மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 11)

உலக மனுச ஜீவன்கள்ல இரண்டு வகை. வாரம் பூரா வேலை பார்த்து லீவு கிடைச்ச உடனே சுருண்டு மருண்டு மரவட்டை மாதிரி படுக்கிற சாது சாதி. இன்னொன்னு லீவு வுட்டதும் தோள்ல துண்ட போட்டுட்டு கிளம்புற அல்லது பட்டய கிளப்புற பிரதி வாதி. முன்னர் சொன்ன குரூப் எல்லாம், குளிச்சேன் தூங்கினேன் சாப்பிட்டேன்னு சொல்லும் நம்ம கேட்டா, அதுவே அடுத்த குரூப், வார இறுதி, விடுமுறைன்னாலே, கேளிக்கை பொழுது போக்குன்னு உடனே கிளம்பிருவாங்க.

நாலு சக்கரமும் ஓடக் கூடிய வண்டிய (நல்லா பாருங்க, அல்லது கேளுங்க, கார் நாலு சக்கரத்தில இருந்தாலும், ஒடுறது என்னவோ இரண்டுதான், மத்த இரண்டும் உப்புக்குச் சப்பாணி (16 வயதினிலே கமல் அல்ல) மாதிரி சும்மா சுத்திக்கிட்டு இருக்கும்) எடுத்துக்கிட்டு, பாலைவனத்துக்கு போயி, டயர்ல உள்ள பாதிக் காத்த காத்து வாங்க விட்டுபுட்டு, ரோடே இல்லாத சொரி மண்ணுல வண்டிய ஓட்டுவாங்க. காத்து தான் பாலைவனத்துல பி.டபிள்யூ.டி, அதாங்க ரோடு போடுற வேலை. அது பாட்டுக்கு போற வழிக்கு மண்ண குமிச்சு வைச்சுட்டு போயிடும். அந்த ஏற்ற இற‌க்கங்கள்ல வண்டி போறது ரொம்ப நல்லா இருக்கும். கொஞ்சம் பயமாவும் இருக்கும். வானத்துல / காத்துல போயிருப்பீங்க, கடல்ல போயிருப்பீங்க, பாலைவனத்துல போறது ஒரு தனி அனுபவம். எல்லா இடமும் ஒரே மாதிரி தெரியும். காந்த துணையோட உள்ள காம்பஸ் மட்டும் இல்ல நாம் தொலைஞ்சு போற சான்ஸ் ரெம்ப அதிகம். இந்த பீதி பயணம் முடிந்ததும் தற்காலிக டெண்ட்ல‌ ரிலாக்சேஷன். நல்ல அரேபிய சாப்பாடு, பெண்கள் என்றால் கையில் மருதாணி, எகிப்தின் விசேஷமான பெல்லி டான்ஸ் (தொப்பை நடனம்), அரபி உடையணிந்து ஒரு ஃபோட்டோ, ஒட்டகத்தின் மேல் ஒரு ஒய்யார சவாரி. இந்த முழுதும் ஒரு பேக்கஜ் ஆக டெஸர்ட் டிரைவ் என்ற பெயரிலும், நம்மூர் கணக்கில் 3000 ரூபாயிலும் கிடைக்கும்.

கடலுக்குள்ள வாயில ஆக்ஸிஜன் குழாய கடிச்சுக்கிட்டு, கடலுக்குள்ள அப்படி என்னதாம்மா இருக்கு என்று பார்த்து வரலாம். அடிக்கடலுக்குள்ள மீனம்மா, மீன் மாமியார்ன்னு ஸ்பெஷலா பாட்டுப் பாடி ஆடலாம். போயிட்டு வந்த மக்கள் சொல்றாங்க, பழக்கப்படுத்தின டால்பின் வந்து நம்ம கிட்ட குஷி படுத்திட்டு போகுதுன்னு. என்ன நம்ம ஊர் காசில ஒரு 10000 ரூபா அம்புட்டுதேன், ஒரு அரை மணி நேரத்துக்கு.

இல்ல வானத்துல போயி பாராசூட் கட்டிக்கிட்டு, தொபுக்க்டீர்ன்னு கீழ குதிக்கலாம். கடல்ல டால்பினோட நீந்தி அதுக்கு ஒரு முத்தமும் தரலாம். அல்லது நமக்கு ரொம்ப பழகிப் போன தண்ணீர் பார்க் ! அதாங்க வாட்டர் அம்யூஸ்மெண்ட் பார்க் எல்லாம் சர்வதேச தரத்தில நம்ம பர்ஸ்ச பதம் பார்க்க பல் இளிச்சுகிட்டு நிக்குது. சரி ரேட்டு ரொம்ப ஜாஸ்தியா இருக்கு, சினிமா டிராமா பத்தி சொல்லுங்கன்னா.

தமிழ் படம் ஒடுற தியேட்டர் முந்தி ரெண்டு, மூணு இருந்துச்சு, இப்போ ஒண்ணே ஒண்ணு என் ஒன்றரை கண்ணுன்னு கலேரியாங்கிற பேரில இருக்கு. "டோன்யா"ன்னு ஒரு தியேட்டர் போர்ட்டுக்கு உள்ளே ரெஸ்டிரிக்ட்ட் ஏரியாக்கு (எங்க ஏரியா உள்ள வராதே!!) உள்ள இருக்கிறதால, அங்க உள்ள மக்களுக்கு தான் உதவும். நம்ம துபாய் காரருக்கு வண்டி பிடிச்சு, கேட் பாஸ் வாங்கி உள்ள போறது எல்லாம் நடக்குற வேலைய சொல்லுங்க பாஸ் என்ற வார்த்தையோடு போகும்.

ஒவ்வொரு எமிரேட்டுலயும் ஒரு தியேட்டர் இருக்கு. அதென்ன ஒன்றரை, கலேரியா 1, 2ன்னு ரெண்டு தியேட்டர் இருந்தாலும் ஒண்ணு ரொம்ப பெரிசு (நம்ம நமீதா மாதிரி), அடுத்தது ரொம்ப சின்னது (நம்ம பாவனா மாதிரி). நம்ம வீட்டுல உட்கார்ந்து பாக்கிற மாதிரியே இருக்கும். ஒரு டிக்கெட் விலை திராம் 30 மட்டுமே (ரூ.400 வரை)... அதுக்கு கார்ல போய், அங்ஙனயே பார்க்கிங் போட்டா, அதுக்கு ஒவ்வொரு மணிக்கும் திராம் 10. ஆக, ரூ.400 குடுத்து டிக்கெட் வாங்கி "கந்தசாமி" படம் பாத்தவியங்களுக்கு, பார்க்கிங் ரூ.525க்கு குறையாம... எவ்ளோ சல்லிசா இருக்கு இல்ல... சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்காப் பணம் என்று.

தமிழ் அசோசியேஷன் எல்லாம் இல்லையா என்ற கேள்விக்கு ஏன் இல்லாம ஒண்ணுக்கு பத்து இருக்கு என்று பதில்லலாம். அதுவே பக்கத்து சேர நாட்டுக்கு ஒரே அமைப்பு அம்சமா இருக்கு. ஒண்ணு மண்ணா இருக்கதால நல்ல அறுவடை மிதமிஞ்சிய மகசூல். நம்ம ஆளுங்க தான் மதம், வட்டாரம், பின்ன தான் "தலை"வனா இருக்கணும்னு இப்படி எல்லாம் காரணம் சொல்லிக்கிட்டு சகட்டு மேனிக்கு கடை துறந்ததாலே நீ பெரிசா நான் பெரிசா என்ற முக்கிய சண்டையில் முழு முச்சா இருக்காங்க. ஒத்துமையா ஒரே அமைப்பா இருங்கப்பா என்று ஒவ்வொரு மேடையிலும் எம்பெஸி ஆளுங்க கரிசனமா
சொல்றதெல்லாம் ஆறிப்போன காப்பி மாதிரி. குடிச்சதும் தெரியல, செமிச்சதும் தெரியல.

வருடா வருடம் நடக்கும் ஒரு கோலாகல கொண்டாட்டம் ‘துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல்’. அக்கம் பக்கம் உள்ள அத்தனை சுத்து பட்டி அரேபிய நாடுகளும் வந்து கூடிக் கும்மாளம் போடும் திருவிளாதேன். ஊரே திருவிழா கோலம் பூண்டு, வெளியூர் வாசிகளால் தங்கும் விடுதிகள் எல்லாம் நிரம்பி வழியும், விமான போக்குவரத்து சில பல/ பல சில மடங்குகளாகும். இந்த ஒரு மாத வருமானம் சில ஹோட்டல்களுக்கு ஒரு வருடம் வரை தாக்கு பிடிக்க ஊதியம் தரும்.

சரி அப்படி எங்கு கொண்டாட்டம். நம் ஊர் பொருட்காட்சி போல், ராட்டினம், பஞ்சு மிட்டாய் சமாச்சாரங்கள் ஒரு இடத்தில் உண்டு. அந்த இடத்திற்கு "க்ளோபல் வில்லேஜ்" என்று பெயர். உள்ளூர் கடைகள் முழுதும், தள்ளுபடி விலையில் வாடிக்கையாளரை கூப்பிட்டு பொருட்களை கையில் திணிப்பார்கள்.வாங்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை என்றாலும் அந்த சலுகை விலையில் நம் மனமே சபலப்படும்.

சொல்லுங்கப்பா உங்க வீகத்தன்னு நீங்க கேட்டீங்கன்னா, உள்ளூர் வர்தத‌கத்த உசர வைக்க 1996 வருசம் சும்மா திருவிழான்னு தொடங்குனது, இன்னைக்கு ரொம்ப பெரிசா இந்த வட்டாரத்தையே திரும்பி பார்க்க வைக்குது. ஜனவரி 15 தொடங்கி ஃபிப்ரவரி 15 வரை ஒரு மாத கூத்து தான், உள்ளுர் சராசரிவாதியை போக்குவரத்து நெரிசல் என்ற பெயரில் பதம் பார்க்கும். இத்தனைக்கும் 1 லட்சம் பார்வையாளர்கள் முதல் நாள்லயும் மொத்தமா 35 லட்சம் பேர் ஒரு மாசத்திலயும்னு அவங்க பெருமையா கணக்கு சொல்லும் போது நமட்டு சிரிப்பு சிரிச்சு, "எங்க ஊர் தீவுத்திடல்"ல இத விட பெருசா பண்ணிட்டோம்டா என்று நினைக்கும் நம் நினைப்பே, அடுத்த தகவலில் தடுக்கி விழும். இந்த திருவிழாவில 100 கோடி ரூவாய்ல சாமான் வாங்கியிருக்காக. நம்முர்ல வெறும் பஜ்ஜி, போண்டா சேல்ஸ்தேன்....

உள்ள நுழைய கட்டணம் 10 திராம், நம்மூர் கணக்கில 130 ரூபா – ஒரு ஆளுக்குத்தான். சரியாத்தான் நினைச்சீக. கொஞ்சம் ஜாஸ்தியாச்சேன்னு நினைச்சீங்கன்னா, இதையும் கேட்டுகோங்க, இந்த சமயத்துல கவர்மெண்ட்டே லெக்ஸஸ் கார் அதிர்ஷ்ட குலுக்கல் ஒண்ண நடத்துது. ஒரு டிக்கட்டோட வெல வெறும் 250 திராம் தான்... அதாவது, நம்மூர் காசுல ரூ.3250 தேன்... ஒவ்வொரு 5000 டிக்கட்டுக்கு ஒரு குலுக்கல்.
நம்ம டிக்கட்டோட நம்பர் குலுக்கிப் போட்டு, அதில நம‌க்கு அதிர்ஷ்டம் மட்டும் இருந்துச்சுன்னா, போகும் போது லெக்சஸ் கார் கொண்டு போக வாய்ப்பு இருக்கு. பின்ன என்னங்க, ஒவ்வொரு 5000 டிக்கெட்டுக்கும் ஒரு குலுக்கல், தினத்துக்கும் இரண்டு லெக்சஸ் கார்ங்கிறப்போ கிடைக்க நல்ல சான்ஸ் இருக்கில்லையா. அந்த நப்பாசையில நம்மாளும் போவாய்ங்க. கிட்ட போயி கேட்டீங்கன்னா, மன்னன் பட "கவுண்டமணி" ஸ்டைல்ல ‘உள்ள வாங்கி வெளியில விக்க வேண்டியது தான், அத யாருப்பா அசிங்கமா ரோட்டுல‌ எல்லாம் ஓட்டுவாய்ங்கம்பான்’

இது மட்டும் இல்ல. பத்தாயிரத்துக்கு தங்கம் வாங்கினா, பெட்ரோல் பங்க்ல போயி பெட்ரோல் இல்லாம 50 ரூபாய்க்கு மேலா சாமான் வாங்கினா (மேலயும் கீழயும் பார்க்காதீங்க..... ஆயில், ரேடியேட்டர் தண்ணீ, குழாய்புட்டு, கேக், பிஸ்கட், ஜூஸ் இந்த மாதிரி இத்யாதி இத்யாதி சாமான்கள்) உங்களுக்கு கூப்பன் தான், குலுக்கல் தான், குப்புன்னு பரிசு மழைதான். தினத்துக்கு நிசான் கார், 1 கிலோ தங்கம், ஒன்றரை கோடி ரூபான்னு பூரா வாய் ஜொல்லு விடுறா மாதிரி பரிசுதேன்.

இங்கனதான்னு இல்ல, துபாய் முழுக்க இந்த பரிசு கலாச்சாரம் அதிகம் தான். உள்ளூர் வங்கிகள் கூட டெபாஸிட் பெற்றுக் கொண்டு மாதம் ஒரு முறை காலாண்டுக்கு ஒரு முறை எனும் விதமாய் குலுக்கி பரிசு தருவார். எமிரேட்ஸ் போஸ்ட் எனும் நிறுவனம் கூட 1 கோடி கனவு எனும் திட்ட்த்தின் கீழ் அடித்தட்டு மக்களுக்கு நம்பிக்கை விதை விதைப்பார். என்னடா தூக்கி பிடிச்சு பேசுறீங்களே, இதுவும் ஒரு லாட்டரி சீட்டு போலத்தானே, என்பவருக்கு. இல்லைங்க, இது சிறு சேமிப்பு. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு சேமிப்பு பத்திரத்தின் குலுக்கலே இந்த அதிரடி பரிசு.

வருசத்துக்கு ஒரு தடவை ஷாப்பிங் பெஸ்டிவல், நடக்குறதால நடுவில ‘துபாய் சம்மர் சர்பிரைஸ்’ நடக்கும். இதுவும் அது போலத்தான். கேளிக்கைகள், கொண்டாட்டம் எல்லாம் தூள் பறக்கும்.
ரெண்டுக்கு என்ன வித்தியாசம்னா, துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் குளிர் காலத்தில் நடக்கும்... துபாய் சம்மர் சர்ப்ரைஸஸ் என்பது கோடை காலத்தில் நடக்கும்... பின்னே, வெயில்காலத்துல ஊருக்குள்ள ஆளுங்கள எப்படி கூப்பிடறது... இல்ல..எவன் இந்த சூட்டுக்கு உள்ள வருவான்?

(இன்னும் கொஞ்சமா இருக்கு....)


பட்டு மாமி...பட்டு புடவை....பதினாறும் பெற்று பெருவாழ்வு


அனைவரின் வாழ்விலும் திருமணம் என்பது மனதுக்கு குதூகலம் அளிக்கக்கூடிய விஷயமாகும்....

திருமணத்தின் போது, மண்டபத்தில் எங்கெங்கு காணினும் மகிழ்ச்சி கொப்பளிக்கும் .... உற்றார், உறவினர்கள், நண்பர்கள் குழு என்று ஒரு குதூகல சூழ்நிலை நிலவும்....

வெகு நாட்களுக்கு பிறகு சந்திக்கும் எத்தனையோ உறவினர்கள், திருமணத்திற்கென்றே வெளிநாடுகளிலிருந்தும் கூட வரும் உறவினர்கள், நண்பர்கள் என்று அந்த சூழலே விழாக்கோலம் பூண்டிருக்கும்.....

முந்தைய நாளிலிருந்தே உற்சாகம் கரைபுரண்டோடும்.... பாட்டும், கூத்து, கும்மாளம் என்று கல்யாண‌ மண்டபம் எங்கும் சலசலவென்ற பேச்சு சத்தம் எங்கும் எதிரொலிக்கும்...

பல வண்ணங்களில், பல விலைகளில், பல கடைகளில் வாங்கப்பட்ட பல்வேறுபட்ட பட்டுசேலைகளின் அணிவகுப்பு நடைபெறும்.... எந்தெந்த புடவை எந்தெந்த கடைகளில் வாங்கப்பட்டது, எந்தெந்த கடைகளில் இவை விலை குறைவாக கிடைக்கும் என்று விவாதமும், பட்டிமன்றமும் நடைபெறும்....

என்னிடம் வெறும் 20 பட்டுப்புடவைகள் தான் இருக்கிறது என்று தான் ஏதோ பரம ஏழை என்பது போல் சொல்பவர் பேச்சுக்கு அந்த பெண்டிர் கூட்டம் முழுதும் மகுடி கண்ட பாம்பு போல தலையாட்டும்.... பின், அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் அந்த திருமண மண்டபத்தில் (பட்டுப்புடவையை பொறுத்தவரையில்)....

முந்தைய நாள் சாயந்திரம் மாப்பிள்ளை அழைப்பு முடிந்து, மறுநாள் கல்யாணம் அன்று அனைவரின் கண்களும், அந்த பட்டுப்புடவை பெண்மணியின் பட்டுப்புடவையின் மேலேயே இருக்கும்.... அவரும், இதுநாள் வரையில் தான் எடுத்து கட்டாததும், இந்த திருமணத்திற்கென்றே வாங்கி கட்டிக்கொண்டது போலவும், சொல்லாமல் சொல்லி, அட்டகாசமாய் ஜிகுஜிகுவென்று ஒளிரும் ஒரு பட்டு புடவையை எடுத்து அணிந்து கொண்டு வருவார்....

அந்த பட்டுப்புடவையை கண்டு, அங்கு வெளிப்படும் பெருமூச்சின் ஒலி அந்த திருமண மண்டபத்தையே அதிர வைக்கும்.... காண்பவர் அனைவரின் கண்களும் ஒரு ஏக்கத்தை வெளிப்படுத்தும்.... இப்போது, அந்த பெண்மணி சொல்லும் வார்த்தை அனைவரையும் கோபமுற செய்யும்....

இந்த புடவை வெறும் ரூ.50,000 தான்... எனக்கு கூட இவ்வளவு சீப்பா வாங்கணுமான்னு தோணித்து.. இருந்தாலும், அடுத்த மாசம், இதைவிட கொஞ்சம் காஸ்ட்லியா வாங்கிக்கலாம்னு இந்த கல்யாணத்துக்காக இதை எடுத்துட்டேன்... ஒரு புடவை பார்த்தேன் பாருங்கோ.... ஆஹா.. அது சூப்பர்.. விலையும் கொறச்சல்தான்.. வெறும் 70,000 தான் என்பார்...

அந்த புடவையை மண்டபத்தில் வந்து அமர்ந்துள்ள அனைவரும் பார்க்கும் வண்ணம், அவரே அனைவரையும் தேடிச்செல்வார்... எல்லோரிடமும், அந்த புடவையின் பார்டரை மூன்று, நான்கு முறை எடுத்து காட்டுவார்.... உடனே, அவர்களும் அந்த புடவையை பார்த்து ஏதாவது கேட்காமல் இருக்க மாட்டார் என்று அவருக்கு தெரியும்.... இவருக்கு பட்டு மாமி என்று நாமகரணம் சூட்டுவோம்...

இப்போது கல்யாண மண்டபம் முழுதும் பட்டு மாமி நிறைந்திருக்கிறார்... அவரின் பட்டுப்புடவை அங்குள்ள பெண்டிரிடையே நிறைந்திருக்கிறது.... அந்த கூட்டத்தில் ஒரு பெண்மணி சொன்னார்... எனக்கென்னவோ, பட்டு மாமி, இந்த வயசுல இவ்ளோ பட்டுப்புடவை கட்டுவான்னு முன்னாடியே தெரிஞ்சுதான் சின்ன வயசுலயே அவங்களுக்கு பட்டுன்னு பேர் வச்சு இருக்கான்னு நினைக்கிறேன் என்றார்...

இதை கேட்டு, அங்கு கூடி இருந்த அனைவரும் அதை ஆமோதிப்பது போலவே இருந்தது... நாம சான்ஸ் கிடைக்கறப்போ, பட்டு மாமிய நல்லா நோஸ்கட் பண்ணனும் என்று அந்த கூட்டம் முடிவு பண்ணியது.

கெட்டி மேளம், கெட்டி மேளம் என்ற ஐயரின் குரலுக்கு செவிசாய்த்து, கெட்டி மேளம் கொட்டப்பட்டது... கல்யாண மாப்பிள்ளை, மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். கூடி இருந்த உறவினர்கள், நண்பர்கள் அட்சதை தூவி பொதுவில் வாழ்த்தி விட்டு,பின் ஒவ்வொருவராக வந்து மணமக்களை வாழ்த்தினர்...

ஆல் தி பெஸ்ட் டா...
பெஸ்ட் ஆஃப் லக் டா..
விஷ் யூ போத் எ வெரி ஹேப்பி மாரிட் லைஃப்
விஷிங் தி யங் கபுள் எ வெரி ஹேப்பி மேரியேஜ் லைஃப்

இப்படி பல பேர் பலவிதமான வாழ்த்துக்களை சொல்லி விடைபெற்றனர்...

இப்போது மாமிகள் அவர்களுக்குள் பேசி வைத்தபடி, கும்பலாக மணமக்களை வாழ்த்த வந்தனர்... அப்போது, பட்டு மாமி, மணமக்களை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தினார்....

உடனே பக்கத்தில் இருந்த அனைவரும் பட்டு மாமியை பார்த்து, பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்தினீர்களே... அப்படின்னா, என்ன அர்த்தம்னு தெரியுமா மாமி என்று கேள்வி எழுப்பினார்...

அங்கிருந்த அனைவரின் பார்வையும் பட்டு மாமி மேல் விழுந்தது... மாமிகளிடையே சலசலப்பு எழுந்தது... உடனே பட்டு மாமி கணீரென்ற குரலில் அங்கிருப்பவர்களை பார்த்து சொல்ல தொடங்கினார்...

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று எல்லோரும் மணமக்களை வாழ்த்துவது சகஜம்தான்... அந்த பதினாறு என்னவென்றால் :

1. கல்வி
2. அறிவு
3. ஆயுள்
4. ஆற்றல்
5. இனிமை
6. துணிவு
7. பெருமை
8. பொன்
9. பொருள்
10.புகழ்
11.நிலம்
12.நன்மக்கள்
13.நல்லொழுக்கம்
14.நோயின்மை
15.முயற்சி
16.வெற்றி

ஆகிய இவைதான் அந்த பெருவாழ்வு வாழ தேவையான பதினாறு என்றார்...

பட்டு மாமியை மடக்க நினைத்த மற்றவர் வாயடைத்து நின்றனர்... ஒருவருக்கொருவர், கண்டிப்பாக எனக்கு தெரியாது, நல்ல வேளை என்னை கேட்கவில்லை என்றவாறு அங்கிருந்து பறந்த‌ன‌ர்....பந்திக்கு முந்தினர்...

தோப்பும்...புங்கை மரமும்...பின்னே ஞானும் - யூத்ஃபுல் விகடன்

ஏற்கனவே இங்கு பதிவு செய்து, பின் யூத்ஃபுல் விகடனுக்கு அனுப்பி, அதை அவர்களும் பதிவு செய்து, பின் எனக்கு தெரியப்படுத்தினர்.அந்த‌ அறிவிப்பும், அத‌ற்கான லிங்க்கும் இதோ...

அன்புடையீர், தங்கள் படைப்பு/கட்டுரை வெளியிடப்பட்டது. மகிழ்ச்சி. நன்றி.

http://youthful.vikatan.com/youth/gopipoem20082009.asp -

யூத்ஃபுல் விகடன்

இந்த பதிவை வெளியிட்ட யூத்ஃபுல் விகடனுக்கு என் நன்றி....

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்











Vinayagar Chathurthi

Ganesh Chaturthi or Ganesh Utsav or the birthday of Ganesha (the elephant-headed God of Wisdom and Prosperity) falls on the fourth day of the Hindu month of Bhadrapada (around August-September).
Ganesha is India's cutest god. He has the head of an elephant on which is perched a dainty tiara, four podgy hands joined to a sizeable belly with each hand holding its own symbolic object. One has a trishul, or a trident, the second, an ankush, or goad made from his very own broken tooth; the third hand elegantly holds a lotus and the fourth a rosary (which is sometimes replaced by modaks - his favourite sweet). Ganesha is famous not only for being a trickster and for his sense of humour, but equally for his wisdom. He is the son of Shiva (Destroyer in the Hindu Holy Trinity of Creator-Preserver-Destroyer) and Parvati (Shiva's consort).

Ganesha is the foremost god of the Hindu pantheon. This brave guardian of the door to Parvati's bath is beheld today as the most auspicious God of new beginnings. He is worshipped during every festival and before people undertakes a journey or embarks upon a new venture. You will also see him carefully guarding entrances to temples and homes, peeping out of calendars and happily gracing marriages and other such occasions.

ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ள் - அய‌ல் நாட்டு மோக‌ம் (ப‌குதி - 10)

கேளிக்கை பொழுதுபோக்கு எனும் விஷயங்கள் தவிர்த்து, வளைகுடா பற்றியும் அதன் தன்மை பற்றியும் 9 பகுதிகளாக பார்த்து வந்தோம். இது பத்தாவது, இன்னும் ஓரிறு பகுதிகளில் அதையும் சொல்லி நிறைவு செய்ய எண்ணுகிறோம்.

இது வரை வாசித்து வந்த உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம்.

சரி, துபாய் மிக சிறிய இடம் என்று பதிவில் குற்ப்பிட்டுள்ளீர்கள், பின்னர் எப்படி இத்தனை உலக பிரசித்தி பெற்றது.

இந்த கேள்வியில், வளைகுடாவின் வளர்ச்சி பற்றியும், ஏன் நம்ம ஊர் துபாய் போல இல்லை என்பதற்கும் விடை கிடைக்கும் என்று நம்புகிறோம். ஒன்று இரண்டு காரணங்களை பார்ப்போமே.

இந்த அரசின் தொலை நோக்கு பார்வையும், நேர்மையான ஆற்றல் மிக்க செயல் திறனுமே.

நிர்வாகம் ஒரு மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் தொழில் போலே நடக்கும். பொதுமக்களிடம் இருந்து பெரும் தொகை / கட்டணம் அவர்களுக்கு சேவையாய் சென்றடைகிறதா என்பதில் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி பார்ப்பார்கள். போலீஸ் அற‌வே ல‌ஞ்ச‌ம் வாங்குவ‌தில்லை...( ந‌‌ம்மாளுங்க‌ யாரும் உள்ளூர் போலீஸ் டிபார்மெண்டில் வேலையில் இல்லை....)

எதிலும் உயர்வு, எங்கும் மேன்மை. இதுவே தாரக மந்திரம். இல்லையென்றால் உலகின் உயரமான, உலகின் பெரிய உள்ளரங்கு சந்தை, அல்லது கடலில் மண்ணைக் கொட்டி நிலமாக்கி ப்ளாட் போட்டு விற்போம்‌, ஊருக்குள்ள பள்ளம் தோண்டி கடல் தண்ணி திறந்து விடுவோம், கடலுக்குள்ள மூச்சடக்கி போயி பவுண்டேஷன் போடுவோம்!!! அங்க ஒரு 50 மாடியில 7 நட்சத்திர ஓட்டல் கட்டுவோம், போன்ற சுதந்திர சிந்தனை எக்கச்சக்கம்.

இதெல்லாம் என்ன, சொல்லவே இல்லை என்பவருக்கு இத பத்தி விலாவாரியா அடுத்த பகுதியில் சொல்றோம் என வாக்குறுதி தந்து விட்டு மேலே தொடருகிறோம்.

அஞ்சு வருசத்துக்கு முந்தி இந்த ஷேக் ஸாயித் ரோட்டில ஒண்ணுமே கிடையாது, இப்போ பாரு எத்தனை பில்டிங்கு, எனும் ஆச்சரிய வாக்கியம் மிக சகஜமாக இங்கு கேட்கும். ஆறு மாசத்தில இவ்வளவு மாறுதலா என வந்தவர் அதிசயிப்பார்.

ஒரு தமாஷ கேளுங்க, "உங்க ஆபிஸ் வரணும், வரைபடம் அனுப்புங்களேன்" என கேட்க "அட போய்யா, ஒவ்வொரு ஆறு மாசத்துக்கு புதுசு புதுசா மேப் போட்டு, போதும் போதும்னு ஆச்சு நீயே கண்டு பிடிச்சு வா" என சலித்து கொண்டார். இவருக்கே இப்படின்னா, பாவம் மேப் போட்டு விக்குற க‌ம்பெனி பாடு.

6 லேன்ல எக்ஸ்பிரஸ்வேயா, ஒரு ஆறு மாதம் கொடு, 50 மாடியில காங்கிரீட் பில்டிங்கா, ஒரு இரண்டு வருசம் கொடு என்பது போல கற்பனைக்கு எட்டாத காலத்திட்டம் இங்கு சாஸ்வதம். கட்டுமான பணிகள் எல்லாம் திட்டமிட்ட தேதி, திட்டமிட்ட விதத்தில் இனிதே நிறைவேறும். இல்லையென்றால் அத‌ற்கு க‌டுமையான‌ அப‌ராத‌ம் விதிக்க‌ப்ப‌டும்....

அமெரிக்கா பெரிதாய் அஞ்சும், ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்த முக்கிய புள்ளிக‌ள், இரண்டு வருடங்களுக்கு முன் துபாய் வந்து சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ததாய் பரவலான ஒரு கிசு கிசு உண்டு.

இந்தியா தேடிக் கொண்டு இருக்கும் ஒரு நிழல் உலக தாதா (தாத்தா அல்ல - அவ‌ர் அவ‌ரை விட பெரிய கேடி) தன் மகளுக்கு விமரிசையாய் கண்ணாலம் கட்டிக் கொடுத்தது இங்கே தான். எப்ப‌டி........

அது எப்படி ஒரே நேரத்தில் மாமியாருக்கும் மருமகளுக்கும் நட்பாய் இருப்பது. அது தான், துபாய். தெளிவான சிந்தனை, கடுமையான சட்ட திட்டங்கள் (என்ன தான் தாதா வா இருந்தாலும் இங்க இருக்கச் சொல்ல பச்ச பிள்ள மாதிரி இருக்கணும், இல்லன்னா.....அதான் ஏற்க‌ன‌வே சொல்லிட்டோமே....)

கோடு கிழிப்பதில் இருக்குது இவர்கள் சூட்சமம். இத கேளுங்களேன். சரக்கு (மது) அடிக்க அனுமதி உண்டு. அதுவும் சில எமிரேட்டுகளில், குறிப்பிட்ட உணவு விடுதிகளில் மாத்திரம். குடிச்சோமா, சத்தம் இல்லாம போனோமான்னு இருக்கணும். இல்லாம சலம்புனீங்க, அவ்ளோதான், தூக்கிக்கிட்டு போயி உள்ள போட்டு, நொங்கி எடுத்து, அப்புறமா ஊர விட்டு நாடு கடத்திருவாங்க அம்புடுதேன்.

புனித ரமலான் மாதத்தின் போது, குடி/சரக்கு எங்கும் தடை செய்யப்படும்.... ஹோட்டல்கள், பார்கள் இந்த சமயத்தில் குடி/சரக்கு சப்ளை செய்யாது... அது போன்றதொரு உத்தரவு அவர்களுக்கு அரசாங்கத்தால் முறையாக முன்கூட்டியே அனுப்பப்படும்....
ஷார்ஜாவில் எப்போதுமே குடி/சரக்கு கிடையாது (பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் கூட)... காரணம், அவர்கள் சவுதி அரேபியாவின் சட்ட திட்டத்தை பின்பற்றுவது தான்....

ஷார்ஜாவில் இருப்பவர் சரக்கு குடிக்க வேண்டுமெனில், இந்த பக்கம் இருக்கும் துபாய்க்க்கோ அல்லது அந்த பக்கம் இருக்கும் அஜ்மனுக்கோ தான் செல்ல வேண்டும்.... வ‌ரும்போது போதையில் த‌ள்ளாடிக்கொண்டே வ‌ர‌வேண்டும்.

வண்டிகளின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் விசயத்துல யாவாரத்த பாருங்க, கார் நம்பர் ப்ளேட்டுகள் மற்றும் அதற்கு கொடுக்கப்படும் கொள்ளை விலை...ஒவ்வொரு டிஜிட் குறையும்போதும், நம்பர் ப்ளேட்டின் விலை அதிகமாகும்..
உதாரணமாக 4/5 மாதங்களுக்கு முன் ஒரு டிஜிட் கொண்ட நம்பர் ப்ளேட் அபுதாபி தொழிலதிபர் ஒருவரால் திராம் 27 மில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 30 கோடி) கொடுத்து எடுக்கப்பட்டது... இது கின்னஸ் சாதனை விலை, ஒரு நம்பர் ப்ளேட்டுக்கு….ப‌டிக்கும் போதே சிறு மூச்சு, பெரு மூச்சு எல்லாம் வந்து காது வழியா கரிவண்டி கணக்கா புகை வருதே...

காசு ஜாஸ்தி பண்ணு, ஆனா சேவைய உயர்த்து, இது தான் கொள்கை. டெலிஃபோன் சர்வீஸ் செய்யுறது ரெண்டு பேர், எடிஸாலட் மற்றும் டூ... இந்தியாவிற்கு பேசுவதற்கு மட்டும் கொள்ளை கட்டணம்.... ஏன்னா, இங்க இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம்..

சில தொழில் நுட்ப காரணத்திற்காக அமீரக அரசாங்கம், திடீரென அனைத்து டாக்சிகளின் நம்பர் ப்ளேட் நிறத்தை கருப்பு வெள்ளையிலிருந்து, மஞ்சள், கருப்பிற்கு மாற்ற சொல்லியது.... இரு தினங்களில் பாதிக்கும் மேற்பட்ட வாகனங்களின் நம்பர் ப்ளேட் நிறம் மாற்றப்பட்டுள்ளது.... அதுதான் அமீரகம், மற்றும் அதன் சட்டம் அதை நடைமுறைப் படுத்தும் வேகம்.... இதே நம்மூரில் நடக்குமா?

(தொடரும்.....)

தோப்பும்... புங்கை மரமும்... பின்னே ஞானும்

நான் தேட தொடங்கினேன்
ஊரோரமா ஆத்துப்பக்கம் பெரிய தோப்பு
பூத்து குலுங்கும் கனிகளுடன் சில பல மரங்கள்
தேடினது..... கெடைக்கல.......

ஊரிலிருந்து இரண்டாக பிரியும் பெரிய சாலை
அந்த பக்கம் போனால், பஞ்சாலை
இந்த பக்கம் வந்தால், பூஞ்சோலை

பஞ்சாலையின் சங்கு ஊதியதும்
பஞ்சடைத்த கண்களுடன், பஞ்சு நிறைந்த தலையுடன்
செருப்பின்றி பல ஜோடி கால்கள்.... அந்த வீதியில்......
கஷ்டம்தான்யா என்னிக்குமே உங்களுக்கு....அது விதி....

வேலையின்றி திரியும் வெட்டி கூட்டம்
எதிர்சாலையில் பல வண்ண கைலிகள் ....
வாயில் எரியும் கொள்ளிக்கட்டையுடன்.....
புகுந்தது ....பூஞ்சோலையினுள்.....கையில் சீட்டு கட்டு

என்றும் நீர் நிரம்பி சலசலவென்று ஓடும் ஆறு,
இப்போதோ...சலசலப்பின்றி அன்னநடை போட்டு செல்கிறது....

ஆற்றில், காணும் இடமெங்கும் பலதரப்பட்ட வண்டிகள்
வெளியே செல்லும் அனைத்து வண்டிகளும்
பிள்ளைத்தாய்ச்சி வயிறு போல ஆற்று மணலை நிரப்பி.......

இவ்வளவு கொள்ளை போனபின்பும் ஆறு தன்னகத்தே
சிறிதளவேனும் நீரை வைத்திருக்கிறதே......

அப்புறம், பஞ்சாலை சுற்றி, பஞ்சு துகள்கள் பறந்தபடி.....
இப்புறம், ஊர் மக்கள் தன் சந்தோஷம் துறந்தபடி.....

தோப்பினுள்ளே ஜோடி ஜோடியாக இருந்த பல மரங்கள்
பல துண்டுகளாய் வெட்டி லாரிகளில் ......... . .
தோப்பும் ஆங்காங்கே வெறிச்....வெறிச்...

எப்படி இருந்த ஊர், இப்படி ஆகிவிட்டதே......
தோப்பினுள்ளே அந்த ஒரு மரத்தை தேடினேன்......
அதில்தான் எவ்வளவு கிளைகள்....இலைகள்....

அன்று ஊர் முழுதும் கூடி, அங்கேதானே இருந்தது...
இன்று, ஒரு இரவு முழுதும் (கிழக்கு பக்கம்) தேடியும் கிடைக்கவில்லை......

சரி.... நாளை இரவு வந்து.....
மேற்கு பக்கம் முழுசா தேடி பார்ப்போம்
என்றபடி தோப்பை விட்டு வெளியேறினேன்......

நான் தேடிய அந்த மரம் .......
நான் தூக்கிட்டுக்கொண்ட அந்த
புங்கை மரம்....!!!!

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

தாயின் மணிக்கொடி பாரீர்
இதை போற்றி புகழ்ந்திட வாரீர்.

வெள்ளையன் பிடியில் இருந்து நாட்டை மீட்க
அன்று சிந்திய பலரின் குருதி
கொடியின் மேலே ஆனது காவி

உல‌கின் இக்க‌ண தேவை சமாதான‌ம்
அதை உண‌ர்த்தும் விதமாய்
கொடியின் ந‌டுவில் இருக்கும் வெண்மை

பஞ்சம், பட்டினி கொடுமையை போக்கி
பசுமையாய் ஆக்குவோம் நாட்டை
இதை உண‌ர்த்த‌வே கொடியின் கடைசியில் பச்சை

இடையில் உள்ள சக்கரம் போல்
ஓயாமல் சுற்றி (உழைத்து) கொண்டிருந்தால்
உன் வாழ்வும் உயர்வு பெறும்
நம் நாடும் வளம் பெறும்

இன்றைய இந்தியா இதை உண‌ருமா?
கிறங்கிய விழிகள், உலகை மறந்த நிலை
இன்று புலர்ந்த‌ பொழுதும் வீண்

நிகழ்கால நிகழ்வுகள், எதிர்கால கனவுகள்
அனைத்தும் கருகிய நிலை
விதவிதமான போதையின் பிடியில் இந்தியா
தூக்கி நிமிர்த்த வேண்டிய இளைஞர்கள்
போதையின் பிடியில் சுருண்டு....

அஹிம்ஸையின் வழியே சுதந்திரம் பெற்ற
அண்ணல் காந்தி கூட இன்றைய நிலை கண்டால்
கையில் எடுப்பார் ஏதாவதொரு ஆயுதம்....
நம் இன்றைய தேவை என்ன?
ஒற்றுமை வாழ்வும், கடின உழைப்பும்

கடுகு அளவுள்ள எறும்பே அதன்
உழைப்பை நம்பி வாழும்போது

மலையளவுள்ள மனிதா - நீயும்
உன் உழைப்பை ந‌ம்பி வாழ்ந்து பாரு

சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல்
நீயும் சோம்பலில் இருந்து எழுந்து உழை

குடியை கெடுக்கும் குடியை தவிர்
மனதை கெடுக்கும் மதுவை மற

சீரிய சிந்தனையை உள்ளத்தில் நிறுத்து
வாடிய அனைவரையும் அள்ளி அணைத்து
கனிவான மனதுடன் அன்பு செலுத்து

பொழுதுபோக்கை குறைத்தால்
நம் வாழ்வு சிறக்கும்....

ஜெய் ஹிந்த்.....

உலகில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்....

மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 9)

கேளிக்கை, பொழுது போக்கு பற்றி பேசலையே, என்ற சென்ற பகுதியின் கேள்விக்கு விடை தெரிய வேண்டி நண்பர்களை அணுகிய போது, காரசாரமான விவாதம். "நாளைக்கு நிச்ச்யம் இருக்கும்" "இல்லை இருக்காது" என்றெல்லாம் இரு குழுவாக பிரிந்து விவாதம் வீங்கீக் கொண்டு இருக்கிறது. (ஒரு புது தமிழ் பதம் உருவாக்கி விட்டோம் ‍ வீங்குன விவாதம்) என்ன என்று நெருங்கி விசாரித்ததில் தெரிந்தது.

புனித ரமலான் நோன்பு மாதம் :
இஸ்லாம் மார்கத்தின் மூன்று முக்கிய கடமைகள் உண்டு. ஒன்று நாள் தவறாத ஐந்து வேளை பிரார்த்தனை, இரண்டாவது, வாழ்வின் ஒரு முறையாவது மேற் கொள்ள வேண்டிய மெக்காவிற்கான புனித பயணம், அடுத்தது ரமலான் நோன்பு.

புனித மாதமாய் வரையறுக்கப்பட்டு, கடுமையான கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டு உபவாசம், வருமானத்தில் ஒரு பகுதி தானம் செய்தல் என உள்ள உடல் தூய்மை செய்யும் மாதம். சூரிய காலெண்டர் பின்பற்றுவதால், ரமலான் மாதத்தின் தொடக்கம் நமக்கு முன் கூட்டியே தெரியாது. சவுதி அரேபியாவில் பிறை தெரிகிறதா என்று சொன்னதும் தான் நமக்கு தெரியும். இஸ்லாம் இங்கு அரசு மதமானதால் ரமலான் கூடுதல் கண்டிப்புடன் கடை பிடிக்கப்படும்.

சூரிய உதயம் தொடங்கி அஸ்தமனம் வரை பொது இடங்களில் வைத்து உண்ணவோ, குளிர் மற்றும் சூடான பானங்கள் குடிக்கவோ தடை, அவர்களுக்கும், பொது இடங்களில் நமக்கும். வீட்டினுள் வைத்து மட்டுமே உண்ண முடியும். இந்த சட்டத்தை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர்.....இஸ்லாம் அல்லாதவர் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர் பாவம், நோன்பு நேரத்தில் சிகரெட் சீக்ரெட் ஆகும்.

பன்னிரெண்டு மணி நேரம் உண்ணாத வயிறை முதலில் தண்ணீர், பழ ரசம் குடித்தும், பின்னர் பேரிச்சை, திராட்சை பழங்களை உண்டு, பின்னர் கஞ்சி போல உண்பதும் ஆன நோன்பு திறக்கும் விருந்தின் பெயர் இப்தார்.

அருகில் உள்ள படங்களைப் பாருங்களேன்.
பணி நேரம் 12-15 மணி நேரத்திலிருந்து 6-8 மணி நேரமாக குறைக்கப்படும். ரமலான் நோன்பிருக்கும் முஸ்லீம் நண்பர்களுக்கு 6 மணி நேர பணி நேரமும், நோன்பு இருக்காத பிற மதத்தினர்களுக்கு 8 மணி நேர பணிநேரமும் நிர்ணயம் செய்யப்படும்.

விடிகாலையில் நான்கு மணிக்கு இறுதியாய் உண்ணவோ, குடிக்கவோ செய்யலாம், அதன் பின் மாலை சூரிய மறைவுக்கு பின் தான். காலை நோன்பு திறந்தவுடன், ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு விடும்..... பின், மாலை நோன்பு முடிந்த உடன் ஹோட்டல்கள் அனைத்தும் திறக்கப்படும்.
இடைப்பட்ட நேரத்தில், மதிய உணவு பார்சல் வசதி சில ஹோட்டல்கள் செய்து தரும். ஹோட்டல்களில் சாப்பிட முடியாது..... பார்சல் தருவதென்றால் ஓகே என்பார்கள்...... நோன்பு இருக்காதவர், அந்த பார்சல் வசதியை உபயோக படுத்தி கொள்ளலாம்..
இந்த ரம்ஜான் நேரத்து, மதிய உணவு சேவையை செய்ய விரும்பும் ஹோட்டல்கள் தனியாக ஒரு சிறப்பு லைசன்ஸ் துபாய் முனிசிபாலிட்டியிடம் இருந்து வாங்க வேண்டும், அதற்கான தொகை திர்ஹாம் 5,000 /- மட்டுமே...... இது, அந்த ரம்ஜான் மாதம் முழுதுக்குமான சிறப்பு லைசன்ஸ் தொகை..... ஆனால் ஒன்று, இந்த சிறப்பு லைசன்ஸ் இல்லாமல், மதிய உணவு சேவையை யாரும் செய்ய முடியாது...... அதிகாரிகள், திடீரென்று உணவகங்களில் வந்து சோதனை செய்வார்கள்....... பிடிபட்டால், பெரிய தொகை அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும்.
ரமலான் மாதத்தை எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் இன்னொரு விசயம் தொடர்ச்சியாய் கிடைக்கும் விடுமுறை தான். ஆரம்பிக்கும் தேதி நிச்சயம் இல்லாததால், விடுமுறை என்று தொடங்கும் என்பதும் லாட்டரி சீட்டு போலத்தான். வார இறுதி விடுமுறையோடு சேர்த்து இத்தனை நாள் என்று ஏக்கத்தில் ஏங்கும் உழைக்கும் வர்க்கம்.


விடுமுறை நிச்சயம் ஒரு பயணத்தின் துணை கொண்டு இனிமையாய் நகரும். முடிந்த பின் அடுத்த வருடம் இப்படி செய்ய வேண்டும் என்று இப்போதே திட்டமிடும்.


வீங்குன விவாதம் விரிஞ்சு போச்சு (இதுவும் புதுசா!!!).


கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாய் தனியாய் எங்களோடு வாழும் துரதிருஷ்டசாலி என்னருகில். லேசாய் தொண்டையை கனைத்துக் கொண்டு அவரிடம் கேட்டேன், ஏங்க குடும்பமாய் வாழக் கூடாதா என்று. அவ்வள்வ்ய் தான். மனிதன் புலம்பித் தீர்த்து விட்டார்.


குடும்பத்தை வைத்துள்ளவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.... விஷம் போல் ஏறிய வாடகை, பிள்ளைகளின் படிப்பிற்கான செலவு, விடுமுறை நாட்களில் வெளியே சென்று வர ஆகும் டாக்ஸி கட்டணம், ஹோட்டலில் சாப்பிடும் ஆகும் செலவு என்று.... பல்முனை தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்....
முன்பு அமீரக அரசாங்கம், திராம் 3,000/- சம்பளம் இருந்தால், உங்கள் குடும்பத்துடன் தங்கி இருப்பதற்கு விசா கொடுத்தது.... பின், அது திராம் 4000/- ஆனது, பின் திராம் 6000/- ஆனது..... மிக சமீபத்தில், சம்பளம் திராம் 10000/- இருந்தால் மட்டுமே குடும்பத்துடன் இருக்க முடியும் என்றொரு புது குண்டு போட்டது......


என்ன செய்வது..... இங்கு அவர்கள் வைத்தது தானே சட்டம்.... இஷ்டம் இருந்தால் இரு, கஷ்டமெனில் நாட்டை விட்டு வெளியேறு என்பது தானே அவர்கள் நம்மிடம் மறைமுகமாக சொல்லும் சேதி.....

கொடி பிடிப்பது, அரசாங்கத்தை எதிர்த்து கோஷம் இடுவது, அந்த கும்பலில், கலவரத்திற்கு வழிசெய்வது, அரசாங்க மற்றும் தனியார் வண்டிகளை கொளுத்துவது போன்ற விஷயங்கள் நமக்கு நம்மூரில் வேண்டுமானால் நடக்கலாம்.... இங்கு..... ஹூம்.....மூச்....... நம்மூர் "கட்டதுரை"கள் இந்த ஊரில் இருக்கலாம்.... ஆனால், அவரின் சவடால் செயல்கள் எதுவும் வெளியே தெரியாத அளவு, "கைப்புள்ள"யாகவே உலா வருவார்....

(இன்னும் வரும்......)