பூட்டிய கதவின் அருகில் ஒரு கடையே வைக்கும் அளவுக்கு செருப்புக்கள். இடம் இல்லாதது ஒரு காரணம் என்றாலும், வெளியில் போட்ட செருப்பு காணாமல் போகாததன் நற்பண்பும் குறிக்கப்பட வேண்டும். கதவு திறந்ததும் குளிர் காற்றோடு குப்பென்று ஒரு மணம். நல்லதா கெட்டதா என்று இனம் பிரிக்க முடியாத மணம். புழுங்கிய துணியின் மற்றும் வியர்வையின் கூட்டணியில் துர்வாடை, செண்ட் போலே நறுமணம் என்று கலவையான மணம்.
சிறிய அறை. சுமாராக பத்துக்கு பத்து இருக்கலாம். அதில் மேலும் கீழுமாய் அடுக்கி வைத்த கட்டில்கள். அட, இது என்ன கலாட்டா. படுப்பது மட்டுமே போதுமா. வீடு என்றால் படுக்க மட்டுமா, உட்கார வேண்டாமா, சமைக்க வேண்டாமா, படிக்க வேண்டாமா, ஊரில் டென்ட் கொட்டகையில் பார்த்த அடிமை பெண் படம் ஞாபகம் வந்து சென்றது.
நிமிர்ந்து நிற்க முடியாமல் படுத்து கொண்டோ குனிந்து உட்காந்து கொண்டோ இருக்கலாம். இப்படி முதுகு எலும்பை தொலைத்து கூனி குறுகவா நாம் அந்நிய நாடு வந்தோம். சுய புலம்பலை பின்னுக்கு தள்ளி விட்டு மேலே தொடர்வோம்.
அறைக்குள் ஒரு பார்வை. ஐந்து-ஆறு ஜீவன்கள் அந்த அறைக்குள்ளே. சில பேர்கள் போர்வைக்குள் காணாமல் போயிருந்தார்கள். அதிர்ந்து பேசமால் படுத்து கொண்டு தொலைக்காட்சிகளில் ஓடும் வடிவேல் காமெடி சி.டி நூறு முறைக்கும் மேலாக பார்த்து இருந்தாலும் இப்போது தான் புதுசாய் பார்ப்பது போல் சுவாரசியமாக சிரித்து கொண்டு இருந்தார்கள். பின்னே, இங்கே இவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கே இது மட்டும்தானே?
ஒரு கட்டில் தான் நம் ராஜாங்கம். காலுக்கடியில் அமுத்தி அடுக்கிய பெட்டியிலே தான் நம் உடைமைகள். அவ்வளவு தான் அந்நிய தேச வாழ்க்கை.
இந்த ஐந்து-ஆறு ஜீவன்கள் இருக்கும் அறைக்கு ஒரே குளியல் அறை. இதிலே விஷேசம் இப்போது இல்லை. விடியற்காலையில் தான். ஏறக்குறைய எல்லோரும் ஒரே நேரத்தில் கிளம்ப வேண்டும் என்பதால் காலை கடன் முடித்து குளிக்க ஒவொருவருக்கும் கால அட்டவணை கொடுக்கப்படும். ரூமின் தாதா கடைசியில் குளிப்பார். அப்புராணி முதலில் குளிப்பான். அப்புராணிக்கு கொடுத்திருக்கும் நேரம் காலை நாலே முக்கால் முதல் ஐந்து வரை. குளிப்பதற்கு கொடுக்கப்பட்ட அந்த நேரத்திற்குள் சுறுசுறுப்பாய் எழுந்து குளித்து வெளியே வந்த பின் என்ன செய்ய. சரி மிச்சம் இருக்கும் தூக்கத்தை உட்கார்ந்தோ சரிந்து படுத்தோ சரி கட்ட வேண்டும்.
இது ஐந்து-ஆறு பேர் உள்ள அறைக்கு. சரி பல்லாயிரக் கணக்கில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி கொண்ட அமைப்பில் பொது கழிப்பிடங்கள் உண்டு. இங்கு நடப்பது உலக மகா அநியாயம். பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒரே இடத்திலிருந்து புறப்பட்டு, பல்வேறு திசைகளில் இருக்கும் பணியிடங்களை (வேலை செய்யும் இடம்) அடைய வேண்டும். அதற்கு, இவர்கள் தங்கள் குளிக்கும் அட்டவணையை விடியற்காலை நான்கு மணி முதல் போட வேண்டும்.
இந்த இருப்பிடத்தில் இருந்து செல்லும் பெரும்பாலானோர் தங்கள் வேலையின் பொருட்டு அடித்து பிரித்து எடுக்கும் வெயிலின் கொடுமையை அனுபவிக்க வேண்டும். இந்த வருடம் 60 டிகிரி செல்ஷியஸ் அளவு அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்று அமீரக வானிலை மையம் கணித்துள்ளது. . மத்திய கிழக்கு நாடுகளில் பீக் சம்மர் எனப்படுவது ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள்தான். (இந்த வெயிற் கொடுமையில் இருந்து அனைத்து தொழிலாளர்களையும் காப்பாற்று என்று அந்த கடவுளை மனமார வேண்டுகிறேன்).
ஒரு விஷயம் குறிப்பிட்டாக வேண்டும். இந்த ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் தொழிலாளர்களுக்கு கட்டாயமாக பகல் 12.30 - 3.௦௦00 மணி வரை கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும் என்று அமீரகம் ஒரு சட்டமே இயற்றியுள்ளது. மீறும் கம்பெனிகள் மீது பெரும் தொகை அபராதமாக விதிக்கும் சட்டமும் நடைமுறையில் உள்ளது. இருப்பினும் சில கம்பெனிகளின் விதிமீறல் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அபராதம் செலுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள்.
எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் இவர்களுக்கு மாதம் சேமிப்பாக மிஞ்சுவது என்னவோ 5-6 ஆறாயிரம் மட்டுமே. நான் அறிந்து, தன் பெண்ணின் திருமணத்திற்கு கூட போகாத தொழிலாளர்களை அறிந்திருக்கிறேன்.அவரை கேட்டபோது, நான் ஊர் போய் வரும் செலவை பணமாக அனுப்பினால், ஊரில் வீட்டார் அந்த பணத்தை தன பெண்ணின் திருமண செலவுக்கு வைத்து கொள்வதாக கூறியதால், இவர் செல்லவில்லை என்று கூறினார். என் மனம் கனத்து, கண்ணில் தன்னிச்சையாக, கண்ணீர் வழிந்தது.
சில ஆயிரம் ரூபாய் சேமிப்பிற்காக இப்படி எத்தனை எத்தனை பேர்கள், தங்கள் ரத்தத்தை வேர்வையாக சிந்தி உள்ளார்கள், சிந்தி கொண்டிருக்கிறார்கள்......... நான் முன்னமே சொல்லியது போல், இங்குள்ள அனைத்து பளபளக்கும் கண்ணாடி கோபுரங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு பின்னாலும், பல லட்சகணக்கான தொழிலாளர்களின் கடுமையான உழைப்பும், ரத்தமும், வேர்வையும் உள்ளன......
இப்போது மறுபடியும் குளியல் எபிசோடுக்கு வருவோம்..... நண்பர் சென்று குளித்த பின் நாம் செல்லலாம். ஒரு வகையில் பஸ்சுக்கு சீட் போட தோள் துண்டு உதவுவது போலே. நண்பர் குளித்து வந்த அறையில் நாம் நுழையலாம். வாய்ப்பு கிடைக்க வில்லை என்றாலோ அசதி மிஞ்சியதால் தூங்கி விட்டாலோ மாலை குளியல் தான்.
சரி, இப்படி ஐந்து-ஆறு பேர் தங்கும் இந்த சிறிய புறா கூண்டுக்கு வாடகை மட்டும் வானளவு. சம்பாதிக்கும் சம்பளத்தில் முப்பது சதவிகிதம் தொடக்கி அறுபது சதவீகிதம் வரை கொடுக்கும் அவல நிலை. இந்த கூத்து அமீரகம் மற்றும் கத்தார் நாடுகளில் மட்டுமே... பஹ்ரைன், சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளில் வாடகை குறைவே. ஊரு உலகத்திலெல்லாம் சர்வதேச அரங்கிலே முப்பதுக்கும் கிழே உள்ள வாடகை செலவு இங்கு மட்டும் என் இவ்வளவு அதிகம். அதற்கும் ஒரு சூட்சமம் உண்டு.
உள்ளூர் பிரஜைகளை காப்பாத்த இந்த ஊர் அரசாங்கம் உண்டாகிய முறை இது. ஊருக்குள்ளே நிலமோ வீடோ வாங்கும் உரிமை இந்த ஊர் பிரஜைகளுக்கு மாத்திரமே உண்டு. நம்மை போல் வெளி தேசத்தவர் வாங்க என்று ஊருக்கு ஒதுக்குபுறமாய் சில ப்ரீ சோன்ஸ் மட்டுமே. அங்கும் நம்மால் தொண்ணூத்தி ஒன்பது வருட லீசுக்கு தான் வாங்க முடியும். அதுவும் வாங்கிய சொத்தை வாரிசுக்கு கொடுக்க முடியாது. இதை செய்வதால் நாம் என்ன சம்பாதித்தாலும் உள்ளூர் ஆள் ஓடாமல் உழைக்காமல் நாம் சம்பாதித்ததையே புடுங்கி கொள்ளும் புத்திசாலித்தனம்.
பெரிதாக புலம்பாமல் அவர்கள் கண்ணோட்டத்தில் பார்த்தால் இது போலே சில சட்டங்கள் இல்லை என்றால் இருபதுக்கும் குறைவான சதவிகிதத்தில் உள்ள உள்ளூர் ஆட்களை எப்படி பாதுகாப்பது. எண்ணிகையில் அதிகம் உள்ள அந்நிய தேசத்தார் இவர்களை நாட்டை விட்டு விரட்டி விடும் சூழலும் சிந்திக்க வேண்டும் அல்லவா.
வீட்டில் பெட்டி படுக்கை வைத்து விட்டு கிள்ளும் வயிறின் சீற்றம் அடக்க உணவு விடுதி வரை செல்லலாம் வாருங்கள்.
உலகின் உள்ள அதனை உணவும் கிடைக்கும். அரேபிய ஐரோபிய இந்திய இன்னும் பிற நாற்றம் பிடித்த என்று எல்லாம் கிடைக்கும்.
இந்திய உணவுகளிலே சேர நாடு உணவு முறை தான் இங்கே பிரபலம். நம் ஊரில் காணமல் போன அத்தனை மலையாளியும் இங்கே வந்து உணவுக்கடை (CAFETERIA) தொடங்கினார்களோ என்று தோன்றும். சல்லிசான விலையில் விரைவான சேவையில் கொஞ்சம் சுத்த குறைவோடு உணவு கிடைக்கும்.
ஒரு சிறிய தட்டில் மீன் பொறித்து பெயருக்கு ஒரு காய்கறி, கூட்டு, ஊறுகாய், ஒரு பப்படம். இது யாவருக்கும் பொது. பெரிய தட்டில் நிறைத்து சோறு. அதில் தான் பாகுபாடு.
உணவு உட்கொள்ள சென்றால் உங்களுக்கு இரண்டே சாய்ஸ் தான். மோட்டா அல்லது பாரிக். வட மொழியில் புழுங்கல் அரிசியும் பச்சை அரிசியையும் குறிக்கும் சொற்பதங்கள் தான் லோக்கல் மெனு.
புலால் உண்ணாத சைவ சாப்பாட்டுக்கு பெரிய மரியாதை இந்த மலையாளி கடைகளில் இருப்பதில்லை. சைவம் சாப்பிடுபவர்களின் ஒரே புகலிடம் நம் ஊருக்கு பரிச்சயமான சரவண பவன்களும் அன்னபூர்னாக்களுமே. விலை கொஞ்சம் அதிகம். இததனை விலை கொடுத்து வாங்கிய உணவு வயிற்றில் சங்கடமே ஏற்படுத்தும்.
(இன்னும் வரும்........................)
14 comments:
//கேப்டன் பாஷையில் சொன்னால் ஐஸ் பொட்டியில் இருந்து//
கேப்டனை விட மாட்டீங்கள் போல
//சில பேர்கள் போர்வைக்குள் காணாமல் போயிருந்தார்கள்//
கதை படிக்கிற மாதிரி இருக்கு :-)
//ரூமின் தாதா கடைசியில் குளிப்பார்.//
:-))
//நான் ஊர் போய் வரும் செலவை பணமாக அனுப்பினால், ஊரில் வீட்டார் அந்த பணத்தை தன பெண்ணின் திருமண செலவுக்கு வைத்து கொள்வதாக கூறியதால், இவர் செல்லவில்லை என்று கூறினார். என் மனம் கனத்து, கண்ணில் தன்னிச்சையாக, கண்ணீர் வழிந்தது//
கொடுமை :-(
கோபி ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க ..பாராட்டுக்கள்
வருகைக்கும், தங்கள் பாராட்டுக்கும் நன்றி கிரி
இன்னும் வரும்..... தொடர்ந்து வாருங்கள்.
அப்படியே ஜோக்கிரி போய் பாத்துட்டு, கொஞ்சம் மனம் விட்டு சிரிங்க.......
கஷ்டம்... வாழ்க்கை சின்ன சின்ன சந்தோஷங்களோடும் மிகப் பெரிய அவலங்கலோடும் ஏதேனும் ஒரு இடத்தில் கடந்தபடியே தான் இருக்கிறது...
//Erode Nagaraj... said...
கஷ்டம்... வாழ்க்கை சின்ன சின்ன சந்தோஷங்களோடும் மிகப் பெரிய அவலங்கலோடும் ஏதேனும் ஒரு இடத்தில் கடந்தபடியே தான் இருக்கிறது...//
**********
சரியாக சொன்னீர்கள் ஈரோட் நாகராஜ்........
இங்கு கிடைக்கும் அதிக வருமானத்துக்காக சொந்த, பந்தம் அனைத்தையும் துறந்து, வாழ்வின் பல இன்பங்களை விடுத்து வாழும், பல கோடி மக்களின் வாழ்வில் விரைவில் விடிவு வர அந்த ஆண்டவனை வேண்டுவோம்.......
பணம் மட்டும் தேடி வந்தோம்
வாழ்வின் அனைத்தையும் இழந்து.....
கோபி -
இன்றுதான் ஒன்று முதல் 5 வரை எல்லா பகுதிகளும்
படித்தேன்.
எவ்வளவோ புதிய விஷயங்களை உங்கள் பாணியில்
எழுதியுள்ளீர்கள்.
சுவாரசியமாக உள்ளது; அதே நேரத்தில் - ஏன் - ஏன் இந்த
கஷ்டங்கள் - என் தொப்புள் கொடி உறவுகளுக்கு என்கிற
சங்கடமும்....
நன்றி கௌதமன் சார்
இந்த நிலைக்கு நாம் யாரையும் குறை சொல்லி பயனில்லை. பலர் இங்கு வந்து வெகுவாக கஷ்டப்படுகிறார்கள். அவர்கள், பேராசை பிடித்த ஏஜெண்டுக்களால்...
சிலர் இங்கு வந்து சொகுசான வாழ்க்கையை வாழுகிறார்கள்.. அதிக சம்பளம் (வரி விதிப்பின்றி, பிடித்தமின்றி), குடும்பத்துடன் இருப்பது.... சில வருடங்கள் இருந்து சம்பாதித்து விட்டு, ஊரில், ஒரு வீடு வாங்கி, பின் வங்கியில் தன் கணக்கில் கொஞ்சம் பணமும் சேர்த்துவிட்டு, அங்கு வந்து ஏதாவது வேலையோ அல்லது சொந்த தொழிலோ நடத்தி வாழ்பவர்களும் இருக்கிறார்கள்..
மொத்தத்தில் கஷ்டப்படாமல் வாழ்வே இல்லை சார்........
//குளு குளு பெட்டியில் இருந்து (கேப்டன் பாஷையில் சொன்னால் ஐஸ் பொட்டியில் இருந்து)//.
really good joke. super.
//Eswari said...
//குளு குளு பெட்டியில் இருந்து (கேப்டன் பாஷையில் சொன்னால் ஐஸ் பொட்டியில் இருந்து)//.
really good joke. super.//
***********
Welcome Eswari.......
Read all the 5 parts and wait for the 6th part, which will be posted soon.
அயல் நாட்டுல ஏன் கஷ்ட பட்டுகிட்டு ........
அதான் இப்ப நம்ப ஊரிலேயே நிறைய வேலை கிடைக்குதே...
கடந்த ஒரு வருடமா நம்ப ஊர் கொத்தனார் சித்தாள்களை பார்ததா வெளி நாட்டுக்கே யாரும் போகமாட்டாங்க. அவங்க timing, சம்பளம், செய்யும் வேலை.........., கம்ப்யூட்டர் முன்னால் உட்காரும் degree படிச்சவங்களுக்கும் இது போல கிடைக்காது
இன்று தான் படித்தேன்.
எந்த வரிகளுக்காக பாரட்டுவது என்று தெரியவில்லை. எல்லா வரிகளும் உணர்ந்து அனுபவித்து எழுதியதால், அனைத்தும் அருமை. குறிப்பாக, மகளின் திருமணத்திற்கு செல்ல முடியாமல் தந்தை கூறிய காரணம். மனம் வலிப்பதை இங்கு பதிவு செய்கிறேன்.
சரவணன், திருப்பூர்.
//Eswari said...
அயல் நாட்டுல ஏன் கஷ்ட பட்டுகிட்டு ........
அதான் இப்ப நம்ப ஊரிலேயே நிறைய வேலை கிடைக்குதே...
கடந்த ஒரு வருடமா நம்ப ஊர் கொத்தனார் சித்தாள்களை பார்ததா வெளி நாட்டுக்கே யாரும் போகமாட்டாங்க. அவங்க timing, சம்பளம், செய்யும் வேலை.........., கம்ப்யூட்டர் முன்னால் உட்காரும் degree படிச்சவங்களுக்கும் இது போல கிடைக்காது//
Ikkaraikku akkarai pachchai
kan ketta pinne sooriya namaskaaram
//mazhai said...
இன்று தான் படித்தேன்.
எந்த வரிகளுக்காக பாரட்டுவது என்று தெரியவில்லை. எல்லா வரிகளும் உணர்ந்து அனுபவித்து எழுதியதால், அனைத்தும் அருமை. குறிப்பாக, மகளின் திருமணத்திற்கு செல்ல முடியாமல் தந்தை கூறிய காரணம். மனம் வலிப்பதை இங்கு பதிவு செய்கிறேன்.
சரவணன், திருப்பூர்.//
*********
Welcome Mazhai..........
Thanks for your visit and comments. Do visit regularly.....
Please read all 5 parts. 6th part is getting ready
//எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் இவர்களுக்கு மாதம் சேமிப்பாக மிஞ்சுவது என்னவோ 5-6 ஆறாயிரம் மட்டுமே. நான் அறிந்து, தன் பெண்ணின் திருமணத்திற்கு கூட போகாத தொழிலாளர்களை அறிந்திருக்கிறேன்.
அவரை கேட்டபோது, நான் ஊர் போய் வரும் செலவை பணமாக அனுப்பினால், ஊரில் வீட்டார் அந்த பணத்தை தன பெண்ணின் திருமண செலவுக்கு வைத்து கொள்வதாக கூறியதால், இவர் செல்லவில்லை என்று கூறினார். என் மனம் கனத்து, கண்ணில் தன்னிச்சையாக, கண்ணீர் வழிந்தது.//
நான் இந்த நாட்டில் சில நாட்கள் தங்கி உள்ளேன்... இதில் ரோடுபோடுபர் மற்றும் கட்டிட வேலையில் ஈடூபடும் சகோதரர்களின் வாழ்கை மிக கொடுமையானாது. இவர்களுக்கு கிடைக்கும் உதியமும் மிகமிக குறைவு. இவர்கள் நம் ஊர் வயல்களில் வேலைசெய்தாலே இதைவிட கூடுதலாக சம்பாதிக்கலாம் ஆனால் யாரும் காதில் வாங்கிக்கொள்வதாயில்லை.
நல்ல அருமையாண பயணக்(வாழ்க்கை) கட்டுரை.. தொடர சிறக்க வாழ்த்துக்கள்
Post a Comment