கேள்வி : ஜெ.ஜெ. உண்ணாவிரதம் இருந்தால்?
பதில் : உண்டு கொழுத்தவர்கள், உடல் இளைக்க இது ஒரு வழி. தேர்தலுக்காக போடும் நாடகத்தின் புதுமொழி.
கேள்வி : வை.கோ?
பதில் : அவர் பொய்க்கோ ஆகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. அவரை நம் மக்கள் போய்க்கோ என்று சொல்லும் நாள் வெகுதூரம் இல்லை.
கேள்வி : பகுத்தறிவு??
பதில் : அறிவுரைகளின் முதன்மை வார்த்தை. நாம் அடுத்தவரை பின்பற்ற சொல்வது. சொல்பவர்களாகிய நாங்கள் எப்போதுமே பின்பற்றாதது.
கேள்வி : சமீபத்தில் கிடைத்ததில் பிடித்தது?
பதில் : "பகுத்தறிவு பகலவன்" என்ற பட்டம்.
கேள்வி : மு.க.முத்து
பதில் : அகில உலக நாயகனாக வலம் வந்திருக்க வேண்டிய எங்கள் குடும்பத்தின் சொத்து....
கேள்வி : பிடித்த நிறம்
பதில் : மஞ்சள் நிறம் மட்டுமே அல்ல
கேள்வி : அடிக்கடி நினைவில் வந்து இம்சிக்கும் ஒரு வார்த்தை?
பதில் : ஐயோ, கொல்ராங்கோ, அய்யய்யோ கொல பண்றாங்கோ.........
கேள்வி : பிடிக்காத ஒரே நபர்
பதில் : ஜெ.ஜெ. என்று என் வாயால் சொல்ல மாட்டேன்.....
கேள்வி : எரிச்சலூட்டும் வார்த்தை
பதில் : மைனாரிட்டி அரசு.
கேள்வி : ஆற்காடு வீராசாமி?
பதில் : தொட்டால் ஷாக் அடிக்கமாட்டார். இடது புறம் சென்று பேசினால், பதிலளிக்க மாட்டார். மொத்தத்தில் நல்லவர். கழகத்தில் ஒரு மூத்தவர்.
கேள்வி : டி.ஆர்.பாலு?
பதில் : வழிப்போக்கர்களுக்கு வழிகாட்டி, பாலங்களின் நாயகன். பல கப்பல்களுக்கு சொந்தக்காரர் (எனக்கு கப்பம் கட்டியவர்களில் முதலிடம் இவருக்கு).
கேள்வி : அன்பழகன்?
பதில் : எனக்கு பின் என் இடம் இல்லை என்றாலும், என் இதயத்தில் அவருக்கு நிச்சயம் இடம் உண்டு (இல்லை என்றால், என் இடத்தையே கேட்டு விடுவார்).
கேள்வி : டி.ராஜேந்தர்??
பதில் : ஓயாமல் அடுக்குமொழி பேசி அடுத்தவரை இம்சிப்பவர். இப்போது நம்மை பார்த்து துடுக்குமொழியும் பேசுகிறார்... மிகப்பெரிய உடம்புக்கு சொந்தக்காரர். கூடவே, மிக சிறிய மனசுக்கும்......இந்த வயதிலும் திரையில் குத்தாட்டம் போடுவதில் வல்லவர்...இன்னமும் முதன்மை நாயகனாக நடிப்பேன் என்று சொல்லி அனைவரையும் எல்லோரையும் பயமுறுத்துபவர்.
கேள்வி : விஜயகாந்த்??
பதில் : அரசியலில் அரிச்சுவடி படிக்க வந்துள்ள குழந்தை. இருப்பினும் அதனிடம் இருக்கு நிறைய அகந்தை. நேற்றைய மழையில் முளைத்த காளான்... என்றும் பிறர் சொல் கேளான்....
கேள்வி : கையூட்டு என்றால்??
பதில் : கையூட்டு என்றால் என்ன?? என் தாய் என் சிறு வயதில் என் கையில் வைத்து ஊட்டிய சோறுதானே??
கேள்வி : தமிழ்??
பதில் : தாய்மொழியாம் தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சு, தமிழ் என் வாட்சு.......
கேள்வி ; ஆங்கிலம்??
பதில் : வாணிபம் செய்ய புகுந்த அன்னியரின் பகட்டு மொழி.... நாம் எப்போதும் புறக்கணிக்க வேண்டிய ஒரு மொழி... ஆயினும், அவ்வப்போது நானும், எப்போதும் என் வீட்டு இளையவர்களும் கைகொள்ளும் ஒரு அற்புத மொழி...
கேள்வி : கருப்பு கண்ணாடி??
பதில் : அழகிற்கு அழகு சேர்ப்பதற்காக மட்டும் அல்ல என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்.....
கேள்வி : பிடித்த சுவை?
பதில் : கருப்பட்டியும் அதனுடன் சேர்த்து சிறிதளவு தேனும்........
கேள்வி : பிடித்த உணவு?
பதில் : கேப்ப களி மற்றும் குறு மிளகாயுடன் சேர்த்து சில சிறிய வெங்காயங்கள். முன்பு, நிறைய தின்றாகி விட்டது. இப்போது தின்று சிறிது நாளாகி விட்டது. விரைவில் கிடைக்கும் என்று குறுங்கிளி ஒன்று காதில் சொல்லி விட்டு செல்கிறது........
கேள்வி : கலைஞர் டி.வி??
பதில் : உலக தொலைக்காட்சி வரிசையில் முதலிடம். உலக தமிழர்களின் தேவை, அதற்கு நாங்கள் செய்யும் சேவை. ஆஹா.... இந்த சேனலை பார்க்கத்தான் உலகிலுள்ள அனைத்து தமிழர்களும் காத்திருக்கின்றனர்... உலகின் பல கோடி தமிழர்கள் இலவசமாக மகிழ்விக்கும் ஒரு புதிய முயற்சி தான் இந்த கலைஞர் டி.வி... இந்த சேனல் யாருடையதாக இருந்தாலும், அவர்களின் நல்ல உள்ளத்திற்காக, அந்த சேவை செய்யும் மனப்பான்மைக்காக அவர்களை வாழ்த்துகிறேன்...
கேள்வி : ஜெயா டி.வி??
பதில் : அப்படி என்றால் என்ன?? புதியதாக வந்துள்ள ஒரு டி.வி.மாடலா?? இது வரை நான் கேள்விப்படவில்லை.....
கேள்வி : கடவுள் பக்தி??
பதில் : நான் இதுவரை நீங்கள் சொல்பவரை கண்ணால் கண்டதில்லை.... காதால் கேள்விப்பட்டதும் இல்லை... ஆனால், என் மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் எப்போதும் நீக்கமற நிறைந்திருப்பது....
கேள்வி : பிரச்சனை??
பதில் : கோயில்களில் என் வீட்டார் எனக்காக, என் பெயரில் செய்த அர்ச்சனை (இது வெளியில் தெரிந்தால் பிரச்சனை).
கேள்வி : பிடித்த பாடல்??
பதில் : சர்க்கர இனிக்கிற சக்கர, இதில் எறும்புக்கு என்ன அக்கறை??
கேள்வி : உங்கள் குரு??
பதில் : என்னை என் இதயத்தில் தாங்கி பிடித்த அறிஞர் அண்ணா....
கேள்வி : தேர்தல் கூட்டணி.
பதில் : இதயத்தில் இடமளித்தவர்களுக்கு தொகுதிகளிலும் கொஞ்சமாக இடமளிக்கும் ஒரு விளையாட்டு.
கேள்வி : இலவச கலர் டி.வி??
பதில் : மக்களை மகிழ்விக்கும்... ஆனால், சேனல்கள் பார்க்க சேர்த்து தனியே கட்டணம் வாங்கி விடுவோம்.
கேள்வி : ஒரு ரூபாய் அரிசி??
பதில் : ஒரு வேளை சாப்பிட்டவர்கள், இனி மூணு வேளையும் வயிறு முட்ட சாப்பிட நான் செய்த யோசனை.... (இந்த திட்டம் மட்டும் வராமல் இருந்திருந்தால் நான் மத்திய அரசை எதிர்த்து காலை டிஃபன் முடித்து விட்டு, உண்ணாவிரதம் இருந்திருப்பேன்).
கேள்வி : ஜல்லிக்கட்டு??
பதில் : வீரமிகு கட்டிளம் காளையர்கள், பருவ சிட்டுகளை, கட்டழகு கன்னியர்களை தன் வீரதீர செயல்கள் மூலம் தன் வசம் ஈர்க்க உதவும் ஒரு அற்புதமான விளையாட்டு....
கேள்வி : தொகுதி பங்கீடு??
பதில் : அதிகம் ஆசைப்படுபவர்களிடம், அதிக ஆசை ஆபத்து என்பதை வலியுறுத்தி, சொற்பமாக கொடுக்கப்படும் ஒரு விஷயம்... அதிலும் கண்டோம் பேரம் பேசும் சில அற்பம்....
கேள்வி : உங்கள் தேர்தல் வாக்குறுதிகள்??
பதில் : தேன் தடவிய கசப்பு மருந்து. மருந்து வேலை செய்வதற்குள் நாங்கள் ஆட்சி கட்டிலில் அமர்ந்து விடுவோம்.
கேள்வி : தமிழக மக்கள்??
பதில் : குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
கேள்வி : இதை எதற்கு சொன்னீர்கள்??
பதில் : ஏதாவது சொல்லவேண்டுமே என்று சொன்னேன். மற்றபடி, அவர்கள் போடட்டும் எனக்கு ஓட்டு. இல்லை என்றால், அவர்களுக்கு நான் வைப்பேன் வேட்டு.
கேள்வி : மக்களிடம் பிடித்தது?
பதில் : அவர்களின் ஞாபக மறதி.
கேள்வி : பிடித்த வார்த்தை??
பதில் : நாளை நமதே, 234-ம் நமதே.....