கையில் உள்ள பாஸ்போர்ட் லேசாய் கனத்தது. நம் ஊர் விட்டு அயல் நாடு வரும் போது இது ஒரு தொல்லை. எப்போதும் நாம் யார் என்று சொல்லும் எதாவது ஒரு அடையாள சீட்டு கையில் வைத்து கொண்டு இருக்க வேண்டும். இல்லை என்றால் காவலர் வசம் சிக்கி, திக்கி பின் விக்க வேண்டி இருக்கும்.
இந்த தொல்லை இவருக்கு இல்லையே. அது ஏன். உடன் வந்த நண்பர் சொன்னது. நாளை காலை நம் அலுவலகம் சென்றதும் பாஸ்போர்ட் கொடுத்து மெடிக்கல் டெஸ்ட் செய்து முடித்து விட்டால் நம் பாஸ்போர்ட்டில், நாம் பணிபுரியப்போகும் அலுவலகத்தின் பெயரை விசா வடிவில் ஸ்டாம்ப் ஆனதும் நம் கையில் பத்தாகா (PATHAKA) கிடைக்கும்.
ஞே! என்று இருந்தது. ஒன்றும் புரியவில்லை. விசா... பத்தாகா. எந்த லாலா மிட்டாய் கடையில் கிடைக்கும் என்று கேட்க வாய் வரை வந்தது, கேட்கவில்லை.
அன்னிய நாட்டில் தங்க அனுமதி தருவது விசா (Visitors Intention to Stay Abroad என்பதின் சுருக்கம் தான் விசா என்பது).
அந்நிய நாட்டின் உள்ளே வந்தவர், விசா மெடிக்கல் முடித்து, வேலை செய்ய தகுதியானவர் என்று ஆஸ்பத்திரி அத்தாட்சி வழங்கியவுடன் இந்த வேலைக்கான விசாவை கம்பெனியின் பெயருடன் பாஸ்போர்டில் சீல் குத்தி, ஒரு அடையாள அட்டை வழங்குவது ஆங்கிலத்தில் லேபர் கார்டு. தமிழில் பணி அட்டை. இதற்கு தமிழில் இப்படி சொல்லி விடோம். பணி அட்டை என்று சொன்னால் கடிக்கவா செய்யும். பத்தாக்கா என்று செல்லமாய் அமீரகத்தில் அழைப்பார்கள்.
இதே அட்டையை இக்காமா என்ற பெயரில் சவுதி அரேபியாவில் அழைப்பார்கள். ஒரே அரபி மொழியில் ஏன் இரண்டு வேறு வார்த்தைகள் என்ற கேள்விக்கு பதிலை சாய்சில் விட்டு விட்டேன்.
இங்கு இன்னும் ஒரு கொடுமை உண்டு. நம் பாஸ்போர்ட் நம் வேலை செய்யும் நிறுவனத்தில் கொடுத்து விட்டு அவர்கள் தரும் பணி அட்டையை சுமந்து கொண்டுதான் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டி வரும். நாடு விட்டு நாடு செல்ல பாஸ்போர்ட் வேண்டும். அதை பணயம் வைத்து விட்டு தான் வேலை தொடங்க வெண்டும். நிறுவனங்கள் பாதுகாப்புக்காக செய்யும் தகிடு தத்தம் இது.
அரபு நாடுகளில் கூட இது போன்று ஒருவரின் பாஸ்போர்ட்டை கம்பெனி வைத்துக்கொள்ள கூடாது என்ற ஒரு சட்டம் உண்டு. அப்படி செய்ய கூடாது என்று. யார் மதிக்கிறார்கள். தான் போடும் சட்டங்களை தானே மீறுவது தானே மனிதனுக்கு அழகு.
அந்த வேலையை இங்கு உள்ளவர்களும் கடைப்பிடிக்கிறார்கள். விசா என்னும் விஷயத்தை கொஞ்சம் விரிவாய் பார்த்தால். பல தரப்பட்ட வகைகள் உண்டு.
வேலை செய்வதற்கான பணி விசா (EMPLOYMENT VISA).
மூன்று வருட ஒப்பந்த்தில், குறிப்பிட்ட கம்பெனியில் பணி செய்ய அனுமதி. மூன்று வடுடங்களுக்கு பின், மறுபடியும், விசா மெடிக்கல் முடிக்க வேண்டும், பணி செய்ய தகுதியானவர் என்ற சான்றிதழ் வாங்க வேண்டும்..... (ஏன், இவ்வளவு கெடுபிடி....அவர்கள் செய்யும் அனைத்துவிதமான செயல்களிலும் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது அய்யா...)
சுற்றுலா விசா - (TOURIST VISA)
ஊர் சுற்றி பார்க்க வருபவர்களுக்காக மூன்று மாதங்கள் வரை தங்க அனுமதிக்கும் விசா இது.
மாணவர்களுக்கான விசா (STUDENTS VISA)
இங்கு பல்வேறுபட்ட இந்திய (பிட்ஸ் பிலானி) , அமெரிக்க கல்லூரிகள் உள்ளது. இதில் படிக்க, இங்கு தங்க இந்த வகை விசா பயன்படும்.
தொழில் தொடங்குபவர்களுக்கான பிசினஸ் விசா (BUSINESS VISA).
மற்றும் பல வகையான விசாக்கள் உண்டு. நாம் இங்கு பார்த்தது முக்கியமான சில வகையான விசாக்கள் மட்டுமே.
இன்னொரு முக்கியமான விஷயம்... ON ARRIVAL VISA என்ற சங்கதி வெள்ளைத்தோல் உள்ளவர்களுக்கு மட்டும் தான் என்பதான ஒரு விஷயம் உண்டு. இவர்கள் தங்கள் நாடுகளில் இருந்து இங்கு வந்து இறங்கியவுடன், அந்த ON ARRIVAL VISA தங்க தாம்பாளத்தில் வைத்து தரப்படும்.
இவ்வளவு பெரிய இந்திய நாட்டிலிருந்து நமக்கு எல்லாம் அந்த கொடுப்பினை இல்லை.
வீடு வரை செல்ல ஒரு வாடகை கார் அமர்த்திக் கொண்டோம். வகை தொகையில்லாமல் வீட்டு வாடகை என்று முன்னோரு அத்தியாயத்தில் பார்த்தோம்.
அடுத்தது இந்த டாக்ஸி தான். ஏறி அமர்ந்ததும், 3.50 திராம் என மீட்டர் ஆரம்பித்தது. நம் ஊர் கணக்குக்கு ஒரு 45 ரூபாய்க்கும் மேல் (தற்போதைய மதிப்பு 1 திராம் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் Rs.13/-) . அதெல்லாம் சரி, பத்தடி தூரம் நகர்ந்து மீட்டர் 4 திராம் என்று காண்பிக்கும்போது நாம் இறங்குகிறோம் என்றாலும் குறைந்தபட்சமாக 10 திராம் எண்ணிக்கொடுக்க வேண்டும். அது ஏன். 10 திராம் குறைந்த கட்டணம்.
ரொம்ப தூரம் இல்லை, ஒரு 20 கீ.மீ தூரம் சென்றால், சில நேரம் செல்ல வேண்டி இருக்கும். 100 திராம் வரை தர வேண்டி இருக்கும். இந்த தொகையில் சிக்கனமாய் சாப்பிட்டால் ஒரு மாதம் முழுக்க காலை வேளை உணவை சாப்பிடலாம்.
விமான நிலையத்தில் இருந்து கிளம்பினா மீட்டர் 20 திராமில்தான் தொடங்கும். இது ஏன் இவ்வளவு என்றால் இந்த டாக்ஸி கம்பெனியின் ஓனர்தான் இந்த சட்டத்தை போட்டவர். அவருக்கு என்று வரும்போதும் விட்டு விடுவாரா என்ன??
அவ்வளவு ஏன், துபாயின் ப்ளேன் கம்பெனி ஓனர் தான், அந்த துறை மந்திரி. அவரே சட்டம் போட்டுட்டு அவரே கடை பிடிப்பார், அல்லது கடை விரிப்பார்.
வெண்ணை போல் வழுக்கிட்டு ரோட்டுல கார் ஓடுனாலும் நம்ம வயத்துல டன், டன்னாக புளி கரைக்குது. ஏன்?
வெண்ணை போல் வழுக்கிட்டு ரோட்டுல கார் ஓடுனாலும் நம்ம வயத்துல டன், டன்னாக புளி கரைக்குது. ஏன்?
சரி நகர்ந்து செல்லும் வாகனத்தின் கண்ணாடி வழியே கொஞ்சம் வெளியே நடக்கறத பார்ப்போம். வேகமா ஓட்டுற ஒட்டுனர். ஒரு சில இடத்திலே மட்டும் ப்ரேக்கை அமுத்தி கொஞ்சம் மெதுவா போறார். அப்புறம் ஸ்பீடா போறார். கொஞ்ச நேரம் ஆனதும் இதே குத்து... அல்லது கூத்து தான் (இது என்ன உள்குத்து, வெளிகுத்து?). பாத்துடுவோம்.....ஏன் இப்படின்னு?.
வண்டியின் வேகம் பரிசோதித்து, அறிவிக்கபட்ட வேகத்திற்கு மேலே இருந்தால் ஒரு போட்டாவும் எடுத்து நம்ம வண்டி பெயர் பலகையோட சேர்த்து உடனே நம்ம கணக்கிலே ஒரு அபராதமும் விழும். அதுவும் எவ்வளவு தெரியுமா நம்ம ஊர் கணக்கிலே 25000 ரூபாய். மிக விரைவில் நடக்க இருக்கும் மற்றொரு கூத்து இது.
சரி, யாரு நம்மள போட்டோ எடுக்கறது என்றால், சாலைகளில் ஆங்காங்கே பொறுத்தப்பட்டு இருக்கும் ரேடார் கேமராதான்...
இது என்ன பகல் கொள்ளையால்ல இருக்கு என்று நேயர்கள் மனதில் ஒடுவது தெரிகிறது, இதெல்லாம் ஜுஜூபி கண்ணா....வெறும் ட்ரைலர், இன்னும் கொஞ்சம் கேளுங்க... ... அதான் மெயின் பிக்சர்......
சாலிக் : இது புதுசு கண்ணா புதுசு. 100 திராம் செலவழிச்சி நம்ம ஒரு ஸ்டிக்கர் வாங்கி நம்ம வண்டியிலே ஒட்டணும். அப்புரமா வண்டி ஓட்டணும் (இப்போது துபாயில் சாலிக் ஸ்டிக்கர் ஒட்டாத வண்டி ஒண்ணு கூட பாக்க முடியாது).
சரி, மேல என்ன?
சரி, மேல என்ன?
வண்டி ஓடும் போது சில ரோடுகள்லே தோரணம் மாதிரி டோல்கேட் இருக்கும் (இவர்தான் துபாயின் இன்றைய தேதியின் கலக்ஷன் கிங். நம்ம சூப்பர் ஸ்டார் நடிச்ச "சிவாஜி தி பாஸ்" ஒலகம் முழுக்க கலக்ஷன் பண்ணின அமௌன்டை இவரும் ஒவ்வொரு வாரமும் நெருங்கி வர்றார்)..
சத்தம் எதுவும் போடாம அது பாட்டுக்கு நம்ம வண்டியில் உள்ள ஸ்டிக்கர் கிட்ட ஒரு முத்தம் கொடுத்துட்டு நம்ம கணக்கிலே ஒரு 4 திராம் கழிச்சுக்கும். வார்த்தையை கவனியுங்க. கழிச்சுக்கும். ஒரு கணக்குல பார்த்தா எங்க வீட்டிலே இருந்து ஆபிஸ் போயிட்டு வீட்டுக்கு வந்தா ஒரு 32 திராம் தினத்துக்கு கணக்குல கழியுது..... பேண்ட் கிழியுது.......கிழிஞ்சு தொங்குது......
(PHOTOS : SALIK / TOLL & RADAR CAMERA)
(தொடரும்........)
6 comments:
//ON ARRIVAL VISA என்ற சங்கதி வெள்ளைத்தோல் உள்ளவர்களுக்கு மட்டும் தான் என்பதான ஒரு விஷயம் உண்டு. இவர்கள் தங்கள் நாடுகளில் இருந்து இங்கு வந்து இறங்கியவுடன், அந்த ON ARRIVAL VISA தங்க தாம்பாளத்தில் வைத்து தரப்படும்.//
கோபி இதற்க்கு காரணம் நம் ஊரில் உள்ள கட்டுப்பாடுகள் சட்ட திட்டங்கள் என்று நினைக்கிறேன்.
நீங்கள் சிங்கப்பூர் குடிமகனாக பாஸ்போர்ட் வைத்து இருந்தால் நீங்கள் பல நாடுகளுக்கு விசா எடுக்காமலே செல்லலாம்..
இதற்க்கு காரணம் இவர்கள் அவ்வளவு சுத்தமாக கவனிக்கிறார்கள்..நம் ஊரில் பாஸ்போர்ட் எடுப்பது சுலபம் பணம் கொடுத்து எப்படியாவது வாங்கி விடலாம் விரைவில்..
இங்கே அப்படி எல்லாம் கிடையாது ஒரு நபரை பற்றி அக்கு வேறு ஆணி வேறாக தகவல்கள் வைத்து இருக்கிறார்கள்.. எனவே தான் இதை போல நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா தேவையில்லாமலே வந்து செல்லும் படி எளிமை படுத்தி இருக்கிறார்கள்.
//கோபி இதற்க்கு காரணம் நம் ஊரில் உள்ள கட்டுப்பாடுகள் சட்ட திட்டங்கள் என்று நினைக்கிறேன்.//
இருக்கலாம் கிரி.......
//நீங்கள் சிங்கப்பூர் குடிமகனாக பாஸ்போர்ட் வைத்து இருந்தால் நீங்கள் பல நாடுகளுக்கு விசா எடுக்காமலே செல்லலாம்..
இதற்க்கு காரணம் இவர்கள் அவ்வளவு சுத்தமாக கவனிக்கிறார்கள்..நம் ஊரில் பாஸ்போர்ட் எடுப்பது சுலபம் பணம் கொடுத்து எப்படியாவது வாங்கி விடலாம் விரைவில்//
கேள்விப்பட்டிருக்கிறேன் கிரி..... நம்மூரில் தான், பணம் கொடுத்தால், அம்மா, அப்பா தவிர எல்லாமுமே கிடைக்குமே (மன வேதனையோடு சொல்கிறேன்).
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கிரி.
நிறைய புதிய தகவல்கள் தெரிஞ்சுக்கிட்டேன், நன்றி-ஜி.
//பாசகி said...
நிறைய புதிய தகவல்கள் தெரிஞ்சுக்கிட்டேன், நன்றி-ஜி.//
**********
வருகைக்கு நன்றி பாசகி
இன்னும் பல பாகங்களாக வர இருக்கிறது. முழுதும் படியுங்கள் (மொத்தம் 6. பகுதிகள்). ஒரு சில துளிகளாவது மத்திய கிழக்கு நாடுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்க சொல்வதை பார்த்தால்
'சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமா' ன்னு பாட தோணுது.
Welcome Eswari
True...... Even when Ilairayaraja came for a Music Program to Sharjah, he said the same thing.
Post a Comment