அன்றும் இன்றும்

அமைதியை தேடி காடு, காடாக போனார்கள் - அன்று
வளமையை தேடி நாடு, நாடாக போகிறோம் - இன்று

வேண்டிய பொருள்கள் முழு வீட்டை அடைக்க
வருவோர் போவோர் எல்லாம் தின்று தீர்க்க
அணையாமல் எரிந்தது, அனைத்து வீட்டு அடுப்பும் - அன்று

பொருள்கள் ஏதுமின்றி, வீடே வெறிச்சென்றிருக்க
வருவோர் போவோர் என யாருமே இல்லாதிருக்க
அடுப்பே எரிய வில்லை பல வாரமாய் - இன்று

கிடைத்ததில் மிஞ்சியது தானமாக - அன்று
ஏதாவது கிடைக்குமா தானமாக - ஏக்கத்தில் இன்று

நியாயமான வியாபாரத்தில் வாணிபம் செழித்தது - அன்று
கலப்பட வியாபாரத்தில் கள்ளத்தனம் சிரித்தது - இன்று

எடைக்கு மேலே சேர்த்து கொடுத்தார்கள் - அன்று
எடையே சிறிதளவு தான் கொடுக்கிறார்கள் - இன்று

மனதில் உண்மையுடன் வியாபாரம் - அன்று
மனம் முழுதும் பொய்மையுடன் வியாபாரிகள் - இன்று

வேண்டிய மழை தேவை மட்டும் - அன்று
வேண்டி கேட்டும் துளி மழை இல்லை - இன்று

கிடைத்ததைக்கொண்டு மகிழ்ச்சியில் குடும்பம் - அன்று
எவ்வளவு கிடைத்தும், குறை சொல்லும் குடும்பம் - இன்று

வேலை முடிந்து, களைத்து, சிறிது நேர கேளிக்கை - அன்று
வேலை ஏதுமின்றி, கேளிக்கையே வாழ்க்கையாய் - இன்று

நம் இன்றைய தேவை கடின உழைப்பு - இதை
நம் மனதில் நிறுத்தினால் நாளும் சிறப்பு

எப்போதும் நம் தேவை பெற்றோரின் ஆசி
இப்போது கிடைத்தால், நீதான் சுகவாசி

சிவப்பாய் ஒரு வெள்ளை தேவதை - கதை - பாகம் 3

நகரின் முக்கிய சாலையில் உயர்ந்த ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தின் உள்ளே அமைதியாய் இருந்தது அந்த உணவகம். பசிக்கு என்று வருபவர்கள் ஒருவருமே இல்லை. உலகில் உள்ள அத்தனை காரணத்துக்காகவும் அங்கே வருவார்கள் பசியை தவிர.
நண்பனாய் நண்பனை சந்திக்கும் பொருட்டே கலையும் அங்கே ஆஜர்.
இலக்கில்லாத எந்திரத்தனமான பார்வையில் நேரங்களை எண்ணிக்கொண்டு கொட்டாவி விட்டு உடம்பை முறித்து கொண்டான். நீட்டிய கையில் சட்டேன்ன ஒரு பூபந்து.

ஒ ! பின் இருக்கையில் உள்ள ஒரு பெண்ணின் தலை அது. அவசர அவசரமாய் தன்னை சரி செய்து கொண்டு மனிப்பு கேட்டான். திரும்பிய அந்த முகம் ஒரு பெண்ணினுடையது.

பெண் என்று சொல்வதை விட தேவதை என்று சொல்லலாம். கொள்ளை அழகு. பால் போன்ற நிறம். சென்னை வெயிலுக்கு பஞ்சாபி கூட கருத்து விடுவார், ஆனால் இவள் இத்தனை வெளுப்பா. மஞ்சள் சிகப்பு கலந்த ஒரு கோதுமை நிறம். செதுக்கி வைத்த சிலை போலே மூக்கும் முக அமைப்பும் ,

கலை தன்னை மறந்தான், கவிஞன் ஆனான். மனம் துள்ளி குதித்தது.,

ஸ்பரிசித்த அந்த கணம் மறுபடி மறுபடி மனதில் வந்தது
ஒரு நொடியில் பார்த்த அந்த முகம், மனதை விட்டு நகர மறுத்தது . சற்று நேரம் முன்பு தோன்றிய சோம்பல் சுத்தமாய் இப்போது இல்லை. மேசை மேல் உள்ள தண்ணீர் கூஜா அவள் பிம்பத்தை காண்பித்தது. மதி மயங்கி அதை பார்த்தான். இத்தனை வனப்பா.

நண்பன் வருவது தெரிந்தது, கண்ணன் .

கண்ணனா இது. என் இப்படி கலைந்து கிடக்கிறான். அமரச் செய்து விட்டு ஆழமாய் பார்த்தான். "என்னாச்சுடா!! ஏன் இப்படி இருக்க" ஆதங்கத்தோடு கேட்டான்

சரிந்திருந்த தோள்களில் லேசாய் ஒரு குலுக்கம். அழுகிரான ..."ஹே என்ன ஆச்சு " : "எல்லாமே ஆச்சு, இனி ஒன்னும் பாக்கி இல்லே" பதில் கேட்டு குழம்பினான் கலை. எப்படியும் அவனுக்கு உதவணும் மனதினுள் தீர்மானித்தான்.

"சரி விடு என்ன சாப்பிடுரே"
அடுத்த சில நிமிடங்கள் அமைதியாய் நகர்ந்தன.

"கண்ணா கவலைபடாதே ... நான் இருக்கேன், சொல்லு என்ன உன் பிரச்சினை"
அமைதியான கண்ணன் தீர்க்கமாய் சொன்ன பதிலில் அதிர்ந்தான் கலை.

"நான் ஒரு கொலை செய்ய போறேன் "


தொடரும் .....

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்

ஒரு மாபெரும் நடிகர். நடிப்பு சகாப்தம். நடிப்பில் உள்ள அனைத்து பரிமாணங்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய பிறவி கலைஞன். நடிப்பின் அனைத்து சிகரங்களையும் அனாயாசமாக தொட்டவர். நடிகர் திலகம், நடிப்பு செம்மல், சிம்ம குரலோன் போன்ற பல பட்டப்பெயர்களில் அறியப்பட்டவர். தமிழை விடுத்து, வேறு எந்த மொழிகளிலும் அதிகம் நடித்திராததால், இந்தியாவின் பிற பகுதி மக்களால் அதிகம் அறியப்படாதவர்.

வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், அப்பர் போன்றோர் இப்படி தான் இருந்திருப்பார்கள் என்று சொல்லக்கூடிய / மறுதலித்து பேசாத அளவுக்கு அந்த கதாபாத்திரங்களை வெள்ளித்திரையில் வாழ்ந்து காட்டியவர்.

அவர் நடத்த பாசமலர் என்கிற படம், அண்ணன் தங்கை உறவுக்கு ஒரு சான்றாக இன்றும் இருந்து வருகிறது. அவர் நடிக்கும் படங்களில், தன் நடிப்பாற்றலால், திரை அரங்கில் படம் பார்க்கும் அனைவரையும், திரையின் உள்ளே அழைத்து சென்று படத்தை நேரிலேயே பார்ப்பது போன்ற ஒரு நிலையை உண்டாக்கும் அளவு ஆற்றல் படைத்தவர்.

அவரின் நடிப்புக்கு சாட்சி சொல்ல எத்தனை எத்தனை படங்கள் :

தங்கபதக்கம்
வீரபாண்டிய கட்டபொம்மன்
கெளரவம்
கர்ணன்
பாசமலர்
கப்பலோட்டிய தமிழன்
பலே பாண்டியா
பழனி
உத்தம புத்திரன்
வியட்நாம் வீடு
தெய்வ மகன்
உயர்ந்த மனிதன்
எங்கிருந்தோ வந்தாள்
பாக பிரிவினை
அனைத்து பா வரிசை படங்கள் ............ போன்ற படங்கள் அவற்றில் சில ..... இந்த எண்ணிக்கையை சொல்லி அடங்காது ...... எண்ணி குறையாது .... எழுதி மாளாது .....அதிலும் தெய்வ மகன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பின் உச்சத்தை தொட்டிருப்பார். அதனால் தான் நம் இந்திய அரசாங்கம் அவருக்கு சிறந்த நடிகருக்கான மத்திய அரசு விருதை தராமல், காவல்காரனுக்கு வழங்கியது ........ சிறந்த நடிகருக்கான விருது பெரும் முழு தகுதி இருந்தும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அந்த விருதை கடைசி வரை தராமல் இருந்ததற்கான காரணம் எனக்கு இன்று வரை புரியவில்லை. அதே சமயம், தெய்வ மகன் படத்தில் மூன்று வீதத்தில் வேடங்களில் தூள் கிளப்பியதற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆசிய-ஆப்பிரிக்க விருது வழங்கப்பட்டது.

இந்தியாவின் சிறந்த நடிகர் விருது நம்மால் தர முடியவில்லை. ஆனால் ஆசிய-ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது வாங்கி விட்டார். இதை என்னவென்று சொல்வது ??

முன்னாளில் இது போன்ற சவாலான, நடிப்புக்கு மட்டும் முக்கியம் கொடுக்கும் வேடங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் திலகம் அவர்கள், பின்னாளில், கதைக்கும், உருவத்திற்கும், உடைகளுக்கும் முக்கியம் எதுவும் கொடுக்கவில்லை என்பது வருந்தத்தக்கது (ஒரு இருநூறு படங்கள் கழிந்த நிலையில்). வருடத்திற்கு எட்டு, பத்து படங்களில் நடித்தது எந்த வித சாதனைகளையும் நிகழ்த்தவில்லை. இதுபோன்ற படங்கள் அவரின் பட எண்ணிக்கையும், வருமானத்தையும் பெருக்கியதே தவிர அவரின் நடிப்புக்கு எந்த தீனியும் போட வில்லை என்பதுதான் ஒரு கசப்பான உண்மை.

உதாரணமாக, அவர் கடைசி பத்து, பன்னிரண்டு வருடங்கள் நடித்த படங்களை பார்த்தால், ஸ்ரீப்ரியாவுடன் நிறைய படங்கள் நடித்து உள்ளார். அதன் ரகசியம் தெரிந்தவர்கள் கூறலாம். நடிகர் திலகத்தின் பிற்கால படங்கள் சில :

லாரி டிரைவர் ராஜாக்கண்ணு (இதில் ஸ்ரீப்ரியா ஜோடி என்று நினைக்கிறேன். ஒரு காட்சியில் இவரும், மேஜரும் தங்களை துரத்தி வரும் வில்லன்களிடம் இருந்து தப்பிக்க பெண் போல் வேடமணிந்து, மாவு ஆட்டும் காட்சியை காண கண் கோடி வேண்டும் ....... நம்பியாரும் தன் பங்குக்கு பெரிய இம்சை பண்ணுவார். ஒரு காட்சியில், மாடியில் அவர் இறங்கி வருவது போன்று இருக்கும். ஆனால் அவர் நடக்க மாட்டார், தவழ்ந்து வருவார். பெரிய கொடுமை சரவணன் சார் இது).

பட்டாகத்தி பைரவன்
மாடி வீட்டு ஏழை - (ஒரு காட்சியில் அனைவருக்கும் சவால் விடும் விதமாக மான்கொம்பு சுததுவார், தியேட்டரில் அனைவரும் கதறிய சத்தம் கேட்டது எனக்கு இன்றும் நினைவில் உள்ளது).
சங்கிலி
தர்மராஜா - மிக பெரும் கொடுமையாக, உலக புகழ் பெற்ற ஜப்பான் நாட்டு கராத்தே சாம்பியன் யாமகுச்சியை அடித்து வீழ்த்தி விட்டு உலக சாம்பியன் ஆவது போன்று கதை வரும் என்று நினைக்கிறேன். வழக்கம் போல கே.ஆர்.விஜயா ஜோடி (முடியல..... விட்டுடுங்க..... யப்பா ...... இப்போவே கண்ண கட்டுதே).
சந்திப்பு - இதில் ஒரு மாறுதலாக ஸ்ரீதேவியுடன் ஜோடி கட்டி இருப்பார் (சின்ன சிவாஜி). பெரிய சிவாஜி இருக்காரோ என்னவோ நினைவில்லை. அப்படி இருந்திருந்தால் அவருக்கு கண்டிப்பாக கே.ஆர்.விஜயாதான் ஜோடியாக இருந்திருக்க முடியும்.
எமனுக்கு எமன் - ஐயோ ஐயோ, பெரிய கொடுமை சார்.... (ஸ்ரீப்ரியாவுடன் மழை பொழிந்தது காட்டிலே அய் ராமா அய் ராமா என்று ஒரு ஆபாச கூத்து பாட்டு பாடி ஆடுவார் !!!???).
தியாகி - இதுவும் ஒரு கொடுமை படம் சார்
வெற்றிக்கு ஒருவன் - கண்டிப்பாக ஒரு வெற்றி படமாக இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஹிட்லர் உமாநாத் - ஹிட்லரை நேரில் பார்ப்பது போலவே இருக்கும் (சொம்மா டமாசு சார்). செம சொறி ....
விஸ்வரூபம் - இதிலும் ஸ்ரீப்ரியாவுடன் தல ஜோடி கட்டி இருப்பார்னு நெனக்கறேன்.
அமரகாவியம். இந்த படம் ஒரு டகால்டியாக தான் இருந்திருக்கணும். (முன்பு ஒரு அமரகாவியம் வந்தது, அது சூப்பர் படம், ஸ்ரீதர் டைரக்ஷன் என்று நினைக்கிறேன்).
ஊருக்கு ஒரு பிள்ளை
என்னை போல் ஒருவன்

ஆனாலும் கடைசியாக அவர் பாந்தமாக நடித்த படிக்காதவன், தேவர் மகன், படையப்பா, முதல் மரியாதை போன்ற படங்கள் பழைய சிவாஜியை நமக்கு நினைவு படுத்தியதை மறுப்பதற்கில்லை / மறைப்பதற்கில்லை.

எது எப்படியோ, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்கிற மாபெரும் நடிப்பு சரித்திரத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அவரின் சாயல் இல்லாமல், இன்றுவரை ஒருவர் கூட நடித்ததில்லை (இந்த நேரத்தில் யாரும் கரடி ராஜேந்தரையும், அவரின் நடிப்பு திறனையும் பற்றி நினைத்தால், நிர்வாகம் பொறுப்பல்ல).

நானும் இங்கே நடிகர் திலகம், சிம்மக்குரலோன் சிவாஜி என்கிற நடிப்பு கடலின் ஒரு சிறு துளியைத்தான் ஆராய்ந்து இருக்கிறேன்.

இதை படிக்கும் நீங்களும், அன்னாரை பற்றி ஏதாவது சுவாரசியமான தகவல்கள் அறிந்தால் பின்னூட்டத்தில் தெரியபடுத்தலாம்.

சிவப்பாய் ஒரு வெள்ளை தேவதை - கதை - பாகம் இரண்டு

பாண்ட் பாக்கெட்டில் கை விட்டு, உள்ளே துருத்திக்கொண்டு இருந்ததை தேடி வெளியே எடுத்தான். பளபளவென மின்னிய அதை ஆசையோடு தடவி கொடுத்தான். அது, அவன் புதியதாக வாங்கி இருக்கும் இரு சக்கர வண்டியின் சாவி. கலைந்த தலைமுடியை ஒரு கையால் தள்ளியவாறு, வீட்டின் வெளியே வந்து தன் இரு சக்கர வாகனத்தை எடுத்து, மெயின் ரோட்டை பிடித்து, எந்த ஒரு சுவாரசியமும் இன்றி, இலக்கின்றி செலுத்தினான். எங்கே போகிறோம், எதற்காக போகிறோம், வண்டியில் பெட்ரோல் உள்ளதா இல்லையா என்று எதைப்பற்றியும் யோசிக்காமல் வண்டி போய் கொண்டே இருந்தது.

அப்போது .........

பக்கவாட்டின் குறுக்கு சந்தில் இருந்து அசுர வேகத்தில் வந்த லாரியின் க்ரீச் என்று கத்திய (கதறிய) பிரேக் ஓசை தான், அவன் வண்டியையும் பிரேக் போட வைத்தது. ஒரு நிமிடம் ஆடித்தான் போய் விட்டான். இது என்ன ??? உயிர் பயமோ?? என்னடா வாழ்க்கை ?? முழுக்கை சட்டை முழக்க நனைந்து அவனின் பரிதாபமான தோற்றத்தை மேலும் பரிதாபமாக்கியது.

சாலையில் போவோர் வருவோர், வருவோர் போவோர் எல்லோரும் ஆளாளுக்கு அட்வைஸ் மழை பொழிய ஆரம்பிக்க, அவன் எதையுமே காதில் வாங்காமல், வண்டியை நகர்த்தி, மறுபடியும் தன் பயணத்தை தொடர்ந்தான். கூடி இருந்தவர்கள், என்ன இவன், இன்னும் கொஞ்சம் இருந்தா உயிரே போய் இருக்கும், இப்படி கொஞ்சம் கவலைப்படாம போறானே என்று கூறியது, அவன் காதில், காற்றை கிழித்து கொண்டு விழுந்தது.......

ஏன் இவ்ளோ கொழப்பமா இருக்கோம் .... இதுக்கு முன்னாடி, இப்படி இருந்ததே இல்லையே ........ ஏன் இப்போ மட்டும் இப்படி ??? கொஞ்சம் யோசித்து பார்த்ததில், ஒரு மாசத்துக்கு முன்னாடி நடந்த அந்த நிகழ்ச்சி ஞாபகம் வந்தது .......

ச்சே, அந்த நிகழ்ச்சி மட்டும் அன்னிக்கி நடக்காம இருந்திருந்தா, என் வாழ்க்கை கூட மத்தவங்கள போல சாதாரணமா இருந்திருக்கும். ... அன்னிக்கே யோசிச்சு இருக்கணும் .... இப்போ எல்லாம் கை மீறி போச்சு .........

அப்படி அவனோட வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த நிகழ்ச்சி எப்போது, எப்படி நடந்தது என்று யோசித்தான். நன்கு மூச்சை இழுத்து விட்டு சுவாசித்தான். மூச்சை இழுத்து சுவாசித்ததில், புத்தி கூர்மை அடைய, ஐம்புலன்களும் விழித்தது போன்று உணர்ந்தான். ஒ, அன்னிக்கி மட்டும் அந்த நண்பனை பார்க்க, அந்த காபி ஷாப்புக்கு போனது ஞாபகம் வந்தது ..........

அன்று .... அங்கே .......
(தொடரும்)

தமிழ் அனக்ரம்

சி வா ஜி
வா யி லே
ஜி லே பி

க ர டி
ர யி ல்
டி ல் லி

வி பூ தி
பூ ணூ ல்
தி ல் லை

அனக்ரம் - அப்படின்னா என்ன என்பவர்களுக்கு

நேர நின்னு படிச்சாலும் பேனப்புடிச்சு தொங்கிகிட்டு படிச்சாலும், அதே வார்த்தைகள்தான் .

சிவப்பாய் ஒரு வெள்ளை தேவதை - கதை

ஒரு புதுமையான முயற்சி இதோ
வாசகர்களுக்கு ஒரு புத்தாண்டு பரிசு.
எடக்கு மடக்கி ஒரு தொடர்கதை. எழுதுபவர் இருவர்.
ஒருவர் ஒரு பதிவு, மற்றவர் அதற்கு எதிர் பதிவு.
…ம்ம்ம் பின்னென்ன சுவரசியம்தனே

இதோ முதல் பகுதி


முதல் பகுதி 1. அதுவா ... இதுவா

கலை தன் தலையிலே கவிழ்த்து கொண்டான். ஹெல்மெட்டை.
விலை பட்டை பியிக்காத சட்டை அணிந்து கொண்டான், இன்று புத்தாண்டு. எப்படியும் இன்று முடித்து விட வேண்டியதுதான். எத்தனை நாள் பொறுப்பது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லாவா. சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. மெதுவாய் எடுத்து கால் சட்டைக்குள் பத்திரப் படுத்தினான். அது ஒரு ....

.... தொடரும்

புத்தாண்டு 2009

புத்தாண்டாம் இனிய புத்தாண்டு
கொண்டாட்டமாய் பிறந்த புத்தாண்டு
அதை மகிழ்வுடன் வரவேற்போம் - நாமின்று
போனது போகட்டும் போனபடி
நாம் நினைப்பது நடக்கட்டும் நல்லபடி

நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்
கொடு என கேட்டால், தாய் பூமியோ வாரி கொடுக்கும்
நினைப்போம் நாமும் நல்லதே எந்நாளும்

கடந்தகால சோதனைகளை துடைத்துவிட்டு
சூழ்ந்துள்ள வேதனைகளை தொலைத்துவிட்டு
புத்தாண்டில் பதிப்போம் சாதனை கல்வெட்டு

ஐந்தறிவு கொண்டவைகள் ஆச்சரியமாய் இணைந்திருக்க
ஆறறிவு கொண்ட நாம் எப்போதும் பிரிந்திருக்க
மதமும், ஜாதியும் துரத்தி அடிக்கும் தூரத்தில்
துரத்த முயற்சிப்போம், நாம் இந்த நேரத்தில்

படைத்தவனின் அருளின்றி நாமெல்லாம் இங்கேது
இதை நாம் புரிந்து கொண்டால் கவலைகள் நமக்கேது

மரம் வளர்ப்போம், நல்ல செடி வளர்ப்போம்
சுற்று சூழல் பாதுகாத்து, மழை வேண்டுவோம்
மனிதம் வளர்ப்போம், மனித நேயம் வளர்ப்போம்
மனிதகுலம் காக்க, படைத்தவனின் பாதம் பணிவோம்
மரணம் வெல்வோம், மனிதனாய் வாழ்வோம்

நல்ல எண்ணங்களை மனதில் நாளும் விதைப்போம் - ஏனெனில்
விதைப்பது நல்விதையானால், மலர்வதும் நன்றாகும்
மலர்வது நன்றானால், நறுமணமும் உண்டாகும்
நறுமணத்தின் சுகந்தத்தை நம் மனமும் கொண்டாடும்

ஆயுதங்களை புறக்கணிப்போம் - நம்மை
அஹிம்சைக்கு அர்ப்பணிப்போம்
தீயவைகள் கண்டறிந்து ஒதுக்கி வைப்போம்
நல்லவற்றின் தடம் அறிந்து செதுக்கி வைப்போம்

கடின உழைப்பிற்கு இல்லை ஈடு இணை
இதை என்றும், எப்போதும் நீயும் நினை
நம்மை வெற்றிகள் அணுக, இல்லை ஏதும் அணை

தானத்தில் உள்ளதோ பலதானம்
அவற்றில் சில - அன்னதானம், கண்தானம், வித்யாதானம்
ஆயினும் - உலகின் தேவை இக்கணம் - சமாதானம்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்