எஸ்.வி.சேகர் ட்ராமா - ஒரு கற்பனை காட்சி....

எஸ்.வி.சேகர் அவர்களின் நாடகங்கள் நகைச்சுவைக்கு பெயர் போனவை... வசனங்களில் காமெடி வழிந்தோடும்...

நான் அவரின் பெரும்பாலான நாடகங்களை கேட்டிருக்கிறேன்... உங்களில் பலரும் அது போலவே என்று நினைக்கிறேன்... அவர் நாடகத்தில் இது போன்ற ஒரு காட்சி வந்தால் வசனங்கள் எப்படி இருக்கும் என்று என் கற்பனையில் உதித்ததே இந்த பின்வரும் ஒரு கற்பனை காட்சி... இதில் எஸ்.வி.சேகர், அவரின் தந்தை மற்றும் தாத்தா ஆகிய கேரக்டர்கள் பங்கு பெறுவதை போன்ற காட்சி... இனி... நாடகத்தின் அந்த காட்சியில் நுழைவோமே..

பட்டாபி : அப்பா... எப்படி இருக்க... நாலு நாள் ஊர்ல இல்லேன்னா நாட்டுல என்ன நடக்கறதுன்னே தெரியல... நாட்டு நடப்பு எல்லாம் எப்படி இருக்கு? நம்ம ஊர்ல என்ன விசேஷம்?

அப்பா : வாடா பட்டாபி... எல்லாரும் நல்லா இருக்கோம்... நீ எப்படி இருக்க... உன்னொட ஆஃபீஸ் ட்ரெய்னிங் ப்ரோக்ராம் எல்லாம் எப்படி இருந்துது.

பட்டாபி : படு சூப்பரா இருந்துதுப்பா... நிறைய பேர் இருந்தாலும், எப்போவும் போல நான் தான் ஃபர்ஸ்ட்...

அப்பா : ஒன்ன பத்தி எனக்கு தெரியாதாடா பட்டாபி? நீ என்னோட பையன் ஆச்சே... நீ ரொம்ப ப்ரில்லியண்ட்னு ஸ்கூல் படிக்கறப்போவே வாத்தியார் சொல்வாரே...

பட்டாபி : என் கிட்ட கூட தான் சொன்னாங்க. வாத்தியார் பிள்ளை மக்குனு... அது கரெக்ட்தான்......உங்க அப்பா, அதான் என்னோட தாத்தா வாத்தியார் தானே... அட... ஃபர்ஸ்ட்னா, அந்த ஃபர்ஸ்ட் இல்லப்பா...... காலங்கார்த்தால ஆஃபீஸ் மீட்டிங் நடக்கற இடத்துக்கு மொதல் ஆளா போயிட்டேன்..... வாட்ச்மேன் கூட அப்புறம் தான் வந்தான்.... நான் ஃபர்ஸ்ட் வந்தத பார்த்துட்டு எல்லாரும் ஆடி பூட்டாங்க....

ஆனா, போற எடம் ரொம்ப குளிரா இருக்கும்னு நம்ம கெழம் சொல்லித்துன்னு திக்கா ஒரு போர்வை எடுத்துண்டு போனேன்... அங்க போனா வெயில் மண்டைய பொளந்துடுத்து..... மீட்டிங்குக்கு ”மலையூர் மம்பட்டியான்” மாதிரி போர்வைய போத்திண்டு போனேன்... நல்ல வேளை... கையில ஒரு லாந்தர் மட்டும்தான் இல்ல....மானம் போயிடுத்து.... இந்த தாத்தா வர வர ரொம்ப பொய் சொல்றதுப்பா...சரி...

அத விடு.. ...இப்போ முக்கியமான விஷயத்துக்கு வர்றேன்.. நம்ம சங்கரன், சாரங்கன் சண்டை இப்போ எந்த லெவல்ல இருக்கு... ஒலகத்துல நடக்கற எல்லா சண்டையும் முடிஞ்சா கூட இந்த ரெண்டு பேரோட சண்டை முடியாது போல இருக்கு...

அப்பா : ஏண்டா பட்டாபி, வந்தது வராததுமா கேக்கறதுக்கு வேற விஷயமே இல்லையாடா... அந்த மூதேவிகள் போடற சண்டைய பத்தி ஏண்டா கேக்கற... வெளியூர்ல இருந்து வந்த டயர்ட்ல இருப்ப... போய் குளிச்சுட்டு வந்து சூடா டிஃபன் சாப்டு. மத்தது எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்...

தாத்தா : டேய் பட்டாபி, ஒங்கப்பன் எப்பவுமே அப்படி தாண்டா... நீ கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்ல மாட்டாண்டா... நீ என் கிட்ட கேட்டாலும், கேக்காட்டாலும் நான் பதில் சொல்றேன் ஒனக்கு.....

சண்டை வேணாம்.....சமாதானமா போலாம்னானாம் சங்கரன்,
அவன நடுவீதியில வச்சு நாலு சாத்து சாத்தினானாம் சாரங்கன்...

பட்டாபி : இது என்ன பழமொழியா... எங்க......வேற ஏதாவது சொல்லு.....

தாத்தா : குடிசை மேல ஓடறது எலின்னானாம் ஏழுமலை
தாவி தாவி ஓடறது அது அணில்னானாம் அண்ணாமலை.

பட்டாபி : அய்யய்யோ.... இது ரொம்ப கொடுமையா இருக்கே...

தாத்தா : இதுவும் பிடிக்கலியா... சரி அட்லீஸ்ட் இந்த ரெண்டுல ஏதாவது ஒண்ணு தேறுமா பாரு....

வெத்தலைக்கு சுண்ணாம்பு கேட்டானாம் வெள்ளியங்கிரி
அவனுக்கு கொஞ்சூண்டு கொட்டபாக்கு தந்தானாம் கோபால்சாமி

பல் தேய்க்க பல்பொடி கேட்டானாம் பக்கிரி
அதுக்கு மூக்குல போட மூக்கு பொடி தந்தானாம் ஜோக்கிரி

பட்டாபி : அப்பா... பழமொழிங்கற பேர்ல இது அடிக்கற கூத்து தாங்க முடியல... அங்க இருக்கற மத்து எடு... இன்னிக்கு கெழத்த நாலு சாத்து சாத்திடறேன்.... இல்லேன்னா.... ஓயாம பேசற அந்த வாய்ல ஒரு ஓலைவெடிய போட்டுடறேன் இன்னிக்கு...

தாத்தா : அய்யோ... என்ன வுட்டுடு.......

அப்பா : என்னடா கெழம் இந்த ஓட்டம் ஓடறது... பி.டி.உஷாவ மிஞ்சிடும் போல இருக்கே..... பாவம் விட்டுடுடா...

பட்டாபி : பொழச்சு போட்டும் கெழம்... விட்டுட்டேன்.. சரி... டிஃபன் ரெடியா??!! சாப்டுட்டு நம்ம காளிமுத்துவ போய் பார்க்கணும்....

அப்பா : அந்த காளிமுத்துவாடா.... அவர்கிட்ட ஒனக்கு என்ன வேலை?

பட்டாபி : அப்பா... நீ நெனக்கற காளிமுத்து இல்ல .. அந்த காளிமுத்து சகவாசம்லாம் தாத்தாவுக்கு தான்... போன வாரம் கூட ஏதோ லெட்டர் போட்டுது... எங்க வந்து, எத்தனை மணிக்கு மீட் பண்ணட்டும்னு!!

இவர் எங்க ஆஃபீஸ்ல புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கற மேனேஜர்... பக்கத்து தெருவில தான் குடியிருக்கார்... மீட்டிங்ல மீட் பண்ணினேன்... மீட்டிங் முடிஞ்சு வர்றப்போ, வீட்டுல வந்து பாருன்னு சொன்னார்... டிஃபன் சாப்பிட்டு போய் பார்த்துட்டு வந்துடறேன்...

அப்பா : என்னவோ போடா பட்டாபி... பார்த்து நடந்துக்கோ... அந்த காளிமுத்து கிட்ட எல்லாம் போயிடாத... அவர் ஒரு மாதிரி... உடம்பு கெட்டு போயிடும்... ஜாக்கிரதை...

மனம் கனிந்த இனிய “விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


புத்தாண்டாம் "விக்ருதி” தமிழ் புத்தாண்டு
கொண்டாட்டமாய் பிறந்த புத்தாண்டு
அதை மகிழ்வுடன் வரவேற்போம் - நாமின்று

கடந்தகால சோதனைகளை துடைத்துவிட்டு
சூழ்ந்துள்ள வேதனைகளை தொலைத்துவிட்டு
”விக்ருதி” புத்தாண்டில் பதிப்போம் சாதனை கல்வெட்டு

ஐந்தறிவு கொண்டவைகள் ஆச்சரியமாய் இணைந்திருக்க
ஆறறிவு கொண்ட நாம் எப்போதும் பிரிந்திருக்க
மதமும், ஜாதியும் துரத்தி அடிக்கும் தூரத்தில்
துரத்தி அடிப்போம், அதை இந்த நேரத்தில்

மரம் வளர்ப்போம், நல்ல செடி வளர்ப்போம்
சுற்று சூழல் பாதுகாத்து, மழை வேண்டுவோம்
மனிதம் வளர்ப்போம், மனித நேயம் வளர்ப்போம்

நல்ல எண்ணங்களை மனதில் நாளும் விதைப்போம்
விதைப்பது நல்விதையானால், மலர்வதும் நன்றாகும்
மலர்வது நன்றானால், நறுமணமும் உண்டாகும்
நறுமணத்தின் சுகந்தம் அதை நம் மனமும் கொண்டாடும்
ஆயுதங்களை புறக்கணிப்போம் -
நம்மை அஹிம்சைக்கு அர்ப்பணிப்போம்
தீயவைகள் கண்டறிந்து ஒதுக்கி வைப்போம்
நல்லவற்றின் தடம் அறிந்து செதுக்கி வைப்போம்

சாதியின் பெயரால் சண்டை இட வேண்டாம்
மதத்தின் பெயரால் மண்டை உடைய வேண்டாம்

அனைவரும் சமம் என்று உரக்க சொல்வோம்
எப்போதும் மனதில் நிலை நிறுத்தி செல்வோம்

கடின உழைப்பிற்கு இல்லை ஈடு இணை
இதை என்றும், எப்போதும் மனதில் நினை
தானத்தில் உள்ளதோ பல தானம்
ஆயினும் - உலகின் இக்கண தேவை - சமாதானம்
தீவிரவாதம் வேரறுக்க பாடுபடுவோம்
அமைதியை கை கொண்டு ஆனந்தம் கொள்வோம்
நம் வாழ்வில் அமைதி நிலைத்திருக்க
அந்த ஆண்டவனை வேண்டுவோம்

அனைவருக்கும் இனிய ”விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வெற்றியின் விழுதுகள் – (பகுதி 7)

ஜஞ்சனக்கா, ஜினுக்கு ஜஞ்சனக்கா என குஷியாய் பாடிக்கொண்டு அதோ கடை வீதியில் ஒருவர் குஷியாய் நடந்து கொண்டிருக்கிறார். அவர் பக்கமாய் போய், என்னன்னு பார்ப்போமே, வாருங்களேன். பார்மஸில போயி நம்ம ஜஞ்சனக்கா ஜகல்பாஜி, அண்ணாச்சி ஒரு டியுப் மாத்திரை கொடுங்க, அப்படியே அதே சைசில ஒரு குட்டி கத்திரிக்கோலும் கொடுங்கன்னார்,.

ஏங்க! மாத்திரை சரி , அது எதுக்கு கத்திரிக்கோலுன்னு கோலு போட்டாரு நம்ம கடைக்காரரு. என்னங்க விவரம் தெரியாதவரா இருக்கீங்க, டியுப் மாத்திரைய சைடுல சைசா வெட்டணுங்க, அப்பத்தான் சைடு எபக்ட்டே வராதுன்னு எங்க அப்பத்தா சொல்லியிருக்குன்னாராம்.

வாசக நண்பர்களே, எங்கள் எழுத்துக்கள் தங்களை மகிழ்விக்கிறது, என தாங்கள் தரும் பின்னூட்ட்த்துக்கு நன்றி. ஆனாலும் சிரிக்க வைக்கும் சைடு எபக்ட் மாதிரியே மெயின் மேட்டரா சில விசயம் புடிச்சுச்சு, அதை நாங்க புடிச்சுப்புட்டோம் என சொன்னால் எகிறி குதிப்போம்.

அறிவியல் அரசியல் என இரு தளங்களில் சில சாதனையாளர்களின் வாழ்வை முந்தைய பகுதிகளில் பார்த்த நாம், வியாபாரத்துக்கு விரைவோமே. இன்று தொழில் துறையில் சாதனை படைத்த ஒரு பச்சை தமிழனைப் பார்ப்போம் (நிஜமாவே இவர பசுமை தமிழன் என்றும் சொல்லலாம்... குத்தமில்லை). அறிவியலின் ஆராய்ச்சியும் வியாபாரமும் ஒருங்கே கலந்த ஒரு அறிவியல் மேதை பற்றி விலாவரியா பேசுவோமா.

கோவையின் கொள்கை பரப்பு செயலாளர். யார்....?, மோட்டார் மன்னர், அதிசய் மனிதர் எனும் பட்டப் பெயர் கொண்டவர் யார். அவர்தான் நம் இப்பகுதியின் நாயகர். ‘உலகத்துலயே இரண்டு அறிவாளிகள். ஒண்ணு ஜி.டி. நாயுடு இன்னொன்னு ...... இந்த தர்ம அடி தர்மலிங்கந்தான், என்பது நாம் ரசித்து சிரித்த ஒரு கவுண்டரின் கலகல காமெடி. இன்னிக்கு அவர பத்தி தான் எழுதுறோம். யாரு என்னப்பத்திதானேன்னு தர்ம அடி கேக்கிறாரு. எழுதலாம், எழுதினா எங்களுக்கு உங்களிடம் இருந்து தர்ம அடி கன்பர்ம்டு, அதனால முன்னவரை பற்றியே முழங்குவோம்.

சூளூர் தொகுதியின் கோவையை அடுத்த ஒரு சிறு கிராமம் கலங்கல். மூன்றில் ஒரு பங்கு செலவழித்து நாம் கற்றுக் கொள்ளும் கல்வி போதாது என் நினைத்து, குட்டி பையன் நாயுடு மூன்றாம் வகுப்பில் ஆசிரியருடன் பிணக்கு கொண்டு, மண் வாரி அவர் கண்ணில் எறிந்து விட்டு பள்ளியில் இருந்து ஓடி விட்டான். இந்த மண்வீச்சு சம்பவத்தால், பள்ளிப் படிப்பு மூன்றாம் பருவத்திலேயே முடிந்து போனது. ஆயினும் கல்வி நிற்கவில்லை. அதெப்படி உலகையே வந்து பாருங்கள் என சவால் விடும் தகவல்களை தன்னகத்தே கொண்டான். அதுதான் நாயுடு. புத்தகங்கள், விவாதங்கள், சுய பகுத்தறிவு இதுவே இவருக்கு வாத்தியாராயிற்று. அறிவியலின் வேதியியல், உயிரியல் என எல்லா துறைகளிலும் அவரது இன்பர்மேஷன் இமயமாயிருந்த்து.
வாருங்களேன், அவரது தோட்ட்த்துக்குள் நிழைவோம். மூணேயடியில தேங்காய் மரம் கிளைகள் பரப்பி, கொலை கொலையாய் தேங்காய் காய்த்திருக்க. ஆரஞ்சு பழ சைசிலும், தேங்காய் சைசிலும் கொய்யாக்காய்கள் நம்மை வரவேற்கின்றன.

அண்ணாச்சி, கொய்யாக்கா நல்லா டேஸ்டா இருக்கு, ஆனா பாருங்க சின்னதா இருக்கு. பெரிசா இருந்தா எம்புட்டு நல்லா இருக்கும், என சொன்னான் ஒரு தங்க்க் கம்பி. அட இதுவாடா பிரச்சனை, டேய் போய் அந்த இன்ஷெக்சன எடுத்துட்டு வா, செடியில இருக்கிற கொய்யாக்காக்கு குத்து. தம்பி, நீ போயிட்டு அப்புறமா வா, பூசணிக்கா சைசில கொய்யாக்கா இருக்கும் அதே டேஸ்டுல, என் ஜாய் என எளிமையாய் சொல்லிவிட்டு நகர்கிறார் நம்ம நாயுடு. அடுத்தவன் ஐயா, ஆரஞ்சு டேஸ்டா இருக்கு, ஆனா கொட்டை டேஸ்ட கெடுக்குதுய்யா, அப்படியாடா நீ அந்த மூலையில இருக்கிற விதையில்லாத ஆரஞ்ச் சாப்பிடு போ என பரிந்துரைக்கிறார்.

நமக்கு அதிசயம். இது என்ன கனவா இல்லை நிஜமா. இதெல்லாம் ஏதோ மாயஜால படம் பார்க்கிற மாதிரியில்ல இருக்கு. ஆம், கற்பனைக்கு எட்டாத சாதனைகளை நடைமுறை படுத்தியதாலேயே அவர் அதிசய மனிதர்.
நீ ஷேவ் பண்ணிக்கணுமா. எலக்டிரிக் ரேசர் இருக்குப்பா, இன்னொன்னு மெல்லிசா இன்னொரு ப்ளேடு இருக்கு. இத சவரம் பண்ண பண்ண உன்னோட பிளேட் மாதிரி மொக்கையாகாது, இன்னும் கொஞ்சம் சார்ப் ஆகும், சரியா என சலிக்காமல் சொல்லுவார் நம்ம நாயுடு.

என்னங்கோ!!! நிறைய கண்டுபிடிக்கிறீங்களே, இது மாதிரி எத்தனை இருக்குங்கோ என கேட்ட்தற்கு, அதிகம் இல்ல ஜெண்டில்மேன், ஒரு நூறு கண்டுபிடிப்பு. இவரை பற்றி கேட்க கேட்க இப்படி ஒண்ணில்ல இரண்டில்ல, பல தகவல்கள் நம்மை ஆச்சரியப்படுத்துது. எப்படிய்யா.... எப்படி.... என கேட்க வைக்கிறது. சீமெண்ணையில ஓடுற பேனு, வாக்கு இயந்திரம், கால்குலேட்டர், லென்ஸ், காபி மெஷின், ஜூஸ் எக்ஸ்டிரக்டர் என லீஸ்ட் பார்க்கும் போது... அப்பா இப்பவே கண்ண கட்டுதே....

சரி அவரது பிரத்யேக பலம் என்ன என்றால், முழுமையே. அது என்ன்ன்னு கேட்டீங்கன்னா. எல்லா அறிவியல் மேதைகளுமே ஏதாவது ஒரு பாயிண்டு தான் கண்டுபிடிப்பாங்க, ஏன் இப்ப நம்ம வெங்கி கூட, எக்ஸ் ரேயின் ஒரு தன்மை கண்டுபிடிச்சாரு, நோபல் பிரைஸ் வாங்கினாரு. ஆனா அத இன்னும் விரிவாக்கி மனிதர்களை சென்றடைய வேறு யாராவது முயல் வேண்டும். ஏன் நமது முந்தைய பகுதியின் ராமன் எபக்ட்டுக்கு பின்னால் ஒரு 2500 பேர் அதை விரிவாக்கவே முழு வடிவம் பெற்றது. ஆனால் நம்மவரோ கொய்யாக்காக்கு பையோவில் தொடங்கி மண்ணியல் வரை முடிச்சு, ஒரு பூசணிக்காய் ஆக்கி முடிச்சுப்புடுவாரு. ஒரு வேளை வாடிக்கையாளரையும் அப்ளிகேஷனையும் மனதில் கொண்டே நகர்வதால் இந்த அற்புதம் நிகழ்ந்த்து. சரி அவர் வாழ்க்கை அப்படி எளிதில் பெறப்பட்ட்தா. அதற்கு அவர் தந்த விலை ஏராளம்.

மிக சிறிய வயதில், மில் வேலைக்கு சென்று உழைக்க துவங்கினார். அவ்வனுபவத்தில் நண்பர்களையும் இணைத்து, ஒரு மில் தொடங்கினார். முதலில் வெற்றி, என்றாலும் பம்பாய் பருத்தித் தரகர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கையிருப்பை முழுவதும் இழந்து வெறுங்கையுடன் ஊர் திரும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் மனந்தளராத நாயுடு அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார். அவர் நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் அவரை ஒரு சாதாரண தொழிலாளராக அமர்த்திக்கொள்ள விரும்பவில்லை. தாமாகவே முன்வந்து ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும். ஆனால், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார்.

வாசகத் தோழமைக்கு ஸ்டேன்ஸ் துரையையும் அறிமுகம் செய்வோமே. நிச்சயம் ஸ்டேன்ஸ் டீ உற்சாகம் தந்திருக்கும், அவரது வாழ்வு பற்றிய தகவலும் நம்பிக்கை தர வேண்டி ஒரு பத்தி அவருக்கென ஒதுக்குவோம். 1858 ஸ்டேன்ஸ் தனது 15 வயதில் காப்பி தோட்டம் வைத்து நல்ல நிலையில் இருந்தார். பின் தொழில் தோல்வியால் கையில் இருந்த அத்தனை காசையும் இழந்தார். வெறும் 500 ரூபாய் வைத்து வாழ்க்கையை தொடங்கி விட்ட காசு அத்தனையையும் பிடித்தார். ஒரு பெரிய சாம்ராஜ்யம் உருவாக்கினார். அவரது பெயர் கொண்ட பள்ளி இன்றும் தரத்தில் உயர்ந்து என் பிள்ளைகள அங்க படிக்க வைக்கணும்யா என நம்மை கனவு காண வைத்தார். அவர் கோவை நகர கவுன்ஸில் சேர்மன்.

ரொம்ப நாளா ஒரு டவுட்டுங்கோ... கோழி முதல்லயா இல்ல முட்டை முதல்யா எதுன்னு சரியா சொல்லுங்க என நண்பரிடம் கேட்க. இதுல என்னங்க கன்புயூஷன் எத முதல்ல ஆர்டர் பண்ணினோமோ அது முதல்ல வரும். முனியாண்டி விலாச அதுல அடிச்சுக்கவே முடியாது என்பவரிடம் சார் நீங்க ஒரு மேதை என ஜூட் விட்டோம்.

நம் நாயுடு, 27 வயதில் ஸ்டேன்ஸ் உதவியுடன் முதல் பஸ் கம்பெனி, யுனைடெட் மோட்டார் சர்வீஸ் தொடங்கி, ஆரம்பத்தில் அவர் கம்பெனியில் இருந்த்து ஒரே ஒரு பஸ் அது 4 வருட்த்தில் 22 பேருந்தாய் குட்டி போட்ட்து. அதுவே அடுத்த 10 வருட்த்தில் 280 ஆனது அதிசயம் அல்லவா.
தொழிலாளர்களை தோழர்கள் போல் கருதினார், இல்லையென்றால் ஒரு டிரைவருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பேருந்தையே தானமாய் கொடுத்தார்.
அவரது பஸ்ஸை போலவே அவர் வளர்ச்சியும் ஸ்பீடுதாங்கோ.
பங்குசுவாலிட்டி அவருக்கு ரொம்ப முக்கியம். அவரது பேருந்து வரும் போகும் நேரத்தை துல்லியமாய் வைத்து அதையும் பயணிகளுக்கு காட்ட ஒரு கருவியும் கண்டுபிடித்தார். மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை. பாவம் நம் தமிழ் சினிமா காரர்கள். எப்பவுமே வண்டி சூடேறி ஒரு மண்ணெண்ணை டின் எடுத்து தண்ணி பிடிக்கப் போறதுதானே நம் யூசூவல் பார்மூலா.

எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு. அவர் செய்து வந்த மோட்டார் வாகனத் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறைகளிலும் அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

1936 வாக்கு இயந்திரம் செய்து அமெரிக்காவுக்கு கொடுத்தார். 1945 ல் பாலிடெக்னிக்கும், 1046 ல் பொறியியல் கல்லூரியும் வைத்து அதன் பிரின்சிபலும் ஆனார். இதன் பாட்த்திட்டங்கள் மற்றும் பணிமனைகளையும் அவரே உருவாக்கினார். இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும்.

எட்டே மணி நேரத்தில் பவுண்டேசன் போட்டு மேல் தளமும் அமைத்து குறைந்த விலை வீடுகள் கண்டுபிடித்தார். அதில் விசேஷம் இன்னும் அந்த வீடுகள், அவரது அறிவுக்கு சான்றாய் நிலைத்து நிற்கிறது. அவரது தகவல்கள் இப்படி பிரமிப்பூட்டி நம்மை கவர்கிறது.

என்றாலும் பேரறிஞர் அண்ணா சொன்ன தகவல் நம்மை யோசிக்க வைக்கிறது. மிஸ்டர் நாயுடு நீங்க பெரியார் ஐயாகிட்டயே இருங்க, ஆனா என்ன எதிர்த்து பிரச்சாரம் பண்ணினா நான் உங்கள எதிர்த்து பிரச்சாரம் பண்ணுவேன். மக்கள் கிட்ட போயி சொல்லுவேன். மக்களே, பசி உங்களை வாட்டி வதைக்கிறது, அரசில் ஆள்பவரை விட்டுத்தள்ளுங்கள். நம் ஜி.டி. நாயுடுவும் அல்லவா உங்களை தவிக்க விடுகிறார். உணவு தேவைக்கான வீரிய விதை வித்துக்கள் அவரிட்த்தில் இருக்கிறதே, அதை போய் கேளுங்கள் என கூறினால் மொத்த தமிழகமும் உங்கள் தோட்ட்த்தில் தான் இருக்கும்னார்.

அவர் இன்று உயிரோடிருந்தால் நம் மனித இனத்தை வாட்டும் பசி இருந்திருக்காது, என ஒருவர் சொல்ல கேட்க நம் கண்கள் பனிக்கிறது. அரசின் ஆதரவு சரிவர வராத்தால் மனம் நொந்த அவர் ஒரு அதிர்ச்சி காரியம் செய்தார். எல்லோரையும் அழைத்து ஒரு பொதுக் கூட்டம் கூட்டினார். தன் அறிய கண்டுபிடிப்பை எல்லாம் பொது மேடையில் வைத்தார். பின் அத்தனை பேரும் அதிர, தன் கண்டுபிடிப்புக்களை மேடையிலேயே உடைத்தார். தந்தை பெரியார், நாயுடு என்ன செய்கிறீர்க்ள், நீங்கள் செய்வது மட்த்தனம் முட்டாள் தனம் என முழங்கினார். பொது மக்க்ள் எல்லாம் தவறு அந்த வார்த்தை பிரயோகத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர். பெரியார் மறுமுறை வந்து முழங்கினார் இது மாபெறும் முட்டாள்தனம் என்று.

சிறு வயதிலே, பள்ளிப் படிப்பு என்று நேரத்தை வீணாக்க மாட்டேன், நான் படித்து கொள்கிறேன் என வீசிய வீகம் நாயுடுவை உயர்த்தியது. ஒருங்கிணைந்த முயற்சி தன்னம்பிக்கை, எதையும் செய்யும் துணிவு அவரை சாதனையாளராக்கியது.
சொல்லுங்கள் தோழமையே, அவர் வாழ்வில் இருந்து நாம் எடுத்துக் கொள்ளும் பாடம் என்ன.
படித்தாலே படியும் வெற்றியின் படி, எடுப்போமே நாமும் இன்றே முடிவு.

வெற்றிப்படியின் படி (STEP) படி (LEARN)
(லாரன்ஸ் / ஆர்.கோபி)
தொடரும்.....

வெற்றியின் விழுதுகள் – (பகுதி-6)

ஒரு கேள்வியோட நம் ஆறாவது பகுதியை தொடங்குவோமே. "TEA"க்கும்
"COFFEE"க்கும் என்ன வித்தியாசம்?

ஹாங்...இது ஈசியான கேள்விதான். அந்த கோப்பையிலே தான் நம் குடியிருப்பு, குடுத்தா குடிச்சுருவோம், குடுக்கலேன்னா எப்படா கிடைக்கும்னு ஏங்குவோம்.

அவ்வளவு தானே... அப்புறமா குடிக்கிறதில என்ன வித்தியாசம்ன்னு
கேட்டீங்கன்னா...., நம்ம வீட்டுல குடிச்சா நல்லா இருக்காது, அடுத்த
வீட்டுல குடுத்தா சூப்பரா இருக்கும் அதுவா. வேற என்ன...ஆங்...
வித்தியாசம்னா "TEA" ல ஒரு "E" இருக்கும். "COFFEE"ல 2 "E" இருக்கும். டீ
காப்பி குடிச்சுட்டு கீழே வைச்சா கோப்பைல நெறைய ஈ இருக்கும். அதுதான.
ஹீ...ஹீ...

வாசக தோழமையே நம்மை சுறுசுறுப்பாக்க உற்சாக பானம் தினம் குடிக்கிறோம்.

அழுத்தம் மிகுந்த இன்றைய வாழ்வில் நம்மை இலகுவாக்கவும், நம் வாழ்வை
இனிமையாக்கவும் எங்களின் “எடக்கு மடக்கு” எழுத்துக்கள் உதவுகிறது என
தங்களின் பின்னூட்டம் பார்த்து மிக்க நிறைவாய் உள்ளது. தங்களின் மேலான
தொடர் ஆதரவு வேண்டி தொடர்கிறோம்.

அறிவியல் ஆராய்ச்சிகள் நம்மை பண்படுத்தி முன்னேற்றிய விந்தையை அறிந்து கொள்ள “ஆர்யபட்டா” எனும் நம்மாட்டவரை தெரிவோமே. ”ஆர்யப்பட்டா” யார். அவர் இந்தியர் அதில் எந்த சந்தேகம் இல்லை. நோட் த நேம் யூவர் ஆனர், ஆரிய... அவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள ”குசுமபுரா” தான் இன்றைய பாட்னா எனவே அவர் வட நாட்டவர் எனவும்,

இல்லை அவர் ”குசுமபுரா” சென்றது வெறும் படிப்புக்காகத்தான், இல்லாமல் சார்ந்திருக்கும் இடம் பாருங்கள் அவர் நம்ம கேரளத்து சேட்டன் தான், அவர் கப்ப கிழங்கை ரசித்து, ருசித்து சாப்பிட்டதை கண்ணால் பார்த்தேன் எனவும் சிலர் விவாதிப்பது உண்டு. அவர் யார் எங்கு பிறந்தார் என தெளிவான தகவல்கள் நம்மிடையே இல்லை. அவர் எழுதிய
புத்தகங்களில் கூட பெரும்பாலானவை அழிந்து போயின. கிடைத்த ஒரு சில புத்தகங்களை வைத்து பார்க்கும் போது ஆச்சரியம் நம்மை வாயடைக்க வைக்கிறது.

நம்மை பொறுத்தவரை அவர் ஒரு மாபெரும் சாதனையாளர், இந்தியர். ஒரு வேளை எந்த
மாநிலம் என சொல்லாமல் தேசிய அடையாளம் கண்டு, இந்திய ஒருமைப்பாட்டின் அடையாளமாய் வரையறுக்கப் பட வேண்டியவரோ. கண்டிப்பாக அப்படி தான்..

அவரது சாதனையின் விழுதுகள் வானியல் மற்றும் கணிதம். அவர் வாழ்ந்த காலம் மிக தொன்மையானது. அந்த காலகட்டத்தில் வாழ்க்கை ஒரு சிறிய வட்டத்தில் சுழன்று கொண்டு இருந்திருக்க வேண்டும். சூரியன் கிழக்கில் தோன்றினால் விடியல், கப்புனு எந்திரிச்சுக்கோ, மேற்கே மறைந்தால் இரவு, கபால்னு தூங்கிக்கோ. மலை வாயில சூரியன் வந்தால் மனுசன் வாயில சோறு என வெறும் நேரத்துக்காக மட்டுமே அண்ணாந்து வானத்தை பார்த்தவர்கள் மத்தியில் இவரது பார்வை மிக மிக வித்தியாசமாயிருந்தது.

தனித்திருந்து பூமியையும் கோளங்களையும் பார்த்து யோசித்து அதனை ஆய்வு செய்து அறிவித்தார். இன்றைய கால ஆராய்ச்சிக்கும் அந்த காலத்து
ஆராய்சிக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. இன்று உபகரணங்கள், ஆய்வு
அறிக்கைகள் என ஒன்றில் இரண்டு பார்த்து விட்டு "கன்ஃபர்ம் கணபதி" ஆன பின்னாடிதான் நம் கண்டுபிடிப்பை அறிவிக்க வேண்டும். ஆனால், அன்றைய காலத்தில் கொஞ்சம் பரிசோதனையும் மிச்சம் மனத் தீர்மானங்களுமே. ஒரு தியான நிலையில் என்ன எப்படி என கேள்வி கேட்டு ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

அப்படி உயரிய தொழில் நுட்ப உதவி இல்லாமலே, பூமி, கோளங்கள் அதன் முட்டை வடிவ சுற்றுப்பாதை எல்லாம் மிக சரியாக கணித்து சொல்லியவர் இவர். அவர் எழுதிய “ஆர்யபட்டியா” எனும் வானியல் நூலே நம் இன்றைய எல்லா கண்டுபிடிப்புகளின் தொடக்கம்.

திரிகோணமித்திரியின் தொடக்கமும், பூஜ்யம் எனும் அற்புத ஆச்சரியத்தின்
கருக்களும் இவரது படைப்புகளின் பிரதானம். கேளுங்களேன், 1609 C.E.கெப்லர்
ஆராய்ச்சி செய்து, தனது முதல் கோளங்களின் விதி எழுதும் 1000 ஆண்டுகளுக்கு முன் பூமியின் சுற்றுப்பாதை நீள் வட்டம் எனச் சொன்னவர் ஆர்யபட்டா.

வருசம் தொடங்கினதும் ஒரு காலண்டர கம்புயூட்டரில் அடிக்கவே மூச்சு
வாங்குது என சலித்துக் கொள்ளும் நமக்கு, வருடங்களை குறிக்க அறிஞர்கள் திக்கித் திணறி திக்குமுக்காடி இருந்த கால கட்டத்தில் 1000 வருடங்களுக்கு முன்னர் எளிமையாய் யுகங்கள் வருடங்கள் என வரையறுத்த இவரின் அறிவும் ஆற்றலும் அதிசயமே.

அவருடைய பெரும் பணியான,ஆர்யபட்டீய, கணிதம் மற்றும் வானவியலுக்கான ஒரு பெரிய நூற்சுருக்கம், இந்திய கணித இலக்கியத்தில் பல முறை பயன்படுத்தப்பட்டும், மேலும் நவீன காலத்திலும் பிழைத்துக் கொண்டு விளங்குகிறது. ஆர்யபட்டீயவின் கணித பாகம் அரித்மெடிக், அட்சரகணிதம், தல கோணவியல் மற்றும் உருண்ட கோணவியல் அடங்கியது. மேலும் அவற்றில் தொடரும் பின்னங்கள், இருபடிச்சமன்பாடு, அடுக்குத் தொடர்களின் கூட்டும் முறை மற்றும் சைன் கோணங்களுக்கான அட்டவணை அடங்கும்.

என்றாலும் அவர் ஒரு தவறான செய்தி சொன்னார். ஆனைக்கும் அடி சறுக்குமல்லவா. அது, பூமி தன் அச்சினை ஒட்டி சுழன்று வருவதாக நம்பினார்.

நம்ம அறிவுஜீவி அப்பீட் அவுன்ஸ் மணி சொல்றார் ’’சொல்றாங்களே தவிர பூமி சுத்துற மாதிரியே தெரியல, அப்படியே தான் இருக்கு. என்ன ஒரு நாலு கிளாஸ் ஆங்... குடிச்சா
லேசா சுத்தும் போல தெரியுது.

யோசிக்கும் போது ஆர்யப்பட்டாவுக்கு எப்படியோ பூமி சுழல்வது தெரிகிறது,
பூவியீர்ப்பு விசையும் அவருக்கு தெரிகிறது. என்வே ஒண்ணும் ஒண்ணும் இரண்டு
என கணக்கிட்டு, அது சுழல்வதற்கு தன் மைய அச்சு என நம்பினார்.

வாசகத் தோழமை அறிந்திருக்கும் ஒரு சுவாரசியமான விசயம் இங்கே சொல்ல வேண்டும். இறைவன் இந்த உலகின் அத்தனை உயிரினங்களையும் படைக்க பயன்படுத்தும் நம்பர் π. என்றும் இறைவனின் மேஜிக்கல் நம்பர் என
நம்பப்படுவது π. அப்படின்னா அதென்னங்க புரியல என்பவருக்கு இதோ.

ஒரு தேன் கூட்டின் மொத்தம் உள்ள ஈக்களை ஆண் பெண் என தனித்தனியாய் கூட்டி, பெண் ஆண்களின் விகிதாச்சாரம் π. சூரியகாந்தி பூக்களின் விதை வட்ட்த்தின் அளவு π.

ஏன் மனிதனின் உச்சி முதல் கால் வரை உள்ள அளவை உச்சி முதல்
தொப்புள் வரை உள்ளதில் கழித்தால் π. பை த பை πன் மதிப்பை தோராயமாக
மதிப்பிட்டார் நம்மவர் அன்றே, மேலும் பைπ என்பது ஒரு விகிதமுறா எண் என ஆர்யபட்டீயம் (gaṇitapāda 10)இரண்டாம் பாகத்தில், அவர் எழுதுகிறார் :

'' "நூறோடு நாலைக் கூட்டு , அதை எட்டால் பெருக்கு மேலும் பிறகு 62,000
த்தை அதனுடன் கூட்டு. இந்த விதி முறையில் 20000 விட்டம் கொண்ட ஒரு
வட்டத்தின் சுற்றளவை கண்டறியலாம்."

அவரது பிரத்யேக பாணி, கவிதை வரியில் எளிதில் மனதில் இருத்த என பாடல் வரி
போல அவரது நூலை எழுதியிருக்கிறார். அதில் ஒரே ஒரு சிக்கல். அவரது நூல்
பின் வந்த சந்த்திக்கு முழுதும் புரியவில்லை. அவரது சீடர் பாஸ்கர் எழுதிய
உரைநடை விளக்கமும் அவரது ஒரிஜினலும் பிரமாதமாய் அர்த்தம் தருகின்றன.

அவரது காலத்திலேயே, அவரது படைப்புக்கள் அரேபியாவில் மொழி
பெயர்க்கப்பட்டு, மிகவும் பிரபலமானது.

ஆர்யபட்டாவின் கணிப்பின் படி புவியின் பரி்தி் அல்லது சுற்றளவு 39,968.0582 கிலோ மீட்டர்கள் ஆக கணக்கிடப்பட்டது, இது உண்மையான நீளமான 40,075.0167 கிலோ மீட்டர்களை விட 0.2% விழுக்காடு மட்டுமே குறைவாக இருந்தது.

ஆர்யப்பட்டாவின் வாழ்வு நமக்கு டாக்குமெண்டேஷனின் அவசியத்தை
உணர்த்துகிறது. ஒரு வேளை படிக்க எளிதாய் இருக்கட்டும் மனனம் செய்ய
ஈசியாய் இருக்கட்டும் என கவிதை வடிவில் மட்டும் எழுதியது தவறோ.
விளக்கமாய் ஆழமாயும் அவர் சொல்லி யிருக்க வேண்டுமோ...

ஆர்யப்பட்டாவின் வாழ்வு நமக்கு தரும் பாடம், விசால மனது. நான் என் ஊரின் ஒரு துளி, என் ஊர் என் நாட்டின் ஒரு துளி, என் நாடு இப்பூமியில் ஒரு துளி, அவரை போல் நாட்களாய் வாரங்களாய் வானத்தை பார்க்க வேண்டாம்.

சில நிமிடமாவது நாம் வானைப் பார்க்கலாமே. இரவில் ஒரு 30 நிமிடம் வானை பார்க்கணுமோ. உலகம் எத்தனை பெரிது என புரியுமோ, நாம் பெரிதாய் கவலைப்பட்டு, அலட்டிக் கொண்டு இருக்கும் பிரச்சனை எத்தனை சிறியது என்பது புரியுமோ.

உலகம் மிகப் பெரியது, வாழ்வும் நமது திட்டங்களும் நம்மை கலவரப்படுத்தாமல் பாதுகாப்போம்.

மாய்ந்து மாய்ந்து நம்மை செப்பனிட முயல்வதோடு, உலகையும் அதில் வாழும் ஜீவராசியையும் நேசிப்போம்.

(லாரன்ஸ் / ஆர்.கோபி)

தொடரும்.....

வெற்றியின் விழுதுகள் – (பகுதி-5)

உண்டு உண்டு என்று நம்பி காலை எடு,
இங்கு உன்னை விட்டா
பூமியேது கவலை விடு
ரெண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு, என வாத்தியார் சொன்ன வாய்ப்பாடு உண்டு.... நம்பிக்கையில்லையா நண்பர்களே கால்குலேட்டர் எடுத்து நீங்களே தட்டி சரி பாருங்க. கணக்கும் அறிவியலுந்தேன் நம்ம இன்றைய வளர்ச்சிக்கு வக்காலத்து வாங்கும் இரட்டையர்கள்...

உங்க ஊர்ல இருந்து பக்கத்து ஊருக்கு போகணும்னா, கால் நடையா போவோணும், இல்லையா கால் நடைகள கட்டி வண்டி உண்டாக்கி போவோணும்…. எப்போ, ஒரு காலத்தில, ஆனா இன்னைக்கு ஜிவ்வுன்னு ஒரு பஸ், டக்கு டுக்குன்னு ரயிலு, புஸ்ஸூன்னு ஏரோப்ளேன்னு எத்தனையோ இருக்கு.

இதுக்கெல்லாம் காரணம் அறிவியல் கண்டுபிடிப்பு தானே. காசியில் செய்யும் பெரியோர் உரையை காஞ்சியில் செய்வதற்கோர் கருவி செய்வோம் என நம் வாழ்வை மாற்றிய விந்தை அறிவியல் ஆய்வுதானே. நம் பயணத்தில், உணவில், தகவல் தொழில் நுட்பத்தில் என எத்தனை எத்தனை சாதனைகள்.

புறாவை தூது விட்டு காத்திருந்த நாம் இன்று செல்போனில் அல்லவா செழிக்கின்றோம். அரசியல் பொது எனும் தளங்களில் இருந்து நாம் சந்தித்த சாதனையாளர்கள் போலவே அறிவியலில் மிரக்கிள் நடத்திய நம் மரியாதைக்குறிய தமிழர் சர்.சி.வி.ராமன் அவர்களின் வாழ்வை சற்று பார்ப்போமே.

“சர்” எனும் வார்த்தை பதம் நம் வாசக தோழமைகளுக்கு தெரிந்திருக்கலாம், என்றாலும் தெரியாத எங்களைப் போன்ற சிலருக்காக திரும்ப சொல்கிறோம், தெரிஞ்சவுங்க மன்னிச்சுக்கோங்க.

போரும், போர்க்கள வெற்றியும், உடல் பலமுமே உயர்ந்தது என நம்பப்பட்டது முந்தைய நூற்றாண்டு வரை. ஒரு மிக பெரிய மாறுதல் நிகழ்ந்தது அடுத்து வந்த 20ம் நூற்றாண்டின் மத்தியில் தான். அதுதான் இண்டெஸ்டிரியல் ரெவல்யூஷன் அல்லது சயிண்டிபிக் ரெவல்யூஷன். புதிய புதிய கண்டுபிடிப்புகளும் ஆய்வும், உபகரணங்களும் பாராட்டப்பட்டு பொன்னாடை போர்த்தப்பட்டது.

நைட் ஹூட் (KNIGHTHOOD) என வீரத்தை அங்கிகரித்த பழக்கம் மாறி, “சர்” எனும் மதிப்புமிக்கவர் என பட்டம் கொடுக்க தொடங்கிய கால கட்டத்தில் பிரிட்டிஷ் அரசின் உயர்ந்த இந்த அவார்டு வாங்கியவர் நம்மவர் திருச்சிக்காரர்.

அப்பா கணக்கு, இயற்பியல் பாடத்தின் வாத்தியார். யாரோ வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியன் பிள்ளை சீக்குன்னு வாங்களே அவர் மட்டும் கையில சிக்கினாரு, அவர பிடிச்சு வைச்சு, இல்லைங்க!!! இவரு பிரில்லியண்ட் என நாம் சொல்லி விடலாம். முழுக்க முழுக்க இந்தியாவிலேயே படித்து அறிஞர் ஆனவர் என குறிப்பிடப்படும் பெருமை இவருக்கு உண்டு.

இசை, இலக்கியம், இயற்பியல் எல்லாம் அவருக்கு பிறந்த வீட்டு சீதனம்... . பள்ளிப் படிப்பு எளிதாகவும் இயல்பாகவும் வந்தது அவரது மிகப் பெரிய பலம். சின்னஞ்சிறு வயசிலேயே புரிஞ்சு படிச்சவர். புஸ்தகத்தில மார்ஜின் காலத்துல ஹௌ, வொய் என குறிச்சு வைச்சுக்குவாராம்.

பாஸானாலே பெரிய விஷயம் என படிப்பை பூச்சாண்டி மாதிரி பார்த்து வாழ்வையே கண்டு அஞ்சிய ஒரு குழுவும், படிப்பை விளையாட்டு போல அனாயாசமாய் செய்து வெற்றி பெற்றவர் என இன்னொரு குழுவாகவும் மனிதர்கள்.

நான் எந்த ஊரு,
நீ எந்த ஊரு முகவரி

தேவையில்லை

என அந்த டெர்ரர் ஒப்பனிங் சாங் போல பாடிவிட்டு அடுத்தவங்க எந்த க்ரூப்னு கேக்காம மேல போவோம்.

17 வயசுல, பிரசிடென்ஸி காலேஜ்ல, ஸ்கூல்ல கொடுத்த தங்க மெடலோடு படிக்கப் போறாரு நம்மாளு. கிளாஸ் எடுக்க வந்த வாத்தியார் எலியட் கேட்டாராம் ‘ஏம்பா இது பி.ஏ. கிளாஸ். பார்த்தா சின்னப் பையனா இருக்கியே தெரியாத்தனமா வந்து உக்கார்ந்திட்டியோன்னு கேட்டேன்னாராம்’. பார்க்க சின்ன பையன் போல் சிறு சிறு துரு துரு செல்லந்தான் நம் C.V.ராமன்.

கோல்ட் மெடலிஸ்ட் ராமன் படிப்பிலே கெட்டி, ஆனாலும் அவர் ஒரு 15 வருடம் ஆராய்ச்சி செய்வதை வேலையாக செய்யவில்லை. அடங்காத ஆவல் மட்டும் கொண்டு, அவ்வப்போது படித்தும் அவர் எழுதியும் வந்தாரே ஒழிய முழு நேரமாய் செய்யவில்லை. இல்லேன்னு சொல்லாம, தனது 18 வயதில் பிரிட்டிஷ் நாளிதழில் தத்துவ கட்டுரை சில எழுதியிருக்கிறார்.

படித்து முடித்தபின் கல்கத்தாவில் தான் உத்தியோகம். ஒரு நாள் ட்ராமில் சென்று கொண்டிருந்த போது 210, Bow Bazaar தெருவில் உள்ள ஆராய்ச்சிக்கூடத்தின் பலகை பார்த்து உடனே குதித்து உள் சென்றார்.


இங்கு என்ன செய்கிறீர்கள் என கேட்டார். அவர்களும், இது போன்று செய்கிறோம்.... நீங்கள் வர தயாரா என்று கேட்ட போது, இதோ வந்தேன் என்று சொல்லி ஒப்புக்கொண்டு தன் அன்றாட பணிகளுக்கு இடையில் ஆராய்ச்சியும் தொடங்கினார்.

ஒரு ஆராய்ச்சியாளரின் சிந்தை செயல் வேறு. லண்டன் சென்று ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சுற்றிப் பார்த்தவருக்கு நேர்ந்த ஒரு வினோத சம்பவமே ஆராய்ச்சி செய்ய தூண்டியது. அன்றைய காலகட்ட்த்தில் லண்டன் செல்வதென்பது இப்ப மாதிரி ஒரு நாள் கூத்தா. மாதங்களான நிச்சயமில்லாத கடற்பயணம். அப்படி ஒரு கடற் பயணத்தின் முடிவில் தோன்றிய தீர்மானம் தான் இவரின் வெற்றி.

ஒளி தன்மை பற்றிய நோபல் பரிசுக்கான கண்டுபிடிப்பு. அந்த அற்புதம் 1928 மார்ச் மாத்த்தில் நிக்ழ்ந்தது.

ஒளியின் தன்மை, கற்றையா துகள்களா. இப்படி ஒரு கேள்வியோ, இதற்கான விடையோ அதுவரை நாம் முயலாதது. அது துகள்களே, அதுதான் போட்டான்ஸ் என போட்டார் ஒரு போடு. ஏழு வண்ணத்தில் விப்ஜியார் (Violet, Indigo, Blue, Green, Yellow, Orange, Red) என வானவில் தோன்றுவது ஒளி விலகல். இதில் ஏழு நிறத்தை அப்பால வைச்சுட்டு ஒற்றை பளிர் வெள்ளை ஒளியை எடுத்து அதை ஒரு பிரிசம் வழி விட்டால் கிடைப்பது ஒற்றை அல்ல என்பது இவர் கண்டுபிடிப்பு. அதாவது என்னதான் நீங்க ஒளியை பிரிச்சு, பிரிசத்தில விட்டாலும் அங்க மாலிகியூல் செய்யுற களேபரம் இருக்கு. இந்த எபக்ட்க்கும் ராமன் எபக்ட் எனவும் இதில் போட்டான்ஸ் எடுக்கும் பாதைக்கு ராமன் பாதை எனவும் இவர் பெயர் பெற்றது.

எட்டாம்புல புரிஞ்சிருக்க வேண்டிய இந்த ராமன் எபக்ட் வாசகத் தோழமையே இப்ப புரியுது. இப்ப புரிஞ்சதால ராமன் எபக்டால எங்களுக்கு எந்த எபக்ட்டும் இல்லை. தங்களுக்கு எப்படியோ.....

இந்த ஆராய்ச்சி தந்த பாதையில் மேலும் சிலர் முன்னேறி, மிகப் பெரிய சாதனைகள் நிகழ்த்தினர். 1800 முழுமை பெற்ற ஆய்வுக்கும், 2500 புதிய தனிமங்களின் தீர்வுக்கும் வழி கோலியது. இந்த நூற்றாண்டின் மிக சிறந்த கண்டுபிடிப்பாக அறிவிக்கப்பட்டது.

வெறும் 300 ரூபாய் செலவழித்து உண்டாக்கிய உபகரணம்தான் இது. நேரத்தின் விலை தெரிந்து பணியாற்றியவர் அவர். லட்சியம் தெரிந்த பின் அதை அடைய எதுவும் நம்மை பாதிக்கா வண்ணம் பார்க்க வேண்டும் என்கிறார்.
ஒரு முறை முதல் வகுப்பில் தேர்ந்த ஒரு இளைஞன் இவரிடம் நேர்முக தேர்வுக்கு வருகிறான். சரி சொல் உன்னுள் அடங்காத அறிவியலின் வியப்பு பற்றியும், நீ தேடி அடைய நினைக்கும் விடை பற்றியும் சொல் என்றாராம்.

வந்தவர் முழித்து விட்டார், என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அவருக்கும் பொறுமையாய், அறிவியல் என்பதில் மனிதனின் பங்கு என்ன, அதை ஆராய என்ன அவசியம் என சொல்லிக் கொடுத்து வாழ்த்தி அனுப்பியிருக்கிறார். அறிவியல் ஆய்வின் போது, நாம் தேடும் விடை கிடைக்கும் முன் அதற்கு கொடுக்கின்ற விலை அதிகம். தாங்க வேண்டிய சோதனையின் தாக்கம் அதிகம், உன்னைப் பார்த்தால் வீக்காயிருக்கிறாய். விளையாட்டிலும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்தி உடலை உரமாக்கு எனவும் பரிந்துரைத்தார்.

அறியாத ஒன்றை ஆராய்ந்து கண்டுபிடிப்பது அற்புதம். ஸ்விட்ச் போட்டா லைட் எரியும் என சொன்னால் இன்னிக்கு ஓகே, இதுவே இரு நூறு வருசத்துக்கு முந்தி சொன்னா, என்னது ஸ்விட்ச் போட்டா, லைட் எரியுமா? , விதைய போட்டா, நல்லா விளைச்சல் வரும் என்றிருப்பார்.

ஆம், ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புக்கும் பின்னால் ஒரு அறிஞரின் திடம் இருக்கிறது. அந்த திடம் எப்படிப் பட்ட்து. இச்சகத்துலோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

கூட இருக்கும் சமூகம் சொல்லும் ‘ஏண்டா உனக்கு வேற வேலையே இல்லயா, ஏண்டா இப்படி இருக்க என இந்த நெட்டை மரங்களின் பொட்டை புலம்பல்களை கேட்டுக் கொண்டிருந்தால், சாதிப்பது எப்படி.

அவ்வறிஞரின் திடம் வேண்டுவோம். நம் திட்டம் குறித்தோ அல்லது தீர்மானம் குறித்தோ... இல்லை என யார் சொன்னாலும் பரவாயில்லை. உள்ளுணர்வு சொல்கிறதா, செயலில் இறங்கி விடுவோம்.

அவதார புருஷன் ஸ்ரீ ராமன் வாழ்க்கை காட்டும் தத்துவம் ஒரு தாரமும், தந்தை சொல் கேட்டு கானகம் சென்றதும், அரக்கர்களை அழித்ததும் என்றால். சர் சி.வி. வாழ்வு நமக்கு சொல்வது உள்ளுணர்வு கேட்குதலும், நம் தீர்மானத்தின் வழி நேரத்தை வீணாக்காமல், முன்னேறிச் செல்வதுமே....

சயிண்டிஸ்ட பத்தி சிம்பிளா சொல்லுங்க என ஆப்பாயில் அக்கிரமசிங்கத்தை கேட்டோம், அவர் சொல்றாரு. வெளிய இருந்து முட்டைய உடைச்சா அழிவு, அதுவே உள்ள இருந்து முட்டை உடைச்சு கோழி குஞ்சா வெளி வந்துச்சுன்னா அது ஆக்கம் அல்லது பிறப்பு.

பிறத்தியாரும் சமூகமும் சொல்லாமல் நாமே நம்மை அடைத்திருக்கும் கூட்டை உடைக்க முடியுமா...

முடியுமா ???? ...... முடியும்.... மா.... !!!!!

(லாரன்ஸ் / ஆர்.கோபி)

தொடரும்....