சிம்பன்ஸி சின்னா (இது விஞ்ஞான சிறுகதை அல்ல)


ப்ரொபஸ்ஸர் மித்ரா, தன் நீண்ட நாள் ஆராய்ச்சியான சிம்பன்சியை மனிதனாக மாற்றும் ஆராய்ச்சியின் பலன் தெரிய ஆரம்பித்ததை சந்தோஷத்துடன் உதவி ஆராய்ச்சியாளரினி (ஆராய்ச்சியாளரின் பெண்பால்) ஸ்வேதாவுடன் பகிர்ந்து கொள்ள இண்டர்காமில் அழைத்தார்.

குட் மார்னிங் ஸ்வேதா, சீக்கிரம் என் அறைக்கு வா. உனக்கு ஒரு சஸ்பென்ஸ் வைத்து உள்ளேன், கூடவே சந்தோஷமான செய்தியும்.

குட் மார்னிங் ப்ரொபஸ்ஸர் மித்ரா, நீங்கள் இவ்வளவு சந்தோஷமாக இருப்பதை பார்த்து எவ்வளவு நாள் ஆகிறது. இதோ வருகிறேன் ப்ரொபஸ்ஸர் என்று இண்டர்காமை துண்டித்து விட்டு அவரின் அறையை நோக்கி விரைந்தாள் ஸ்வேதா.

ப்ரொபஸ்ஸர் மித்ரா மிகுந்த சந்தோஷத்துடன் ஸ்வேதாவை எதிர்கொண்டு, அவளை தன் பிரத்தியேக ஆராய்ச்சி கூடத்திற்கு அழைத்து சென்றார்.
ஸ்வேதா, நீ இவ்வளவு நாள் என்னுடன் இருந்தபோதும், இன்றுதான் உன்னை என் பிரத்தியேக ஆராய்ச்சி கூடத்துள் அழைத்து செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே வந்து பார், என் ஆராய்ச்சியின் அதிசயத்தை. பேசிக்கொண்டே இருவரும் ஆராய்ச்சி கூடத்துள் நுழைந்தனர்.
அங்கே .......
ஸ்வேதா கண்ட காட்சி அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது...... ஒரு உருவம் என்று சொல்லும்படியாக ஒன்று, பெரிய கண்ணாடி கூண்டினுள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. அதன் ஈ ஈ என்ற இளிப்பு, மிகுந்த பயத்தை அளிக்கும் வகையில் இருந்தது.
நசுங்கிய சப்பை மூக்கு. அகன்று பிளந்த பெரிய வாய். ப்ரொபஸ்ஸர் மித்ரா அணிவித்த சற்றே அழுக்கேறிய வெள்ளை சட்டை, பட்டன் போடாமல் திறந்து பிரிந்தும், தலையில் ஒரு கருநிற தொப்பியுடனும் காணப்பட்டது. சொல்லப்போனால் ஈ ஈ என்று இளித்தபோது, அவள் பெருங்குடல் வாய் வழியே வெளியே வந்துவிடுவது போன்று இருந்தது. ஸ்வேதா திகிலுடன் அதை நோக்கினாள்.
அது ........
தோலில் பலபல சுருக்கங்கள் நிறைந்து, மனித தோல் போலவே இல்லை. விகார இளிப்பில் வாய் அகன்று விரிந்தது. பற்கள் ஒழுங்கற்று நிறைய இடைவெளிகளுடன் இருந்தது. வாயின் கீழ்வரிசையில் பற்களே இல்லாதது போன்று இருந்தது. காதுகள் இருபுறமும் புடைத்து காணப்பட்டது. உடலில் முழுதுமாக தோல் தொங்கி கொண்டு இருந்தது.
அதிர்ச்சியில் ஸ்வேதா வீல் என்று அலறினாள். அது திடுக்கிட்டு அவளை நோக்கி திரும்பி பார்த்தது. தலையை இருபுறமும் வேகமாக ஆட்டியது.
ப்ரொபஸ்ஸர் மித்ரா பதட்டத்துடன் அவளை அணுகி, தலை தடவி ஆசுவாசப்படுத்தினார். ஸ்வேதா, என்னம்மா இது, நீயே இதை பார்த்து பயந்தால், நம் ஆராய்ச்சியை எப்படி தொடர்வது என்று கேட்டார்.
இதை பார்த்து கொஞ்சமும் பயப்பட வேண்டாம். இது இப்போதைக்கு முக்கால் மனிதனாக உருமாறியுள்ளது. நீயே பார், அதன், தடித்த உடலின் அனைத்து கருமுடியும் கொட்டிவிட்டது. தோல் கூட சிறிது சிறிதாக மனித தோலாக மாறிவருகிறது. இன்னும் ஓரிரு மாத ஆராய்ச்சி முடிவில் கண்டிப்பாக, முழு மனிதனாக மாறும் வாய்ப்பை பெறப்போகிறது. ரத்தத்தை விரும்பி சாப்பிடும் அந்த பழக்கம் கூட, மனிதனாக மாறும்போது அதைவிட்டு போய் விடும் என்றார்.
வரும் வாரத்தில், குரல் மாற்றத்திற்கான ஒரு மருந்தை கொடுக்க ஆரம்பிக்க போகிறேன். பின், ஒரு மாதத்திற்குள், அது மனிதர்களை போல், பேசும் சக்தியை அடைந்து விடும். தோலில் மாற்றம் ஏற்பட்டு, முழு மனிதனுக்குரிய அனைத்து தகுதிகளையும் பெற்று விடும். பின், அதனை "சின்னா" என்றழைக்கலாம் என்றார் ப்ரொபஸ்ஸர் மித்ரா.
நடுங்கும் குரலில் ஸ்வேதா ஏதோதோ உளறினாள். அந்த உருவத்தை பார்க்க பிடிக்காமல், மித்ராவின் பின்னல் போய் நின்று கொண்டாள். படபடத்த தன் நெஞ்சை தடவி கொண்டாள். அவளுக்கு வாந்தி வருவது போல் இருந்தது.
ப்ரொபஸ்ஸர் மித்ரா மெதுவாக அந்த கண்ணாடி கூண்டின் அருகே சென்று, வாயிலில் இருந்த அந்த பச்சை நிற பட்டனை அழுத்தினார். கூண்டு திறந்தது. உள்ளே சென்று அந்த சின்னாவின் தலையை வருடினார்.
ஏறக்குறைய மூன்றடி இருந்த அந்த சிம்பன்ஸி அவரை பார்த்ததும் ஒரு இளிப்பை வெளிப்படுத்தியது. பின், கிரீச் என்ற குரலில் அலறியது. அங்கும் இங்கும் குதித்தது. கண்ணாடியில் பிடிப்பு ஏதும் இல்லாததால், எங்கும் பற்றி கொண்டு தொங்க முடியவில்லை. முரட்டுத்தனம் காட்டியது.
ஒரே பாய்ச்சலில், தாவி ப்ரொபஸ்ஸர் மித்ராவின் தோளில் ஏறி அமர்ந்து கொண்டது. திடுக்கிட்ட மித்ரா, அதை கீழே தள்ளிவிட முயற்சி பண்ணினார். ஆனால், அது குரங்கு பிடியாக அவரை பிடித்துக்கொண்டு கீழே இறங்க மறுத்தது. உர்ர்ர் என்று வினோத சப்தம் எழுப்பியது. அதன் கை மித்ராவின் கழத்தை சுற்றி வளைத்தது. அதை, கீழே தள்ள முயற்சித்ததில் கோபம் கொண்டு, கழுத்தை பலமாக இறுக்கியது. கழுத்தை சுற்றி, கவ்வியது. மித்ரா, காதின் இருபுறங்களிலும் ரத்தம் வழிவதை உணர்ந்தார். அவஸ்தையாய் கீழே சரிந்தார்.
வெளியில் இருந்து இதை பார்த்த, ஸ்வேதா அவசர அவசரமாக கண்ணாடி கூண்டினுள் நுழைந்து, அதை இழுத்து பார்த்தாள். அதன் இரும்பு பிடி சிறிது கூட இலகுவதாக இல்லை. திடீரென என்ன நினைத்ததோ, பிடியை சற்று விலக்கி, கீழே குதித்து, கண்ணாடி கூண்டை விட்டு வெளியே வந்தது.
வந்த வேகத்தில் திரும்பி அந்த கண்ணாடி கூண்டை தன் கையால் அறைந்தது. பின், வாயிலில் இருந்த அந்த சிகப்பு நிற பட்டனை அழுத்தியதில், கூண்டு சாத்திக்கொண்டது. பச்சை பட்டனை அழுத்தியதில் திறந்து கொண்டது. மறுபடியும் அந்த சிகப்பு பட்டனை அழுத்திவிட்டதில் கூண்டின் கதவு சாத்திக்கொண்டது.
பின் அந்த ஆராய்ச்சி கூடத்தில் இருந்து வெளியே ஓடியது.
கழுத்தை இறுக்கி பிடித்ததில், மிகவும் தளர்ந்து போயிருந்த மித்ரா, சற்றே ஆசுவாசப்படுத்தி, பின் ஸ்வேதாவை நோக்கி கேட்டார். சின்னா எங்கே?? அது அப்போதே நம் இருவரையும் கீழே தள்ளிவிட்டு விட்டு ஓடி விட்டதே என்று ஸ்வேதா சொன்னாள்.
பரபரப்பான மித்ரா, ஸ்வேதாவிடம் உடனே, வாசல் கதவை மூட சொன்னார். அந்த உத்தரவு வாசலை சென்றடைவதற்குள், "சின்னா" வாசல் கதவை தாண்டி தெருவை அடைந்திருந்தது.
மித்ரா மிகுந்த கவலையுடன் சொன்னார். பாதி ஆராய்ச்சியில் இருக்கும்போது இப்படி வெளியே போய்விட்டதே. அதன், குணநலன்கள் கூட நமக்கு தெரியாதே. ஆகாரம், மருந்து எல்லாம் நாம்தானே கொடுப்போம். வெளியில் சென்ற சின்னா இனி என்ன சாப்பிடும், அதன் செயல்பாடு எப்படி இருக்கும்?
சோர்வுடன் வந்து, சோபாவில் அமர்ந்து அங்கிருந்த டி.வி.யை ஆன் செய்தார்.
அங்கே....
சிறப்பு செய்தி ஓடி கொண்டிருந்தது. ரோட்டில் தாவி தாவி குதித்து வந்த ஒரு பயங்கர உருவம் தெருவில் போவோர், வருவோர் அனைவரையும் கடித்து, காயப்படுத்தி உள்ளதாகவும். காயம் பட்டதில் பாதி பேரின் நிலைமை மிகவும் கவலைப்படும் விதமாக இருப்பதாகவும் தெரிவித்தது. கழுத்து, கை, கால், காது என்ற பல இடங்களில் கடி வாங்கியோரை ஆஸ்பத்திரியில் இருந்தே பேட்டி எடுத்து ஒளிபரப்பினார்கள்.
அனைவரும் முகம் வெளிறி, பயக்குரலில் சொன்னது என்னவெனில் ...........
அந்த மிருகம் மிக மிக பலம் வாய்ந்ததாகவும் நாலைந்து ஆட்கள் கூட அதை ஒரே சமயத்தில் சமாளிக்க முடியவில்லை என்றும், பிடிக்க போன அனைவரையும் கடித்து குதறியதாகவும், குறிப்பாக மனித ரத்தத்தை விரும்பி குடித்ததாகவும் சொன்னார்கள்.
மித்ரா மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து, விரைவான நடையில் தன் ஆராய்ச்சி கூடத்தை அடைந்து, அந்த பச்சை நிற திரவம் (சீரம்) அடங்கிய குப்பியை எடுத்து, ஸ்வேதாவின் கையில் கொடுத்தார்.

ஸ்வேதா, இந்த ஒரு பச்சைநிற சீரம்தான் சின்னாவை மறுபடியும் சிம்பன்சியாக மாற்றும். என் ஆராய்ச்சி வெல்ல முடியவில்லை என்றால்கூட பரவாயில்லை. ஆனால், சின்னாவிடம் இன்று சிக்கிய, மற்றும் சிக்கப்போகும் அனைத்து அப்பாவி மனிதர்களும் உயிர்பிழைக்க வேண்டும். நீ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று எல்லா விபரங்களையும் சொல்லி இந்த குப்பியை ஒப்படைத்துவிடு என்று சொல்லி மயங்கி விழுந்தார். அவர் உடல் நீல நிறத்திற்கு போனது.

ஸ்வேதா நடுங்கும் கைகளால் அந்த சீரம் அடங்கிய கண்ணாடி குப்பியை வாங்கினாள்.
ப்ரொபஸ்ஸர் மித்ராவின் காதின் கீழ்பாகத்தில் இருந்து ரத்தம் பௌண்டன் போல் பீய்ச்சி அடித்தது.
ஸ்வேதா போலீஸ் நிலையம் நோக்கி புயல் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்தாள். பின்னால், "சின்னா" துரத்தி வருவது போல ஒரு பிரமை அவளுக்கு இருந்தது.

3 comments:

Anonymous said...

மிரட்டலான சூப்பர் கதை என்றால் படம் மிகவும் அருமை.

R.Gopi said...

வருகைக்கும் தங்கள் பாராட்டுக்கும் நன்றி அனானி.

தொடர்ந்து வாருங்கள். படியுங்கள், தங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள்.

R.Gopi said...

Nandri Newspaanai