
வேலை கொடுக்கிற நிறுவனம் நமக்கு தரும் சம்பளத்தையும் சலுகையையும் நல்லதா தானே சொல்லும். இல்லாம, உங்க தகுதிக்கு நாங்க ரொம்ப குறையாத்தான் கொடுக்கிறோம் என்றா உண்மையை சொல்லுவார்கள்.
இதுதான் சம்பளம், இது தான் சலுகைகள் என கேட்கும் போது, கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரித்தான் இருக்கும். இந்த சந்தர்ப்பத்தில் தான் அதே ஊரில் இருக்கும் நமது நண்பரிடத்தில் சொல்லும் போது அவர் சொல்லுவார்.
தங்க இவ்வளவு, சாப்பிட இவ்வளவு, இந்த சம்பளம் போதுமா போதாதா எனும் போதனை எல்லாம் அவர் தான் சொல்ல வேண்டும். என்ன சில சமயம் ஆர்வ கோளாறினால் நண்பர் கொஞ்சம் அதிகம் பேசலாம். பொறுமையாய் சகித்துக் கொண்டால், கை மேல் பலன் உண்டு.
சரி, பணம் சம்பாதிக்கிறதுண்ணு முடிவு செஞ்சாச்சு, துபாய் பத்தியும் தெரிஞ்சாச்சு, நல்ல வேலையும் தேடியாச்சு. அப்புறம் என்ன என படிப்படியாய் நாம் சிந்திக்கும் போது, ஒரு முக்கியமான விசயம். இது தான் வெற்றியின் ரகசியம்.
அது என்ன !!!
இது சுலபம் இல்லை. சொந்த மண்ணை விட்டு வெளிநாடு வர, உடம்பில் மட்டும் அல்ல மனதிலும் மலை அளவு தில் வேண்டும். தீபாவளி சேல்ஸ்ல தள்ளுபடில வாங்கி மலை இல்ல மடுகுதான்னாலும் ஓகே.

புது நாடு, புது கலாச்சாரம், எல்லாத்துக்கும் நம்மை மாற்றிக் கொள்கிற போக்கு வேண்டும். முனைப்பும் வேண்டும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்க முடியும் எனும் தன்னம்பிக்கையும் தள்ளுபடி இல்லாமல் வேண்டும். இதுக்கெல்லாம் சிகரம் வைத்தால் போல பொறுப்புணர்ச்சி பொங்கிப் பெருகணும்.
இது இல்லன்னா, இத புரியலேன்னா ‘எங்க ஆத்துக்கார்ரும் கச்சேரிக்கு போறார்ங்க’ கதையா நானும் போயி கொட்டிக் கிடக்கிற காச அள்ளிட்டு வந்திடரேன்னு நினைச்சா கஷ்டம் ஆயிடுங்க.
சரி வந்து இறங்கினாலும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இன்னொரு விசயம் உண்டு.
வெளி நாடு வந்து இறங்கியதும் சில அடிப்படைகளை உணர்ந்தால் நல்லது என தோணுது. என்ன தான் இருந்தாலும் இது நம்ம ஊர் இல்ல. இந்த ஊர் சட்ட திட்டம், நடைமுறை, தட்ப வெப்பம், சுற்று சூழல் எல்லாம் பார்த்து நாம கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கறது அவசியம்.

நாம எதுக்கு வந்திருக்கிறோம், காசு சேக்கறதுக்கு. அந்த நெனைப்ப விட்டு விடாம, கெட்டியா பிடிச்சுக்கணும்னு சொல்லலாம். அனாவசிய செலவை குறைக்கலாம். அடுத்தவனுக்காக வாழாம நமக்காக வாழலாம். அது என்ன அவனுக்காக, அடுத்தவனுக்காகன்னு கேட்டீங்கன்னா.
ராசா மாதிரி மெத்து மெத்துன்னு உக்கார்ரதுக்கு சோபா இங்க கிடைக்கும். வாங்கி போட்டா எவ்வளவு நாள் நாம இதுல உக்காருவோன்னு தெரியாது. ஊருக்கு போகும்போது தூக்கிட்டு போகவும் முடியாது. வேலை இல்ல போடான்னு கம்பெனிக்காரன் சொன்னா, சொன்ன 30 நாள்ல நம்ம வெளிய போகணும். இதென்ன நம்ம ஊரா, இங்க இருக்கணும்னா விசா என்கிற ஒரு விஷயம் வேணும்.
அதனால எந்த செலவு செய்தாலும் யோசிச்சு சரின்னு பட்ட பின்னால செய்யுறது நல்லதுன்னு தோணுது.
இதே கருத்தை ஒரு கவிஞர் சொல்கிறார். யார் அவர்.
"கவிஞர் காத்துவாயன்". அவர் இலக்கிய பங்களிப்பு நேயர்கள் அறிந்ததே. இலக்கிய வட்டங்களால் பின்னர் ‘எல்லாம் தெரிந்த ஏழுமலை எனச் செல்லமாய் அழைக்கப்பட்டவரும் அவரே. துபாய் பற்றிய கவிதையில் இப்படி சொல்கிறார்.

ரைட்டுல பாரு பொண்ணு
நடுவால நீ நின்னு
சாப்டா ஒரு பன்னு
யோசிச்சு தின்னு
தின்னுட்டு பணத்த எண்ணு
(முற்றும்..... கனத்த மனதுடன்....)
துபாய் பற்றிய தொடரில் வளைகுடா, அன்னிய தேசம் என்பதை தகவலாய் மட்டும் சொல்லாமல், ஒரு கதை போல, நகைச்சுவையாய் சொல்ல வேண்டும். முடிந்தால் உலக, தத்துவ, தார்மீக அடிப்படையிலான எங்கள் சிந்தனையும் இணைக்க விரும்பினோம். தங்கள் கருத்துக்களை அறியும் போது, நாங்கள் விரும்பியது நடந்தது என்றே தெரிகிறது. வெற்றி பெற்றுத்தந்த அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

எழுதுகிறோம் எனும் வார்த்தையில் விநோதம் உள்ளது. இருவர் எப்படி ஒரு தொடர் எழுத முடியும். முடியும், நல்ல புரிதலும், சக விட்டு கொடுக்கும் மனப்பான்மையும், பரஸ்பர மதிப்பும், ஆழ்ந்த அன்பும், இருந்த்தால் இது சாத்தியமாயிற்று.
இந்த தொடரை எழுத உறுதுணையாய் இருந்த அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றி கூறி, நிறைவு செய்கிறோம்.
நன்றி வணக்கம்........
(குறிப்பு : துபாய் பற்றிய மேலே முடிந்த தொடரில் "வாழ்க்கை" பற்றி நாங்கள் எழுதிய குறிப்புக்கள் பிடித்ததாய் சொன்னதால், முழுமையாய் "வாழ்க்கை" பற்றி விரிவாய் ஒரு தொடர் எழுத உத்தேசித்துள்ளோம் - ஆர்.கோபி / லாரன்ஸ்)