நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்

ஒரு மாபெரும் நடிகர். நடிப்பு சகாப்தம். நடிப்பில் உள்ள அனைத்து பரிமாணங்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய பிறவி கலைஞன். நடிப்பின் அனைத்து சிகரங்களையும் அனாயாசமாக தொட்டவர். நடிகர் திலகம், நடிப்பு செம்மல், சிம்ம குரலோன் போன்ற பல பட்டப்பெயர்களில் அறியப்பட்டவர். தமிழை விடுத்து, வேறு எந்த மொழிகளிலும் அதிகம் நடித்திராததால், இந்தியாவின் பிற பகுதி மக்களால் அதிகம் அறியப்படாதவர்.

வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், அப்பர் போன்றோர் இப்படி தான் இருந்திருப்பார்கள் என்று சொல்லக்கூடிய / மறுதலித்து பேசாத அளவுக்கு அந்த கதாபாத்திரங்களை வெள்ளித்திரையில் வாழ்ந்து காட்டியவர்.

அவர் நடத்த பாசமலர் என்கிற படம், அண்ணன் தங்கை உறவுக்கு ஒரு சான்றாக இன்றும் இருந்து வருகிறது. அவர் நடிக்கும் படங்களில், தன் நடிப்பாற்றலால், திரை அரங்கில் படம் பார்க்கும் அனைவரையும், திரையின் உள்ளே அழைத்து சென்று படத்தை நேரிலேயே பார்ப்பது போன்ற ஒரு நிலையை உண்டாக்கும் அளவு ஆற்றல் படைத்தவர்.

அவரின் நடிப்புக்கு சாட்சி சொல்ல எத்தனை எத்தனை படங்கள் :

தங்கபதக்கம்
வீரபாண்டிய கட்டபொம்மன்
கெளரவம்
கர்ணன்
பாசமலர்
கப்பலோட்டிய தமிழன்
பலே பாண்டியா
பழனி
உத்தம புத்திரன்
வியட்நாம் வீடு
தெய்வ மகன்
உயர்ந்த மனிதன்
எங்கிருந்தோ வந்தாள்
பாக பிரிவினை
அனைத்து பா வரிசை படங்கள் ............ போன்ற படங்கள் அவற்றில் சில ..... இந்த எண்ணிக்கையை சொல்லி அடங்காது ...... எண்ணி குறையாது .... எழுதி மாளாது .....அதிலும் தெய்வ மகன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பின் உச்சத்தை தொட்டிருப்பார். அதனால் தான் நம் இந்திய அரசாங்கம் அவருக்கு சிறந்த நடிகருக்கான மத்திய அரசு விருதை தராமல், காவல்காரனுக்கு வழங்கியது ........ சிறந்த நடிகருக்கான விருது பெரும் முழு தகுதி இருந்தும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அந்த விருதை கடைசி வரை தராமல் இருந்ததற்கான காரணம் எனக்கு இன்று வரை புரியவில்லை. அதே சமயம், தெய்வ மகன் படத்தில் மூன்று வீதத்தில் வேடங்களில் தூள் கிளப்பியதற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆசிய-ஆப்பிரிக்க விருது வழங்கப்பட்டது.

இந்தியாவின் சிறந்த நடிகர் விருது நம்மால் தர முடியவில்லை. ஆனால் ஆசிய-ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது வாங்கி விட்டார். இதை என்னவென்று சொல்வது ??

முன்னாளில் இது போன்ற சவாலான, நடிப்புக்கு மட்டும் முக்கியம் கொடுக்கும் வேடங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் திலகம் அவர்கள், பின்னாளில், கதைக்கும், உருவத்திற்கும், உடைகளுக்கும் முக்கியம் எதுவும் கொடுக்கவில்லை என்பது வருந்தத்தக்கது (ஒரு இருநூறு படங்கள் கழிந்த நிலையில்). வருடத்திற்கு எட்டு, பத்து படங்களில் நடித்தது எந்த வித சாதனைகளையும் நிகழ்த்தவில்லை. இதுபோன்ற படங்கள் அவரின் பட எண்ணிக்கையும், வருமானத்தையும் பெருக்கியதே தவிர அவரின் நடிப்புக்கு எந்த தீனியும் போட வில்லை என்பதுதான் ஒரு கசப்பான உண்மை.

உதாரணமாக, அவர் கடைசி பத்து, பன்னிரண்டு வருடங்கள் நடித்த படங்களை பார்த்தால், ஸ்ரீப்ரியாவுடன் நிறைய படங்கள் நடித்து உள்ளார். அதன் ரகசியம் தெரிந்தவர்கள் கூறலாம். நடிகர் திலகத்தின் பிற்கால படங்கள் சில :

லாரி டிரைவர் ராஜாக்கண்ணு (இதில் ஸ்ரீப்ரியா ஜோடி என்று நினைக்கிறேன். ஒரு காட்சியில் இவரும், மேஜரும் தங்களை துரத்தி வரும் வில்லன்களிடம் இருந்து தப்பிக்க பெண் போல் வேடமணிந்து, மாவு ஆட்டும் காட்சியை காண கண் கோடி வேண்டும் ....... நம்பியாரும் தன் பங்குக்கு பெரிய இம்சை பண்ணுவார். ஒரு காட்சியில், மாடியில் அவர் இறங்கி வருவது போன்று இருக்கும். ஆனால் அவர் நடக்க மாட்டார், தவழ்ந்து வருவார். பெரிய கொடுமை சரவணன் சார் இது).

பட்டாகத்தி பைரவன்
மாடி வீட்டு ஏழை - (ஒரு காட்சியில் அனைவருக்கும் சவால் விடும் விதமாக மான்கொம்பு சுததுவார், தியேட்டரில் அனைவரும் கதறிய சத்தம் கேட்டது எனக்கு இன்றும் நினைவில் உள்ளது).
சங்கிலி
தர்மராஜா - மிக பெரும் கொடுமையாக, உலக புகழ் பெற்ற ஜப்பான் நாட்டு கராத்தே சாம்பியன் யாமகுச்சியை அடித்து வீழ்த்தி விட்டு உலக சாம்பியன் ஆவது போன்று கதை வரும் என்று நினைக்கிறேன். வழக்கம் போல கே.ஆர்.விஜயா ஜோடி (முடியல..... விட்டுடுங்க..... யப்பா ...... இப்போவே கண்ண கட்டுதே).
சந்திப்பு - இதில் ஒரு மாறுதலாக ஸ்ரீதேவியுடன் ஜோடி கட்டி இருப்பார் (சின்ன சிவாஜி). பெரிய சிவாஜி இருக்காரோ என்னவோ நினைவில்லை. அப்படி இருந்திருந்தால் அவருக்கு கண்டிப்பாக கே.ஆர்.விஜயாதான் ஜோடியாக இருந்திருக்க முடியும்.
எமனுக்கு எமன் - ஐயோ ஐயோ, பெரிய கொடுமை சார்.... (ஸ்ரீப்ரியாவுடன் மழை பொழிந்தது காட்டிலே அய் ராமா அய் ராமா என்று ஒரு ஆபாச கூத்து பாட்டு பாடி ஆடுவார் !!!???).
தியாகி - இதுவும் ஒரு கொடுமை படம் சார்
வெற்றிக்கு ஒருவன் - கண்டிப்பாக ஒரு வெற்றி படமாக இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஹிட்லர் உமாநாத் - ஹிட்லரை நேரில் பார்ப்பது போலவே இருக்கும் (சொம்மா டமாசு சார்). செம சொறி ....
விஸ்வரூபம் - இதிலும் ஸ்ரீப்ரியாவுடன் தல ஜோடி கட்டி இருப்பார்னு நெனக்கறேன்.
அமரகாவியம். இந்த படம் ஒரு டகால்டியாக தான் இருந்திருக்கணும். (முன்பு ஒரு அமரகாவியம் வந்தது, அது சூப்பர் படம், ஸ்ரீதர் டைரக்ஷன் என்று நினைக்கிறேன்).
ஊருக்கு ஒரு பிள்ளை
என்னை போல் ஒருவன்

ஆனாலும் கடைசியாக அவர் பாந்தமாக நடித்த படிக்காதவன், தேவர் மகன், படையப்பா, முதல் மரியாதை போன்ற படங்கள் பழைய சிவாஜியை நமக்கு நினைவு படுத்தியதை மறுப்பதற்கில்லை / மறைப்பதற்கில்லை.

எது எப்படியோ, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்கிற மாபெரும் நடிப்பு சரித்திரத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அவரின் சாயல் இல்லாமல், இன்றுவரை ஒருவர் கூட நடித்ததில்லை (இந்த நேரத்தில் யாரும் கரடி ராஜேந்தரையும், அவரின் நடிப்பு திறனையும் பற்றி நினைத்தால், நிர்வாகம் பொறுப்பல்ல).

நானும் இங்கே நடிகர் திலகம், சிம்மக்குரலோன் சிவாஜி என்கிற நடிப்பு கடலின் ஒரு சிறு துளியைத்தான் ஆராய்ந்து இருக்கிறேன்.

இதை படிக்கும் நீங்களும், அன்னாரை பற்றி ஏதாவது சுவாரசியமான தகவல்கள் அறிந்தால் பின்னூட்டத்தில் தெரியபடுத்தலாம்.

1 comment:

Anonymous said...

aha...excellent post. Sir, u have capsulated a 50 year history in a post. it was great to recollect all the names and cherish on it.

keep writing more

with regards

Raja
dubai