வெற்றியின் விழுதுகள் – (பகுதி-3)

தொடர் சரியாயிருக்கு என வாசக தோழமை தரும் பின்னூட்ட ஆலோசனைக்கு மிக்க நன்றி.

ஊருல இப்ப சொன்னாங்க ஒரு மேட்டரு, நீங்களும் கேளுங்களேன், தண்ணியில இருந்து ஏன் மின்சாரத்த எடுக்குறாங்கன்னு கேட்க, நம்ம சயிண்டிஸ்ட் சகலை சகாதேவன் சொல்றார். எடுக்கலைன்னா குளிக்கும் போது ஷாக் அடிச்சுருமில்ல.... அதுக்குத்தான். மேட்டர கேட்டதும் நமக்கே ஷாக்கா இருக்குல்ல....

ஒரு சாதனையாளரின் வாழ்வு, அதனுடன் தொடர்புடைய தகவல்கள், அதில் இருந்து நாம் எடுத்துக்கொள்ள ஒரு மேட்டர், எனும் இலக்கில் பயணிக்கிறது நம் வெற்றியின் விழுதுகள். முந்தைய அத்தியாயம் சொன்ன சாணக்கியரின் வாழ்வு, பிரச்சனையின் ஆழச்சென்று, தீர்வுக்கு வழி காண்பதையே நமக்கு பாடமாய் சொல்கிறது. சரி இனி அம்பேத்கர் வாழ்ந்ததைப் பற்றி வால்யூம் கூட்டி “மெல்லிய சத்தத்தில்” கேட்போமே.

நீதி உயர்ந்த மதி கல்வி, அன்பு நிறைய உடையவர் மேலோர்

இந்தியாவின் மத்தியில் மேவா பகுதி, இறுபுறமும் மலைகள் உயர்ந்து நிற்க, குறுகிய இரு மலைகளின் நடுவில் அடிவாரத்தில் உள்ள ஊர் மேவா. 1800 அடி உயரமான அந்த மலை பிரிட்டிஷ் தன் ராணுவ பலத்திற்கென தயார் படுத்திக் கொண்ட்து. ஒரு பெரிய காலாட்படை நிறுவி அதை ஒரு கண்டோன்மெண்ட் ஆக்கியது. தமிழ் வருசப் பிறப்பு ஏப்ரல் 14 என்பது நமக்கெல்லாம் ரொம்ப பரிச்சயம். அதே தேதியில் வருசந்தான் 1891 மத்திய பிரதேசத்தில் ஒரு பத்தரை மாத்து தங்கம், நம்ம அம்பேத்கர் பிறந்தார்.


நம்மவரின் அப்பா தாத்தா இருவருமே பிரிட்டிஷ் அரசில் ராணுவத்தில் கணக்கு / எழுத்தில் வேலை செய்தவர்கள். அன்றைய பிரிட்டிஷ் அரசு, அரசு வேலையில் இருப்பவரின் குடும்பங்கள் நிச்சயம் நல்ல கல்வி கற்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தது. பிறக்கும் போது நம் பத்தரை மாத்து தங்கத்துக்கு சித்திரையில் குத்திய முத்திரை அந்த குழந்தையின் வாழ்வை பதம் பார்த்தது.

மண்ணில் பிறக்கும் மனிதன் எல்லாம் மலர்கள் தானே. தாய் தந்தை குலம் சொல்லி கீழ் ஜாதி என சமூகம் புறந்தள்ளுவது ஏன். கீழ் ஜாதி நீ என சொல்லி, தீண்டத்தகாதவன் என தீட்டு சொல்லி, ஏதோ தொற்று நோய்க்காரன் மாதிரி விலக்கி வைப்பது எந்த ஊர் நியாயம்.

படிப்பு இன்றைய காலகட்டத்தில் பரவலாகவும், எளிமையாகவும், அவசியமாகவும் உள்ளது. அதுவே ஒரு ஐம்பது வருசத்துக்கு முந்தி எஸ்.எஸ்.எல்.சி டாப்கிளாஸ் படிப்பு. இ.எஸ்.எல்.சி, அதாங்க நம்ம எட்டாம்பு படிச்சுட்டு நம்ம முன்னோர்கள், படிச்சது போதும்ன்னு வேலைக்கு போன கதையும் தெரிந்தவர்கள் தானே நாம். ஆனால் அந்த காலத்திலேயே அமெரிக்காவின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வாங்கியது அவரது படிப்பின் மேன்மையை நமக்கு சொல்லும். என்றாலும் அவர் படிக்க பட்ட சிரமம் பார்த்தால் நமக்கு விழியில் நீர்ப்பூக்கள் மலர்ந்து நிறையும்.

பிரிட்டிஷ் அரசு, விசுவாசம் தலைமுறை தலைமுறையாய் தளைக்கும் என்று நம்பியதால் படிப்பை வழங்க முடிவு செய்தது, அதுவே இவருக்கு கல்வி தந்தது. இந்த தகவல் கேட்கும் போது ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது ‘ஒரு வாசல் மூடி, மறு வாசல் திறப்பான் இறைவன்’. பிறக்கும் போது அவருக்கு கிடைக்காத குலம் எனும் அட்வாண்டேஜ் அவருக்கு கல்வியாய் படிப்பாய் கிடைத்தது. படிக்கவில்லை என்றால் அவரும் சராசரியாய் ஆயிருப்பார் அல்லவா, தந்தையின் ராணுவ உத்யோகமும், பள்ளி படிப்பும் அவரை அறிஞராக்கியது.
படிப்பு மட்டும் எளிதாகவா இருந்தது.

எத்தனையே சோதனைகள்.... அது கணக்கிட முடியாது, அவர்கள் தீண்டத்தகாதவர்கள், பள்ளியில் சேர்க்க மாட்டேன் என அடம் பிடித்த்து நிர்வாகம். பின்னர் கொஞ்சம் இறங்கி வந்து, சரி போனால் போகட்டும் பள்ளிக்கு வரலாம், வேறு அறையில் உட்கார வேண்டும், உட்காரும் இருக்கையை அவர்களே கொண்டு வந்து கொண்டு செல்ல வேண்டும். பொது இடத்தில் நீர் அருந்த கூடாது, வாத்தியாரிடம் பேசக் கூடாது. சிலேட்டை வாசல் பக்கம் நகர்த்தி வைத்தால் வாத்தியார் பார்த்து வேண்டும் என்றால் திருத்தம் சொல்லுவார் என தனி விதிகள் வகுத்தது.. வகுத்து விதித்தது.

இப்படியும் இருந்திருக்குமா என நம் மனதில் ஆச்சரியம் தோன்றினாலும், இது நிதர்சனமான உண்மையே. நம் நாட்டில் ஒரு 50 வருசத்துக்கு முன் நடந்ததே. உயர் குலத்தில் பிறந்தவர்க்கு தாகமெடுத்தால் வாத்தியாரின் அனுமதி மட்டும் போதும், அதுவே எனக்கு வாத்தியாரின் அனுமதியோடு பியூன் வந்து தண்ணீர் குழாயை துறந்து கொடுத்தால் கை நீட்டி பருகிக் கொள்வேன் என அவர் எழுதும் போது என்னவோ செய்கிறது. "வெயிட்டிங் ஃபார் மை விசா" எனும் அவரது புத்தகத்தில் தந்தையை பார்க்க செல்ல ரயிலில் சென்று புதிய ஊரில் தண்ணீர் கிடைக்காமல் உணவு இருந்தும் பட்டினியாய் கிடந்தது படிக்கும் போது அவரது அவமானம் தாங்கி சாதிக்கும் குணம் புரிகிறது

கிடைக்கும் வாய்ப்பை கெட்டியாக பிடிக்க வேண்டும். எது வேண்டும் என தீர்மானம் செய்ய வேண்டும். செய்து விட்டால், நம் வெற்றி நிச்சயம்.

சாணக்கியர் எடுத்த தீர்மானம் மன்னனையே எதிர்க்க வைத்த்து என்றால், அம்பேத்கர் எடுத்த தீர்மானம் மகாத்மாவையே எதிர்க்க வைத்தது. காலுக்கு செருப்பில்லை என புலம்புவன் காலே இல்லாதவனிடம் பாடம் படிக்க வேண்டாமா. நம் இன்றைய சூழலில் நம்மிடம் என்ன குறை, நம் சமூகம் நம்மிடத்தில் ஏதேனும் காட்டிய பாராமுகம் இருக்கிறதா. இல்லையே பின்னர் ஏன் நம் புலம்பல்கள், எது நம் சாதனையை தள்ளிப்போடுகிறது.

அவமானம் தாங்கி, அடிமனதில் தேக்கி வை. உள்ளுக்குள் தீ வளர், நல்ல நாள் நாளை வரும் எனும் நம்பிக்கையும் வை என்பது அம்பேத்கர் வாழ்வின் சாராம்சம்.

இன்றைய சிந்தனையாய் பழைய சோறு பிரின்ஸிபில் என புதியதாய் நாம் ஒன்று கண்டு பிடித்துள்ளோம்.
ஒரு குண்டாஞ்சோறு ஃபுல்லா பழைய சோறு துன்னுவேன்.... அது ஒரு பிரச்சனையே இல்ல...., ஆனா தொட்டுக்க ஒரே ஒரு துண்டு ஊறுகாய் போதும், ஒண்ணுமில்லண்ணா ஒரு பச்சமிளகாயாவது கொடுங்களேன் அத வைச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் என்பது நம் வாடிக்கை.

பாருங்களேன் ஒரு குண்டா சோறு உள்ள இறங்க ஒரு துணுக்கு காரம் போதுமானது. சரி, நாம் எல்லோருமே எப்போதாவது ஒரு துணுக்கோ அல்லது முழுசாவோ பச்சமிளகாய கடிச்சுருப்போம். அந்த தருணத்தை ஒரு கணம் நினைத்து பாருங்களேன். எப்படி இருந்தது.

உஸ்... புஸ்... என நாக்கு மூச்சு விடும். கண்கள் தண்ணியா கொட்டும். தண்ணிய கொண்டாங்கடா என மனசு, புத்தி, உடல் எல்லாம் ஆலாய் பறக்கும். தண்ணி வாங்கி குடிச்சு, காரம் குறையும் வரை குரல்வளை நெறியும். வேற எதுவும் மனசுக்கு தோணாது. அடுத்த வீட்டுக்காரன் நம்ம பத்தி என்ன சொன்னான், நான் யோக்கியன் தெரியுமா என நமக்கு நாமே சொரிந்து கொள்ளும் நல்லுணர்வு என எதுவும் தோன்றாமல் தண்ணி மட்டுந்தேன் தோணும்.

ஆம், கடித்த மிளகாய் தான் நம் அவமானம். தேடும் தண்ணீர்தான் நம் அங்கீகாரம். உஸ்ஸும் புஸ்ஸூம் தான் நம் ஒருங்கிணைந்த முயற்சி/ செயல். எவ்வளவு அவமானமோ நம் உயர்வும் அத்தனை உயரும். இன்றைய அவமானம் கண்டு நாம் தளர வேண்டாம், நம்மை செயல்பட வைக்கும் கருவியாய் விசையாய் கொண்டு வேண்டிய படி செல்லும் திடம் கேட்போம்.

(லாரன்ஸ் / ஆர்.கோபி)

வேண்டியபடி வேண்டிய படி எப்பூடி….

தகவலுக்கு நன்றி (Imperial Gazetteer of India v. 17, p. 314)

வெற்றியின் விழுதுகள் – பகுதி 2

சாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

மனிதர்களின் வாழ்க்கையை பற்றி எழுதப் போகிறோம் என்றதுமே முதலில் ஒரு விசயத்தை தெளிவு படுத்தி தங்கள் ஒப்புதலோடு தொடர்வோம். அதானே ”விளக்க வச்சுட்டு விளக்கமா பேசலாம், அதுக்குன்னு விளங்காதத பேசுறதுக்கு விளக்க அமுத்திட்டா மட்டும் போதுமா”. செருப்பு இல்லாம நாம நடக்க முடியும் அதுவே நாம இல்லாம செருப்பால நடக்க முடியுமா. சொல்றத சொல்லிப்புட்டு தெளிவா தொடங்கிறதுதானே நல்லது.

ஆனானப்பட்ட ஆண்டவனுக்கே சாத்தான்னு ஒரு எதிர்கட்சி இருக்கும்போது, சாதாரண மனுசனுக்கு நிச்சயம் ஒரு எதிர்ப்பு இருப்பது இயல்பு தானே. என்னதான் சாதனையாளர்கள் ஆனாலும் அவங்களையும் பிடிக்கும் பிடிக்காத என இரண்டு கட்சிகள் உண்டு. கலர்ல கரை வேஷ்டி கட்டி, கலகலப்பா ஒரு கும்பல் இங்கேயும் இருக்கு அங்கேயும் இருக்கு. எல்லோருக்கும் பிடிக்கும் படியாக, எல்லோரும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஒருத்தர், யாரும் குறையே சொல்லாத ஒரு மனிதர் வேண்டுமென்றால், ஒருவரை இனிமே புதுசா செய்யத்தான் வேண்டும், ஒருவர் பிறக்க வாய்ப்பு இல்லை.

ஒரு அறிஞர் உபன்யாசம் செஞ்சாராம். மனுசன் சாவாம இருக்க என்ன செய்யணுங்கிற ரகசியத்த நான் 10 நாளுல சொல்லுவேன்னு ஒரு குண்ட தூக்கி போட, தினசரி அதை கேட்க கூட்டம் பிச்சுக்கிச்சாம். அடடா... இந்த மேட்டர மட்டும் தெரிஞ்சுகிட்டா நமக்கு மட்டுமில்ல...வரும் நம்ம சந்ததிக்கும் சூப்பராச்சேடா டோய்னு ஆர்வமா கேட்டாங்களாம்...முதல் நாள்லயே மேட்டர் என்னன்னு சொல்லாம, கடைசி நாள்ல அவர் இப்படி சொன்னாராம் ‘இறவாமை கிடைக்க, நமக்கு பிறவாமை வேண்டும் என்று’ எப்புடி.... கிறுகிறுத்து போச்சுல்ல..

பிறப்பு இறப்பு எப்படியோ அப்படித்தான் விறுப்பு வெறுப்பும் தவிர்க்கவே முடியாது.

மனிதர் என்பது பிறத்தியாருக்கு பிடிக்கும் மற்றும் பிடிக்காத விசயம் சேர்ந்த கலவையே. கரெக்ட்டு என ஒத்துக்கொண்டு, உன்னிப்பாய் பார்த்து அவர்களிடத்தில் நாம் எடுத்துக் கொள்ள என்ன இருக்கிறது. அவரது பலம் என்ன அதை செய்ய என்னால் முடியுமா என பகுத்துப் பார்ப்பதிலேயே நம் பலம் இருக்கிறது. நாம் முன்னர் சொன்னது போல், சந்திக்கும் ஒவ்வொருவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்வதிலேயே நம் கவனம் வைப்போம்.

சரி பாபா சாகேப் அம்பேத்கர் பற்றி பார்ப்போமே. இந்தியாவின் கான்ஸ்டிட்யூஷன் செய்தது இவர்தான், ரிசர்வேஷன என பகுத்தது இவர்தான் எனும் நம் தகவல்கள் தாண்டி அவரின் வாழ்வை சற்றே நெருங்கிப் பார்ப்போமே.

அம்பேத்கர் வாழ்வை தரிசிக்கும் முன் காலக் குதிரையில் ஏறி, 2300 வருசங்களுக்கு முன் செல்வோம். காசா பணமா, பாஸ்போர்ட்டை கூட வீட்டிலேயே பத்திரமாய் வைத்துவிட்டு வாருங்கள், டைம் மெஷினில் ஏறி டைலமோ டைலமோ... டைல டைல டைலமோ என்று பாடிக்கொண்டே அங்கிட்டு போவோம்....

பருத்தி கொட்டை விக்கறவன், புண்ணாக்கு விக்குறவன் பஞ்சு மிட்டாய் விக்குறவன் எல்லாம் தொழிலதிபரா. நாட்டுல இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலப்பா என சலித்துக் கொள்ளும் நமக்கு இந்த காலத்தில் தொழிலதிபர் தொல்லைன்னா அந்த சரித்திர காலத்தில குறு நிலமன்னர்கள் தொல்லை. எட்டுப்பட்டிகளை உள்ளடக்கிய மிராசுகூட ‘ராஜா... ராஜாதி ராஜனிந்த ராஜா’ என ஸ்டைலாய் பாடிக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, இல்லை ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வே என புரியாமல் பக்கத்து நாட்டுகிட்ட சோறு தண்ணி புழக்கம் இல்லாம இருந்தாங்க.
இந்திய தொல் பொருள் வரலாறு பார்க்கும் போது, நம்ம தமிழ் நாட்டுல தான் உயிரினம் இருந்ததா ஆராய்ச்சியாளர் சொல்றாங்க. தமிழ் நாட்டுல 75,000 வருசத்துக்கு முந்தி மனுசர்கள் (Homosapien) இருந்ததாகவும், 5 லட்ச வருசத்துக்கு முந்தி மனுசன் மாதிரி சில உயிரினம் (Hominid) இருந்ததாகவும் புள்ளிவிவரம் சொல்லுது. வளைச்சு பிடிச்சு மௌரியர்கள் ஆண்ட 3 BC. யில பாரதம் ஒற்றுமையா பெரிசா இருந்துச்சு. அதுக்கு பின்னால, சுமாரா 1,500 வருசம் இந்த மாதிரி பிரிஞ்சு பிரிஞ்சு சின்ன சின்ன நாடா இருந்துச்சு. வாசகர் எல்லாம் பெருமை பட்டுக்க ஒரு இன்பர்மேஷன், அந்த காலத்தில நம்ம இந்தியா தான் வல்லரசு.

இந்தியா இயற்கை வளமும், தங்கமும், கலையும் கலாச்சாரமுமா மின்னிக் கொண்டிருக்க, அண்டை நாடுகள் இதை ஆவலாய் பார்த்து. கொண்டு வந்துரவேண்டியதுதான் என எல்லோருமே திட்டமிட்டார்கள். அப்படி திட்டம் இட்டவர்களில் ஒருவர் அலெக்ஸாண்டர்.

ரொம்ப அழகா இருக்காங்க என சுத்தமான அக்மார்க் தமிழில் சொல்லி, யவனர்கள் என சரித்திரத்தில் குறிக்கப்பட்ட கூரூப்ல இருந்து நம்ம மாவீரன் அண்ணன் அலெக்ஸாண்டர் வந்து சிதறிக் கிடந்த பாரத தேசத்தை எளிமையாய் வென்றான். ஒற்றுமையாய் எதிர்த்து நின்று போரிடாமல், ஒன்று திரளாமல் செப்பரேட் செப்பரேட்டா அப்பீட் ஆனார்கள் நம்ம குறு நிலமன்னர்கள்.

தோல்வியின் காரணத்தை தீவிரமாக யோசித்தவர் சாணக்கியர் எனும் தீவிர சிந்தனையாளர். அவர் தீர ஆலோசித்து ஒரு திட்டம் வகுத்தார். சிதறிக் கிடப்பதே பலவீனம், ஒற்றுமையே பலம் என ஒரு கணக்கு கூட்டினார், சரி சக்தி வாய்ந்த மிகப் பெரிய நாடு எனும்போது அதை ஆள தகுதியான வீரத்தில் மிகுந்து விவேகத்தில் பெரிய மன்னன் வேண்டும். அவர் கணக்குப்படி சந்திரகுப்தரிடம் அந்த தகுதிகள் இருப்பதாய் கண்டு அவரையே தலைவன் என கணக்கிட்டார்.

ஆனால் அந்த திட்டத்தின் முதல் பிரச்சனை, சந்திரகுப்தர் சார்ந்திருப்பது கீழ் ஜாதி. சுற்றியிருந்தவர்கள் அவர் கருத்தை எதிர்த்தனர். ஆனால் இவரோ அரசை ஆள தகுதிதான் வேண்டும், வீரம் தான் வேண்டும், ஜாதி என ஜல்லியடிக்காதீர் என தீர்மானமாய் சொன்னார்.

அப்போதைய அரசன் நந்தாவும், அவன் குடிகார மகனும் அதற்கு லாயக்கில்லை என சொன்னதை கேட்டபோது மன்னன் நந்தா உக்கிரமாக வாதாடினான். நீயும் என் குலம், நீ எப்படி கீழ் ஜாதியில் உள்ளவனுக்கு துணை செல்லலாம் என்று முழங்கி அவரை அரசவையில் இருந்து தூக்கி வீசினான். சாதி இல்லை என முழங்கி, என் சபதத்தில் வெற்றி பெறும் வரை தலைமுடி முடியேன் என சூளுரைத்து சந்திர குப்தரை முடிசூட்டி தன் முடி முடிந்தார்.
பிரதம மந்திரியாய் திறம்பட பணியாற்றி, ஈரான் தொடங்கி, தெற்கே மைசூர் வரை பாரத தேசம் உருவாக்கி, கலியுகத்தின் மிகப் பெரிய பாரதம் என பெறுமையும் பெற்றது சாணக்கியரின் சாதனை. பாருங்களேன் அன்றைய பாரதம் எம்மாம் பெரிசு.

தோற்பது தவறில்லை. தோல்விக்கான காரணம் அறிவது, பிரச்சனையின் ஆழ சென்று வேர் வரை பார்ப்பது முக்கியம் என்பது சாணக்கியர் வாழ்வு நமக்கு தரும் முதல் பாடம். சிதறுண்டிருக்கும் இத்தனை பெரிய தேசத்தை ஒன்று படுத்துவது என்பது எளிதா. மொழி கலாச்சாரம், மதம் என எத்தனை வேறுபாடுகள். எப்படிங்க ஒட்டும் என குறை சொல்லாமல் எது பிரச்சனையின் ஆணி வேர் என காண்பது மிக மிக அவசியம்.

மேலை நாட்டிலொரு (5 WHY) ஃபை வொய் எனும் தத்துவம் உண்டு. ஏந்த பிரச்சனையானாலும் ஒய்... ஒய்... என கேட்டுக் கொண்டே இரு என்பார்கள். சாணக்கியர் இப்படி கேட்டிருப்பாரோ!!??.... நாமெல்லாம் தோத்துப் போயிட்டோம். ஒய்... வந்தவன் பலசாலி, நம்மால தாங்கமுடியல. ஒய். நம்ம பேஸ்மெண்ட் வீக்கு, படை பலம் இல்ல. ஒய். சின்ன தேசம்தான, பெரிசா நாடு இருந்திருந்தா, ஒரே தலைவன் கீழ் செயல் பட்டிருந்தால் நாம் செயிச்சிருக்கலாம். இப்படி ஒவ்வொரு படியாக ஒய் ஒய் என கேட்டால் பிரச்சனையின் ஆழத்துக்கு எளிதாய் செல்லலாம்.

வாசக தோழமைகள் உங்களை வாட்டியெடுக்கும் ஏதாவதொரு பிரச்சனையை எடுத்து கொள்ளுங்களேன். லைஃப்ல லட்சியமே என்னான்னு தெரியலைங்க என்று சொல்லும் “எயிம்லெஸ் எம்டன் மகன்” ஆகவும் இருக்கலாம், நேத்து தூங்கவே இல்லீங்க என சொல்லும் ராக்கோழி ரங்கண்ணனாகவும் இருக்கலாம். எதுவானாலும் ஓகே. கேள்வி கேட்டுவிட்டு ஒய் என முதல் கேள்வி கேட்டு, அதற்கு கிடைக்கும் பதிலில் மறுபடி ஒய் எனக் கேட்டு, கிடைக்கும் பதிலில் மறுபடி ஒய் கேட்டு பாருங்களேன்.

ஒரு மூன்று ஒய் கேட்டு பதில் வாங்கும் முன்னரே மூச்சு வாங்கி போகும். ஐந்தாவது ஒய் போவது நெம்ப கஷ்டம், போயிட்டோமுன்னா அதுதான் நம் பிரச்சனையின் ஆணி வேர்.

பிறக்கும் போது ஒட்டிக்கும் சாதி சரியில்ல என உணர்ந்து சாதி இல்லை என சொல்லி தன் இலக்கை அடைந்து சாதித்த சாணக்கியரின் வாழ்வுக்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு, சாதி இல்லை என சொல்லி சாதித்த இன்னொரு சரித்திர புருஷன் பி.ஆர். அம்பேத்கரின் வாழ்வை அடுத்த பகுதியில் பார்ப்போமே.

(லாரன்ஸ் / ஆர்.கோபி)

அடுத்தபடி அடுத்த படி வெற்றிப்படி.

வெற்றியின் விழுதுகள் – (பகுதி-1)



வெற்றியின் விழுதுகள்



மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. வாசக தோழமைகள் தேர்ந்தெடுத்த தொடரின் தலைப்பையே உறுதி செய்து, நம் தொடரை தொடங்குவோம். நமது மூன்றாம் தொடரின் உருவாக்கத்துக்கு உறுதுணையாய் தோன்றிய சில எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

மனுசனா பொறாந்தா ஏதாவது சாதிக்கணும், இல்லையா !!! கண்ணு, நீ பொறக்குறது வேஸ்ட், நீ பொறக்காம இருக்கிறது அத விட பெஸ்ட்.

வாழை மரம் தார் போடும், அதுக்குன்னு அத வைச்சு ரோடா போட முடியும், என்னங்க இது ரொம்ப சூடான வார்த்தையாவில்ல இருக்குது என கேட்கிறார் நம்ம வெள்ளந்தி வேங்கிட ராமன். இது நாம சொன்னதில்லீங்க நம்ம தாடி வச்ச தெய்வப்புலவர் வள்ளுவர் தாத்தா சொன்னது

தோன்றிப் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

அடேயப்பா வார்த்தைகள் ரொம்ப சுடுதே என்று நாம் நினைக்கும் போதே நம்ம சும்மாட்டு கவிஞர் பாரதி சும்மாயிருக்காம இப்படி சொல்றார். பச்சையா வேண்டாங்க வவுறுக்கு ஆவாது, வேக வைச்சு ஏதாவது தினந்தினம் திங்கணும், தின்னுப்புட்டு என்னப்பா வாழ்க்கை இது…! என பீலீங்க்ஸ் விட்டுட்டு புலம்பணும், அப்புறமா பக்கத்தில இருக்கிற ஜனங்களுக்கு பீலா கொடுத்திட்டு அவங்கள வெறுப்பேத்தி டார்ச்சர் கொடுக்கணும், அப்பாலிக்கா சொணங்கி செத்துருவேன்னு எல்லாரையும் மாதிரி என்னையும் நினைச்சியா என்கிறார். யேயப்பா, அவர் சிந்தனையின் சூடு முண்டாசை தாண்டுதே.
சாமான்யானாய் நான் செத்துப் போவேனோ என அப்துல் ரகுமான் பயந்தாரே அது போலத்தான் நாம் அனைவருமே நம் வாழ்வை பற்றி கொஞ்சம் பயத்திலும் மிச்சம் கனவிலுமாய் வாழ்கிறோம்.

கண்டிப்பா சாதிக்கணுங்க என சாதிக்கும் எண்ணம் நம் ரத்தத்தில் உண்டு. முயற்சிதான் சில சமயம் வாக்கிங் போய் விடுகிறது.

ஜப்பானிய பழமொழி சொல்வது போல், நாம் அடைய நினைக்கும் இலட்சியத்துக்கும் இன்றைய நடைமுறைக்கும் ஒரு தப்படி தூரந்தான். ஒரே ஒரு சிறிய தப்படி, (தப்பான அடி இல்லீங்கோ... ஒரு காலடி) முன்னங்கால் எடுத்து வைப்பின் அவையத்துள் முந்தியிருப்பச் செயல் என்று முழங்கலாம்.

ஆம் நிச்சயமாய் நாம் எல்லோரும் சாதிக்க பிறந்தவர்களே, நம்

ஓவ்வொருவரிட்த்திலும் ஒரு திறமை ஒளிந்து கொண்டிருக்கிறது. அது அக்கினிக்குஞ்சாய் ஒளியாய் வெப்பமாய் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வக்கினி குஞ்சை அங்கொரு காட்டில் பொந்திடை வைத்து, வெந்து தணிய செய்வதே இத் தொடரின் பணிவான இலட்சியம். அங்கனம் வெந்து தணிந்து, வேள்வித்தீயின் வெப்பத்தில் இம்மானுடம் தளைக்க செய்யும் சிறு சிற்றுளியே இப்பதிவு.

ஓடுற எலி வாலை புடிச்சா நீ ' கிங்'கு ஆனா ... தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு. என ஒரு உயரிய தத்துவம் ஒன்று உண்டு. நாயர் புடிச்ச புலிவால் மாதிரி சாதிக்கணும்ன்னு நாம சிந்திச்சுட்டா நம்மோட லட்சியம் நம்மை விடாது.

அடாது மழை பெய்தாலும் விடாது பிடிக்கும்.

ரைட்டுங்க புரியுது, நான் ரெடி சாதிச்சுருவோம். சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா , ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா ? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா, இல்ல வேற ஏதாவது பிளான் இருக்கா என கேட்கும் போது,

மேலை நாட்டு அறிஞர், பிரையன் டிரேசி, ஒரு எளிமையான ஐடியா சொல்வாரே, சாதிச்ச ஒரு ஒண்ணுரெண்டு பேரோட வாழ்க்கைய பார்த்து, அவங்க என்னென்ன செய்தாங்களோ அத்தயே ஈயடிச்சான் காப்பியடிச்சா நாமளும் சாதிச்சுப் புடலாம்ன்னு கண்டிப்பா என்பார். அதே ரூட்ல போகுது நம்ம தொடர். வாழ்ந்ததின் சுவடுகளை சரித்திரத்தில் பதிவிட்டு, தன் தலைமுறை தாண்டி வாழ்ந்தவர் சாதனையாளரே

நாம் வாழ்ந்து வரும் இந்த பூமியில் நமக்கு முன் தோன்றிய சில வெற்றி நாயகர்களை அவர்கள் சந்தித்த சாதனை சோதனைகள் பற்றி தெரிவோமே. அவர்களது வாழ்வை தெரிவது மூலம் நம்மிடம் தெளிவு பிறக்காதா எனும் சிந்தனையின் வெளிப்பாடே இத்தொடர்.

சாதித்தவர்களின் வாழ்வை உற்று நோக்கினால், செஞ்சே ஆகணும் எனும் தீவிரம் எல்லா சாதனையாளரிடமும் பொதுவாய் இருக்கிறது. நாம் தொடரின் தொடக்கத்தில் பார்த்த வள்ளுவர், பாரதியின் சிந்தையில் நாம் கண்டதும் அதுதானே. நம் வாழ்வில் சாதிக்க அந்த தீவிரம் மட்டுமே போதுமானது. எஸ்... நாம் முடிவு எடுத்து, மெய் வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், எவ்வகை தீமையையும் எதிர்கொண்டு, அருமை பாராமல் அவமதிப்பும் கொண்டு கருமமே கண்ணாயனார் ஆனால் மேட்டர் முடிஞ்சுச்சுப்பா என சுச்சுலிப்பா காட்டலாம்.

சாதித்த நம் ஹீரோக்களை சல்யூட் அடித்து விட்டு, அவர்கள் சாதனையை ஆழமாய் பார்ப்பதே இத்தொடர்.

ரோப் கட்டி தூக்கி எதிராளியை பறந்து பறந்து பந்தாடும் பம்மாத்து திரை ஹீரோக்கள் இல்லை இவர்கள். யாரோ எழுதிய வீர வசனத்துக்கு வாயசைப்பு செய்து, அட்டை கத்தி வீசும் அடாசு வேலை இல்லை இவர்களது. ரத்தமும் வியர்வையுமாய் தங்கள் வாழ்வை தாங்களே செதுக்கி வெற்றி கனி பறித்தவர்கள், சரித்திரத்து பக்கங்களை குத்தகைக்கு எடுத்தவர்.

இதுவரை நான் வாழ்வில் தப்பே செஞ்சதில்ல என யாராவது சொன்னால் அது பெரிய பம்மாத்து என்கிறார் நம்ம பல்பு ஐன்ஸ்டீன். யோவ் முயற்சி செஞ்சு அது தப்பாயிட்டா என எக்ஸ்ட்ரா காஷியசாய் இருப்பதே நம் பலவீனம் , முயற்சி செய்து தவறி, பின் தப்ப திருத்தி அடுத்த்தா டிரை பண்ணரப்போ தான் ரப்ப்ப்போ ரப்பாப்போ..

தப்பே செய்யக்கூடாதுப்பா என முயற்சி எடுக்காமல் நாம் இருந்தால் எக்ஸாம் ஹாலே போகாம ரிசல்ட் பார்க்கிற மாதிரி. அல்லது விதைக்கும் போது ஊர் சுத்திட்டு அறுக்கும் போது அருவாளோடு போன அங்குசாமி கதை ஆகிவிடும். பரமார்த்த குரு சொன்னாராம்ல, நீச்சல சூப்பரா கத்துக்கிற வரைக்கும் சொட்டு தண்ணிய தொட மாட்டேன்னு, அது மாதிரியில்ல இருக்கு. இது ஆவற கதையா, நம்ம கன்னியாகுமரி விவேகானந்தர் சொல்வாரே என்று எந்த தவறும் செய்யாத ஒரு நாள் இருக்கிறதோ அன்று ஏதோ குறை மாதிரி பீலிங்க்ஸ் ஆப் இண்டியா என்பாரே. அது மாதிரிதேன். சரி தீர்வு என்ன.
இரண்ட செய் ஒண்ண குறை என சேக்ஸ்பியர் பீராஞ்ச த்த்துவம் இது. அது என்னங்க தத்துவம், மற்றவரை விட அதிகமாய் தகவல் சேரு, ஜாஸ்தியா முயற்சி பண்ணு. இப்ப சொன்னது செய்ய வேண்டிய இரண்டு, செய்யக்கூடாத ஒண்ணு என்னது. உன் எக்ஸ்பெக்டேஷன குறை. கீதையில சொன்ன மாதிரி கடமைய செய், பலனை எதிர்பார்க்காதே....

வாருங்கள் தன் வாழ்க்கையை நமக்கு பாடமாக சொன்ன சில மனிதருள் மாணிக்கத்தை தரிசிப்போம், அவர் வாழ்வில் இருந்து எடுத்துக் கொள்ள ஏதேனும் இருக்கிறதா என ஆராய்வோம். சந்திக்கும் ஒவ்வொரு மனிதனிடம் இருந்தும் நான் கற்றுக் கொள்ள ஏதேனும் ஒன்று உண்டு என தீர்மானமாய் நம்புவோம். சாதிக்க பிறந்த நாம் சரித்திரத்திடம் எங்கள் வாழ்வையும் எழுதிக் கொள்ள தயாராக இரு என முறசரைவோம். நம் வெற்றி நிச்சயம்.

வெற்றிப்பாதையின் படிகளில் அமர்க்களமாய் ஏறுவோம்....

முதல் சாதனையாளர்களின் வாழ்க்கையாய் நம் இந்திய தேசத்தின் அரசியல் அமைப்பை செதுக்கிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்கள் வாழ்வை அடுத்த பகுதியில் பார்ப்போம். அதனோடு தொடர்புடைய சாணக்கியரின் வாழ்வையும் பின்னி வரவிருக்கிறது நம் அடுத்த பகுதி.
சாணக்கியருக்கும் அம்பேத்காருக்கும் ஸ்நானப் பிராப்தி கூட இல்லீங்களே என புருவம் தூக்குபவருக்கு அடுத்த பதிவு வரை பொறுமை வேண்டி விடைபெறுவோம்.

(அடுத்தபடி அடுத்த படி....)

புதிய தொடருக்கான ஒரு வெள்ளோட்ட முன்னோட்டம்...

வந்துட்டாங்கய்யா, வந்துட்டாங்க!!!!

டீச்சர்.... டீச்சர் !!!!! என உச்சஸ்தாயியில் கூப்பிட்டு (கூச்சலிட்டு!!??), மூணு....!!!!! என ஒரே குரலில் சொல்லி, மூன்று விரல்களை காட்டி நாங்கள் இருவரும் எழுந்து நிற்க, ஆசிரியர் குழம்பித்தான் போனார்.

ஆசிரியரா யாரது, .. .. வேற யாரு, நம்ம எடக்குமடக்கு வலைமனையின் ஆசிரியர்தேன்... அப்படியா, சொல்லவே இல்லை, யாரது புதுசா என கேட்பவருக்கு அது வேற யாரும் இல்லை, நீங்கதான்.
வாசக தோழமைதான் எங்கள் வாத்தியார்கள்.
ஆதரித்து வழி காட்டுவது வாசக தோழமைதானே. சரி ரைட்டு, மேலே சொல்லுங்க ஒங்க வீகத்த என்று ஆசிரியர் கேட்கிறார்,

அதென்னடா புதுசா இந்த மூணு. பக்கத்தில உள்ள ”டி.நகர் போனா டீ கிடைக்கும்”, குடிச்சுப் புடலாம். ஆனா, அதுக்காக பஸ் புடிச்சு ”விருதுநகர் போனா விருதா கிடைக்கும்’?. என்ன சொல்லணுமோ, அத்த தெளிவா சொல்லுங்க.

துபாய் லைஃப், ஹூமன் லைஃப்ன்னு இரண்டு தொடர்கள் எழுதியாச்சு. அடுத்ததா ஒரு தொடர் லைவ் வயர் மாதிரி எழுதலாம். அதைதான் மூணாவதுன்னு சொன்னோம் டீச்சர்ர்.. என்றோம் கோரஸாய். வெரி குட்... சொல்லுங்க, எதை பத்தி எழுத போறீங்க.

பண்டைய பல்காப்பியத்தில் கொண்டைமானுக்கு பல் உடைந்து, அதனால தொண்டை கட்டியதைப் பத்தி எழுதலாம் சார். சூப்பர் மேட்டரு, பத்து அத்தியாயம் பட்டைய கிளப்பிறலாம். இல்லன்னா நாளைய நானூறில் நாலுமுக்கு சந்தி சிரித்தது பற்றி ”சிங்கீத சித்தர் சின்ன சேலம் சிங்கமுத்து” சொன்னத சொல்லலாம் சார். உச்சத்தலையில இருந்து உள்ளங்கால் வரைக்கும் சுர்ர்ர்ர்ர்ருன்னு சூடாயிரும், கிர்ர்ர்ர்ர்ர்ருனு கேராயிடும், டர்ர்ர்ர்ர்ர்ருன்னு டாராயிடும் சார் என சொல்லச் சொல்ல மூர்க்கமாய் பாய்ந்து கழுத்தை பிடித்தார்.

நக்கல் நாளுக்கு நாள் கூடிப் போச்சு, ”ஆவி அமுதா” பாவம் பிசியாயிருக்காங்க, பூதம் பூமாக்கா, பேய் பெரியநாயகிய கூப்பிட்டு வேப்பிலை அடிச்சா தேவல என்றார். சலசலப்பு அடங்கி, பெரிய விவாதத்தின் முடிவில் மூன்றாம் தொடர் பற்றிய முடிவு எடுத்தாயிற்று, இதோ நமது புதிய தொடரின் பூர்வாங்க வேலைகள் தொடங்கி, புதுப் பொலிவுடன் உங்கள் விழிகளை தரிசிக்க வருகிறது.

நமது முந்தைய வாழ்க்கை தொடர் மனித வாழ்வை, கோட்பாடுகளை ஒரு சாமான்யனாய் அலசியதென்றால், தொந்தரவில்லாத எளிமையான அன்பான வாழ்வை பற்றி பேசியதென்றால், அடிப்படையாய் ஒரு நல்ல மனிதனாய் வாழ தூண்டியது என்றால் அடுத்த கட்டமாய் வாழ்வில் சாதிக்க தூண்டுவதே இத்தொடரின் பணி.

கண்டிப்பா சாதிக்கணுங்க என சாதிக்கும் எண்ணம் நம் ரத்தத்தில் உண்டு. முயற்சிதான் சில சமயம் வாக்கிங் போய் விடுகிறது.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யாரென கேள்வி கேட்டு, சாதித்த சில சாதனையாளர்களின் சாதனைகள்,

சோதனைகளை பட்டியலிட்டு அவர்கள் வாழ்க்கையையே பாடமாய் படிக்கும் முயற்சியே இந்த தொடரின் முக்கிய நோக்கம்...

இன்னும் சில தினங்களில் இந்த தொடரின் முதல் பகுதி இங்கு உங்கள் பார்வைக்கு அச்சேறும் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். தங்கள் மேலான ஆதரவை எப்போதும் போல் எதிர்பார்த்து ஆலோசனைகளை பின்னூட்டமாக்கி வழி நடத்துங்கள் என இரு கரம் கூப்பி வேண்டுகிறோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து தலைப்புகளில், தோழமை தேர்ந்தெடுக்கும் தலைப்பை தொடரின் தலைப்பாக வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்...

1) வெற்றியின் விழுதுகள்..........
2) வெற்றி பெற விரும்பு
3) நிச்சயம் வென்றிடுவோம்.....
4) உழைத்துப்பார்..... உலகை வெல்வாய்....
5) வென்றவர்கள் வழியே.... நாம்

கூடிய மட்டும் விரைவாக (4-5 நாட்களுக்குள்) ஒரு தலைப்பை நீங்கள் தேர்ந்தெடுத்து தெரியப்படுத்தினால், முதல் பகுதி விரைவாக அரங்கேற / அரங்கேற்ற ஏதுவாகும்...

நான் இங்க சௌக்யம்... கருடா நீ அங்க சௌக்யமா??

"பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்ட்து
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால்

எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது "

அதை இங்க பாருங்க....

காட்சி -1

தறுதலை : டாடி, என் மனங்கவர்ந்த ஒரு டேமை நான் கல்யாணம் கட்டிக்கணும்
டாடி : நீ டேம கட்டுவியோ, டூம்ம மாட்டுவியோ, நான் சொல்லுற காண்டிராக்டர் பொண்ணுதான் நீ கட்டணும்... அவதான் என் மருமவ
தறுதலை : ஆனா டாடி, நான் கட்ட போறேன்னு சொன்னது நம்ம “பில் கேட்ஸ்” பொண்ணுப்பா...
டாடி : இத்த முன்னாடியே ஏண்டா சொல்லல... இப்போ, எனக்கு டபுள் ஓகே....


காட்சி – 2

டாடி : உங்க மகள பொண்ணு கேட்டு வந்திருக்கேன்
பில் கேட்ஸ் : நீங்க யாரு, என்ன சோலி, என் புள்ள பச்ச மண்ணாச்சே.....
டாடி : என் மவன் வேர்ல்ட் பேங்க்ல வைஸ் ப்ரெசிடெண்ட்...
பில் கேட்ஸ் : அட....அப்படி போடு அருவாள...அடிச்சாச்சு லக்கி பிரைஸ், அப்ப ஒகே

காட்சி – 3

டாடி : உங்க வேர்ல்ட் பேங்க்குக்கு வைஸ் ப்ரெசிடெண்டா என் மவன சேர்த்துக்கங்க அவன் பெரிய எடம்...
வேர்ல்ட் பேங்க் சேர்மன் : பெரிய எடம்னா... ட்வின் டவர்ஸ் ஓனரா...இல்லன்ன புர்ஜ் அல் அராப் ஹோட்டல் ஓனரா?? ஏற்கனவே அதுக்காக நிறைய பேர் கியூவில நிக்குறாக்களே, தெரியுமா??
டாடி : அது எல்லாம் எனக்கு தெரியும்... நான் இன்னும் மெயின் மேட்டர் சொல்லவேயில்லையே.. என் மவன் நம்ம பில் கேட்ஸ் இருக்காரே. அவரோட மருமகன்... இப்பொ சொல்லுங்க ஒங்க வீகத்த....
வேர்ல்ட் பேங்க் சேர்மன் : இத்த மொதல்லியே சொல்லக்கூடாத “தல... எனக்கு டவுள் ஒகேங்க...

இந்த வீகத்துல தான் எல்லா யாவாரமும் (வியாபாரம்) நடக்குது

கதை சொல்லும் நீதி :

ஒரு ரூவாய்க்கு ”பொட்டுக்கடலை” வாங்கி சட்னி வைக்க வழியில்லைனா கூட, மண்டைல உள்ள மசாலாவ சரியா யூஸ் பண்ணுனா, ”முந்திரி” நெறைய போட்டு ஒரு அண்டா பொங்கலே வைக்கலாம்.