'சித்தம்' - குறும்படம்

புதிய முயற்சிகளுக்கு எப்போதும் ஆதரவு தரும் தோழமைகளின் அன்புக்கு எங்களின் பணிவான வணக்கங்கள்...

நண்பர்களின் துணையோடு, “சித்தம்”” எனும் ஒரு குறும்படம் உருவாக்கி இருக்கிறோம்...

சித்தம்என்பதென்ன?

“எல்லாம் ஆண்டவன் சித்தங்க... !!! ஆண்டவன் சித்தம் இருந்தா நடக்கட்டும்… !!!”

இப்படி பலர், பல சந்தர்ப்பங்களில் சொல்வதை நாம் அன்றாட வாழ்வில் கேட்டிருக்கிறோம்...

சோதனைகளும், வேதனைகளும் நம்மை சூழ்ந்து கொண்டு தாக்கும் போது, நமக்கு மேல் இருக்கும் மாபெரும் சக்தியை உணர்ந்துசித்தம்’ இருந்தால் நடக்கட்டும் என்று சொல்வது நம் மிகப்பெரிய பலம்.

இந்த நுண்ணிய உணர்வை ஒரு கற்பனை கதையின் மூலம் அனைவருக்கும் எடுத்து சொல்லஒலி ஒளியின்உதவி கொண்டு ஒரு குறுங்கவிதை வடித்துள்ளோம்...

தங்களின் மேலான ஆலோசனையும், கருத்து பகிரலும் வேண்டி விரும்புகிறோம். இனி, ”சித்தம்குறும்படத்தை ரசியுங்களேன்...

”சித்தம்” குறும்படத்திற்கான YOUTUBE LINKS :

பார்ட் - 1

http://www.youtube.com/watch?v=VyVNcRKKGt4&feature=mfu_in_order&list=UL

பார்ட் - 2

http://www.youtube.com/watch?v=0fkLqLhdmGw

(ஆர்.கோபி / லாரன்ஸ்)

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் - இறுதி பகுதி

சீக்கிரம் கிளம்புங்க….., ப்ளேன் வர்ற நேரமாச்சு. இங்கின இருந்து வேன் போறதுக்கே ஒரு மணி நேரமாகுமாம். சுணங்காம கிளம்பு. வேலுவின் தாயார், அரக்க பரக்க அடுப்படிக்கும் தாழ்வாரத்துக்குமாய் நகர்ந்து கொண்டிருந்தார். என் மகன் பாரின்ல இருந்த வர்றான் எனும் பெருமிதம் அவர் முகத்தில் சிரிப்பாக மலர்ந்திருந்தது. புள்ளைன்னு பெத்தா இவள மாதிரி பெறனும், குடும்பத்தயும் பாத்து பதவீசா நடக்குற நல்ல புள்ளயாவும் இருக்கணும், குடும்பத்த தூக்கி நிறுத்துற புள்ளையா இருக்கணும், என பக்கத்து வீட்டு அக்காள் சொன்னது ரொம்ப பிடித்தது. ஆம் அவள் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது எனவும் உணர்ந்தாள், வெளியில் சொல்லவில்லை.

வேலுவின் அக்கா, அந்த அதிகாலையிலேயே குளித்திருந்தார். வெளியில் செல்ல உடுத்தும் சேலையை வீட்டுக்கு கட்டியிருந்தார்… புதுப் பெண்ணல்லவா….. அம்மாவை பார்த்து ‘ஏம்மா, வேலு எவ்வளவு காசு கொண்டு வர்றதா சொன்னான்’ என லேசான கவலையுடன் கேட்டாள். அம்மா திரும்பி அவளை பார்த்து, நீயேண்டி கவலை படுறே, காசு பிரச்சனைய பாத்துக்கிறது எங்க வேலை. எல்லாம் நல்லபடியா நடக்கும். இடைமறித்து அக்கா சொன்னாள், இல்லம்மா நகையும் ரொக்கமுமா மூணு லட்சம் முகூர்த்ததுக்கு முன்னால கொடுத்துறலாம்ன்னு அவன் சொன்னானே அதுக்கு கேட்டேன்.

எல்லாம் சரியா இருக்கும்டீ. கூட வேண்டிய நேரத்துல எல்லாம் கூடி வரும்.. புகுந்த வீட்டுல போயி, நம்ம வீட்டு கவுரதய காப்பாத்து, அப்புறமா சுணங்காம பருப்பு வேகுறத இறக்கி வைச்சுரு. கவனம் என சொல்லிவிட்டு அடுத்த வேலைக்கு வேகமாய் நகர்ந்தார்.

**************
விமானம் கிளம்பி, வானத்தில் மிதந்ததும் வேலு தன்னை தளர்த்தி கொண்டான். மனம் லேசாகி, எண்ணமும் கூட இறக்கை கட்டிஅந்த விமானத்துடன் பறந்தது. சோதனைகள் தாண்டினால் தான்யா சாதனை என்று ரஜினி அவர்கள் ஏதோ ஒரு விழாவில்சொன்னாரே... அது எவ்வளவு நிதர்சனமான உண்மை... இப்போது என் மனம் எதையோ சாதித்து விட்டதை உணர்கிறதே. இந்த சாதனை தரும் நினைவே சுகம். அதுதான் உச்சகட்ட சுகம். பெறுவதில் அல்ல கொடுப்பதில் தான் சுகம் என்பது இப்போதல்லவா புரிகிறது.

விர்ரெனும் விமான ஓசையும், உயர்தர உணவும் உறக்கத்தை அன்பளிப்பு செய்தன. கால் நீட்டி, உடலை குறுக்கி வேலு உறங்கினான். உறங்கும் போது தொடர்பில்லாமல் நிறைய கனவுகள் அலை மோதின.
கனவில் ரஜினி வந்தார், பட்டென்று கை பிடித்து, படபடவென நிறைய அறிவுரைகள் கூறினார்.... பல பழைய படங்களில் இருந்து தன்னம்பிக்கை ஊட்டும் பல பாடல்களை கேட்க சொன்னார்.... இன்னமும் என்னன்னவோ நிகழ்வுகள் வரைமுறையின்றி மனதுள் சுழற்றி அடித்தது...

திருச்சியில் விமான பணிப்பெண் தட்டி எழுப்பிய பின் தான் விழித்தான்..,... துள்ளி எழுந்தான்.. தாய் மண்ணில் வந்து சேர்ந்ததும், விமான நிலையத்தின் பெயர் பார்த்ததும் அழுகை வந்தது. கண்ணும் மனமும் அலைபாய்ந்து அங்கும் இங்கும் பார்த்தது.
எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து தன்னுடைய பெட்டிகளுடன் தாய் மண்ணில் கால் வைத்தான்.... உடல் மீண்டும் சிலிர்த்தது.... கம்பீரமாக நடை போட்டு வாசல் நோக்கி விரைந்தான். அன்றைய காற்றுக்கு உயிர் இருந்தது. நம்ம ஊரு காத்துக்கு ஒரு தனி உசிரு இருக்குது என மனசுக்குள் சொல்லிக் கொண்டான். காற்றும் அவனை அணைத்து, மெல்ல அவன் உடலை வருடிகொடுத்தது.... பாசமாய் தலை கலைத்தது.... முன் நெற்றியில் விழுந்த முடிக்கற்றையை மெல்ல விலக்கினான்.. பார்வை பளிச்சிட்டது....
வரவேற்க யார் வந்திருப்பார்கள் என கண்ணாடி தடுப்பின் வழியே பார்க்க முயற்ச்சித்தான். வாசலில் வேலுவின் குடும்பத்தார் யாரும் கண்ணுக்கு தென்படவில்லை,, ஆனால் மிகவும் பரிச்சயமான ஒரு முகம், துளசி, துளசியா? ....
ஆம் அது துளசிதான். அந்தமுகத்தை எப்படி மறக்க முடியும்....காதலை எனக்கு அறிமுகம் செய்த முகமல்லவா… என்னை காதலனாக்கி, சாமான்யனான என்னை எவ்வளவு கவிதைகள் எழுத வைத்த முகம் அது.... இந்த மூன்று வருடங்களில் இன்னும் பூசினது போல் இருக்கிறாள்.
அருகில் யார் புதுசாய் இருக்கிறதே? இவ்வளவு நெருக்கமாக இருப்பதை பார்த்தால், அது துளசியின் கணவனா…..ஹும்… இருக்க வேண்டும். இவர்கள் சேர்ந்து வரவேற்க இங்கு ஏன் வந்தார்கள். கேள்விகள் கண்ணாமூச்சி ஆடியது. . நெஞ்சு லேசாக வலித்தது போல் உணர்வு.. தொண்டை அடைத்தது.... பளிச்சிட்ட கண்களில் லேசாக இருள் சூழ்ந்தது... கீழே விழாமல் இருக்க அவஸ்தைப் பட்டான. கண்ணில் பார்வை தடுமாறியது, அருகில் வந்தாகிவிட்டது..

நான்தான் சரவணன், துளசியின் அருகில் இருந்தவன் தான் தொடங்கினான், ' வாங்க வேலு' ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்கோம்.. துளசி எந்த சலனமும் இல்லாமல் உடன் வந்தாள். கண்ணில் மட்டும் மகிழ்ச்சி மின்னியது. வேலுவுக்கும் வார்த்தைகள் சண்டித்தனம் செய்தன. நல்லாயிருக்கீங்களா சரவணா....

பளிச்சென்று மின்னியது. சரவணா…. சரவணா... ஆம், இது சரவணகுமார்…. இவர் என் தங்கைக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளைஅல்லவா, ஆம் அவர்கள் அனுப்பிய போட்டோவில் வந்த முகம்தான். நேரில் பார்க்க மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. சரி இவர் எதற்காக இங்கே வந்தார், இவருக்கு துளசியை எப்படி தெரியும். மற்றவர்கள் எங்கே, அவர்கள் யாரையும் காணவில்லையே. துளசி எப்படி சரவணனுடன் வந்தாள். அடுக்கடுக்காய் கேள்விகள் வந்து விழுந்தன.

கேள்விகள் நிறைய விழுந்தாலும் விடை மட்டும் காணாது நிற்க, மெல்லமான நடையில் வாசலுக்கு வெளியே வந்தாகிவிட்டது..ஆஹ்… இங்கே இருக்கிறார்களே!!! அதோ அம்மா, அக்கா , கூட்டத்தில் தள்ளிக் கொண்டு வருகிறார்கள்...

அம்மா எப்படிம்மா இருக்கீங்க.. வார்த்தை வரவில்லை, உதடுகள் துடித்தன, இதயம் பொங்கியது, நெஞ்சடைத்தது, வார்த்தை முட்டியது. வார்த்தை வெளிவராத அந்த சூழலில், கண்கள் மட்டுமே அதை கேட்க, தாயுள்ளம் அதை புரிந்து அவனை அணைத்து கொண்டது.

இத்தனை நாள் பார்க்காத ஏக்கம், அவனை பிரிந்த துக்கம், கண்ணீரின் வடிவில் எட்டிபார்த்தது. உடல் குலுங்கியதில் அவளின் அழுகை தெரிந்தது. தாய் தன் மகனை வாஞ்சையுடன் தோள் தடவி ஆசுவாசப்படுத்தினாள்.
டேய்... ஜம்முன்னு ராஜா கணக்கா இருக்கேடா, வெள்ளக்காரதுரை மாதிரி கால்ல பூட்டிஸ், முழுக்கை சட்டை எல்லாம். வீட்டுக்கு போன மொத வேலையா சுத்திப்போடணும்டா... நம்ம துளசி ரொம்ப கொடுத்து வைச்சவ. அந்த கடைசி வார்த்தை மனதில் ஓராயிரம் சேதி சொல்ல, புது மலர்ச்சியுடன் நிமிர்ந்து வேலு தன் தாயைப்பார்த்தான். அவன் முக மலர்ச்சியில் பல பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறந்தன...

"துளசி இங்கே வாம்மா" - இது அம்மா.. என்னடா வேலு பாக்கிறே . 'உன் துளசி'டா. உன்னை பாக்கணும்னு பிடிவாதமா சண்டை போட்டு வந்தா.. சரவணன் தான் இங்க யாரையோ ஃப்ரெண்ட பிடிச்சு, நான் உள்ளே கூட்டிட்டு போறேன்ன்னு கூட்டிட்டு போனான். வேலு முதல்ல துளசியை பாக்கட்டும்னு சொன்னான்.

எனக்கும் வயசாயிருச்சு, இந்த கல்யாணத்தோட, உன் கல்யாணத்தையும் முடிச்சுறலாம்ன்னு யோசனை. உனக்கு சரின்னா, துளசிக்கும் உனக்கும் அதே முகூர்த்தத்தில ஒரே மேடையில கல்யாணம் வச்சுரலாம்.... என்னடா, அம்மா சொல்றது ரைட்டுதானே. சிரித்தாள் அம்மா..
துளசி வெட்கத்தால் தலைகுனிந்தாள், வழக்கம் போல கால்கள் தரையில் புள்ளி எதுவும் வைக்காமலேயே பெரிய பெரிய கோலங்கள் போட்டது... தலையை குனியும் அந்த ஒரு நொடியில் வேலுவின் கண்ணை சந்தித்தாள். உலகின் உச்சகட்ட சந்தோசம் அவர்கள் இருவருக்கும் அந்த ஒரு நொடி பார்வையில் வாய்த்தது. இதுதான் காதலின் உன்னதம். புனிதம்.
அனைவரும் வாடகை வேனில் ஏறி அமர, டிரைவர் வண்டியை ஸ்டார்ட் செய்து, டேப்பை ஒலிக்கவிட்டார், உச்சபட்ச குரலில் ஒரு அட்டகாசமான சூப்பர் ஹிட் பாடல் அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒலித்தது.

'சிங்கநடைபோட்டு சிகரத்தில் ஏறு ,
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு'
வேலு தலை திருப்பி, துளசியை பார்த்தான், துளசியின் கனிந்த பார்வை சொன்ன ஓராயிரம் விஷயங்களை அவன் மனம் ஒரு நொடியில் கிரகித்ததில், அவன் சிகரத்தை அடைந்தான். தன் வாழ்க்கை அர்த்தமும் இனிமையாகவும் உள்ளதாய் வேலு உணர்ந்தான்.
முற்றும்....

(லாரன்ஸ் / ஆர்.கோபி)

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் (பகுதி-1)

நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இரு பகுதிகளாக ரஜினிஃபேன்ஸ்.காம் தளத்திற்கு நாங்கள் எழுதிய குறுங்கதை, இதோ உங்கள் பார்வைக்கு...

***************

*****************************************************************************************************************

ரெக்ட் டைம்தான்…!!!!

ஹலோ…. ஆங்…. 4 மணிக்கு கரெக்டா ஃப்ளைட் லேண்டிங் ஆயிடும், ஹாங்…திருச்சியிலதான்.

ஆமா….. எல்லாம் முடிஞ்சு ஒரு மணி நேரத்துல வெளிய வந்திருவேன். என்னது, ஆமாம்…. துபாய்ல 12 மணிக்குகிளம்பும்… கரெக்ட்டைம்தான். வேலு அவசியத்துக்கு அதிகமாக கொஞ்சம் உரக்கத்தான் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்.

ஃப்ளைட் டிக்கட் புக்செய்து விட்டு, அந்த ரிசப்ஷனில் இருந்து வீட்டுக்கு டெலிபோன் செய்தான். குரலில் உற்சாகம் ப்ளஸ் லேசான பதட்டம் இருந்தது. இருக்காதாபின்னே, மூன்று வருடங்களுக்கு பின் தாய்நாடு செல்வதும், குடும்பத்தை பார்ப்பதும், சாதாரணமான விஷயம் இல்லையே (குறைந்தபட்சம் அவனளவில்.....)...

வெற்றி நிச்சயம்…..இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்....

திரைப்பாடல் வரி அவன் மனதில் சுழன்றோடியது. அடேயப்பா எத்தனை வலிவு மிக்க வார்த்தைகள். பிரச்சனை என வந்து துவண்டு இருந்த போது, டிவியில் ரஜினியின் முகமும் இந்த பாடலும் பார்த்த போது மனதில் ஒட்டி கொண்டது.

எத்தனை உடல் மன கஷ்டம் வரும் போதும், இந்த பாடல் வரிகளை நினைவு படுத்தி மனதிற்குள் பாடினால்…. புது உத்வேகம் வந்து விடுமே. சினிமாவுக்குத்தான் எத்தனை பெரிய சக்தி. தேங்க்ஸ் தலைவா... என்னை போன்ற எத்தனையோ பேருக்கு இப்படி முன்னுதாரணமாய் நீ இருக்கிறாய். கண்கள் லேசாய் கலங்கியது, அதில் சோகம் இல்லை, பெருமிதமே, அன்பு கலந்த பெருமிதம்.

அப்பா…என்ன ஒரு சுமை இந்த மூன்று ஆண்டுகளில். என்னவெல்லாம் நடந்துவிட்டது. பெரிய கனவுகளுடன் அந்நிய மண்ணில் வந்து இறங்கிய அந்தநாளும், ஏஜெண்டால்தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தபொழுதும், எப்படிவலித்தது.

பின் அந்த ஏமாற்றங்களை மெல்ல மெல்ல மென்று முழுங்கி, ஊருக்கும் உறவுக்கும் கொஞ்சம் மட்டுமே சொல்லி, எல்லா வேதனையையும் தானேதாங்கிக் கொண்டதும், ஹூம்… எல்லாம் நல்லதாய் நடந்து முடிந்துவிட்டது..

இருக்க இடமும் பசிக்கு உணவில்லாமலும் துபாய் வெயிலில் தனியாளாய் நின்ற போது, வாழ்க்கை எவ்வளவு கடினம் என புரிந்தது. அதே நேரத்தில் முன் பின் அறிமுகம் இல்லாத, நண்பனோ உறவோ இல்லாத பஷீர் அண்ணன் வந்து சாப்பாடு வாங்கிக் கொடுத்து, அவர் ரூமிலேயே தங்கவும் வைத்து, ஒரு வேலையையும் ஒரு வாரத்தில் ஏற்பாடு செய்து கொடுத்து, என் வாழ்வை திசை அல்லவா திருப்பி விட்டார்.

என்றாலும் இந்த மூன்று வருடத்தில் உலகம் என்ன வென்றுபுரிந்தது. யார் நண்பன், பசி என்றால் என்ன, உழைத்தும் காசு கிடைக்காததின் ஏமாற்றம் என்ன, சம்பளத்தின் விலை என்ன, சுயகட்டுப்பாடு என்றால் என்ன என எல்லாம் புரிந்தது.

இன்ப துன்பம் என்பது, இரவு பகலை போன்றது
காலம் நாளை மாறலாம், காட்சி எல்லாம் மாறலாம்
சோகம் என்ன தோழனே, சூழ்ச்சி வெல்வாய் வீரனே
எதிர்த்து நின்று போரிடு இன்று ஓய்வெடு

தோளைக் குறுக்கி, பேண்ட் பாக்கெட்டில் கை நுழைத்து, ரஜினி புகை மண்டலங்களோடு பாடி கொண்டிருந்தார்…. வேலுவின் மனத்திரையில். ரஜினியை வேலுவுக்கு ரொம்ப பிடிக்கும். வெற்றி பெற துடிக்கும் ஒவ்வொரு சராசரியின் மனதிலும் விசுவரூபமாய் எழுந்து நிற்கும் உருவம். முடியும் சாதிக்க முடியும், நேர்மையாய் நம்பிக்கையுடன் முயற்சி செய். உன் வாழ்க்கை உன் கையில் என மறுபடி மறுபடி சொல்லும் உருவம்.

பாடல் கேட்கும் நேரத்திலே, உடல் புல்லரிக்கும், புது ரத்தம் பாயும். கண்கள் கலங்கும் என்றாலும் தன்னம்பிக்கை நிமிர்ந்து நிற்கும். தேங்க்ஸ் தலைவா, தேங்க்ஸ்..

டேய்வேலு…வாடா!!!! சம்பாதிச்சு சம்பாதிச்சு என்னத்த கண்டோம். மாசத்திலஒரு நாளு லீவுல தியேட்டர் போயி, ஒரு சினிமா கூட பார்க்கலேன்னா எப்படி. என அழைத்த நண்பனை மெல்லமாய் விலக்கி விட்டு, வேலை இருக்குது, இன்னிக்கு ஓவர்டைம் கமிட் பண்ணிக்கிட்டேன், நீ போயிட்டுவா, என அனுப்பிவிட்டு, வேலைக்கு செல்வான் வேலு. ஒவர் டைமின் உபரி காசும், பொழுதுபோக்கில் செல்வழிக்காத காசு எனவும் இரட்டை சம்பாத்தியம் என மனம் கணக்கு கூட்டும்.

ஆள் இல்லாத சாலையில் ஒருமையில் குப்பை பொறுக்குகிறபோது, அழுகை வரத்தான் செய்தது. விரைந்து செல்லும் கார்களில், சில இந்திய முகங்கள் தெரிய, அவர்களின் முகத்தில் விடுமுறை கொண்டாடும் உத்வேகம் பார்க்கும் போதும், இவங்களுக்கெல்லாம் லீவு இருக்கே, எனக்குமட்டும் ஏன் இல்லை.

ஏன் என் தலையெழுத்துமட்டும் இப்படிஆயிப்போச்சு, என சிந்தித்த போது, துபாய் சூட்டையும் மீறி உள்ளம் கொதிக்கத்தானே செய்தது. இப்படி அயல்நாடு வந்து கஷ்டப்பட்டால்தானே, வீட்டில் இருக்கும் மற்ற ஜீவன்கள், கொஞ்சமாவது சுகப்பட முடியும் என்று நினைத்து, வெளி வந்த கண்ணீரை துடைக்கவும் இல்லாது, காற்றுக்கு அனுமதி தந்து அந்த அழுகையிலே கரைந்தேன்...

இருக்கும் ஒரே நிலத்தையும் விலைக்கு விற்றுவிட்டு, முள்ளங்கி பத்தை மாதிரி 2 லட்சம் ரூபாயை ஏஜெண்ட் கையில் கொடுத்தபோது, அந்த ஏஜெண்டின் சிரிப்பில் இருந்த கள்ளம் எப்படி நமக்கு தெரியாமல் போனது,. அந்த சிரிப்புக்கு பின்னால் ஒளிந்திருந்த கபட நாடகம் எப்படி தெரியாமல் போனது.

வெளிநாட்டு வேலை, போய் ரெண்டு, மூணு வருஷம் நாம மட்டும் கஷ்டப்பட்டா, நம்ம வீட்டுல இருக்கற மத்தவங்க கஷ்டம் எல்லாம் முடிந்துவிடுமே என்ற எண்ணம் மட்டுந்தானே இருந்தது.

அம்மா மட்டும் அழுது கொண்டிருந்தாள், சேலைத் தலைப்பை கையில் அடக்கி தன் கண்ணீரை துடைத்து, பொங்கி வரும் அழுகையை அடக்கவும் செய்து கொண்டிருந்தாள். தன் தாய்வீட்டுசீதனம் என யோசித்ததாலோ என்னவோ, பரம்பரை சொத்து கை விட்டு போகிறதே என்ற எண்ணமோ அம்மா கண்ணில் இருந்து வந்த கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.... ரிஜிஸ்டர் ஆபிசின் அந்த மாடிப்படிக்கு கீழே அவளிடம் சொன்ன வார்த்தை இன்றும் காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது.

’விசனப்படாதீங்கம்மா, எப்படியும் நம்ம கையவிட்டு போன இதே நிலத்தை நாம வாங்கிறலாம். சாமி சத்தியமா, அக்காவ கரையேத்தி, நம்ம கடனையும் முடிச்ச பின்னால, நிச்சயம் இந்த நிலம் வாங்கிறலாம். என்ன மிஞ்சிப் போனா, ஒரு அஞ்சு வருசம், அவ்வளவுதேன்…அமைதியாய் தீர்மானமாய் வேலு சொல்ல, தாய் தலை நிமிர்ந்து பார்த்தாள்.

நம்பிக்கை அவள் கண்களில் கண்ணீரையும் கடந்து பளிச்சிட்டது. என் மவன் தலை எடுத்தா என் குடும்பம் உருப்பட்டுறும் என அவள் ஊரிடம் எல்லாம் சொல்வாளே அது நடக்கும் எனும் நம்பிக்கை.

கண்ணீர் துடைத்த அந்த கண்களில் இப்போது நம்பிக்கை ஒளிவிட்டது.....

******
துபாய் ஏர்போர்ட் வெளிச்சமாய், சுத்தமாய் இருந்தது. மனதில் நிழலாடிய பழைய சில சிந்தனைகள் நூலறுந்த பட்ட மென சட்டென கலைய, தன் கைப்பையை நழுவவிடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டான்... இதில்தான், அம்மாவுக்கும், சகோதரிக்கும் வாங்கிய வளையல்கள், தோடு எல்லாம் இருக்கு.....துபாய் தங்கத்துக்கு தனி மவுசுதான். இன்னொரு பொட்டியில வீட்டில் உள்ள எல்லாருக்கும் வாங்கின செண்ட், துணி மணிகள், சோப்பு மற்ற இத்யாதி விஷயங்கள் இருந்தது.... விமான சர்வீஸ் சொல்லும் எடைக்கு அதிகமாக ஒன்றும் இல்லை... ஆகவே, அந்த கிளியரன்ஸ்ல பெரிய பிரச்சனை இல்லை என்பதில் ஒரு நிம்மதி.....

ஏர்போர்ட் உள்ளே நிறைய பயணிகள்.... எல்லார் கைகளிலும் ஏதாவதொரு பை.... பையினுள்ளே, சுற்றம், சூழல் எதிர்பார்க்கும் சில பல வெளிநாட்டு பொருட்கள்.... எல்லார் முகத்திலும் ஏதாவதொரு சோக ரேகை ஓடுவதை போல் வேலு நினைத்து பார்த்தான்...

ஒரு வேளை நம் சோகம் அனைவரின் முகத்தில் பிரதிபலிக்கிறதோ என்னவோ என்று கூட தனக்குள் சொல்லிக் கொண்டான்....

டிங்… டிடிங்…. பலப்பல விமானங்களின் நேர அறிவிப்பு வேலுவின் சிந்தனையை பெரிதாக கலைக்கவில்லை.... இங்க வந்து, ஊருக்கு திரும்பி போற எல்லாருமே என்னிய மாதிரி ஏதாவதொரு வழியில் ஏமாற்றப்பட்டு இருப்பார்களோ? இல்லேன்னா, சந்தோஷமான முகத்தோட ஏன் திரும்பி போகல என்று நினைத்து லேசாக சிரித்துக்கொண்டான்....

அட, இந்த சிரிப்புகூட நமக்கு 3 வருஷம் கழிச்சுல்ல வருது.... நேத்து வரைக்கும், நம்ம மனசுல சோகம் பாசி மாதிரி ஒட்டிட்டுதான இருந்தது.... இப்போ வந்த இந்த லேசான சிரிப்பு அதுவும், கையில கொஞ்சம் காசோட வீட்டுல இருக்கறவங்கள பார்க்கப்போறோம் என்பதால் தானே?

கையில் டிராப்ட்டாய், ஒரு லட்சத்து எண்பத்து ஏழாயிரம் ரூபாய் உள்ளது. மாப்பிள்ளை வீட்டு காரங்க கிட்ட மூணு லட்சம் கொடுக்கணுமே. என்ன செய்யலாம், கொஞ்சம் தவணை கேட்கலாமோ. வேண்டாம் வாழ போற நம்ம வீட்டு பொண்ணு, புகுந்த வீட்டுக்கு போகும் போது ஜம்முன்னு போகணும். கடன உடன வாங்கியாவது சரி செஞ்சிப்புடணும். துபாய் போய், மறுபடி ஒரு ரெண்டு வருசத்துல கடன அடைச்சு புடலாம். நம்பி பணம் தருவாங்க. பார்க்கலாம், பஷீர் பாய் ஒரு நம்பர் கொடுத்துருக்காரு, ஊருக்கு போனதும் பேசிடணும்.

ஏர்போர்ட் பளபள சுவரில், குளிர் நீர் வினியோகத்தின் அருகில் சென்றான். கவிழ்த்து வைத்திருந்த பிளாஸ்டிக் கப்பில் ஒன்றை கவனமாய் எடுத்து, நீர் சேகரித்து குடித்தான்.

புதியதாய் அணிந்திருந்த அந்த சட்டையின் காலர், கஞ்சி போட்ட விரைப்பில் கொஞ்சம் அழுத்தமாய் கழுத்தை பிடித்தது. புதிய சட்டையின் வாசமும், காலை இருக்கி பிடித்திருந்த அந்த புதிய ஷூவும் வேலுவுக்கு பிடித்திருந்தது. ஊர் சென்றதும் நம் பஜாரில் உள்ள கடை சென்று வடையும் டீயும் சாப்பிட வேண்டும். அந்த சுவை மாதிரி எங்குமே இல்லை.

மனம் இன்று புதுமையாக இருந்தது. ஏனோ தெரியவில்லை, இன்று கவலைகளின் கழிவுகள் இல்லாமல், உடல் லேசாக இருந்தது. மனம் துளசியை நினைத்தது, அவள் நினைவுகளையும் முகத்தையும் மனதில் தேடியது. அவள் எப்படி இருப்பாள், ம்… இந்த மூன்று வருடத்தில் கல்யாணம் முடிந்திருக்கும். வீட்டு பிரச்சனை, பணப் பிரச்சனை எல்லாம் என்னை கோழையாக மாற்றி என் காதலை சொல்லாமல் அல்லவா தடுத்துவிட்டது. ம்…. நினைப்பதெல்லாம் நடந்தா விடப் போகிறது. நீண்ட பெருமூச்சுடன் அந்த நினைவை அவன் கலைத்தான்.

விதி அங்கனம் இல்லாது, அவனுக்கு தர வேண்டிய அதிர்ச்சியை தயாராக்கி, இந்திய ஏர்போர்டிலேயே அவனை அடித்து விட திட்டமிட்டது. விதியின் திட்டம் அறியாத வேலு, மெல்ல நடையில் ஏர்போர்ட் உள் விரைந்தான். விதியும் அவன் கூடவே பயணித்தது (டிக்கட் வாங்காமல்)

(விதியின் விளையாட்டு அடுத்த பகுதியில்......)

லாரன்ஸ் / ஆர்.கோபி

பொங்கலோ பொங்கல்

நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


மார்கழி முடிந்து பிறந்தது தை
மனதில் நாளும் நம்பிக்கை வை

புதிதாய் வாங்கிய பானை இங்கு
அதை சுற்றி கட்டிய மஞ்சள் கிழங்கு

சந்தையில் வாங்கிய அடிக்கரும்பு
அதனுடன் வாங்கிய பூவும் அரும்பு

மாவால் போட்ட பல வகை நெளிக்கோலம்
அது காட்டியது கன்னியர்களின் கைஜாலம்

உமி களைந்து எடுத்த சம்பா அரிசி
அது நீரோடு நீராக ஒட்டி உரசி
அதனுடன் உடைத்து சேர்த்தது வெல்லம்
அதை இதமாய் பதமாய் சமைத்தது இல்லம்

மேக கூட்டம் களைந்து, வானத்தை பிளந்து
சூரிய கதிர்கள் பளீரென பிரகாசம் காட்ட

இருண்ட சூழல் விலகி வெளிச்சம் கூட்ட
சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியை அடைய

நம் பூவுலகின் இருள் விலகியது.
அதுபோல் நம் வாழ்வின் இருள் விலக
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்

அனைவரும் ஒன்று கூடி உரக்க கூவுவோம் -

"பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்"