித்திரம் படைத்தாய்.
அய்யா அந்த வகையில் நீ ஒரு ஒபாமா.
சரித்திரம் படைத்த பின்பும் சாதாரணமாக இருக்கிறாய்.
அந்த வகையில் உனக்கு ஒபாமா ஒப்பாகுமா?.

உன்னை விட்டு வலது போனால் என்ன, இடது போனால் என்ன.
மேலே விழுந்த நரி பிடுங்காமல் போனால் சரி.
நீ எப்போதும் போல் சிரி.உன்னிடம் உள்ளது நடு நிலைமை.
நடுநிலைமை தான் நல்ல தலைமை.
கலைஞர்கோனே,
கருப்பு கண்ணாடி அணிந்த கவி வெண்பாவே.
நீயே உனக்கு நிகர்.
நீ நகர்ந்தால் உன் பின்னே நகர்கிறது நகர்.

நிஜம் சொன்னால், ரஜினியை விட நீயொரு வசீகரமான 'பிகர்'.
நாவினிக்க நாவினிக்க உன்னை பாடியே என் உடம்பில் ஏறிபோனது சுகர்.
நீ எங்கள் கிழக்கு, உனக்கு என்றும் இல்லை மேற்கு.
நீ வடக்கு வழிபடும் தெற்கு.
நம்மொழி செம்மொழி, அதனை அங்கீகரிக்காது நாள் கடத்தியது நடுவண் அரசு.
நீ குட்டினாய் உடனே குனிந்தது அதன் சிரசு.
அதுபோல் தமிழனின் அடையாளங்களை வட்டியும், முதலும் சேர்த்து வள்ளலே நீதான் மீட்டாய்.

தரை மீனை திரும்ப தண்ணீரில் போட்டாய்.
அதனால் தான் அய்யா உன்னை அவருக்கு நிகர் அவர், தமிழனை துன்பம் தீண்டாது மீட்கும் தடுப்பு சுவர்.
மையம் ஏற்கும் வண்ணம் உன்னிடம் உள்ளது பவர்.
அத்தகு பவர் உன்போல் படைத்தவர் எவர்.
அமைச்சர் பெருந்தகை ஆற்காட்டாரிடம் உள்ள பவரால், வீட்டு விளக்கு எரியும், நடுரோட்டு விளக்கு எரியும்.
உயரிய தலைவா உன்னிடம் உள்ள பவரால் தான் நாட்டு விளக்கு எரியும், நற்றமிழ் பாட்டு விளக்கு எரியும்.

குப்பன், சுப்பன் வாழும் குப்பங்கள் ஓயாமல் உன்னால் தான் ஒளிர்கிறது, அடுப்பு விளக்கு, அன்பு விளக்கு,
அமைதி விளக்கு, அறிவு விளக்கு என பல்விளக்கை இன்று, உன்னை பணித்து வாழ்த்தி சொல்வேன் போய் நீ பல் விலக்கு என்று.
தமிழா என் நண்பா, உனக்கு தருவேன் கேள் ஒரு வெண்பா.
-----------------------------------------------------------------------------------------------

நண்பர்களே, இந்த கவிதை கலைஞர் கருணாநிதியை மிகவும் மகிழ்வித்திருக்கும். எனக்கு படித்தவுடன், அந்த கால புலவர்கள் மன்னனை புகழ்ந்து பாடி, பரிசு பெற்ற நிகழ்ச்சிகள் ஞாபகத்திற்கு வந்தது. உங்களுக்கு ??
(என்னத்தான் புகழரதுன்னாலும் ஒரு அளவு வேண்டாமாடா???)

இனிய குடியரசு நாள் வாழ்த்துக்கள்




நம் இணைய தள நண்பர்கள் மற்றும் உலகின் பல நாடுகளில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் இனிய குடியரசு நாள் வாழ்த்துக்கள்.

உள்குத்து ஏதுமில்லாத உண்மை செய்திகள்

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பலதரப்பட்ட செய்திகளின் தொகுப்புதான் இந்த உள்குத்து இல்லாத உண்மை செய்திகள்.
-----------------------------------------------------------------------------
இதயக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்ய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 11 டாக்டர்கள் கொண்ட குழு இன்று பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து வருகிறது.சர்வதேச அளவில் புகழ் பெற்ற இருதவியல் நிபுணரும், பிரதமரின் பெர்சனல் மருத்துவருமான டாக்டர் கே.ஸ்ரீநாத் ரெட்டி தலைமையில், டாக்டர் ரமாகாந்த் பான்டா தலைமையில், டாக்டர் விஜய் டி சில்வா, டாக்டர் பிரதியோத் குமார் ராத், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் நரேந்திர கரச் உள்ளிட்ட 11 பேர் கொண்ட மருத்துவர் குழு அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளது.அறுவைச் சிகிச்சைக்காக பிரதமர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் மனைவி மற்றும் குடும்பத்தினர் உடன் உள்ளனர்.காலை எட்டே கால் மணியளவில் ஆபரேஷன் தொடங்கியது. ஆபரேஷன் முடிய குறைந்தது 5 அல்லது 6 மணி நேரமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் விரைவில் பூரண குணம் அடைய அவரை வாழ்த்துவோம்.
-------------------------------------------------------------------------
திருமங்கலத்தில் கிடைத்த வெற்றி திமுக சாதனைக்குக் கிடைத்த வெற்றி அல்ல. காந்திக்குக் கிடைத்த வெற்றி. அதாவது ரூபாய் நோட்டுகளுக்கு கிடைத்த வெற்றி. ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம் வீதம் ஒரு குடும்பத்தில் உள்ள 4 பேருக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்து தேர்தலில் வெற்றிப்பெற்றிருக்கிறார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஒரு வேளை திருமங்கலம் இடைதேர்தலில் தேமுதிக ஜெயித்திருந்தால் இவ்வாறு கூறி இருப்பாரா என்று தலைவர் விஜயகாந்த் கூறவில்லை. தேர்தலில் தோற்றதால் விரக்தியில் இவ்வாறு சொல்லி இருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் ஒன்று, நாட்டில் இன்றைய பெரிய காமெடியன் விஜயகாந்த் தான் என்று சிறிய குழந்தையை கேட்டால் கூட கூறிவிடும்.
----------------------------------------------------------------------------------------------
சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை ஒரு ரூபாயும் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது வெறும் செய்தியாக மட்டும் இல்லாமல், விலையும் விரைவில் குறைந்தால் மக்கள் சந்தோஷப்படுவார்கள். இது நடக்கும், ஆட்சியாளர்கள் மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நினைத்தால்!!!!
--------------------------------------------------------------------------------------------
40 லோக்சபா தொகுதிகளையும் வெல்ல எங்களிடம் 4000 கோடி ரூபாயெல்லாம் இல்லை. வேண்டுமானால் அதிமுகவிடம் அந்த வசதி இருக்கலாம் என்று கூறியுள்ளார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

இது பச்சை புளுகு என்று நேற்று பிறந்த குழந்தைக்கு கூட தெரியும். ஆற்காட்டார் கூட இப்போதெல்லாம் அடிக்கடி காமெடி பண்ண ஆரம்பித்து விட்டார். பேசியே கிச்சு கிச்சு மூட்டுகிறார். மின்சாரம் இல்லை என்று சம்சாரத்தை காசி அனுப்பியவர் இவர். இப்போ நிலைமை என்ன என்று தெரியவில்லை.
------------------------------------------------------------------------------------------
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் திமுகவுக்கு முரண்பாடு ஏற்பட்டு, ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டால், திமுக அரசைக் காக்க பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் துணை நிற்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருணாநிதியின் இன்றைய பெரிய தலைவலியே திருமாதான். முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல், வெகுவாக கஷ்டப்படுகிறார். அந்த பக்கம், காங்கிரசார் திருமாவை கைது பண்ணியே தீர வேண்டும் என்று கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். இங்கு திருமா, கருணாநிதி ஆட்சிக்கு பாதுகாப்பு கொடுப்பேன் என்கிறார். என்ன ஆகும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------
பொங்கலுக்கு ரிலீஸான `வில்லு' ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களுக்கு விசிட் அடிக்கத் தொடங்கியிருக்கிறார் விஜய்.

இந்த திரையரங்குகளில் ரசிகர்களை நேரில் சந்தித்து பேசுகிறார். முதல்கட்டமாக நேற்று அவர் கோவை சென்றார். ரசிகர்கள், அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள்.

கோவை கங்கா, கே.ஜி.காம்ப்ளக்ஸ் தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்தார். அவர்கள் மத்தியில் விஜய் பேசியதாவது:

நான் இதுவரை நடித்த படங்களில், முதல் 10 நாட்களில் அதிக வசூல் செய்த படம், `வில்லு'தான். கோவை, மதுரை, சேலம் ஆகிய நகரங்களில் இதுவரை என் முந்தைய படங்கள் செய்திராத வசூல் சாதனையை வில்லு செய்து இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------
காமெடியின் உச்சகட்டம், விஜய் இந்த படத்தை ஜேம்ஸ் பாண்ட் படத்தோடு ஒப்பீடு செய்தது. அதை விட காமெடி, இப்போது அவர் அரசியல் பற்றி பேச ஆரம்பித்து இருப்பது. ஆனால், எஸ்.ஏ.சி. தான் ஆர்வமாக உள்ளார் என்று கூறி, பழியை அவர் மேல் போட்டு, இவர் தற்காலிகமாக தப்பித்துக்கொள்ள பார்க்கிறார். இந்த கலவர பூமில இப்போ, இதுபோன்ற காமெடிகள் தான் மக்களை கொஞ்சமாவது காப்பாற்றுகிறது.
----------------------------------------------------------------------------------------------
நடிகர் மன்சூர் அலிகானும் இசையமைப்பாளராகிறார். கையில காசு வாயில தோச படத்தின் மூலம் அவர் மியூசிக் டைரக்டர் ஆகிறார்.குரூப் டான்ஸராக வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் வில்லனாக உருவெடுத்து, காமெடி உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்து பின்னர் படத் தயாரிப்பாளர், இயக்குநர் என பல அவதாரம் எடுத்தவர் மன்சூர் அலிகான்.இந்த நிலையில் புதிதாக இசையமைப்பாளர் அவதாரத்தையும் அவர் பூணுகிறார்.

தமிழ்நாட்டுக்கு இதுபோன்ற வரிசையான சோதனைகள் வந்தே தீரும் என்று என்னத்தான் தலை எழுத்தோ. கொஞ்ச நாள் முன்பு குருவி, பின் வில்லு, இப்போ இந்த மன்சூர் அலி கான் காமெடி. இவர் என்ன சீரியசாவா இசை அமைக்க போகிறார் என்று கேட்பவர்களுக்கு..... சத்தியமா இல்லீங்கோ ..... இதுவும் ஒரு டகால்டி காமெடி தான் ........ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
--------------------------------------------------------------

இப்போதைக்கு இது போதும். பின் வேறு செய்திகளோடு சந்திப்போம். ஏற்கனவே சொன்னதுபோல் இந்த செய்திகள் எல்லாம் வேறு வேறு இடங்களில் இருந்து எடுத்து கோர்க்கப்பட்டவை. சாய்வெழுத்துக்களில் உள்ளவை மட்டும் என்னால் சேர்க்கப்பட்டது.

இன்றைய தமிழ்ப்படங்களின் அறிமுகக்காட்சி

இன்றைய தமிழ் சினிமாவில், கதாநாயகர்களின் அறிமுகம், மிகவும் அராஜக பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

பெரிய நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி, நண்டு, சிண்டு, வாண்டு நடிகர்கள் வரை, இந்த அறிமுகக்காட்சி அமைப்பது என்பதே ஒரு படம் எடுக்கும் அளவுக்கு பில்ட்- அப் செய்யப்படும். இதை நிர்மாணிக்க ஒரு குழுவே தனியாக, இரவும் பகலும், பகலும் இரவும் இயங்கும்.

முன்பெல்லாம் நாயகர்களின் அறிமுகக்காட்சியில், ஒரு எடுபிடி நடிகர், ஒரே ஒரு வசனத்தில் ஏக பில்ட்-அப் கொடுக்க, தரையில், தூசி, தும்பு, புடவை, பேன்ட், ஷர்ட், பாவாடை எல்லாம் பறக்க, நாயகரின் ஷூ எல்லா தூசிகளையும் கிளப்ப, கொஞ்சம் கொஞ்சமாக கேமரா, அவரின் கால், வயிறு (தொப்பை), இடுப்பு, மார்பு என முன்னேறி, முகத்தில் வந்து க்ளோஸ்-அப்பில் நிற்கும். அப்போது, அங்கு விரல் சுழற்சி, தொடை தட்டல், முஷ்டி முறுக்கல், பல வித வணக்கங்கள் கேமராவின் பல கோணங்களில் காட்டப்படும்.

அப்போது தியேட்டரில் கைதட்டல் காதை பிளக்கும், விசில் சத்தம் விண்ணை பிளக்கும், குலவி சத்தம் கூரையில் தெறிக்கும். பல வண்ண காகிதங்கள் அரங்கை நிறைக்கும், தூக்கி எறியப்படும் செல்லாத சில்லறை பலரின் தலையையும், திரையையும் பதம் பார்க்கும். சூடம் ஏற்றப்படும், ஆரத்தி எடுக்கப்படும், திருஷ்டி கழிக்கப்படும் (என்ன திரிஷ்டி, யாருக்கு???)

பின்னாளில், இது கொஞ்சம் உருமாறி, வழிமாறி, நேரடியாக நாயகன் மெதுவாக நடந்து வந்து, 500 பேரோடு இணைந்து, கை தூக்கி, ஒரு குத்தாட்டம் போட்டு படத்தை ஆரம்பித்து வைப்பார்.

இப்போது கேள்வி என்னவென்றால், இது போன்ற நாயகர்களின் அறிமுகப்பாடல்களில், பெரும்பாலும் நாயகர்கள், தங்கள் ரசிகர்களை, அடா, புடா என பாடுகிறார்களே, அது ஏன்?? அன்பு மிகுதியாலோ?? - உதாரணமாக :

அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான்தாண்டா

ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன் ........ இரக்கமுள்ள மனசுக்காரண்டா, நான் ஏழைக்கெல்லாம் எப்பொழுதும் சொந்தக்காரன்டா

வந்தேண்டா பால்காரன் ......... அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன்

ஆடுங்கடா என்ன சுத்தி, நான் அய்யனாரு வெட்டுக்கத்தி

வாடா வாடா வாடா வாடா தோழா .... நாம் வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா

இது சில உதாரணங்கள். முன்பு எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த "இதயக்கனி" படத்தில் கூட இதுபோன்ற ஒரு நாயகன் அறிமுகப்பாடல் வரும். அது மிகவும் பிரமாதமாகவும், பிரம்மாண்டமாகவும் இருந்ததை மறுப்பதற்கில்லை, உண்மையை மறைப்பதற்கில்லை. அந்த பாடல் :

"நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற, இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற"

நண்பர்களே, நீங்களும் உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்களேன்

சமீபத்தில் படித்தது, படித்ததும் பிடித்தது

சமீபத்தில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அது மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்ததால், இங்கே அதை சில மாற்றங்களுடன் வெளியிடுகிறேன். பிடித்திருந்தால் படியுங்கள், பிடிக்க வில்லை என்றாலும் படியுங்கள்.

தமிழ் நடிகர்களின் அடுத்து வரும் படங்களின் தலைப்புகள் :

நடிகர்கள்னாலே மொதல்ல நம்ம எல்லாருக்கும் ஞாபகம் வர்றது சூப்பர் ஸ்டார் ரஜினி தானே. ஆகவே முதலில் அவரில் இருந்து ஆரம்பிப்போம்.

ரஜினிகாந்த் :

ரோபோ, ரிமோட் கார், பாட்டரி ப்ளேன் டாய் ட்ரெயின் , ஜெட்

கமலஹாசன் :

தலைவன் இருக்கின்றான், துணை தலைவன் படுக்கின்றான், தொண்டன் கொட்டாவி விடுகின்றான்.

விஜயகாந்த் :

தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், திருமங்கலம் (அவ்வ்வ்வ்)

விஜய் :

வில்லு, அம்பு, கத்தி, கபடா, கம்பு

அஜித் :

அசல், நகல், ஒரிஜினல்

சூர்யா :

வாரணம் ஆயிரம், தோரணம் இரண்டாயிரம், பூரணம் மூவாயிரம், பஞ்சவர்ணம் நாலாயிரம், ஹேவர்ட்ஸ் ஐயாயிரம்

சிம்பு :


சிலம்பாட்டம், புலியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம்

ஜீவா :

ஈ, கொசு, எறும்பு, கரப்பான் பூச்சி, மண்புழு

விஷால் :

சத்யம், சாந்தம், ஸ்ரீ, அபிராமி, சாந்தி, ஐநாக்ஸ்

பரத் :

சேவல், கோழி, புறா, வாத்து, மைனா

சேரன் :

ராமன் தேடிய சீதை, ராவணன் கடத்திய சீதை, அனுமான் கண்ட சீதை

நகுல் :

காதலில் விழுந்தேன், கார்ல விழுந்தேன், ரோட்ல விழுந்தேன், பள்ளத்துல விழுந்தேன், தூக்கத்தில் அழுதேன்

ஜீவன் :

தோட்டா, புல்லட், ரிவால்வர்

விக்ரம் :

கந்தசாமி, நொந்தசாமி, ராமசாமி, சோமசாமி, ஆமாஞ்சாமி

தனுஷ் :

படிக்காதவன், தறுதல, மடையன்

ஆர்யா :

நான் கடவுள், நான் மிருகம், நான் அரக்கன், நான் கிறுக்கன்

ஜெயம் ரவி :

சம்திங் சம்திங், நத்திங் நத்திங், சம்திங் நத்திங்

நரேன் :

அஞ்சாதே, ஆறாதே, எட்டாதே, கொட்டாதே, முட்டாதே

மாதவன் :

குரு என் ஆளு, சிஷ்யன் உன் ஆளு, பபிதா என் ஆளு, நமிதா உன் ஆளு,

எஸ்.ஜெ. சூர்யா

நியுட்டனின் மூன்றாம் விதி, பெஸ்கல் லா, ஹுக்ஸ் லா, ஷகிலா

ராஜேந்தர் :

வீராசாமி, பீராசாமி, ஊராசாமி, பேராசாமி

பார்த்திபன் :

பச்ச குதிர, வெள்ள கழுத, சிகப்பு பன்னி, நீல எலி, மஞ்சள் அணில்

சாந்தனு:

சக்கரக்கட்டி, உப்புக்கட்டி, சுண்ணாம்புக்கட்டி, கோடைக்கட்டி, நாமக்கட்டி (இப்போதான் தயாரிப்பாளர் தாணுவுக்கு போட்டார், இன்னும் மிச்சம் வச்சு இருக்கார், அடுத்தது யாரோ??)

நந்த வனத்துக்குள்ளே கலவரம்... பூக்களுக்குள்ளே போட்டி ...

மல்லிகை மணத்தின் மயக்கத்திலே -

மல்லி புகழ் மதுரைக்கார பண்டியனைப்போலவே நீங்களும் ஒரு தலை பட்சமாக தீர்ப்பு சொல்லி விட்டீர்கள்....

உங்களால் -

நந்த வனத்துக்குள்ளே கலவரம்... பூக்களுக்குள்ளே போட்டி ...

பிச்சிப்பூ, குறிஞ்சி, மாம்பூ, ஆவாரம்பூ என எல்லா மலர்களும் ஆளுக்கொரு பாடல் பட்டியலோடு போட்டியில் குதித்துள்ளன.

மலர்களின் ராணி ரோஜா மௌனமாக பரிகசிக்கிறது உங்களைப்பார்த்து -

ஒரே ஒரு பழுப்பு வெள்ளை நிறத்தில் பூக்கும் குட்டி மல்லிகை ரசிகரே !

பல வண்ணங்களில் பெரிதாகப்பூக்கும் என்னை மறந்ததேன் ?

கவிஞர்களின் மனங்களில் கொடி கட்டிப்பறக்கும் எனது வெற்றி பாடல்களில் சில இதோ :

* ரோஜா மலரே ராஜ குமரி

* ரோஜாவை தாலாட்டும் தென்றல்

* காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே

* ராசாவே உன்னை நம்பி ஒரு ரோசாப்பூ

* யார் வீட்டில் ரோஜா பூப்பூத்ததோ

* ரோஜா ரோஜா (காதலர் தினம்)

* ... துடிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

இந்த பட்டியல் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ?

ஹ ஹா ஹ ஹா சபாஷ் ! சரியான போட்டி !!

தந்தானே தானா, தில்லாலே லேலோ

மரம் வளர்ப்போம், செடி வளர்ப்போம் தந்தானே தானா
மழை வருமே மழை வருமே தில்லாலே லேலோ

மாமழையே நீ வா வா தந்தானே தானா
நீ வந்தா மண்ணு குளிரும் தில்லாலே லேலோ

பாக்கும் எடம் எல்லாமே தந்தானே தானா
பசுமையாக இருக்குமுங்க தில்லாலே லேலோ

மழை நீரை சேர்த்து வைப்போம் தந்தானே தானா
மண்ணில் வளமை சேர்த்திடுவோம் தில்லாலே லேலோ

எல்லாருக்கும் உதவி செய்வோம் தந்தானே தானா
நல்லாருக்கும் நம்ம வாழ்க்கை தில்லாலே லேலோ

புள்ளைங்கள படிக்க வைப்போம் தந்தானே தானா
அந்த படிப்பறிவும் நாட்ட வளர்க்கும் தில்லாலே லேலோ

படிக்காத நாட்டுக்குள்ள தந்தானே தானா
பகுத்தறிவு கொரஞ்சிருக்கும் தில்லாலே லேலோ

படிச்சுப்புட்டு சும்மா இருந்தா தந்தானே தானா
சோத்துக்கு நீ என்ன செய்வ, தில்லாலே லேலோ

நீ படிச்ச படிப்புக்குத்தான் தந்தானே தானா
ஒரு வேல கெடைக்கும் தேடிப்பாரு தில்லாலே லேலோ

சிறுவயசு திருமணம் தான் தந்தானே தானா
வேண்டாமுன்னு சொல்லிடுவோம் தில்லாலே லேலோ

அத்துமீறும் அந்நியரத்தான் தந்தானே தானா
அடிச்சு நாம வெரட்டிடுவோம் தில்லாலே லேலோ

மின்சார தேவைகளை தந்தானே தானா
கவனமாக கொறச்சுக்குவோம் தில்லாலே லேலோ

இலவசமா ஏதும் தந்தா தந்தானே தானா
வேணாமின்னு சொல்லிடுவோம் தில்லாலே லேலோ

ஓட்டு எல்லாம் போட்டு புட்டு தந்தானே தானா
நல்லவங்கள தேர்ந்தெடுப்போம் தில்லாலே லேலோ

நல்லவங்கள தேர்ந்தெடுத்தா தந்தானே தானா
நல்லாட்சி நமக்கு கெடைக்கும் தில்லாலே லேலோ

புல்லுக்கட்ட தின்னும் மாட்ட தந்தானே தானா
ஜல்லிக்கட்டுல வதைக்காதீங்கோ தில்லாலே லேலோ

ஒன் வீரத்த நீ தெரிஞ்சுக்கணும்னா தந்தானே தானா
ஒரு புலியோட மோதிப்பாரு தில்லாலே லேலோ

குடிப்பழக்கம வேணாமுங்க தந்தானே தானா
நம்ம குடி முழுகி போயிடுங்க தில்லாலே லேலோ

உழைக்கும் மக்கள் இருக்கும் நாட்டில் தந்தானே தானா
ஒழுக்கம் நெறைய இருக்குமுங்க தில்லாலே லேலோ

அன்னாடம் பகல் பொழுதில் தந்தானே தானா
ஓயாமத்தான் உழைச்சிடனும் தில்லாலே லேலோ

ஒன் உழைப்பை நம்பி வாழ்ந்து பாரு தந்தானே தானா
இந்த ஊரு, ஒலகம் ஒன்ன மெச்சும் தில்லாலே லேலோ

உழைக்காத திரியறவங்கள தந்தானே தானா
சோறு கேட்டு அலைய வைப்போம் தில்லாலே லேலோ

அருமை தெரிஞ்சு உழைச்சாலே தந்தானே தானா
பெருமை வந்து சேந்துடுமே தில்லாலே லேலோ

குடும்பத்துல மகிழ்ச்சி வேணும் தந்தானே தானா
அதுக்கு குடும்பத்தாரை நேசிக்கணும் தில்லாலே லேலோ

இல்லாத ஏழைக்குத்தான் தந்தானே தானா
இருப்பதை நாம் கொடுத்திடுவோம் தில்லாலே லேலோ

வறுமை வேண்டாம், வறட்சி வேண்டாம் தந்தானே தானா
அதை விரட்டி அடிக்க ஒழச்சிடுவோம் தில்லாலே லேலோ

ஜாதி மதம் பாக்காதே தந்தானே தானா
மீதி எதுவும் தேறாதே தில்லாலே லேலோ

அமைதி வேண்டி அனைவருமே தந்தானே தானா
அல்லும் பகலும் பாடுபடுவோம் தில்லாலே லேலோ

எல்லாருமே நல்லா இருக்க தந்தானே தானா
அந்த ஆண்டவன வேண்டுவோம் தில்லாலே லேலோ

சொல்லி வச்ச நல்ல கருத்த தந்தானே தானா
மனசில் வச்சு வழிபடோணும் தில்லாலே லேலோ

கேட்டு புளிச்ச தத்துவம்தான் தந்தானே தானா
கேட்டுபுட்டா வாழ்க்கை இனிக்கும் தில்லாலே லேலோ

பொங்கலோ பொங்கல்

நண்பர்கள் அனைவருக்கும் மனம்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மார்கழி முடிந்து பிறந்தது தை
மனதில் நாளும் நம்பிக்கை வை

புதிதாய் வாங்கிய பானை இங்கு
அதை சுற்றி கட்டிய மஞ்சள் கிழங்கு

சந்தையில் வாங்கிய அடிக்கரும்பு
அதனுடன் வாங்கிய பூவும் அரும்பு

மாவால் போடப்பட்ட நெளிக்கோலம்
அது காட்டியது கன்னியர்களின் கைஜாலம்

உமி களைந்து எடுத்த சம்பா அரிசி
அது நீரோடு நீராக ஒட்டி உரசி

அதனுடன் உடைத்து சேர்த்தது வெல்லம்
அதை பதமாய் சமைத்தது இல்லம்

மேக கூட்டம் களைந்து, வானத்தை பிளந்து
சூரிய கதிர்கள் பிரகாசம் காட்ட

அனைவரும் உரக்க கூவினோம் - பொங்கலோ பொங்கல்

சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியை அடைய
நம் பூவுலகின் இருள் விலகியது.
அதுபோல் நம் வாழ்வின் இருள் விலக
இறைவனை வேண்டுவோம்

மல்லிகை

இந்த பூவுலகில் பூக்கள் பல இருந்தும், மல்லிகைக்கு தான் தனி சிறப்பு.

நம் திரைப்பாடல்களை எடுத்துக்கொண்டால், கவிஞர்கள் மலர்களைப் பற்றி நிறைய பாடல்கள் எழுதி இருப்பார்கள். அதில், மற்ற மலர்களை விட மல்லிகையின் சிறப்பே மேலோங்கி நிற்கும். உதாரணமாக :

மல்லிகை முல்லை பூப்பந்தல் - அன்பே ஆருயிரே
மல்லிகை என் மன்னன் மயங்கும் - தீர்க்க சுமங்கலி
மல்லிகை முல்லை பொன்மொழி கிள்ளை - அண்ணன் ஒரு கோவில்
மல்லிகையே மல்லிகையே - நினைத்தேன் வந்தாய்
மல்லிகைப்பூவே மல்லிகைபூவே - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
மல்லி மல்லி இது ஜாதி மல்லி

கவிஞர் கண்ணதாசன் கூட காலங்களில் அவள் வசந்தம் பாடலில், மலர்களிலே அவள் மல்லிகை என்று எழுதி இருப்பார்.

பின்னாளில், கவிஞர் வைரமுத்து கூட மண்வாசனை படப்பாடலில் - பொத்தி வச்ச மல்லிகை மொட்டு என்று எழுதி இருப்பார்.

இன்னொன்றும் இங்கே சொல்ல வேண்டும். மல்லிகையை வைத்து எழுதப்பட்ட பாடல்கள் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

நீங்களும், உங்களுக்கு தெரிந்த மல்லிகை பாடல்கள் இருந்தால், பின்னூட்டத்தில் குறிப்பிடலாமே !!!

அன்றும் இன்றும்

அமைதியை தேடி காடு, காடாக போனார்கள் - அன்று
வளமையை தேடி நாடு, நாடாக போகிறோம் - இன்று

வேண்டிய பொருள்கள் முழு வீட்டை அடைக்க
வருவோர் போவோர் எல்லாம் தின்று தீர்க்க
அணையாமல் எரிந்தது, அனைத்து வீட்டு அடுப்பும் - அன்று

பொருள்கள் ஏதுமின்றி, வீடே வெறிச்சென்றிருக்க
வருவோர் போவோர் என யாருமே இல்லாதிருக்க
அடுப்பே எரிய வில்லை பல வாரமாய் - இன்று

கிடைத்ததில் மிஞ்சியது தானமாக - அன்று
ஏதாவது கிடைக்குமா தானமாக - ஏக்கத்தில் இன்று

நியாயமான வியாபாரத்தில் வாணிபம் செழித்தது - அன்று
கலப்பட வியாபாரத்தில் கள்ளத்தனம் சிரித்தது - இன்று

எடைக்கு மேலே சேர்த்து கொடுத்தார்கள் - அன்று
எடையே சிறிதளவு தான் கொடுக்கிறார்கள் - இன்று

மனதில் உண்மையுடன் வியாபாரம் - அன்று
மனம் முழுதும் பொய்மையுடன் வியாபாரிகள் - இன்று

வேண்டிய மழை தேவை மட்டும் - அன்று
வேண்டி கேட்டும் துளி மழை இல்லை - இன்று

கிடைத்ததைக்கொண்டு மகிழ்ச்சியில் குடும்பம் - அன்று
எவ்வளவு கிடைத்தும், குறை சொல்லும் குடும்பம் - இன்று

வேலை முடிந்து, களைத்து, சிறிது நேர கேளிக்கை - அன்று
வேலை ஏதுமின்றி, கேளிக்கையே வாழ்க்கையாய் - இன்று

நம் இன்றைய தேவை கடின உழைப்பு - இதை
நம் மனதில் நிறுத்தினால் நாளும் சிறப்பு

எப்போதும் நம் தேவை பெற்றோரின் ஆசி
இப்போது கிடைத்தால், நீதான் சுகவாசி

சிவப்பாய் ஒரு வெள்ளை தேவதை - கதை - பாகம் 3

நகரின் முக்கிய சாலையில் உயர்ந்த ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தின் உள்ளே அமைதியாய் இருந்தது அந்த உணவகம். பசிக்கு என்று வருபவர்கள் ஒருவருமே இல்லை. உலகில் உள்ள அத்தனை காரணத்துக்காகவும் அங்கே வருவார்கள் பசியை தவிர.
நண்பனாய் நண்பனை சந்திக்கும் பொருட்டே கலையும் அங்கே ஆஜர்.
இலக்கில்லாத எந்திரத்தனமான பார்வையில் நேரங்களை எண்ணிக்கொண்டு கொட்டாவி விட்டு உடம்பை முறித்து கொண்டான். நீட்டிய கையில் சட்டேன்ன ஒரு பூபந்து.

ஒ ! பின் இருக்கையில் உள்ள ஒரு பெண்ணின் தலை அது. அவசர அவசரமாய் தன்னை சரி செய்து கொண்டு மனிப்பு கேட்டான். திரும்பிய அந்த முகம் ஒரு பெண்ணினுடையது.

பெண் என்று சொல்வதை விட தேவதை என்று சொல்லலாம். கொள்ளை அழகு. பால் போன்ற நிறம். சென்னை வெயிலுக்கு பஞ்சாபி கூட கருத்து விடுவார், ஆனால் இவள் இத்தனை வெளுப்பா. மஞ்சள் சிகப்பு கலந்த ஒரு கோதுமை நிறம். செதுக்கி வைத்த சிலை போலே மூக்கும் முக அமைப்பும் ,

கலை தன்னை மறந்தான், கவிஞன் ஆனான். மனம் துள்ளி குதித்தது.,

ஸ்பரிசித்த அந்த கணம் மறுபடி மறுபடி மனதில் வந்தது
ஒரு நொடியில் பார்த்த அந்த முகம், மனதை விட்டு நகர மறுத்தது . சற்று நேரம் முன்பு தோன்றிய சோம்பல் சுத்தமாய் இப்போது இல்லை. மேசை மேல் உள்ள தண்ணீர் கூஜா அவள் பிம்பத்தை காண்பித்தது. மதி மயங்கி அதை பார்த்தான். இத்தனை வனப்பா.

நண்பன் வருவது தெரிந்தது, கண்ணன் .

கண்ணனா இது. என் இப்படி கலைந்து கிடக்கிறான். அமரச் செய்து விட்டு ஆழமாய் பார்த்தான். "என்னாச்சுடா!! ஏன் இப்படி இருக்க" ஆதங்கத்தோடு கேட்டான்

சரிந்திருந்த தோள்களில் லேசாய் ஒரு குலுக்கம். அழுகிரான ..."ஹே என்ன ஆச்சு " : "எல்லாமே ஆச்சு, இனி ஒன்னும் பாக்கி இல்லே" பதில் கேட்டு குழம்பினான் கலை. எப்படியும் அவனுக்கு உதவணும் மனதினுள் தீர்மானித்தான்.

"சரி விடு என்ன சாப்பிடுரே"
அடுத்த சில நிமிடங்கள் அமைதியாய் நகர்ந்தன.

"கண்ணா கவலைபடாதே ... நான் இருக்கேன், சொல்லு என்ன உன் பிரச்சினை"
அமைதியான கண்ணன் தீர்க்கமாய் சொன்ன பதிலில் அதிர்ந்தான் கலை.

"நான் ஒரு கொலை செய்ய போறேன் "


தொடரும் .....

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்

ஒரு மாபெரும் நடிகர். நடிப்பு சகாப்தம். நடிப்பில் உள்ள அனைத்து பரிமாணங்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய பிறவி கலைஞன். நடிப்பின் அனைத்து சிகரங்களையும் அனாயாசமாக தொட்டவர். நடிகர் திலகம், நடிப்பு செம்மல், சிம்ம குரலோன் போன்ற பல பட்டப்பெயர்களில் அறியப்பட்டவர். தமிழை விடுத்து, வேறு எந்த மொழிகளிலும் அதிகம் நடித்திராததால், இந்தியாவின் பிற பகுதி மக்களால் அதிகம் அறியப்படாதவர்.

வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், அப்பர் போன்றோர் இப்படி தான் இருந்திருப்பார்கள் என்று சொல்லக்கூடிய / மறுதலித்து பேசாத அளவுக்கு அந்த கதாபாத்திரங்களை வெள்ளித்திரையில் வாழ்ந்து காட்டியவர்.

அவர் நடத்த பாசமலர் என்கிற படம், அண்ணன் தங்கை உறவுக்கு ஒரு சான்றாக இன்றும் இருந்து வருகிறது. அவர் நடிக்கும் படங்களில், தன் நடிப்பாற்றலால், திரை அரங்கில் படம் பார்க்கும் அனைவரையும், திரையின் உள்ளே அழைத்து சென்று படத்தை நேரிலேயே பார்ப்பது போன்ற ஒரு நிலையை உண்டாக்கும் அளவு ஆற்றல் படைத்தவர்.

அவரின் நடிப்புக்கு சாட்சி சொல்ல எத்தனை எத்தனை படங்கள் :

தங்கபதக்கம்
வீரபாண்டிய கட்டபொம்மன்
கெளரவம்
கர்ணன்
பாசமலர்
கப்பலோட்டிய தமிழன்
பலே பாண்டியா
பழனி
உத்தம புத்திரன்
வியட்நாம் வீடு
தெய்வ மகன்
உயர்ந்த மனிதன்
எங்கிருந்தோ வந்தாள்
பாக பிரிவினை
அனைத்து பா வரிசை படங்கள் ............ போன்ற படங்கள் அவற்றில் சில ..... இந்த எண்ணிக்கையை சொல்லி அடங்காது ...... எண்ணி குறையாது .... எழுதி மாளாது .....அதிலும் தெய்வ மகன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பின் உச்சத்தை தொட்டிருப்பார். அதனால் தான் நம் இந்திய அரசாங்கம் அவருக்கு சிறந்த நடிகருக்கான மத்திய அரசு விருதை தராமல், காவல்காரனுக்கு வழங்கியது ........ சிறந்த நடிகருக்கான விருது பெரும் முழு தகுதி இருந்தும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அந்த விருதை கடைசி வரை தராமல் இருந்ததற்கான காரணம் எனக்கு இன்று வரை புரியவில்லை. அதே சமயம், தெய்வ மகன் படத்தில் மூன்று வீதத்தில் வேடங்களில் தூள் கிளப்பியதற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆசிய-ஆப்பிரிக்க விருது வழங்கப்பட்டது.

இந்தியாவின் சிறந்த நடிகர் விருது நம்மால் தர முடியவில்லை. ஆனால் ஆசிய-ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது வாங்கி விட்டார். இதை என்னவென்று சொல்வது ??

முன்னாளில் இது போன்ற சவாலான, நடிப்புக்கு மட்டும் முக்கியம் கொடுக்கும் வேடங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் திலகம் அவர்கள், பின்னாளில், கதைக்கும், உருவத்திற்கும், உடைகளுக்கும் முக்கியம் எதுவும் கொடுக்கவில்லை என்பது வருந்தத்தக்கது (ஒரு இருநூறு படங்கள் கழிந்த நிலையில்). வருடத்திற்கு எட்டு, பத்து படங்களில் நடித்தது எந்த வித சாதனைகளையும் நிகழ்த்தவில்லை. இதுபோன்ற படங்கள் அவரின் பட எண்ணிக்கையும், வருமானத்தையும் பெருக்கியதே தவிர அவரின் நடிப்புக்கு எந்த தீனியும் போட வில்லை என்பதுதான் ஒரு கசப்பான உண்மை.

உதாரணமாக, அவர் கடைசி பத்து, பன்னிரண்டு வருடங்கள் நடித்த படங்களை பார்த்தால், ஸ்ரீப்ரியாவுடன் நிறைய படங்கள் நடித்து உள்ளார். அதன் ரகசியம் தெரிந்தவர்கள் கூறலாம். நடிகர் திலகத்தின் பிற்கால படங்கள் சில :

லாரி டிரைவர் ராஜாக்கண்ணு (இதில் ஸ்ரீப்ரியா ஜோடி என்று நினைக்கிறேன். ஒரு காட்சியில் இவரும், மேஜரும் தங்களை துரத்தி வரும் வில்லன்களிடம் இருந்து தப்பிக்க பெண் போல் வேடமணிந்து, மாவு ஆட்டும் காட்சியை காண கண் கோடி வேண்டும் ....... நம்பியாரும் தன் பங்குக்கு பெரிய இம்சை பண்ணுவார். ஒரு காட்சியில், மாடியில் அவர் இறங்கி வருவது போன்று இருக்கும். ஆனால் அவர் நடக்க மாட்டார், தவழ்ந்து வருவார். பெரிய கொடுமை சரவணன் சார் இது).

பட்டாகத்தி பைரவன்
மாடி வீட்டு ஏழை - (ஒரு காட்சியில் அனைவருக்கும் சவால் விடும் விதமாக மான்கொம்பு சுததுவார், தியேட்டரில் அனைவரும் கதறிய சத்தம் கேட்டது எனக்கு இன்றும் நினைவில் உள்ளது).
சங்கிலி
தர்மராஜா - மிக பெரும் கொடுமையாக, உலக புகழ் பெற்ற ஜப்பான் நாட்டு கராத்தே சாம்பியன் யாமகுச்சியை அடித்து வீழ்த்தி விட்டு உலக சாம்பியன் ஆவது போன்று கதை வரும் என்று நினைக்கிறேன். வழக்கம் போல கே.ஆர்.விஜயா ஜோடி (முடியல..... விட்டுடுங்க..... யப்பா ...... இப்போவே கண்ண கட்டுதே).
சந்திப்பு - இதில் ஒரு மாறுதலாக ஸ்ரீதேவியுடன் ஜோடி கட்டி இருப்பார் (சின்ன சிவாஜி). பெரிய சிவாஜி இருக்காரோ என்னவோ நினைவில்லை. அப்படி இருந்திருந்தால் அவருக்கு கண்டிப்பாக கே.ஆர்.விஜயாதான் ஜோடியாக இருந்திருக்க முடியும்.
எமனுக்கு எமன் - ஐயோ ஐயோ, பெரிய கொடுமை சார்.... (ஸ்ரீப்ரியாவுடன் மழை பொழிந்தது காட்டிலே அய் ராமா அய் ராமா என்று ஒரு ஆபாச கூத்து பாட்டு பாடி ஆடுவார் !!!???).
தியாகி - இதுவும் ஒரு கொடுமை படம் சார்
வெற்றிக்கு ஒருவன் - கண்டிப்பாக ஒரு வெற்றி படமாக இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஹிட்லர் உமாநாத் - ஹிட்லரை நேரில் பார்ப்பது போலவே இருக்கும் (சொம்மா டமாசு சார்). செம சொறி ....
விஸ்வரூபம் - இதிலும் ஸ்ரீப்ரியாவுடன் தல ஜோடி கட்டி இருப்பார்னு நெனக்கறேன்.
அமரகாவியம். இந்த படம் ஒரு டகால்டியாக தான் இருந்திருக்கணும். (முன்பு ஒரு அமரகாவியம் வந்தது, அது சூப்பர் படம், ஸ்ரீதர் டைரக்ஷன் என்று நினைக்கிறேன்).
ஊருக்கு ஒரு பிள்ளை
என்னை போல் ஒருவன்

ஆனாலும் கடைசியாக அவர் பாந்தமாக நடித்த படிக்காதவன், தேவர் மகன், படையப்பா, முதல் மரியாதை போன்ற படங்கள் பழைய சிவாஜியை நமக்கு நினைவு படுத்தியதை மறுப்பதற்கில்லை / மறைப்பதற்கில்லை.

எது எப்படியோ, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்கிற மாபெரும் நடிப்பு சரித்திரத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அவரின் சாயல் இல்லாமல், இன்றுவரை ஒருவர் கூட நடித்ததில்லை (இந்த நேரத்தில் யாரும் கரடி ராஜேந்தரையும், அவரின் நடிப்பு திறனையும் பற்றி நினைத்தால், நிர்வாகம் பொறுப்பல்ல).

நானும் இங்கே நடிகர் திலகம், சிம்மக்குரலோன் சிவாஜி என்கிற நடிப்பு கடலின் ஒரு சிறு துளியைத்தான் ஆராய்ந்து இருக்கிறேன்.

இதை படிக்கும் நீங்களும், அன்னாரை பற்றி ஏதாவது சுவாரசியமான தகவல்கள் அறிந்தால் பின்னூட்டத்தில் தெரியபடுத்தலாம்.

சிவப்பாய் ஒரு வெள்ளை தேவதை - கதை - பாகம் இரண்டு

பாண்ட் பாக்கெட்டில் கை விட்டு, உள்ளே துருத்திக்கொண்டு இருந்ததை தேடி வெளியே எடுத்தான். பளபளவென மின்னிய அதை ஆசையோடு தடவி கொடுத்தான். அது, அவன் புதியதாக வாங்கி இருக்கும் இரு சக்கர வண்டியின் சாவி. கலைந்த தலைமுடியை ஒரு கையால் தள்ளியவாறு, வீட்டின் வெளியே வந்து தன் இரு சக்கர வாகனத்தை எடுத்து, மெயின் ரோட்டை பிடித்து, எந்த ஒரு சுவாரசியமும் இன்றி, இலக்கின்றி செலுத்தினான். எங்கே போகிறோம், எதற்காக போகிறோம், வண்டியில் பெட்ரோல் உள்ளதா இல்லையா என்று எதைப்பற்றியும் யோசிக்காமல் வண்டி போய் கொண்டே இருந்தது.

அப்போது .........

பக்கவாட்டின் குறுக்கு சந்தில் இருந்து அசுர வேகத்தில் வந்த லாரியின் க்ரீச் என்று கத்திய (கதறிய) பிரேக் ஓசை தான், அவன் வண்டியையும் பிரேக் போட வைத்தது. ஒரு நிமிடம் ஆடித்தான் போய் விட்டான். இது என்ன ??? உயிர் பயமோ?? என்னடா வாழ்க்கை ?? முழுக்கை சட்டை முழக்க நனைந்து அவனின் பரிதாபமான தோற்றத்தை மேலும் பரிதாபமாக்கியது.

சாலையில் போவோர் வருவோர், வருவோர் போவோர் எல்லோரும் ஆளாளுக்கு அட்வைஸ் மழை பொழிய ஆரம்பிக்க, அவன் எதையுமே காதில் வாங்காமல், வண்டியை நகர்த்தி, மறுபடியும் தன் பயணத்தை தொடர்ந்தான். கூடி இருந்தவர்கள், என்ன இவன், இன்னும் கொஞ்சம் இருந்தா உயிரே போய் இருக்கும், இப்படி கொஞ்சம் கவலைப்படாம போறானே என்று கூறியது, அவன் காதில், காற்றை கிழித்து கொண்டு விழுந்தது.......

ஏன் இவ்ளோ கொழப்பமா இருக்கோம் .... இதுக்கு முன்னாடி, இப்படி இருந்ததே இல்லையே ........ ஏன் இப்போ மட்டும் இப்படி ??? கொஞ்சம் யோசித்து பார்த்ததில், ஒரு மாசத்துக்கு முன்னாடி நடந்த அந்த நிகழ்ச்சி ஞாபகம் வந்தது .......

ச்சே, அந்த நிகழ்ச்சி மட்டும் அன்னிக்கி நடக்காம இருந்திருந்தா, என் வாழ்க்கை கூட மத்தவங்கள போல சாதாரணமா இருந்திருக்கும். ... அன்னிக்கே யோசிச்சு இருக்கணும் .... இப்போ எல்லாம் கை மீறி போச்சு .........

அப்படி அவனோட வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த நிகழ்ச்சி எப்போது, எப்படி நடந்தது என்று யோசித்தான். நன்கு மூச்சை இழுத்து விட்டு சுவாசித்தான். மூச்சை இழுத்து சுவாசித்ததில், புத்தி கூர்மை அடைய, ஐம்புலன்களும் விழித்தது போன்று உணர்ந்தான். ஒ, அன்னிக்கி மட்டும் அந்த நண்பனை பார்க்க, அந்த காபி ஷாப்புக்கு போனது ஞாபகம் வந்தது ..........

அன்று .... அங்கே .......
(தொடரும்)

தமிழ் அனக்ரம்

சி வா ஜி
வா யி லே
ஜி லே பி

க ர டி
ர யி ல்
டி ல் லி

வி பூ தி
பூ ணூ ல்
தி ல் லை

அனக்ரம் - அப்படின்னா என்ன என்பவர்களுக்கு

நேர நின்னு படிச்சாலும் பேனப்புடிச்சு தொங்கிகிட்டு படிச்சாலும், அதே வார்த்தைகள்தான் .

சிவப்பாய் ஒரு வெள்ளை தேவதை - கதை

ஒரு புதுமையான முயற்சி இதோ
வாசகர்களுக்கு ஒரு புத்தாண்டு பரிசு.
எடக்கு மடக்கி ஒரு தொடர்கதை. எழுதுபவர் இருவர்.
ஒருவர் ஒரு பதிவு, மற்றவர் அதற்கு எதிர் பதிவு.
…ம்ம்ம் பின்னென்ன சுவரசியம்தனே

இதோ முதல் பகுதி


முதல் பகுதி 1. அதுவா ... இதுவா

கலை தன் தலையிலே கவிழ்த்து கொண்டான். ஹெல்மெட்டை.
விலை பட்டை பியிக்காத சட்டை அணிந்து கொண்டான், இன்று புத்தாண்டு. எப்படியும் இன்று முடித்து விட வேண்டியதுதான். எத்தனை நாள் பொறுப்பது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லாவா. சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. மெதுவாய் எடுத்து கால் சட்டைக்குள் பத்திரப் படுத்தினான். அது ஒரு ....

.... தொடரும்

புத்தாண்டு 2009

புத்தாண்டாம் இனிய புத்தாண்டு
கொண்டாட்டமாய் பிறந்த புத்தாண்டு
அதை மகிழ்வுடன் வரவேற்போம் - நாமின்று
போனது போகட்டும் போனபடி
நாம் நினைப்பது நடக்கட்டும் நல்லபடி

நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்
கொடு என கேட்டால், தாய் பூமியோ வாரி கொடுக்கும்
நினைப்போம் நாமும் நல்லதே எந்நாளும்

கடந்தகால சோதனைகளை துடைத்துவிட்டு
சூழ்ந்துள்ள வேதனைகளை தொலைத்துவிட்டு
புத்தாண்டில் பதிப்போம் சாதனை கல்வெட்டு

ஐந்தறிவு கொண்டவைகள் ஆச்சரியமாய் இணைந்திருக்க
ஆறறிவு கொண்ட நாம் எப்போதும் பிரிந்திருக்க
மதமும், ஜாதியும் துரத்தி அடிக்கும் தூரத்தில்
துரத்த முயற்சிப்போம், நாம் இந்த நேரத்தில்

படைத்தவனின் அருளின்றி நாமெல்லாம் இங்கேது
இதை நாம் புரிந்து கொண்டால் கவலைகள் நமக்கேது

மரம் வளர்ப்போம், நல்ல செடி வளர்ப்போம்
சுற்று சூழல் பாதுகாத்து, மழை வேண்டுவோம்
மனிதம் வளர்ப்போம், மனித நேயம் வளர்ப்போம்
மனிதகுலம் காக்க, படைத்தவனின் பாதம் பணிவோம்
மரணம் வெல்வோம், மனிதனாய் வாழ்வோம்

நல்ல எண்ணங்களை மனதில் நாளும் விதைப்போம் - ஏனெனில்
விதைப்பது நல்விதையானால், மலர்வதும் நன்றாகும்
மலர்வது நன்றானால், நறுமணமும் உண்டாகும்
நறுமணத்தின் சுகந்தத்தை நம் மனமும் கொண்டாடும்

ஆயுதங்களை புறக்கணிப்போம் - நம்மை
அஹிம்சைக்கு அர்ப்பணிப்போம்
தீயவைகள் கண்டறிந்து ஒதுக்கி வைப்போம்
நல்லவற்றின் தடம் அறிந்து செதுக்கி வைப்போம்

கடின உழைப்பிற்கு இல்லை ஈடு இணை
இதை என்றும், எப்போதும் நீயும் நினை
நம்மை வெற்றிகள் அணுக, இல்லை ஏதும் அணை

தானத்தில் உள்ளதோ பலதானம்
அவற்றில் சில - அன்னதானம், கண்தானம், வித்யாதானம்
ஆயினும் - உலகின் தேவை இக்கணம் - சமாதானம்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்