வாழ்க்கை (பகுதி– 5)

ஒன்றிரண்டு பகுதிகளில் தொடரை முடிக்க எண்ணியதால் டாப் கியரில் கொஞ்சம் வேகமாக போகும் போது, முக்கியமான இளமைப் பருவத்தை விட்டு விட்டோம் (இதை சுட்டிக்காட்டிய தோழமைக்கு நன்றி).

தவழும் குழந்தையாய் இருந்த நாம், முழு மனிதனாய் ஒரு இரவில் தூங்கி எழுந்தவுடன் ஆவதில்லை (நிறைய தமிழ் படங்கள் பார்க்காத வரைக்கும்...).

”தசாவதாரத்தின் அரிதார நாயகன்” மைக்கேல் வெஸ்மோர் கூட பத்து விதமான‌ "பூச்சாண்டி" வேடங்களுக்காக ”குண்டு சட்டி”யில் இருக்கும் மைதா கூழை குழைச்சு எடுத்து ஒரு ஆறு, ஏழு மணி நேரம் பூசோணும், ”உலக நாயகனும்” பொறுமையா குந்தோணும்.

வாழ்வும் அதே போல் சில வருடங்கள் எடுத்தே இந்த மாறுதலை செய்கிறது. இப்படி ஆன முதல் படி, ஆங்கிலத்தில் "அடலெஸண்ட்" எனவும் நம் தாய் மொழியில் மொளச்சு மூணு இலை விடல, விடலை பருவம் எனவும்
குறிப்பிடப்படும். முளைக்கும் மீசை, மகரக் கட்டு என ஆண்களும், ”மனுஷி” ஆகும் ரீதியில் பெண்களுமாய் ஒரு பருவம். முழுக்க புரியலேன்னாலும், ஏதோ ஒரு குத்துமதிப்பா வாழ்க்கை புரியும்.

தீர்வு சொல்றேன்னு நம்ம கிளம்புறப்போ, உனக்கு என்னடா தெரியும் நீ சின்னப்பிள்ள என பெற்றோர் போடும் அதட்டலில் நமத்து போகும். என்னடா இது, மழலை என கொஞ்சினார்களே, தோளிலும் மார்பிலும் தவழ்ந்தோமே, என்ன ஆச்சு இன்னைக்கு என புரியாமல் "ஙே" என்று விழிப்பதில் தொடங்குது இந்த கோளாறு.

நாம் சொல்வதை ஒப்புக் கொள்ளும் நண்பர்கள் உற்ற துணை எனவும் தோன்றும். உஷாராய் இருந்து, நல்ல நண்பர்களை துணை கொண்டால், பூவோடு சேர்ந்த நாரும் மணக்க சாத்தியமுண்டு... இல்லையேல், வந்து சேர்ந்த கன்னுக்குட்டியும், பன்னிக்குட்டியோடு சேர்ந்து பல்டி அடிக்க வேண்டும். அட்வைஸ் மழை பொழியும் பெற்றோர் மேல் அங்கு தொடங்கும் கோபம் வெகு நாள் வரை தொடர்கிறது.

இன்னும் ஒரு சூட்சுமம் உண்டு. நாம் எதை நினைக்கிறோமோ, அதாகவே ஆகிறோம்.. அதாவது, நல்ல மாணவனாக ஆக வேண்டும் என்று உறுதி எடுத்தால், நன்றாக படித்து, பெற்றோருக்கு நல்ல பெயர் வாங்கி தரும் ஒரு நல்ல மாணவனாக முடியும்... இல்லையேல்... படிப்பு விடுத்து, தீய பழக்கங்களை கைகொண்டு, வாழ்வையே இழக்கும் நிலை வரும்... இதில், எது வேண்டுமென “ரூம்” போட்டு யோசிக்கலாம்..

வாழ்வின் எந்த கட்டத்தில் நாம் திடமாக (பாடி ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக் மேட்டர் அல்ல..),உரத்துடன் உள்ளோம். உடலும், மனமும் உச்சகட்ட செயல் திறன் உள்ளது இப்போதான்.

ஏழு மலைய தாண்டணுமா, இல்லை ”எதிர் வீட்டு ஏழுமலை”ய போட்டு தாக்கணுமா, எதுன்னாலும் ஓகே. இந்த பருவத்தில, டேய்! சிகரெட் குடிக்காத, தண்ணி அடிக்காதன்னு யாராவது அக்கறையாக சொல்லும் போது, உகாண்டா நாட்டு அதிபர் ”உரேக்ஷா புரேக்ஷு” வீட்டு கோழி குருமாவுல உப்பு இல்லன்னா எனக்கென்ன எனும் தோரணையில்தான், நம் அறிவுரையும் பரிசீலிக்கப்படும். விசையுறு பந்து போலவும், வேண்டிய படி செய்யும் மனம் போலவும் இருப்பதால், இன்று செய்யும் விளைவின் தாக்கம் வீரியமில்லாமல் இருக்கும்.

வீட்டு நிர்வாகம் என்றால் என்ன, பொருளாதாரம், திட்டமிடல் என எந்த பிரஞையும் இல்லாத, அதை பற்றி அலட்டிக் கொள்ளாததே பிரச்சனையின் அடி நாதம். இதனாலதான் ஏன் படிக்கிறோம், எதுக்காக ஒழுக்கமா இருக்கணும் எனும் தெளிவு வருவதில்லை. இருபது வயசில அறிவுரை சொல்லி வேக வைக்க முடியாத இந்த பருப்பை என்ன வயதில் என்னதான் செய்வது?. என்னதான் தீர்வு. பெற்றோர் இடத்தில் கொஞ்சம் சான்ஸ் உண்டு.

நெருங்கிய நண்பர் அன்று மிக தளர்ந்து இருந்தார், முகம் சுண்ட காய்ச்சி இருந்தது. அருகில் நெருங்கி, புரியுது.... கவலைப்படாதே என்ன பிரச்சனை என்ற போது பொறிந்து தள்ளி விட்டார்.

எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன், என்ன குறைவு சார் இவனுக்கு, படிக்க வேண்டியது தானே. கட் அடிச்சுட்டு சினிமா, இண்டெர்வல்ல சிகரெட். படம் முடிஞ்சதும் தண்ணி... எங்க வம்சத்திலயே இப்படி ஒரு தறுதலைய பார்த்ததில்ல.

தீவிரம் புரிந்து போய், நாம் மெதுவாய் சொன்னது. ரொம்ப கரெக்ட். பெரிய பிரச்சனை தான், ஆனா தலை போற விஷயம் இல்ல. அதுக்காக நீங்களே ஒரு "தம்" வாங்கி கொடுத்து பத்த வைங்கன்னு சொல்லல, எரிச்சல கடாசிட்டு தன்மையா பாருங்க. ஒரு முறை சிகரெட் குடித்து விட்டான் என்பதால் இனப் பிரஷ்டமா செய்ய முடியும். ஒரு முறை முயற்சி என்பது மனித இயல்பு.

ஆனால், அதை தொட‌ராம‌ல் இருக்க‌ வைப்ப‌து ந‌ம் சாமர்த்திய‌ம்...

சிறு வயதில் கீழே விழுந்த போது, நீங்கள் தானே கை தூக்கி விட்டீர்கள். ஆகவே, அவர்களை அன்புடன், கனிவாக‌ அணுகி, பணம் சம்பாதிப்பது எவ்வளவு கடினம் என்பதையும் நாம் கஷ்டப்படுவதையும் சொல்லி வாழ்வின் நிதர்சனத்தை மெதுவாக சொல்லி புரிய வைக்கலாம்... போதை பழக்கம் எவ்வளவு கல்லூரி மாணவர்களை அழித்து இருக்கிறது.... இதனால், எவ்வளவு பெற்றோர்கள் மற்றும் குடும்பங்கள் நிம்மதியின்றி தவித்து இருக்கிறது என்று விளக்கி சொல்லலாம்..

நமக்கு திரையில் அறிமுகமான "கில்லாடி கில்பர்ட் தனசேகரன்", "மிரட்டும் ப்ரொஃபெஸர் மித்ரா", "த‌ர்ம‌ அடி த‌ர்ம‌லிங்க‌ம்" ஆகிய மூவரும் கூட்டணி அமைத்து தனியாளாய் இருக்கும் நம்ம ஹீரோவை தொல்லை செய்வர். புடுங்கிக்கிட்டு அடிக்கிற வெயில்லேயும் பளபளன்னு ஒரு கோட் சூட், கஜக் கம் இருட்டுல கூட கழற்றாத கூலிங் கிளாஸ், கெக்கே பிக்கேன்னு ஒரு சிரிப்பு, என கும்மாளம் போடும் டெர்ர‌ர் கூட்டணி. இவர் போல, இளமைப் பருவத்தில் நம்மை கதிகலங்க வைக்கும் மும்முனை தாக்குதலான‌ "போதை, பொழுது போக்கு, கச்சடா சிந்தனைகள்" என பல உண்டு.

ஒரே ஒரு "க்ளிக்"கில் இன்றைய வலையுலகம் நம் க‌ணினி வழியே உல‌கையே ந‌ம் முன் ப‌டைக்கும்... ஆயினும், அதன் வழியே அண்ட சராசர‌த்தின் அனைத்து விகார‌ங்க‌ளையும் ந‌ம் முன்னே கொட்டியும் விடும்... அதில் ந‌ம் வாழ்க்கைக்கு தேவையான‌வற்றை தேர்ந்து எடுத்துக்கொண்டு, மற்ற அனைத்து தேவையற்ற விஷ‌ய‌ங்க‌ளை புற‌ம் த‌ள்ளும் சூட்சும‌த்தை உணர‌ வேண்டும்...

வேலை செய்து களைத்த பின்னர் சினிமா பார்ப்பது என உருவான பொழுதுபோக்கு, வாழ்வின் முழு முதற் கடமையாய் ஆன கொடுமை, கண் முளிச்சு, தலை குளிச்சு மொத வேலையா நம்ம "முட்டை கண்ணன் மூவேந்திரன்" சினிமா டிக்கட் வாங்க க்யூவில் நிற்கிறான்.

நாலு மணி நேரமா. யம்மாடி, இங்கனம் வாழ்க்கை ஆகும் அவ‌ல‌த்தையும் ப‌க்குவ‌மாக‌ விள‌க்கி, வாழ்வின் அன்றாட‌ க‌ட‌மையை செவ்வ‌னே செய்த‌ பின்ன‌ரே, உற்சாக‌ப்ப‌டுத்தும் நிக‌ழ்வாக‌, சினிமாவை பார்க்கோணும்... மாட்னி, காலைக் காட்சியெல்லாம் தேவையா பாஸ் என "பால்கனி பலவேசம்" கேட்பது ஏறக்குறைய சரியோ!!!! .... ப‌ள்ளி, க‌ல்லூரியின் ப‌டிக்கும் நேரத்தில், படிப்பை புறம் தள்ளி, சினிமா காண செல்வதை பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், படிப்புக்கும் நாம் செய்யும் துரோகம் என மனதில் தோன்றினால் நல்லது.

இதனால், மாணவ / மாணவியர்கள் சினிமாவை அதன் இடத்தில் நிறுத்தி, படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையை உருவாக்கலாம்... இன்று வாழ்வில் மிகப்பெரிய நிலையை அடைந்தவர்கள் அனைவரும், சிறு வயதில் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை உணர வைக்கலாம்...

வாழ்வில் பல சோதனைகளை வெற்றிக‌ர‌மாக‌ தாண்டிய‌வ‌ர்க‌ளே இன்று உலகில் சாத‌னையாள‌ர்க‌ள். வாழ்வின் ஒவ்வொரு நாளிலும், க‌டும் உழைப்புக்கு பின்ன‌ரே, நாளை உழைக்க வேண்டிய உற்சாகம் பெறவே சிறிது பொழுதுபோக்கு தேவை, இல்லையேல் பொழுதுபோக்கையே வாழ்வில் பிர‌தான‌மாக்கினால், அது பிர‌யோஜ‌ன‌ப்படாது.

பெற்றோர் மட்டும் அல்ல ந‌ல்ல‌ மாண‌வ‌ / மாண‌விய‌ர்க‌ளை உருவாக்குவ‌தில் ஆசிரியர்கள் மற்றும் உற்றார்களுக்கு பெரும் ப‌ங்கு உண்டு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி... மிக முக்கியமாக செய்ய வேண்டியது, பிள்ளைகளின் நண்பர்களை உற்று நோக்குங்கள். விவகாரமானவர்கள் என்றால் சற்றே விலக்கி விட முயலுங்கள்.

சரி, இவ்வளவு ஆட்டம் போட்ட வில்லன்கள் கடைசியில் ஆவது என்ன. ஒண்ணு சாகோணும் ... திருந்தோணும்...இல்லேன்னா தோத்து போய் ஓடோணும்... அத செய்ய வைக்கிறது நம்ம ஹீரோ. அல்லது செய்தால் அவர் தான் ஹீரோ.

நாம் அனைவரும் ஹீரோதானே, நம்மை நசுக்க வரும் நச்சுகளை நச்சென குத்தி, டிஷ்யூம் செய்து நாந்தாண்டா ஹீரோ என முறசரைந்து சொல்வோம்....

(ஆர்.கோபி / லார‌ன்ஸ்)

(முரசின் ஓசை நிலைக்கும்....... அதன் அதிர்வு நம்மிடையே என்றும் தொடரும்....)

வாழ்க்கை : (பகுதி – 4)

டாடி.... டாடி... இதப் பாருங்களேன். ஆவலாய் நீட்டிய காகிதத்தை வாங்கி படித்தார் அப்பா.

யப்பா.... ஒரு இயலாமை பார்வை வீசி விட்டு. அடேய்... பூமி குலுங்கினா அது பூகம்பம். அதுவே வெறுமே பூ குலுங்கினா அது வெறும் ஆட்டம், இல்லைன்னா குலுக்கம்.

ஓகே டாடி, என ஓரமாய் அன்று வைத்த பேப்பர், தற்செயலாய் இளம் வயதில் அவனுக்கு கிடைத்தது.....இன்று அவனுக்கு பிடித்தது, நண்பர் சிலாகித்தார், அச்சிடலாமே அற்புதம் என கவிஞர் கொஞ்சினார். அது என்ன ஒரே வார்த்தை தப்பாகவும், சரியாகவும் எப்படி ஆனது. அதுதான் கவிதை. ??? !!!!

பூவுக்குள் பூகம்பம் என அவன் எழுதியது, நேற்று, இன்று நாளை!!! என புதுப்புது அர்த்தம் தரும்!!!.

அவள் வீட்டு தெருவில் நடந்தேன்.
வீதியெங்கும் அமாவாசை,
என் உள்ளத்திலோ பவுர்ணமி


என்று எடக்கு மடக்காய் எழுதி, ஒன்றன் பின் ஒன்றாய் வார்த்தை கோர்த்து, கவிதை என்ற லேபிள் ஒட்டுவது இளமையில் சாத்தியம்.

காதல் புகுந்த மனதில் தமிழ் புதுப்புனலாய் புறப்ப‌டும். மனதில் பூக்கள் புதிதாய் பூக்கும்... அதன் வாசம் எழுதும் கவிதைகளில் மணம் வீசும்... ஏங்க, உங்களுக்கு கவிதை பிடிக்காதா என்று தாங்கள் நினைத்தால், இல்லீங்கோ!!! கவிதைக்கு எதிரி அல்ல நாங்கள். கவிதை தொடங்கும் விதம் பற்றி சும்மா கலாய்த்து பார்த்தோம். அவ்வளவுதான்.

'வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்
தரை மேல் பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்


நாலு வரியில் மீனவர்களின் வாழ்க்கையை பற்றி சொன்ன போது கண்ணீர் கரை கடக்கும். உள்ளத்தின் மென்மையையும் மேன்மையையும் ஒரு சேர தொடும். மனிதனை புனிதன் ஆக்கும். கவிதை மிக இன்றியமையாத இயல்பு. வாழ்வை கவியாக கொள்வது கண்டிப்பாக சிறக்கும்.

கவிதை போல் காதலும் இயல்பே. காதல் எல்லாம் ஹம்பக் எனும் வாதமோ, காதல் தெய்வீகமானது எனும் கீதமோ கொஞ்சம் அதீதம் கலந்த அமிர்தம். அளவுக்கு மிஞ்சாமல், அக்கறையாய் அனுபவித்தால் அற்புதம். திருமண பந்தம், இறுதி வரை இல்லறம் எனும் இலக்கை சிக்கென பற்றினால் பரம சுகம். சொல்லி புரித‌லை விட‌, அனுப‌வித்து ர‌சிப்ப‌தே சால‌ சிறந்த‌து...

திருமணம். கொஞ்சம் லேட்டா இந்த தொடர் வாசிக்கிறேன். எனக்கு கல்யாணமாகி இரண்டு பிள்ளை இருக்கு என சிந்தித்தாலும், அட, கரெக்ட் டைம் பாஸ். நாளைக்கு பொண்ணு பார்க்கப் போறேன் என்றாலோ, இருவரும் படிக்க என எவர்கீரின் அடிப்படை சிலவற்றை உரசிப் பார்ப்போம்.

ஏங்க எதுக்காக‌ கல்யாணம் பண்றீங்க.... என நாசுக்காய் நம்மையே கேட்போமே. ஹும்... ஹும்... என மண்டைய சொறிவோம். அப்பா அம்மா சொல்றாங்க.... பக்கத்து வீட்டு பத்மாக்கா கட்டிக்கிச்சு, அதேன்... அல்லது போங்க சொல்ல வெக்கமா இருக்கு, இதெல்லாமா வெளிய சொல்லுவாக. பாருங்களேன். மேலே சொன்ன எந்த பதிலாவது திருமணம் எனும் முழுப் பரிமாணம் அடக்கியுள்ளதா. சரி அவங்கதான் சொல்லல, நீங்க சொல்லுங்க என்றால்.

கூடி வாழும் மனித இயல்பின் தேவை, சந்ததி படைக்கும் சாஸ்வதம், முதுமைப் பருவத்தில் தளரும் உடல் மற்றும் மனம் சார்பு நிலைக்கென அடிப்படையாய் ஏற்பட்டதே இந்த குடும்ப அல்லது திருமண பந்தம். ஆனால் சொன்னத விட்டுபுட்டு சுரைய புடுக்கிற கதைதான் ஒண்ணுக்கு பாதி நடக்குது.

திருமண பந்தம்; பந்தக்கால் இடும் முன்னர் சில பிரதிக்கனை எடுத்தால் நல்லது. இனி சாவுற வரை நீதான் என் பொண்டாட்டி, நீதாண்டா என் புருஷன் கடைசி வரைக்கும் என உரிமையாய், உறுதியாய் சொல்லும் மனதோடு வலது காலை எடுத்து முன்னால் வைப்போம். மகிழ்ச்சியான நிறைவான இல்லறமே மனித வாழ்வின் ஒரு மகத்தான நோக்கம். ஆனால் முள் முனையில் நடக்கும் காற்றுப் பந்து போல கவனம் குறைந்தால் வெடிக்கும் வாய்ப்பு உண்டு.

இறுதி வரை எடுத்த தீர்மானத்தில் இருந்து அணுவ‌ளவும் பின் வாங்கக் கூடாது. என்ன பிரச்சனை வந்தாலும். திருமணத்தை கட்டிக் காக்க வழிகள் நிறைய உண்டு. அது பத்தியே ஒரு தொடர் எழுதுற அளவுக்கு மேட்டர் இருக்கு, என்றாலும் ஒன்றிரண்டு மெயின் மேட்டர் இதோ,

1. செருப்பை கழற்றி வீட்டுக்கு வெளியில் வைத்து விட்டு, வெறுங்காலோடு நடப்பது என்பது சாதாரணமான ஒரு பழக்கம். வீட்டுக்குள் மட்டும் என பிரத்யேகமாய் பாத்ரூம் செருப்போடு சரக் புரக் என திரிவது மற்றொரு ரகம். இதில் சரி, தவறு என்று எதுவும் இல்லை. ஆனால் முதல் பழக்கம் உள்ள‌ புருஷனும், இரண்டாம் பழக்கம் உள்ள‌ மனைவியும் குடித்தனம் செய்தால், புருஷனுக்கு கொஞ்சம் டெர்ரராக இருக்கும்.

காலை வீணாக்குகிறானே பாவி என மனதினுள் மனைவி கூவுவாள். அந்த நேரம் பார்த்து கொடுத்த காப்பியில் சீனி தூக்கலாய் இருக்கும். புருஷன் சீறுவான். ‘இப்படி சீனிய அள்ளி கொட்டினா, மாசத்துக்கு மூணு மூட்டை வாங்கோணும்’.

ஏற்கனவே மனதுக்குள் கூவிக்கொண்டிருக்கும் பொண்டாட்டி விடுவாளா ‘காலையிலதான வாயில வைக்க முடியல், உன் அப்பன் வீட்டு பணமா போகுதுண்ணீங்க, சரின்னு சீனி போட்டா, ரொம்ப பேசுதீக. நானும் போனா போகுது, போனா போகுதுன்னா ரொம்ப பேசிட்டே போறீய‌ளே........

மக்களே... மக்களின் மக்களே... பெருங்குடி மக்களே, உடன்பிறப்புகளே, உயிரினும் மேலான ரத்தத்தின் ரத்தங்களே!!! கான்ஷியசாய் உரசும் இது போல் செருப்பு மேட்டர் சில, அன்கான்ஷியசாய் உரச ஓராயிரம் மேட்டர் உண்டு. இரு வேறு சூழலில் வளர்ந்து ஒன்றாய் குப்பை கொட்டும் போது இப்படித்தான். இத்தகைய வேறுபாடை மனதில் கொண்டு கண்கொத்தி பாம்பாய் இருந்தால் குடித்தனம் பொழைக்கும், இல்லையேல், கொறட்டை விடுகிறான் தாங்கல என குடும்ப நல கோர்ட் படியேறி விடும்.

2. டைரக்ட் அட்டாக் அல்லது இன்டைரக்ட் அட்டாக். இரண்டாவது எடக்கு மடக்கு தத்துவம் இது, நல்லா கேட்டுக்கோங்க. பாடத் தெரிந்த "பாத்ரூம் பாலசுப்ரமணி"க்கு கல்யாணம் முடிஞ்சு போச்சு. முதல் இரவில், நம்ம சுப்புணி, சுந்தரம்பாள் கிட்ட’ உனக்கு ஒண்ணு தெரியுமா... ‘( தொண்டையில் கிச்...கிச்.... லேசா கனைத்து கொண்டே... ) நான் ரொம்ப நல்லா பாடுவேன்.

ஏகத்துக்கும் டென்ஷனான புதுப்பொண்ணு அப்படியான்னுச்சு. அதோட விட்டிருக்கலாம். பாடட்டா என "சுப்பிரமணி" கீச்சிட, வேற‌ வழி,விதி வலிது, குனிஞ்ச தல நிமிரவே இல்ல, ஒரு லேசான தலையாட்ட, அது போதுமே, நம்மாளுக்கு, உடனே பாட தொடங்கினார்.... "அம்மாடி, ஆத்தாடி, உன்ன எனக்கு தர்றியாடி"....... ஏற்கனவே டென்ஷன், இதுல உச்சஸ்தாயியில் இந்த டகால்டி பாட்டு வேற‌. பாட்டு தொண்டையில் சிக்கிக்கிட்டு பாடாப் படுத்தியிருச்சு.

இதுவே நம்ம சுப்புணி தம்பி, "உஷார் உக்கிரசேனன்" கல்யாணம் எல்லாம் முடிஞ்சு ஒரு வாரம் ஓடிப் போச்சு. லேசாப் பாடத் தெரிஞ்சாலும் கம்முனு இருந்திட்டான். தற்செயலா யாரோ உன் புருஷன் பாட்டு எப்படின்னாளாம். திடுக்கிட்ட திருமதி ‘அவர் பாடுவாரா, சொல்லவே இல்ல’ என அதிசயித்து விட்டு. ‘ஏண்ணா பாடுவேளான்னான்னு’ கேக்க, வெக்கத்தில் நெளிஞ்சு, சும்மா பாத்ரூம்ல சுமாரா பாடுவேன், “எக்கோ”வுல நல்லா இருக்கும் என சொல்லி விட்டு வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பின்னிருந்து அணைத்து மெல்லிய குரலில் கிசுகிசுக்கும் குரலில் “நீல வான ஓடையில்” .... என்று ரம்மியமாக தொண்டையை திறந்தார். நகைச்சுவையாய் சொன்னாலும் மேட்டர் இதுதான்.

நாமே சொல்வதை விட அடுத்தவர் சொல்லி நம் சில்லறை திறமைகளை நாம் அடக்கி வாசிப்பது சுவாரசியம். ஒப்பனா பேசுறேன் பேர்வழி என்று கட்டியவளை கழுத்துறுக்காமல் பொறுமையாய் குடித்தனம் செய்யலாம். கிணத்து தண்ணிய ஆத்து வெள்ளமா அடிச்சுட்டு போறது.

3. எங்க அப்பா அம்மா தெய்வம். நீ என்ன (புருஷன) மதிக்கலேன்னா கூட பரவாயில்ல, நான் பொறுத்துக்குவேன் என கண்டிஷன் போடும் "கறார் கண்ணுசாமி", தன் மாமனார் மாமியாரை மதிப்பாரா??? சந்தேகந்தேன். பாருங்களேன் இவர் அவரின் அப்பா அம்மாவை மதிக்க மாட்டார், அவர் இவர் அப்பா அம்மாவை தொழ வேண்டும்... எப்புடி.... சொல்யூஷன் என்னன்னா, நம்ம "ஜீசஸ் கிரைஸ்ட்" சொன்னது தான். ‘உனக்கு அயலான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறாயோ அதை நீ அவனுக்கு செய்’.

அப்போ இரண்டாவது தத்துவம், மூணாவதையும் மிக்ஸ் பண்ணினா, நம்ம அப்பா அம்மாவ மதிக்கணும்னா சத்தமில்லாம ஒண்ணும் பேசாம நம்ம மாமனார், மாமியார உளமாற மதித்து விடல். என்ன செய்யும் நம்ம பொண்டாட்டி, ஏட்டிக்கு போட்டிதான. கண்டிஷனா நம்ம பெத்தவங்கள மதிக்கும்.

4. வாழ்க்கையின் ஆணி வேரே ஒருவரை ஒருவர் புரிதலிலும், விட்டு கொடுக்கும் மனப்பான்மையிலும் இருக்கிறது...இந்த மனப்பான்மை கணவன், மனைவியரிடையே அதிகமானால், குடும்பம் என்ற ஆணிவேர் பலப்பட்டு, நெடு நாட்கள் ஆலமரம் போல் தழைக்க வழிவகுக்கும்..

இது போன்று விரிசல் கண்ட பல குடும்பங்கள் தங்கள் வாழ்வை தொலைத்து விட்டு, ஆங்காங்கே நீதிமன்றங்களில் காணப்படுகிறது...இதற்கு காரணம் இருவரின் மன மன்றங்களிலும் தோன்றும் அந்த ஈகோ என்ற ஒரு விஷயம்... இந்த ஒரு விஷயத்தை தொலைத்தால், பின்னாளில் நாம் வாழ்வை தொலைக்க வேண்டியதில்லை... சாய்ஸ் நம்மிடம்தான். சிறு புரிதலில் வாழ்வை பெறுவது நல்லதா... இல்லை ஒரு சிறிய ஈகோவினால், வாழ்வை இழப்பது நல்லதா என்பதை சிந்தனை செய்வோம்... நினைவில் நிறுத்துவோம்..

அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு உரசல்கள் அவ்வப்போதே பேசி தீர்க்கப்படும் போது, அந்த விரிசல்கள் பெரிதாகாம‌ல் தடுக்கப்படுகிறது... அதை விடுத்து, அந்த உரசல்களை இருவரும் பெரிது படுத்தும்போது, அதுவே வாழ்வின் விரிசலுக்கு வழி வகுக்கிறது...

"நான் பெரிசும் இல்ல, நீ சிறிசும் இல்ல" எனும் சின்ன மந்திரத்தை புரிந்து, ஒவ்வொருவரும் வாழ்வின் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்தால் துன்பம் நம்மை என்றும் அணுகுவதில்லை...

(ஆர்.கோபி / லாரன்ஸ்)

(முரசின் ஓசை இன்னும் சில பகுதிகளில் நிறையும்....... அதன் அதிர்வு நம்மிடையே தொடரும்)

வாழ்க்கை பகுதி - 3

தொடர்ந்து வரும் பின்னூட்டங்கள் உற்சாகப் படுத்தி எங்களை வழி நடத்துகிறது. தங்கள் அன்புக்கு எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

இதெல்லாம் சரிதான். வாழ்க்கைய பத்தி வக்கணையா சொல்றீக. அட்வைஸ் எல்லாம் பண்ணுதீக, அது கூட ரெம்ப ஈசிதேன் ... ஆனால் ... நடைமுறை தானய்யா நட்டுக்கிட்டு நிக்குது....
நாங்களும் எத்தனையோ புஸ்தகம் வாசிச்சு இருக்கோம், கோர்ஸ் எல்லாம் அட்டெண்ட் பண்ணியிருக்கோம். என்ன பிரயோஜனம். மிஞ்சி போனா ஒரு நாள் , இல்ல ஒரு வாரம் அவ்வளவு தான் அதோட எஃபெக்ட். அப்புறம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .... காத்து இறங்கிப் போகுது. பழைய குருடி கதவ திறடி கதை தான். அதுக்கு என்ன செய்யுறது பாஸூ??.

விசனப்படாதீங்க ... நீங்க மட்டும் நாங்க மட்டும் இல்ல முக்கால்வாசி பேர் நம்ம மாதிரிதேன். அப்படியா! மெய்யாலுமா ..... ஏன்... இப்பூடி என்றெல்லாம் கேள்விகள் பிறக்குதே !!??... ஹா ... ஹா ... "ஏன் என்ற‌ கேள்வி இங்கு பிற‌க்காம‌ல் வாழ்க்கை இல்லை...".

ராத்திரி படுக்கும் போது கண்டிப்பா விடியல்காலை எந்திரிக்கணும், எந்திரிச்சதுக்கு அப்புறமா என ஆக்கபூர்வமான செயல் திட்டம் எல்லாம் ரெடியா இருக்கும். காலைல‌ செஞ்சா ஸ்படிகம் மாதிரி, கப்புன்னு இருக்கும். என்ன செய்யலாம் படிப்பு, உடற்பயிற்சி, மனதை ஒருமுகப்படுத்தி தியானம் என சொல்லி சில விஷயங்கள் லைன் கட்டி திட்டமா இருக்கும்.
ஆனா திட்டம் பூரா பணால்!!! காலையில... நாளையில இருந்து பாப்போமே, இன்னைக்கு தூங்குவோமே... என சோம்பேறித்தனம் கொஞ்சி கொஞ்சி சொல்லுதே... (இன்னைக்கு தூங்குவோமே என்று கை போர்வையை இழுக்க.. பிறகென்ன “கொட்டும் மழையின் சத்தம் கேட்டு கொர் கொர் என்ற தவளையார் கதை தான்…….”)... சோடி போட்டு நிக்குதே! என்ன செய்யலாம்....

மகாபாரதத்தில் அர்ஜூனன் கண்ணனிடம் கேட்கிறான் ‘எது செய்ய வேண்டும் என எனக்கு தெரிகிறது, என்னால் அதை செய்ய முடியவில்லை; எதை செய்ய கூடாது என்பது எனக்கு தெரிகிறது, அதை என்னால் தவிர்க்க முடியவில்லை’. நம் திட்டத்திற்கும் செயலுக்கும் ஒரு சிறு இடைவெளி உண்டு. இந்த இடைவெளியே நம் மனப் போராட்டம். நம் இயலாமை.

ஆனால் கண்ணன் கொடுக்கும் விளக்கத்தில் ஒரு நீண்ட பெருமூச்சில் நம்மை நிச்சயம் சமனமாக்கும். வாழ்வு என்றால் என்ன என்பதை புரிய வைக்கும்.

அந்த இடைவெளியே மனிதன். மனிதம்.
அது இல்லாதவர்கள் மூவர். குழந்தை, ஞானி மற்றும் பைத்தியக்காரன். ஆமா கரெக்ட் தான். லிஸ்ட்ல‌ சரியாத்தானயா சொல்லியிருக்காரு என அறியும் போது இது குறித்து நாம் கவலைப்படவோ, அதிகம் பயப்படவோ தேவை இல்லை.

ஒரு மேற்கத்திய அறிஞர் சொல்லுவார். Convert your must and should to can. I must do this….என்பதை I can do this என மாற்றிப் பார்த்தால், செயலாற்ற வேண்டிய அவசரம் மற்றும் அதன் சீற்றம் குறைகிறதல்லவா. இந்த ஆசுவாசம் தெளிவு தந்து, அமைதியாய் மேலும் செல்ல சொல்லும்.

சரி, எரிச்சலும் கோபமுமாய் சில தருணங்களில் வாழ்வு நம் முன் மலர்கிறது. அலுப்பும் சலிப்புமாய் கடந்து போகும் நிகழ்வுகள் நம்மையே சிதைக்கின்றனவே. அடப்போங்கப்பா.. என சொல்ல வைக்கிறதே. அது தான் நம் வாழ்வில் முக்கிய பாடம். என்றாலும் இது ஒரு மிகப் பெரிய வேடிக்கை. ஒரு திரைப்பாடல் வரிகள் நினைவு படுத்தும் சிந்தனை.

’கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்’

வாழ்க்கையை தண்ணிரில் உள்ள படகு என கொண்டால், படகை செலுத்த, பயணம் செல்ல என தண்ணீரில் இருந்து வெளிவர துடுப்பு வேண்டும். என்ன ஒரு கஷ்டம் துடுப்பு கொஞ்சம் பெரிசும், கனமுமாய் உள்ளது. அதை தாங்க வேண்டுமே தவிர, அதற்காக துடுப்பை தூர எறிந்தால்.... வாழ்வும் அது போல தான்.. நம் இரை தேடும் பயணத்தில், உறவுகள் அமைக்கும் முயற்சியில், குடும்பம் அமைக்கும் செயலில் கனம் கூடியதால் வாயில் நுரை தள்ளும். சகித்துக் கொண்டு நம் கடமைகள் உணர்ந்து செயலாற்றினால்... அந்த பாடல் கடைசி வரியில் தீர்வும் சொல்லி நிறைகிறது.

’பேதை மனிதனே கடமையை இங்கு செய்வதில் தானே ஆனந்தம்’

மனித வாழ்வின் லட்சியமே, மகிழ்ச்சியை தேடுவதும், துன்பத்தை தவிர்ப்பதுமே.

இது வரை வாழ்வை அணுக வேண்டிய முறை பற்றி சில சிந்தைகளை தொட்டோம் நாம். இனி மனித பருவத்தின் ஒவ்வொரு பகுதியையும், அதை ஆழமாய் செதுக்கும் நிகழ்வுகளை அருகில் சென்று தரிசிப்போம். அப்போ இது வரை ஓடினது டிரெயிலரா, மெயின் பிக்சர் இனிமேதானா...

Up to 25 years Learn, Up to 50 years earn and spend after that.

மேலே சொன்ன‌ மேலை நாட்டு தத்துவம் மேடை மேல் மேசை போட்டு ஒரு மேதை சொன்னது.

கல்வி என்ற வார்த்தை கேட்டவுடன், ஏனோ தெரியவில்லை சற்று சட்டென‌ கோபம் வரவழைக்கிறது. என்னாத்த படிப்பு... என்னாத்த படிச்சு... என்னாத்த கிழிச்சு... அட போங்கய்யா...

இப்படிதான் நம்ம பக்கத்து வீட்டுல இருக்கற‌ ஒரு சின்ன பையன் "இந்த படிப்பை எவன்தான் கண்டுபிடிச்சானோ... அதை கண்டுபிடித்தவன் மட்டும் என் முன்னால் வந்தான்னா, அவனை நாலு சாத்து, சாத்து சாத்தணும்"னான்... இந்த சின்ன பையன் பெரியவனானா ஒரு டெர்ரர் டெரிடரியோட டெரிஃபிக் ப்ரஸிடெண்டா இருப்பான்...

ந‌ம் வாழ்வின் மூன்றில் ஒரு பங்கை செலவழித்து, நம் பெற்றோரின் சம்பாத்தியத்தையும் செலவழித்து நாம் பெறும் நிலை என்ன.

ஒம்பித் எட்டுக்கு விடை. ஓரெட்டு எட்டு எனத் தொடங்கி வாய்பாட்டை, பாடல் போல் பாடி, நாம் வர வேண்டிய ஸ்டாப்பில் வண்டியை நிறுத்தி விடை சொல்லுவோம். (இதை இள‌மையில் கற்கவில்லை என்றால் வயிற்றுபாட்டுக்கு என் செய்வது??!!).சங்கீத மனனம் எனும் வெறும் உப்புக்கு சப்பில்லாத விசயம்.

ஏங்க! உங்க டெலிபோன் நம்பர் டபுள் டூ தீரி டபுள் ஃபோர் சிக்ஸ் ஃபை தான என்று கேட்டவருக்கு இல்லீங்க‌ டூ டூ தீரி ஃபோர், ஃபோர் சிக்ஸ் ஃபை ங்க என்பார். ஒரு தாள, சுருதி, லயத்தில் சேர்ந்த எண்ணையும், எழுத்தையும் தற்காலிகமாக பதிய வைக்க, நம் மூளைக்கு சக்தி உண்டு. இது கணிதத்துக்கு ஓகே. ஆனா அதே மேட்டர் அறிவியலுக்கும் சரித்திரத்துக்கும் எப்படி சரியாகும்.
பத்தாவது வகுப்பு படிக்கும் போது சரித்திர வாத்தியார் (எம்.ஜி.ஆர்.அல்ல...) சொன்னது. தில்லி செங்கோட்டை. முக்கியமான பாராகிராஃப் கேள்விடா, கண்டிப்பா எக்ஸாம்ல வரும். பத்து மார்க் சொளையா தட்டலாம். திவானி ஆம், திவானி காஸ்.
இத காலையில் எழுந்து இருவது தடவை வாய் விட்டு சொல்லி படி. கரெக்டா எழுதினா நாலு மார்க். அப்புறம் ஒவ்வொரு வார்த்தையையும் கொஞ்சம் விரிச்சு எழுதினா கூட 2 மார்க். இது தானே படித்தோம். இப்படித்தானே படித்தோம். இதே தகவல் வேறு ஒரு தருணத்தில் வேறு விதமாய் போதிக்கப் பட்ட்து.

சுற்றுலாவாக தில்லி வந்து செங்கோட்டை பார்க்க சென்ற போது, கைடு (GUIDE) செங்கோட்டை வாசலில் நிறுத்தி, இந்த நுழைவு வாசல் ஏன் இம்புட்டு ஒசரமா இருக்கு என்று கேட்ட கேள்விக்கு...அட‌ ஆமா ... ஆறடி வாசல் தான இப்ப நம்ம வீட்டில, இது ஏன் 40 அடியில் இருக்கு என முழிக்க அவர் சொன்னது.. முன் காலத்தில் யானை, ஒட்டகம் என அதன் மீது ஏறி உயரமான வாகனங்களில் (!!!???) சவாரியில் வந்ததால். வண்டியோட நேரே உள்ள வர்ரதுக்கு / ஜூட் விடறதுக்குதான் இவ்வளவு பெரிசா வாயில்/வாசல். தலைக்கு மேல தெரியுதே ஒரு திண்டு, அதுல ஆள்கள் முரசு, பூக்களோடு வரவேற்கத்தான் இந்த ஏற்பாடு.

ஒரு பெரிய நாட்டை ஆளும் ராஜா குடிமக்கள் கிட்ட பேச வேண்டாமா. ஒரு நூறு ஐநூறு பேர் கிட்ட எப்படி பேசுறது. இன்னைக்கு மாதிரி மைக்கும் ஆம்பிளிஃப‌யரும் அன்னைக்கு உண்டா, இல்லையே... அப்புறம் எப்படி அவர் எவ்வளவு உரக்க பேசி, மக்கள் அதை கேட்பது.... திவானி ஆம்...

இன்னைக்கு படுக்கை அறையில் ஏசி, மின்விசிறி என பல பல வசதிகள் எல்லாம் இருக்கு. ஆனா அன்றைய‌ ராஜா காலத்தில் எப்படி.... இது தான் திவானி காஸ். அந்த காலத்திலேயே புழுக்கமும், வேர்வையும் இருந்திருக்கணும் தானே என்று கேட்ட கேள்வி வேர்த்து விறுவிறுக்க வைத்தது.

எதிரொலி கொண்டு மைக்கும், நீரோட்டம் வைத்து குளிரும் சமைத்த அவர்கள் புத்திசாலித்தனம் புரிந்த்து. அவர்கள் செய்த கட்டிட நிர்மாணம் திகைப்பூட்டியது. நம் இன்றைய கால அறிவியல் சாதனை புரிந்தது.
யாரோ ஒருவர் மின் விசிறி கண்டு பிடித்ததால் தானே நமக்கு கை வலிக்க விசிறிய‌, கை விசிறி தேவையற்று போனது...ஏசி கண்டுபிடித்ததால் தானே, சட்டென வியர்வை மறைகிறது...என மனம் ஓவர் டைம் போட்டு யோசித்தது. சரித்திரம் படிப்பதன் நோக்கம் தெளிவடைந்தது.

ஸ்ட்ரெய்டாய் ஒரு கேள்வி. இன்டெக்ரேஷன், டிஃபெரென்ஷியேசன் என நம் மண்டைய உடைச்ச கணிதம் எதற்காக. "லேப்பிளாஸ் தியரம்" எல்லாம் ஜல்லி அடித்தோமே. அது எதற்காக. என்ன யூஸ். கொஞ்சம் கஷ்டப்பட்டு இதற்கான விடை தெரிய வேண்டி இருக்கிறது.

வானத்தில் தெரியும் நட்சத்திரத்தை கூட்ட, கடலில் உள்ள மீனை அளக்க, நாம் கண்டு பிடித்த கணிதமே இது என்றால் தலை சொறியத்தானே வேண்டி இருக்கிறது. கூட்டமாய் கூடி கும்மியடிப்பதை கூட்ட இன்டெகிரேஷன், கழிக்க டிஃபெரென்ஷியேஷன்.

படிப்பு கற்று கொடுத்த வாத்தியாரை குறை சொல்வதோ, எழுத்தறிவித்தவரை ஏளனம் செய்வதோ, பாடத்திட்டத்தை நையாண்டி செய்வதோ இல்லை எங்கள் நோக்கம். மொழி, அடிப்படை கணிதம், அறிவியல், சரித்திர பூகோளம் என நாம் கற்றுக் கொண்ட நேரத்தில். அதற்காய் கொடுத்த விலையில் தொழில் கல்வி கற்காத குறையே மனதை பிராண்டுகிறது.

வேலை சம்பந்தமாய் சில விஷ‌யத்தை கற்றுக் கொண்டால் தேவல. அலுவலக வேலையின் முக்கிய சூட்சுமம். தொடர்பியல். எழுத்து மூலமாவும், பேசும் விதத்திலும் நம் உணர்வுகளை சொல்வதே. வார்த்தை ஜாலங்களிலும், தேர்ந்த நடையிலுமே சில வாடிக்கையாளரை திருப்தி படுத்த முடியும். இதுவே பணி சிறக்க வழி செய்யும். நாம் கற்றது உடம்பு சரியில்ல, லீவு வேணும் சார்.....

பள்ளியில் நம்மிடம் சேராத அறிவு என்னவென்று அறிந்து, அதை தேடி பின்னர் சேர்த்துக் கொள்வது நலம். ஒழுங்கு, கீழ்ப்படிதல் போன்ற வாழ்க்கையின் அத்தியாவசியங்களை போதிக்க வாத்தியார் எடுத்த பிரம்பும், நாம் வாங்கிய அடியும், மனதில் ஆழ பதிந்த இந்த பயமும் இன்று வரை தொடர்கிறதே. நம்மை முடமாக்கும் சில கீற்றுக்களை மற்றும் அகற்றி விட முயலுவோம்.

இது போல் நம் கல்விப் பருவத்தில் நம்மை அலைக்கழிக்கும் இன்னொரு விடயம் பற்றி பேசுவோம். சே! சே!!! இதெல்லாம் பத்தி பேசுறதே தப்பு என ஒதுக்காமலும், கூச்சமாய் தலை கவிழாமலும் சிங்கத்தை அதன் குகையில் சந்தித்து அதன் பிடரி பிடித்து உலுக்குவோம் (எப்படியும் கடிக்க போறதில்ல...அப்புறம் என்ன!!).

வெறும் 20 சதவீத‌ நேரம் மட்டுமே ஈடுபடும் இந்த செயல், மனித மனத்தில் 80 சதவீதத்திற்கும் மேலாக ஆட்டிப்படைக்கிறது... எப்ப பார்த்தாலும் இதே யோசனை தான். ஏன் இப்படி என்று ஆச்சரியமாய் ஒரு கேள்வியும் உண்டு. என்ன பீடிகை பலமா இருக்கே, நீங்க‌ எதை பத்தி சொல்ல வர்றீங்க. இன்னாபா மேட்டரு.... அது வந்து.... ஓஹோ... அதுவா... ச‌ரி...ச‌ரி...பாலியல் இனக் கவர்ச்சி தானே.

இரு கூறுகளாய், ஆண் பெண்ணாய் பிரித்தது மட்டும் இல்லாமல் பரஸ்பர ஈடுபாடும், எதிர் பால் கவர்ச்சியும் இயல்பாய் ஆனது. இனம் தழைக்க என இயற்கை படைக்க, மாறாக இன்பம் என மனித இனம் இதை கண்டது. உடல் தளத்தில் இந்த கோட்பாடுகள் சிறையாகாமல், மனம் எனும் வெளிக்கு வந்ததிலே காதல் மற்றும் காமம் என இரு கூறானது.

உலகமே, எல்லாமுமே, எதுவுமே இந்த இனக் கவர்ச்சி தான் என சுருட்டு கு(க)டித்து "சிக்மண்ட் ஃப்ராய்டு" சொல்லுவார். கடையில் போய் கடல மிட்டாய் வாங்கும் செயல் கூட உள்ள போய் பார்த்தா இனக் கவர்ச்சி தான் எனும் ஆழத்துக்கு நாம் செல்லாமல். திருமண பந்தம் பற்றி, ஆண் பெண் எதிர்பார்ப்பு பற்றி விரிவாய் பின்னர் பார்ப்போம் என உத்தரவாதம் தந்து விட்டு, படிக்கும் பருவத்தில் இனக் கவர்ச்சியின் பங்கு மட்டுமே புரிந்து கொள்வோம்.

ஆண், பெண் என கவர்ச்சியில் நேர் எதிர் திசையில் இருந்து பார்ப்பதே பிரச்சனையின் வித்து. புற அழகு, பார்வை காட்சிகள் என ஈர்க்கப்படும் ஆண், உணர்வு என ஈர்க்கப் படும் பெண் என இரு திசைகளில் உள்ள வினோதமே புரிதலின் முதல் படி.

உனக்கு நான், எனக்கு நீ என்ற "ஒரு தார தத்துவத்தை" தனதாக்கி கொண்டு, இனக்கவர்ச்சியை இனம் பிரித்து சிறு வயதில் தோன்றும் நம் உணர்வுகளை செப்பனிட்டால், மத்திம வயதில் நடக்க இருக்கும் திருமணம் வரை மனது பொறுமை கொண்டால் மானுடம் பெருமை பெறும். ஆண், பெண் நட்பு, தோழமை, உறவு எனும் ஆரோக்கிய பூக்கள் அவனியில் பூக்கும், ஸ்னேகம் மலரும். இந்த பூக்கள் சிற்றின்பம், சமூக சீரழிவை பொசுக்கும். புதுப்புனல் பூக்கும்,. தெளிவாய், திடமாய் மனித நேயத்தோடு ராஜபாட்டையில் முரசு ஒலிக்கும்.
(ஆர்.கோபி / லாரன்ஸ்)
முரசின் சத்தம் இன்னும் ஓங்கி ஒலிக்கும்.....

வாழ்க்கை : பகுதி 2

(சாரி! ஷமிக்கணும்... இந்த பகுதி கொஞ்சம் சின்னதாப் போச்சு....)

முழக்கமாய் விரிந்த முதல் மூச்சு, தங்கள் விழிகளில் மலர்ந்து, மண்டைக்குள் புகுந்து விரல்களின் வழி பின்னூட்டமாய் பார்த்த போது, ஜிலீர் ஜிவ்வ்வ்வ்", ஆஹா!!! நச்சுன்னு ஒரு ஃபீல்.

பரஸ்பர அன்பில் நாங்கள் நினைத்ததை பங்கு வைத்த போது நல்லா இருக்கு, ரசிக்கிறோம் எனும்போது ரொம்ப சந்தோஷ‌ம். தங்கள் பின்னூட்டத்தை எதிர்பார்க்கிறோம் என விடுத்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்த அத்தனை நெஞ்சங்களுக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி.

இந்த வாழ்க்கைத் தொடர் எது. தெளிவாய் விளக்கும் சித்தாந்தமா, இல்லை தெரியாமல் குழ‌ப்பும் வேதாந்தமா என ஒரு தன்னிலை விளக்கம். பகுத்தறியும் நம் அறிவில், வாழ்க்கை பற்றி சிலபஸில் வராத சில பாட திட்டங்கள் உள்ளன. அவை எப்போதுமே சாய்ஸில் போய்விடும்.. அதை நாம் உணர வாய்ப்பும் கம்மி.

ஒரு பிரபல ஆங்கில இலக்கியவாதி சொல்லுவான். நம் மூளை ஒரு சூப்பர் கம்புயூட்டர். என்ன ஒரு கொடுமை. முழுக்க இன்ஸ்டால் செய்து, ரெடியாக நம்மிடம் கொடுத்து விட்டார்கள். யூசர் மானுவல் மட்டும் இல்லை.

பிறப்பு, இறப்பு எனும் சமாச்சாரங்கள் நாம் தெ(ரி)ளிய கொஞ்சம் கஷ்டம். உணர வாய்ப்பும் கம்மி. அது அறிஞர்களின் விளக்கத்தை சார்ந்தே உள்ளது. வாழ்வியல் பிரச்சனை சில சந்திக்கும் போது தன்னம்பிக்கை இழந்து, அவசரக் குடுக்கையாய் தற்கொலை செய்யும் மனிதனை எப்படி கொள்வது. ஆன்மா தான் நீ!!! எனும் இந்திய வாக்கியமோ, மே த ஸோல் ரெஸ்ட் இன் பீஸ்!!! எனும் ஆங்கில வாசகமோ, முடிவில்லா வாழ்க்கை! எனும் முழக்கமோ பயணிப்பது ஒரே பாதையில்.

சராசரி சிந்தையில் ஆழமாய் நாம் செல்வது இல்லை. அது என்ன, ஏன் இப்படி என கேள்வி கேட்பது இல்லை. பயம் காரணமோ, இதெல்லாம் எதுக்குங்க... வேணாம் விட்டுடுவோம் என நினைப்புக்களோ எதுவோ ஒன்று நம் எல்லா மனித மனங்களையும் இணைக்காமல் இரு கூறாக்கி (சுக்கு நூறு அல்ல...) விடும் கூராக உள்ளது.

அந்த மிகப் பெரிய சப்ஜெக்ட்டை கொஞ்சம் பக்கத்தில் உக்கார வைத்து விட்டு. முதல் மூச்சில் தொடங்கி, இறுதி மூச்சு வரை நம் மனித வாழ்வை கொஞ்சம் அருகில் பார்க்கலாமே எனும் சிந்தனையே இந்த தொடர்.

சில தகவல்களை அலசி, உடனே செயல் படுத்த சில வினைகளை உருவாக்கினால் எப்படிங்க..... முதல் பகுதி படித்து விட்டு நன்றியோடு அப்பா அம்மாவை நினைச்சா, நம்ம முதல் பகுதி சூப்பர். அது தான் நோக்கம். இதுவே ஒரு தொலைபேசி, அன்பான மெய் தீண்டல், நச்சுன்னு ஒரு கிஸ், வாய் நிறைய சோறு, மனம் நிறைந்த புன்னகை, இப்படி தங்கள் வசதிக்கேற்ப எக்ஸ்டிராவாய் ஏதாவது நிறைவேறியிருந்தால் சூப்பரோ சூப்பர், படு சூப்பர்.

உரிமையாய் சட்டையை பிடிச்சு ஒரு தோழமை கேட்டது. கரெக்டா சொல்லு, இது நீங்களே எழுதுனதா, இல்ல மண்டபத்தில யாராவது சொன்னதா/எழுதி கொடுத்ததான்னு. பாருங்க எவ்வளவு கஷ்டப்பட்டு காலால ஓடினாலும், ரன்னிங் ரேஸ்ல ஃப‌ர்ஸ்ட் வந்தா, கூப்பிட்டு கையில தான் கப்பு கொடுக்கிறாங்க, காலுக்கு கொடுக்குறதில்ல. அதாங்க உலகம்... உக்காந்து யோசிக்கிறோம்..., ரூம் போட்டு. அவ்வளவுதான்.

இதே சிந்தனையை யாரோ ஒருத்தர் ஏதாவது ஒரு தருணத்தில் சொல்லித்தான் இருப்பாங்க.

‘பிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை,
நிறத்தை தேர்ந்தெடுக்கும், குணத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை'

என (படையப்பா படத்தில், ஓஹோஹோ...கிக்கு ஏறுதே...) சினிமா பாட்டில் சொன்னதை, ஃபுல் பாட்டில் கவுத்திட்டு நம்ம " "புளியங்கொட்டை ராமசாமி"யும் சொன்னார். அது போல சில சிந்தைகளை ‘நாங்கதான் யோசிச்சு சொன்னோம்’ என சொல்லவும் பிளான் இருக்கு.

துணையிருப்போம் இறுதிவரை என பின்னூட்டம் இட்ட தங்கள் அன்பு, பெருந்தன்மை, ஆக்கும் மன நெகிழ்ச்சி எங்கள் கண்களை பனிக்க வைக்கிறது (இது "தல" சொன்ன அந்த கண்கள் பனித்தது...இதயம் இனித்தது போல இல்லை...).

ஸ்ரெய்டாச் சொல்லு, இந்த பச்ச பிசின் மேட்டர் கரெக்ட் தானான்னா, ஆமாங்க என்றோம். அவரே தொடர்ந்து ‘ஆங்.. அதான், பச்சை பிள்ளன்னு சொல்றோமான்னார். இல்லைங்க அது வந்து பசுமையின் மொழித்திரிபு என விளக்காமல், பச்சை பச்சையா பேசுறான் என்பதில் கொச்சை எனும் அர்த்தம் தொனிக்கிறதே!!!! அது ஏங்க??? என எதிர் கேள்வி கேட்டோம். ... அதுவும் பச்சைதான!

என்னங்க செய்யுறது என் வாழ்க்கையை, நான் என்ன வைச்சுக்கிட்டா வஞ்சகம் செய்யுறேன். முயற்சி செய்யுறேன், முடியல என சில சமயம் தோன்றியிருக்கிறது. வாருங்களேன் நண்பர் சிம்பிள் சுந்தரை (www.onlyrajini.com) வம்புக்கு இழுத்து ஒரு கற்பனை செய்துள்ளோம், அவர் மன்னிப்பார் அல்லது எங்களை உரிமையாய் கோபித்து கொள்வார்...

ரஜினியின் தீவிர ரசிகர் அவர். ஒரு குத்து மதிப்பாய் அகில உலகே எதிர்பார்க்கும் ‘எந்திரன்’ பட ரீலிஸ் போது அலுவலக வேலையாய் உகாண்டா சென்று விட்டார் எனத் தொடங்குவோம். தவிர்க்க முடியாத காரணத்தால் உகாண்டா வந்து விட்டாலும் கூட எப்படியும் படம் பார்க்க வேண்டும் என டிசைட் செய்து விட்டார். அக்கம் பக்கத்தில் விசாரிக்கும் போது வாயில் நுழையாத ஏரியாவில் (டகாமா டொமேகா) ஒரு தியேட்டரில், எந்திரன் பட‌ம் ரிலீஸ்.

துள்ளி குதித்து சினிமா பார்க்க கிளம்பி விட்டார். சென்னையில் படம் பார்க்க விடாத விதியும் துள்ளி குதித்து அவரோடே டிக்கெட் வாங்காமல் பஸ்ஸில் பயணிக்கிறது. தியேட்டர் வந்தாச்சு. பெரிய க்யூ. சுந்தரும் வரிசையில் நின்று திக்... திக்... மனதோடு. விதியும் அப்படியே. கடைசி கடைசியா கவுண்டர்ல கை விடும் போது டொம்ன்னு சத்தம்.. என்னன்னு பார்த்தா, குளோஸ் பண்ணி ஹவுஸ் புல் போடு மாட்டிட்டாங்க... சுந்தர் வெறுத்துட்டார். விதி சிரிச்சுது. வேற வழி... கூடவே அவரும் சிரிச்சார்...

பக்கத்துல உள்ள எல்லார் கிட்டயும் ‘எக்ஸ்யூஸ்மி மிஸ்டர் கந்தசாமி, எக்ஸ்டிரா டிக்கெட் கண்ணுல காமி’, "ப்ளாக்ல ஒரே ஒரு டிக்கெட்டாவது கிடைக்குமா?" என துளாவ, "உகாண்டா ப்ரைம் மினிஸ்டருக்கே" அடுத்த ஷோ டிக்கட் தான் இருக்காம்... ஒண்ணும் பிரயோசனமில்ல, கடைசியா ஒரு காம்ரேட் சாயந்தரம் ஷோவுக்கு டிக்கட் இருக்கு வேணுமா’ இன்னு கேக்க, ஓகேன்னு புடுங்கிட்டார்.

இதுல பாத்தீங்க‌ன்னா, "எந்திரன்" படம் பாக்கணும்ங்கற‌ இலக்கு, சோதனைகளை சந்திச்சப்போ சிம்பிள் சுந்தர் என்ன செஞ்சார். அடுத்த அடுத்த வழிகள பார்த்தார். நின்னு புலம்பி இருக்கலாம். அதுக்கு நேரம் செலவழிக்காம ஓட்டம்... ஓட்டம்... வாழ்வின் எல்லை வரை ஓட்டம்.

விஞ்ஞான கவிஞர் வெத்து வேட்டு வீராச்சாமி இதப்பத்தி சொல்லும்போது, ‘கேல‌ண்ட‌ர்ல நாம என்ன‌ தேதி கிழிச்சோம்ங்க‌ற‌து முக்கிய‌ம் இல்ல‌ கிழிச்ச‌ தேதியில‌, நாம‌ என்ன‌த்த‌ கிழிச்சோம்ங்க‌ற‌துதான் முக்கிய‌ம்...’ என்றார்... அடாடாடா... என்ன தத்துவம்... என்ன தத்துவம்...

வாழ்க்கை நமக்கு ரெண்டு சாய்ஸ் தருது. ஒண்ணு பிடி...உடும்பு பிடி இல்லைன்னா, அடுத்தது புலம்பல்.

எது சரி! நம்ம எல்லாருமே முதல் சாய்ஸ்தான் முடிவு செய்யுற ஆளுங்க. பிடி... உடும்பு பிடி.... டவுட்டா!!! நின்னுட்டீங்கன்னா..... அடுத்த பாராவுக்கு வாங்க. நீங்க முயற்சி குறைவில்லாத, சில முயற்சிகள் தவறினாக் கூட லேசில விடுர ஆளு இல்லைன்னு நாங்க ப்ரூவ் பண்ணுறோம்.

‘முதுகுளத்தூர் அருகே, பழவந்தாங்கல் பக்கம், மல்லை கடலோரம்.... மல்லாட்டை பயிரறுத்து...கட்டிய மூடையில் பாதி காணாமல் போனதால்... கோபம் கொண்ட‌ கோப்பெரும் செங்கண்ணனின் ..... ‘ மேலே சொன்ன வார்த்தையை உங்களால் உரக்கச் சொல்ல முடிகிறதா. வேணும்னா வாசிக்குறத நிறுத்திட்டு அக்கம் பக்கம் பார்த்திட்டு, உரக்கச் சொல்லி பாருங்கள். முடிகிறது என்றால் "தளராத தன்னம்பிக்கையான முயற்சியின் தளபதி" நீங்கள்.

பிறந்த குழந்தை தன் மூன்றாம் மாதம் தொடங்கி தன்னை சுற்றியுள்ள ஓசை கேட்க தொடங்குகிறது. பின்னர், ஆறு மாதம் முதல் அதை முயற்சிக்கிறது. மா.... எனத் தொடங்கி கொஞ்ச காலத்தில் ம்... என அழுத்தம் கொடுத்து ம்...மா.... என தொடர்ந்து பின் அம்மா என சொல்லி பரமாத்மா என பக்குவமாய் சொல்ல ஒரு மூணு முதல் நாலு வயது வரை ஆகிறது.

பிறக்கும் போது நமது நாக்கும், குரல் வளையும் பேச வலு இல்லாமல் உள்ளது. நம் முயற்சியால் செய்யும் பயிற்சியால் மட்டுமே பேச முடிகிறது. பிறவியில் காது கேளாத குழந்தைகள், முதல் மூன்று வருடங்களில் செய்யத் தவறுகிற இந்த செயலே அவர்களை ஊமைகளாக ஆக்கி விடுகிறது. காது கேக்காததால் பேசும் வல்லமையை இழக்கும் பரிதாவம், முயற்சி என கேட்கும் போது மனம் பதறுகிறது. விளையாட்டாய் நாம் செய்த விசயம் எவ்வளவு பெரிசு என்பது புரிகிறது.

தொடர்ச்சியாய் மூன்று வருடம் இதை செய்தோமே, அடுத்தவர் கேலி என்பதை புறந்தள்ளினோமே. மழலை என வீட்டார் கொண்டாடினாலும், மக்கர் பண்ணுதுடாய் என அக்கம் பக்கம் சொன்னாலும் வெறும் சிறிப்பில் நம் ராஜ பாட்டையில் நடந்தோமே. இன்று அந்த தளராத தன்மை எங்கே உள்ளது என தேடச் சொல்லுகிறது.


முந்தைய அத்தியாயத்தில் நம் விருப்பு வெறுப்பு இன்றி திணிக்கப்பட்டதாய் சொன்ன அடையாளம் சில. நிறம், உடலமைப்பு, குரல், தாய், தாய் மொழி.....
லக்னோவில பொறந்தா வெறும் தாஸ், அதுவே லண்டன்ல பொறந்தா அவரு லார்ட் லபக்தாஸ். நாம் இந்த குடும்பத்தில் பிள்ளையாய் பிறந்ததால் நம் இனம், மொழி, மதம், பழக்கம், உணவு முறை எல்லாம் நாமாயிருக்கிறது.


இன்னும் கொஞ்சம் கலரா பொறந்திருக்கலாம், அரவிந்த் சாமி மாதிரி... இன்னும் இரண்டு இஞ்ச் உயரமா இருந்திருக்கலாம், அமிதாப் மாதிரி...ராஜீவ் காந்திக்கு பிள்ளையா பிறந்திருக்கலாம். இந்த மாதிரி அந்த மாதிரியா நினைவுகளில் தவறில்லை. நேர விரயம், காலம் வெகு சடுதியில் நகர்கிறது.

முக்கியமாய் முதல் படியாய் இருகூறாய் இதை பிரிக்கலாம்.
மாற்ற முடியாதது, மாற்ற முனைவது.

நிறம் பிடிக்கவில்லையா, மூக்கு பிடிக்கவில்லையா மாற்றுங்களேன். முகம், மூக்கு என்று அனைத்தையும் மாற்றிய மைக்கேல் ஜாக்ஸன் இல்லையா பின்ன. என்ன, அந்த பணமும், நேரமும் மெனக்கெடும் அவசியம் என பட்டால்... ஆல் த பெஸ்ட்!!!. இல்லை என நினைக்கிறீர்களா, நான் இவ்வளவுதான், இது தான் நான் என புலம்பலை புண்ணாக்கு தின்ன சொல்லிவிட்டு உலகிற்கு முரசறைந்து விட்டு நம் வேலையை தொடங்கிவிடலாம்..

புலம்ப‌லில்லாத முயற்சி முறசரையும்....

(இன்னும் வரும்......)