தோழமைக‌ள், குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்...



தீபாவளித் திருநாள் தத்துவம்... குழந்தைகளுக்குச் சொல்லுங்கள்!

ண்டிகைகள் ஏன், எதற்காக என்ற கேள்வி ஏதேனும் ஒரு நேரத்தில் நமக்குள் தோன்றத்தான் செய்கிறது. நம் அகத்தையும் புறத்தையும் நன்கு புதுப்பித்துக் கொள்ளவும், புத்துணர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திக் கொள்ளவும் ஏற்படுத்தப் பட்டவையே, பண்டிகைகள்! குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்குள் இருக்கிற தத்துவங்களை அறிவதும் தெளிவதும் அவசியம்.

ஏன் பட்டாசு வெடிக்கிறோம்?

பகவான் ஸ்ரீகிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்தார். 'என்னுடைய இறந்த நாளை அனைவரும் கொண்டாட வேண்டும்’ என நரகாசுரன், ஸ்ரீகிருஷ்ணரிடம் வேண்டினான் என்கின்றன, புராணங்கள். அதனால்தான் பட்டாசு வெடித்து, தீபாவளி கொண்டாடுகிறோம். பேராசை, பெருங்கோபம், பொருட்பற்று, பகுத்தறிவின்மை, கர்வம், பொறாமை ஆகிய தீய குணங்கள், அரக்கர்களுக்கு இணையானவை. பட்டாசைப்போல் இவை பொசுங்கி, நாம் நற்குணங்களுடன் திகழவேண்டும் என்கிற தத்துவமும் இதில் அடங்கியிருக்கிறது.

எண்ணெய் தேய்த்து நீராடுவது ஏன்?

நல்லெண்ணெய்யில், ஸ்ரீமகாலட்சுமி சிறந்து திகழ்கிறாள்; நீராடப் பயன்படுத்து கிற வெந்நீரில், கங்காதேவி வாசம் செய்கிறாள் என்கின்றன சாஸ்திரங்கள். 'ஜலே கங்கா, தைலே லக்ஷ்மீ’ என்பார்கள். அதனால்தான், தீபாவளி நாளில், ''கங்கா ஸ்நானம் ஆச்சா?'' என்று விசாரித்துக் கொள்கிறோம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், உடலில் இருக்கிற மாசு களைகிறது. உள்ளத்து மாசுகளையும் களைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இதனை சம்ஸ்கிருதத்தில் 'தோஷ அபநயநம்’ என்பார்கள். அதாவது, குறைகளை நீக்குவது என்று அர்த்தம்.

புத்தாடை எதற்காக?

குறைகளைத் தள்ளி, நற்குணங்களைப் பெறுவதே புத்தாடை அணிவதன் நோக்கம்.

'குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’ என்கிறார் திருவள்ளுவர். இதனை சற்றே மாற்றி, நம் குணங்களை நாமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது சிறப்பு! ஒருவன் வாழ்வில் வெற்றிபெற வேண்டுமானால், அவன் அதிகமாகத் தூங்கக் கூடாது; நேரங்கெட்ட நேரத்தில் உறங்கக் கூடாது; எப்போதும் சோர்வடையக்கூடாது. சோம்பேறியாக, பயம் கொண்டவனாக, சுருங்கச் செய்யவேண்டிய காரியத்தை நீட்டிச் செய்பவனாக இருக்கக் கூடாது. மனித வளர்ச்சியை தடுக்க வல்லவை, இவை!

ஷட்தோஷா: புருஷேநேஹ ஹாதவ்யா பூதிமிச்சதா
நித்ரா தந்த்ரா பயம் க்ரோத: ஆலஸ்யம் தீர்கஸுத்ரதா

அதாவது, 'மேன்மையை விரும்பும் மனிதனால் கைவிடப்பட வேண்டிய குணங் கள் (குறைகள்) ஆறு. அவை... உறக்கம், சோர்வு, பயம், கோபம், சோம்பல், காலந் தாழ்த்திச் செயல்படுதல்’ என்கிறது இந்த ஸ்லோகம். இந்தத் தீய குணங்களைத் தள்ளி நற்குணங்களைக் கொள்வதை மனதில் கொண்டு புத்தாடை உடுத்தி, அவரவர் களுக்குரிய சமயச் சின்னங்களை அணிவது அவசியம். நற்குணங் களை வளர்க்க, இதன் மூலம் சங்கல்பம் செய்கிறோம்.

பெரியோரை வணங்குதல்

எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை உடுத்தி, இறைவனையும் பெரியோர்களை வணங்குகிறோம். விடிகாலையில் எழுந்து, தான் அன்று செய்ய வேண்டிய நல்லறப் பணிகளையும். ஒப்புயர்வற்ற பரம்பொருளையும் சிந்தித்து, தாய் தந்தையைத் தவறாமல் தொழ வேண்டும் என்பதே சான்றோர்கள் கண்ட வாழ்வியல் கோட்பாடு என்கிறது ஆசாரக் கோவை. பெரியோர்களைப் பணிந்து, சாஷ் டாங்கமாக நமஸ்கரிப்பது என்பது, நம் ஆணவ- அகங்காரத்தை போக்கும்; நம்மைச் செம்மைப்படுத்தும்; ஆனந்தம் தரும்.

விளக்கேற்றி வழிபடுதல்

தீபம் என்றால் விளக்கு; ஆவளி என்றால் வரிசை. தீபாவளி என்றால், தீபங்களின் வரிசை! முற்காலங்களில், தீபாவளியன்று கார்த்திகை மாதத்தைப் போல, வரிசையாக விளக்கேற்றி வழிபடுவார்கள். அந்த வழக்கம் காலப்போக்கில் மாறிவிட்டது. தீபாவளி அன்று, வரிசையாக தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுவதே உத்தமம்! 'அறிவாகிய விளக்கை ஏற்றி, பரம்பொருளை அறிந்துகொள்ளுங்கள். இறையருளால் உங்கள் துன்பங்கள் எல்லாம் நீங்கும். மெய்ப்பொருள் தத்துவத்தை, தகுந்த குருநாதர் விளக்கிச் சொன்னால், அது தெளிவாக விளங்கும்’ என்கிறார் திருமூலர். 'தனக்குப் பாழ்அற்றறிவு இல்லாத உடம்பு’ என்கிறது நான்மணிக் கடிகை. மனிதனின் மாபெரும் சிறப்பே அறிவுதான். ஆகவே, அகத்தில் உள்ள அறிவொளியைப் புறத்தில் வழிபடுவதே, ஒளி வழிபாட்டின் உள்ளார்ந்த தத்துவம்.

இனிப்பு வழங்குதல்

இனிப்புகளை இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, அனைவருக்கும் வழங்குகிறோம். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்; ஆனந்தமாக இருக்க வேண்டும் என்கிற பரந்த மனப்பான்மையின் வெளிப்பாடு இது! இந்த உலகில், நாம் அழுவதற்காகப் பிறக்கவில்லை. எல்லோரும் இன்புற்று வாழ் வதற்கே பிறந்திருக்கிறோம். இன்பத்தை நாம் உணர்ந்து, பிறருக்கும் அந்த இன்பத்தை வழங்க வேண்டும். அதனை வலியுறுத்தவே, இனிப்பு வழங்குகிறோம். இந்தச் செயலால், அன்பு நிறைந்ததாக மாறிவிடும் இந்த உலகம்!

மேலும் இந்த நன்னாளில், ஸ்ரீமகாலட்சுமி மற்றும் ஸ்ரீகுபேர பூஜைகளைச் செய்து வழிபடுகின்றனர். எதைச் செய்தாலும், அதன் தத்துவத்தை அறிந்து, உணர்ந்து செய்யுங்கள். இல்லையெனில், வருங்காலத் தலைமுறையினர் இதனை அர்த்தமற்றது என்று ஒதுக்கிவிடுவர். குழந்தைகளுக்கு இவற்றை எடுத்துச் சொல்லி, தீபாவளித் திருநாளை, மனம் தித்திக்கக் கொண்டாடுங்கள்!

தோழமைகள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்....

(நன்றி : சக்தி விகடன்)

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வுக்கு நன்றி.

உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

Shiva Suja said...

நல்ல விளக்கங்கள்..

Jaleela Kamal said...

தீபாவளி பற்றி மிக அருமையான விளக்கம்.

உங்களுக்கும் உங்கள் அன்பு சூரஜுக்கும் உங்கள் குடும்பதார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

ஷைலஜா said...

நல்ல இடுகை கோபி..இனிய தீபாவளிவாழ்த்துகள்(கொஞ்சம் தாமதமாக:))