தப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - நடிகர் "குஜய்" புதுக்கட்சி


நடிகர் "குஜய்" கட்சி ஆரம்பிக்க போவதாக செய்தி வந்தவுடன் கீபாலபுரம், மைலாபுரம், கீயஸ் கார்டன், கிஜயகாந்த் அலுவலகம், பீரரசு அலுவலகம் எல்லாம் தீப்பற்றி கொள்கிறது...

"முத்தமிழ் காவலர் வலைஞர்" தன் இரு கரங்களான போர்காட்டாரையும், பொறைகிருகனையும் அலைபேசியில் மிக மிக அவசரம் என்று அழைக்கிறார்...... அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் கீபாலபுரத்தில் ஆஜர்......

வலைஞர் : என்னாய்யா, நாம இப்போதான் ஒருவழியா "சூப்பர் ஸ்டார் குஜினி"ய அரசியல் பேசக்கூடாதுன்னு வாய அடச்சு வச்சு இருக்கோம்.... அதுக்குள்ள, இது என்னய்யா புது தலைவலி.....

போர்காட்டார் : தலைவா.... அவன் கெடக்கான் சின்ன பய..... இங்கன கூட்டியாந்து, நம்ம மணிபர்ஸ் வாயர் சிரிக்கறத பாக்க சொன்னா போதும்..... பயந்து போயி, ஒரு மாசம் ஆஸ்பத்திரில படுத்துடுவான்.......

பொறைகிருகன் : ஆமாம் தலைவரே..... என்று சொல்லி தன் மணிபர்ஸ் வாயை திறந்து சிரிக்க.... போர்காட்டாரே ஒரு நிமிடம் ஆடி போய்விடுகிறார்.....

போர்காட்டார் : யோவ்... சும்மா இருய்யா..... எனக்கே நீ சிரிக்கறத பாத்தா, கதிகலங்குது..... "குஜய்" என்ன பாடுபட போறானோ? தலைவா, நான் அந்த சின்ன பையன அலைபேசில நீங்க கூப்பிடறதா சொல்லி கூப்பிடறேன்..... இங்கன வச்சு, அர்ச்சனை, ஆராதனை, அபிஷேகம் எல்லாம் பண்ணி, காணிக்கை குடுத்து அனுப்பி வைப்போம்........

பயலலிதா : நீங்க எல்லாம், என்ன பண்ணி கிழிக்கறீங்க.... ஆட்சிதான் இல்ல... இந்த மாதிரி சின்ன பிஸ்கோத்து பசங்க மேட்டர கூட கண்ட்ரோல்-ல வைக்க முடியலியா?

பயலலிதாவின் உக்கிர அர்ச்சனை வாங்கிய "தண்ணீர்செல்வம்", "பயகுமார்" எல்லாம் கிலியடித்து பம்முகிறார்கள்...... போயிஎன்ன ஏதுன்னு பாத்து, அந்த பையன இங்க கூட்டிட்டு வாங்க, கொஞ்சம் வேப்பிலை அடிச்சு, தாயத்து கட்டி குங்குமம் குடுப்போம்......

பூமதாஸ் : என்ன கிழிக்கரீங்கய்யா.... ஒவ்வொரு நடிகன், அரசியலுக்கு வரும் போதும், நாம கஷ்டப்பட்டு, அவங்க நடிச்ச படப்பொட்டிய தூக்கி போய், கொளுத்தறதும்..... அவனுங்கள அடிக்கறதும் .... இத இப்போவே, முடிச்சாகணும்..... என்ன பண்ற... அவன் நடிச்ச படம் ஏதாவது தியேட்டர்ல ஓடுச்சுன்னா, அங்க போய் ரகளை பண்ணுங்க.... முடிஞ்சா, அந்த படப்பொட்டிய எடுத்து, ரோட்டுல போட்டு தீ வச்சு கொளுத்துங்க...

கிஜயகாந்த் : ஏயி.... நீ என்ன பெரிய இவனா..... நான் மொதல்ல ஒரு படத்துல ஒனக்கு நடிச்சு குடுக்கலேன்னா, நீ இப்போ, இவ்ளோ பெரிய ஆளா ஆயிருப்பியா?? மவனே.... வந்த வழியே ஓடிடு..... இல்ல.... நடக்கறதே வேற ... என்று "குஜய்" வந்தால் பேச வேண்டிய டயலாக்கை ஒத்திகை பார்த்து கொண்டிருக்கிறார்...

கண்கள் கோவை பழமாக சிவக்க ஆரம்பிக்கிறது.... கை நேராக, டீப்பாயில் இருக்கும் "டாஸ்மாக்" சமாசாரத்தை எடுக்கிறது........ மச்சான் "கிதீஷ்" கிலியடித்து பார்த்து கொண்டிருக்கிறார்.. ஆஹா, இன்னிக்கி ஐயனாரு மலையேற போறாருடோய்.....

பீரரசு : வரேன்னு சொல்றவன் எல்லாம் வரது இல்ல... ஆனா, நீங்க வரவே மாட்டேங்கன்னு நெனச்சேன். வந்துட்டீங்க ..... என்னோட ஆபீசுக்கும், அப்படியே அரசியலுக்கும்... என்று ஒரு பெரிய பிட் போடுகிறார்........... இந்த டயலாக் நம்ம "குஜய்" வந்தா எடுபடுமா? என்று தன் எடுபிடிகளிடம் கேட்கிறார்..... அண்ணே, இது சூப்பர் டயலாக்னே என்று கோரசாக கும்மியடிக்கிறார்கள்..... நைட் கிடைக்கப்போகும் சரக்கை மனதில் வைத்து......

குஜய் : ன்னாவ்...... சார்.... இல்ல.... அய்யா, இதுதான் சரி என்று சொல்லிக்கொண்டே கீபாலபுரம் நுழைகிறார்......

இளைய தமிழே வருக.....இந்தியாவை காக்க வருக என்ற போர்ட் தாங்கி பிடித்தபடி, போர்காட்டார் வீட்டு வாசலில் நிற்கிறார்.......

வாங்க தம்பி.... நீங்களும் உங்கள் சுற்றமும் நலமா..... என்று உப்பு காகிதத்தை தகரத்தில் தேய்த்த குரல் கேட்டு, அந்த திசையை நோக்கி வணக்கம் போடுகிறார்....

வலைஞர் : தம்பி.... பசங்க இப்போதான் உங்க அரசியல் முடிவு பத்தி, என் கிட்ட சொன்னாங்க....... ஒங்கள மாதிரி இளைஞர்கள் தான் இப்போ, அரசியலுக்கு தேவை ...... ஏன், கஷ்டப்பட்டு புது கட்சி தொடங்கணும்... நம்ம கட்சி தான் இருக்கே, ஒங்கள மாதிரி, அரசியல் ஆசை உள்ள இளைஞர்களுக்கு...... என்கிறார்.

குஜய் : அய்யா..... ஒங்களுக்கு தெரியாதது இல்ல.... வரிசையா.... கூட்ஸ் வண்டி கணக்கா, என்னோட மூணு படமும் படுத்துடுச்சு....... அதான், ஒரு அரசியல் பில்ட்-அப் குடுத்து நம்ம சினிமா மார்கெட் சரி பண்ணலாம்னு.....

வலைஞர் : இதுக்கு ஏன், இவ்ளோ கஷ்டபடனும்...... அடுத்த படத்த, நானே "விதியநிதி" கிட்ட சொல்லி தயாரிக்க சொல்றேன்.... நானே கதை, வசனம் எழுதறேன்..... பெரிய பட்ஜெட்ல தயாரிச்சுடுவோம்...... "புலியின் மீசை" படம் பேரு... எப்படி........ அப்படியே "விரச ஒலி"ல ஒரு கவிதை எழுதி இந்த படத்த மக்களுக்கு அறிமுகம் பண்ணிடுவோம் சரிதானே என்று கரகரக்கிறார்...... போர்காட்டாரும், பொறைகிருகனும் ஆமோதித்து ஆமாம் தலைவரே, அப்படியே பண்ணிடுவோம் என்று கோரசாக கூவுகிறார்கள்....

குஜய் : பெரிய பட்ஜெட் ஓகே...... விதியநிதி ஓகே.... இப்போதான் "பில்லு" படுத்துச்சு.... அடுத்த படமும் பப்படமா .... இதுல, தாத்தா கதை வசனமா? நான் எஸ்கேப் என்று கதறியபடி, காம்பவுண்ட் சுவர் தாவி ஓடுகிறார்....... வழியில், ஒரு வாகனம் அவரை மடக்கி "கீயஸ் கார்டன்" தூக்கி போகிறது.....

கீயஸ் கார்டனில் நுழைந்த வண்டி, நடிகர் "குஜயை" கீழே இறக்கி விடுகிறது. "தண்ணீர்செல்வம்" "குஜயை" எழுப்பி பயலலிதா முன்பு நிறுத்துகிறார்.

திருதிருவென முழித்த "குஜய்" பயலலிதாவை பார்த்து, வெள்ளை யானை, பெரிய வெள்ளை யானை என்று அலறுகிறார்......

பயலலிதா முகம், பரங்கி பழத்தை போல சிவக்கிறது... இந்த மரியாதை தெரியாத சின்ன பையனை உடனே இந்த தோட்டத்துல இருந்து அனுப்பிடுங்க, யு ஆல் கேன் கோ அவுட் என்று குரல் கேட்டதும், அந்த அனலில் பொசுங்கிய "தண்ணீர்செல்வம்", "பயகுமார்" எல்லாம் தலை தெறிக்க ஓடுகிறார்கள்......

கிஜயகாந்த், பீரரசுடன் ஒரு வண்டியில் ஏறி, "குஜய்" எங்கே என்று தேடுகிறார்.. நாம ரெண்டு பெரும் சேர்ந்து "குஜய்" ஒரு வழி பண்ணனும்பா...... என்று சொல்லிவிட்டு..... திடீரென்று டேய் பரதேசி... டாஸ்மாக் கடைய பாத்துட்டும் வண்டிய நிறுத்தாம போனாக்க என்னடா அர்த்தம் என்று தனது வலது உருட்டுக்கட்டையை (வலது கையைத்தான்) "பீரரசு" நோக்கி வீசுகிறார்... ஓடும் வண்டியிலிருந்து "பீரரசு" நடுரோட்டில் தாவுகிறார்..... கிஜயகாந்த் வண்டி டாஸ்மாக் கடையருகே சடன் பிரேக் போடுகிறது.

எல்லோரும் "குஜய்" எங்கிருக்கிறார் என்று வலை போட்டு தேடி கொண்டிருக்க... அவரோ...... அவரின் புது பட நாயகியுடன் ஹைதராபாத் ராமோஜிராவ் கார்டனில் ........ கொண்டிருந்தார் (தப்பா எதுவும் நினைக்காதீங்க, டூயட் பாடி கொண்டிருந்தார்)............

மச்சி மச்சி மச்சி
நான் தொடங்க போறேன் கட்சி....

இச்சு இச்சு இச்சு
ஒன் கன்னத்த தாடி பிச்சு

(இது டூயட்டா, இல்ல கட்சியின் கொள்கை பாடலா என்iறு யாருக்கும் தெரியாது, பாடலை எழுதிய பீரரசு உட்பட...) ...

இந்தோனேசிய ஒபன் - இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் சாம்பியன்





நாம் எல்லோரும், 20/20 உலக கோப்பை கிரிக்கெட் பற்றியும், இந்தியாவின் பொறுப்பற்ற ஆட்டத்தால் சூப்பர்-8 கட்டத்தில், ஒரு போட்டி கூட வெற்றி பெறாமல் இந்தியா போட்டியை விட்டு வெளியேறிய நிலையையும், பாகிஸ்தானுக்கு பதில் இலங்கையே கோப்பையை வென்றிருக்கலாம் போன்ற விஷயங்களையும் விவாதிக்கும் இந்த வேளையில், இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் ஒரு சூப்பர் உலக சாதனையை செய்துள்ளார். அது இந்தோனேசிய ஒபன் சாம்பியன் ஆனது.

முதலில் அவருக்கு, நம் வாழ்த்துக்கள். இது போல், மேலும் பல சாதனைகள் சாய்னா நெஹ்வால் படைக்க நாம் அனைவரும் ஒன்றுகூடி அவரை வாழ்த்துவோம்.

இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் சாய்னா நெஹ்வால், இந்தோனேசிய ஓபன் பட்டத்தை வென்று, சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை லின் வாங்கை வீழ்த்தி அருமையான வெற்றியைப் பெற்றுள்ளார் சாய்னா.

இன்று நடந்த இறுதிப் போட்டியில், சாய்னா, 12-21, 21-18, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

49 நிமிடங்களில் இந்தப் போட்டி முடிவடைந்தது.

இதுவரை உலக அளவில் எந்த வீராங்கனையும் இவ்வளவு சிறப்பாக ஆடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாய்னாவிடம் தோல்வியுற்ற வாங் உலக அளவில் 3வது ரேங்க்கில் இருப்பவர். இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் உலக அளவில் 8வது ரேங்க்கில் இருக்கிறார்.

அவருக்கு மீண்டும் ஒரு முறை நம் மனமாந்த வாழ்த்துக்கள்.

(நன்றி : தட்ஸ்தமிழ்.காம்)

(டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும், பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் போல் சிறப்பாக ஆடி, இந்தியாவுக்கு பல வெற்றிகளை தேடி தரவேண்டும் என்பதே விளையாட்டில் ஆர்வமுள்ள நம் அனைவரின் ஆசையும்............)

மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 5)

பளபளக்கும் கிரானைட் தரை. தயங்கும் கால்களோடு அந்த குடியிருப்பில் உள் நுழைந்து சென்றால் லிப்ட் தானியங்கி கதவு எங்களை அனுமதித்து மூடி கொண்டது. அறையின் வாயிலில் குர்ரென்று ஒரு சத்தம். குளு குளு பெட்டியில் இருந்து (கேப்டன் பாஷையில் சொன்னால் ஐஸ் பொட்டியில் இருந்து).

பூட்டிய கதவின் அருகில் ஒரு கடையே வைக்கும் அளவுக்கு செருப்புக்கள். இடம் இல்லாதது ஒரு காரணம் என்றாலும், வெளியில் போட்ட செருப்பு காணாமல் போகாததன் நற்பண்பும் குறிக்கப்பட வேண்டும். கதவு திறந்ததும் குளிர் காற்றோடு குப்பென்று ஒரு மணம். நல்லதா கெட்டதா என்று இனம் பிரிக்க முடியாத மணம். புழுங்கிய துணியின் மற்றும் வியர்வையின் கூட்டணியில் துர்வாடை, செண்ட் போலே நறுமணம் என்று கலவையான மணம்.

சிறிய அறை. சுமாராக பத்துக்கு பத்து இருக்கலாம். அதில் மேலும் கீழுமாய் அடுக்கி வைத்த கட்டில்கள். அட, இது என்ன கலாட்டா. படுப்பது மட்டுமே போதுமா. வீடு என்றால் படுக்க மட்டுமா, உட்கார வேண்டாமா, சமைக்க வேண்டாமா, படிக்க வேண்டாமா, ஊரில் டென்ட் கொட்டகையில் பார்த்த அடிமை பெண் படம் ஞாபகம் வந்து சென்றது.

நிமிர்ந்து நிற்க முடியாமல் படுத்து கொண்டோ குனிந்து உட்காந்து கொண்டோ இருக்கலாம். இப்படி முதுகு எலும்பை தொலைத்து கூனி குறுகவா நாம் அந்நிய நாடு வந்தோம். சுய புலம்பலை பின்னுக்கு தள்ளி விட்டு மேலே தொடர்வோம்.

அறைக்குள் ஒரு பார்வை. ஐந்து-ஆறு ஜீவன்கள் அந்த அறைக்குள்ளே. சில பேர்கள் போர்வைக்குள் காணாமல் போயிருந்தார்கள். அதிர்ந்து பேசமால் படுத்து கொண்டு தொலைக்காட்சிகளில் ஓடும் வடிவேல் காமெடி சி.டி நூறு முறைக்கும் மேலாக பார்த்து இருந்தாலும் இப்போது தான் புதுசாய் பார்ப்பது போல் சுவாரசியமாக சிரித்து கொண்டு இருந்தார்கள். பின்னே, இங்கே இவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கே இது மட்டும்தானே?

ஒரு கட்டில் தான் நம் ராஜாங்கம். காலுக்கடியில் அமுத்தி அடுக்கிய பெட்டியிலே தான் நம் உடைமைகள். அவ்வளவு தான் அந்நிய தேச வாழ்க்கை.

இந்த ஐந்து-ஆறு ஜீவன்கள் இருக்கும் அறைக்கு ஒரே குளியல் அறை. இதிலே விஷேசம் இப்போது இல்லை. விடியற்காலையில் தான். ஏறக்குறைய எல்லோரும் ஒரே நேரத்தில் கிளம்ப வேண்டும் என்பதால் காலை கடன் முடித்து குளிக்க ஒவொருவருக்கும் கால அட்டவணை கொடுக்கப்படும். ரூமின் தாதா கடைசியில் குளிப்பார். அப்புராணி முதலில் குளிப்பான். அப்புராணிக்கு கொடுத்திருக்கும் நேரம் காலை நாலே முக்கால் முதல் ஐந்து வரை. குளிப்பதற்கு கொடுக்கப்பட்ட அந்த நேரத்திற்குள் சுறுசுறுப்பாய் எழுந்து குளித்து வெளியே வந்த பின் என்ன செய்ய. சரி மிச்சம் இருக்கும் தூக்கத்தை உட்கார்ந்தோ சரிந்து படுத்தோ சரி கட்ட வேண்டும்.

இது ஐந்து-ஆறு பேர் உள்ள அறைக்கு. சரி பல்லாயிரக் கணக்கில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி கொண்ட அமைப்பில் பொது கழிப்பிடங்கள் உண்டு. இங்கு நடப்பது உலக மகா அநியாயம். பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒரே இடத்திலிருந்து புறப்பட்டு, பல்வேறு திசைகளில் இருக்கும் பணியிடங்களை (வேலை செய்யும் இடம்) அடைய வேண்டும். அதற்கு, இவர்கள் தங்கள் குளிக்கும் அட்டவணையை விடியற்காலை நான்கு மணி முதல் போட வேண்டும்.

இந்த இருப்பிடத்தில் இருந்து செல்லும் பெரும்பாலானோர் தங்கள் வேலையின் பொருட்டு அடித்து பிரித்து எடுக்கும் வெயிலின் கொடுமையை அனுபவிக்க வேண்டும். இந்த வருடம் 60 டிகிரி செல்ஷியஸ் அளவு அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்று அமீரக வானிலை மையம் கணித்துள்ளது. . மத்திய கிழக்கு நாடுகளில் பீக் சம்மர் எனப்படுவது ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள்தான். (இந்த வெயிற் கொடுமையில் இருந்து அனைத்து தொழிலாளர்களையும் காப்பாற்று என்று அந்த கடவுளை மனமார வேண்டுகிறேன்).

ஒரு விஷயம் குறிப்பிட்டாக வேண்டும். இந்த ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் தொழிலாளர்களுக்கு கட்டாயமாக பகல் 12.30 - 3.௦௦00 மணி வரை கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும் என்று அமீரகம் ஒரு சட்டமே இயற்றியுள்ளது. மீறும் கம்பெனிகள் மீது பெரும் தொகை அபராதமாக விதிக்கும் சட்டமும் நடைமுறையில் உள்ளது. இருப்பினும் சில கம்பெனிகளின் விதிமீறல் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அபராதம் செலுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள்.

எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் இவர்களுக்கு மாதம் சேமிப்பாக மிஞ்சுவது என்னவோ 5-6 ஆறாயிரம் மட்டுமே. நான் அறிந்து, தன் பெண்ணின் திருமணத்திற்கு கூட போகாத தொழிலாளர்களை அறிந்திருக்கிறேன்.
அவரை கேட்டபோது, நான் ஊர் போய் வரும் செலவை பணமாக அனுப்பினால், ஊரில் வீட்டார் அந்த பணத்தை தன பெண்ணின் திருமண செலவுக்கு வைத்து கொள்வதாக கூறியதால், இவர் செல்லவில்லை என்று கூறினார். என் மனம் கனத்து, கண்ணில் தன்னிச்சையாக, கண்ணீர் வழிந்தது.

சில ஆயிரம் ரூபாய் சேமிப்பிற்காக இப்படி எத்தனை எத்தனை பேர்கள், தங்கள் ரத்தத்தை வேர்வையாக சிந்தி உள்ளார்கள், சிந்தி கொண்டிருக்கிறார்கள்......... நான் முன்னமே சொல்லியது போல், இங்குள்ள அனைத்து பளபளக்கும் கண்ணாடி கோபுரங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு பின்னாலும், பல லட்சகணக்கான தொழிலாளர்களின் கடுமையான உழைப்பும், ரத்தமும், வேர்வையும் உள்ளன......

இப்போது மறுபடியும் குளியல் எபிசோடுக்கு வருவோம்..... நண்பர் சென்று குளித்த பின் நாம் செல்லலாம். ஒரு வகையில் பஸ்சுக்கு சீட் போட தோள் துண்டு உதவுவது போலே. நண்பர் குளித்து வந்த அறையில் நாம் நுழையலாம். வாய்ப்பு கிடைக்க வில்லை என்றாலோ அசதி மிஞ்சியதால் தூங்கி விட்டாலோ மாலை குளியல் தான்.

சரி, இப்படி ஐந்து-ஆறு பேர் தங்கும் இந்த சிறிய புறா கூண்டுக்கு வாடகை மட்டும் வானளவு. சம்பாதிக்கும் சம்பளத்தில் முப்பது சதவிகிதம் தொடக்கி அறுபது சதவீகிதம் வரை கொடுக்கும் அவல நிலை. இந்த கூத்து அமீரகம் மற்றும் கத்தார் நாடுகளில் மட்டுமே... பஹ்ரைன், சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளில் வாடகை குறைவே. ஊரு உலகத்திலெல்லாம் சர்வதேச அரங்கிலே முப்பதுக்கும் கிழே உள்ள வாடகை செலவு இங்கு மட்டும் என் இவ்வளவு அதிகம். அதற்கும் ஒரு சூட்சமம் உண்டு.

உள்ளூர் பிரஜைகளை காப்பாத்த இந்த ஊர் அரசாங்கம் உண்டாகிய முறை இது. ஊருக்குள்ளே நிலமோ வீடோ வாங்கும் உரிமை இந்த ஊர் பிரஜைகளுக்கு மாத்திரமே உண்டு. நம்மை போல் வெளி தேசத்தவர் வாங்க என்று ஊருக்கு ஒதுக்குபுறமாய் சில ப்ரீ சோன்ஸ் மட்டுமே. அங்கும் நம்மால் தொண்ணூத்தி ஒன்பது வருட லீசுக்கு தான் வாங்க முடியும். அதுவும் வாங்கிய சொத்தை வாரிசுக்கு கொடுக்க முடியாது. இதை செய்வதால் நாம் என்ன சம்பாதித்தாலும் உள்ளூர் ஆள் ஓடாமல் உழைக்காமல் நாம் சம்பாதித்ததையே புடுங்கி கொள்ளும் புத்திசாலித்தனம்.

பெரிதாக புலம்பாமல் அவர்கள் கண்ணோட்டத்தில் பார்த்தால் இது போலே சில சட்டங்கள் இல்லை என்றால் இருபதுக்கும் குறைவான சதவிகிதத்தில் உள்ள உள்ளூர் ஆட்களை எப்படி பாதுகாப்பது. எண்ணிகையில் அதிகம் உள்ள அந்நிய தேசத்தார் இவர்களை நாட்டை விட்டு விரட்டி விடும் சூழலும் சிந்திக்க வேண்டும் அல்லவா.

வீட்டில் பெட்டி படுக்கை வைத்து விட்டு கிள்ளும் வயிறின் சீற்றம் அடக்க உணவு விடுதி வரை செல்லலாம் வாருங்கள்.

உலகின் உள்ள அதனை உணவும் கிடைக்கும். அரேபிய ஐரோபிய இந்திய இன்னும் பிற நாற்றம் பிடித்த என்று எல்லாம் கிடைக்கும்.

இந்திய உணவுகளிலே சேர நாடு உணவு முறை தான் இங்கே பிரபலம். நம் ஊரில் காணமல் போன அத்தனை மலையாளியும் இங்கே வந்து உணவுக்கடை (CAFETERIA) தொடங்கினார்களோ என்று தோன்றும். சல்லிசான விலையில் விரைவான சேவையில் கொஞ்சம் சுத்த குறைவோடு உணவு கிடைக்கும்.

ஒரு சிறிய தட்டில் மீன் பொறித்து பெயருக்கு ஒரு காய்கறி, கூட்டு, ஊறுகாய், ஒரு பப்படம். இது யாவருக்கும் பொது. பெரிய தட்டில் நிறைத்து சோறு. அதில் தான் பாகுபாடு.

உணவு உட்கொள்ள சென்றால் உங்களுக்கு இரண்டே சாய்ஸ் தான். மோட்டா அல்லது பாரிக். வட மொழியில் புழுங்கல் அரிசியும் பச்சை அரிசியையும் குறிக்கும் சொற்பதங்கள் தான் லோக்கல் மெனு.

புலால் உண்ணாத சைவ சாப்பாட்டுக்கு பெரிய மரியாதை இந்த மலையாளி கடைகளில் இருப்பதில்லை. சைவம் சாப்பிடுபவர்களின் ஒரே புகலிடம் நம் ஊருக்கு பரிச்சயமான சரவண பவன்களும் அன்னபூர்னாக்களுமே. விலை கொஞ்சம் அதிகம். இததனை விலை கொடுத்து வாங்கிய உணவு வயிற்றில் சங்கடமே ஏற்படுத்தும்.

(இன்னும் வரும்........................)

மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம்- (பாகம் - 4)

(நான்காம் பகுதி பதிப்பதில் உள்ள தாமதத்திற்கு வருந்துகிறேன்.
இனி தொடர்ந்து வரும், வாருங்கள்). ஐந்தாம் பாகம் விரைவில் ............

மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 4)

விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வந்தாச்சு. கிரிச்சிட வந்து நின்ற சாலையில் உயரமாய் அந்த குடியிருப்பு. பளபளக்கும் கண்ணாடி சுவர்கள், வானை முட்டும் உயரம். ஐம்பது மாடி, நூறு மாடி எல்லாம் இங்கே ரொம்ப சாதாரணம்.

இங்கா நாம் குடி இருக்க போகிறோம். மனது ஒரு குத்தாட்டம் போடும். ஓலை கூரைகளையும், ஓட்டு வீடுகளையும், அரிதாய் காணும் மச்சு வீடுகளையும் பார்த்த கண்களுக்கு தீப்பெட்டி அடுக்கி வைத்தது போலே உள்ள இந்த கண்ணாடி கோபுரங்கள் பெரும் பிரமிப்பு தரும்.

அது மக்கள் குடியிருக்கும் ஒரு பகுதி. சாலையில் நிறைய மனிதர்கள்.
இந்தியர்கள் பெரும்பாலும் பரவலாக காணப்பட்டார்கள். குறிப்பாக கேரளத்தை தவிர மத்திய கிழக்கு நாடுகள் எங்கும் நிறைந்து இருக்கும் மலையாளிகள் நிறைய. இவர்களை பற்றி தான் நம் எல்லோருக்குமே தெரியுமே, என்பதால் கண்ணில் பட்ட மற்றவர்களை பற்றி பாப்போம். சுத்தி முத்தி எல்லாரோயும் நோட்டம் விட்டு லேசாய் பார்ப்போம்.

தொள தொள பாவடை போலே உடை அணிந்து - அழுக்காய்... குளித்து முகம் சவரம் செய்தால் அட்டகாசமாய் இருப்பான் என்பதாய் சில பாகிஸ்தானியர்கள், கொஞ்சம் கூட லஜ்ஜை இல்லாமல் காலைக்கடன் கழிக்கும் அதே நிலையில் - பாதம் நிலத்தில் பட குத்த வைத்து உக்காந்து இருந்தார்கள். இவனக்கு மட்டும் எப்படி இது சுலபமா இருக்கு என்று கேள்வி வரும். நமக்கு எல்லாம் ஐந்து நிமிடம் உட்கார்ந்தாலே கால் மரத்து இடுப்பு புடிச்சிகிதே.

சிக்கென்று சீமான் போலே உடை அணிந்து மஞ்சளாய் சில பிலிப்பினோக்கள் (பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள்). ஒடுங்கிய தேக அமைப்பு. மூக்கு மட்டும் கொஞ்சம் சப்பை. படைத்து விட்டு ... ஆஹா நல்லா இருக்கே என்று இறைவன் முகத்தை அழுத்தி பிடித்திருப்பாரோ என்று தோன்றுகிறது

உரக்க ஒலிக்கும் எம்.பி.த்ரீ-யோடு எனக்கும் இந்த உலகத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பதாய் அந்த பிலிப்பினோ சகோதரர்கள் சகோதரிகள். எல்லாம் நல்லது தான். அவன் சமைக்க ஆரம்பித்தா எட்டு ஊர் நாறும். நடப்பது, மிதப்பது, பறப்பது என்று எதை கொடுத்தாலும் சாப்பிடுவான். அவனுக்கு நம்மை (இந்தியர்களை) அவ்வளவு பிடிப்பது இல்லை. சுத்தக் குறைவு, மேனி பராமரித்தால் சரி இல்லை என்று ஆயிரம் காரணம் சொல்லுவான்.

அவன் மொழியில் ஆங்கில லிபிகளே. படிப்பதற்கும், எழுதுவதற்கும் ஆங்கில எழுத்துக்களே. சுருக்கமாய் சொன்னால் நாம் கூட அவன் மொழி எழுத வாசிக்க முடியும், ஆனா அர்த்தம் மட்டும் ... அஸ்கு புஸ்கு தான். அவன் ஆங்கில ஐம்பத்தி ஐந்தை (55) பிப்டி ப்பை என்று சொல்லும் அழகு கேட்கும் போது நாக்கை இழுத்து வைச்சு வசம்பு தேய்க்கலாமோ என்று தோன்றும்.

எளிதில் உணர்ச்சி வசப்படும் கூட்டம். சட்டென கோபப்பட்டு விடுவார்கள். பக்கத்திலே போனா கடிச்சு வைச்சிருவான் என்று யாரும் அவ்வளவு பக்கத்தில் போனது இல்லை. எதுக்கு வம்பு !!!

ஓங்கு தாங்காய் கோதுமை நிறத்தில் அரபி மொழி பேசும் சில அண்டை நாடு காரர்கள். வாய தொறந்தா மூடுறது கஷ்டம். சும்மா பேச சொன்னா கைய கால நீட்டி ஒரு கரகாட்டமே ஆடுவான். கைய காலை கட்டி போட்டுட்டு பேச சொன்னா அவனால முடியாதுன்னே தோணுது.

எண்களை கண்டுபிடித்து எங்களுக்கு சொன்னதும், உருவாக்கி கணிதத்துக்கு கொடுத்ததும், மம்மி என்று சடலத்தை பிரித்து மேய்ந்து புதைத்தும் ஆன இந்த புத்தி சாலி பரம்பரையா இவர்கள் என்று ஆச்சரியம் மேலோங்கும். இன்று அவர்கள் புத்தி கூர்மை அவ்வளவு இல்லையே ஏன் என்று கேள்வியும் உடன் வரும்.

கொஞ்சம் உஷாரா இத்த கேளுங்க. உங்கள பார்த்த உடனே பக்கத்திலே வந்து மூஞ்சி கிட்ட குனிஞ்சி மூக்கோட நுனிய வைச்சி உங்க மூக்கு நுனிய தேய்ப்பான். தப்பா நினைக்காதீங்க அந்த நாட்டு பழக்கம் அது.

அப்புறம் தொடங்குவான் அவன் கூத்தை. இந்த அரபி கலாச்சாரத்திலே இது ஒரு நொம்பலம். யாரு எப்போ எங்கே பேச தொடங்கினாலும் உடனே பேச மாட்டாங்க.

வணக்கம்....
நல்லா இருக்கியா ....
வேலை எப்படி இருக்கு....
இப்படி குலம் கோத்திரம் விசாரிச்ததுக்கு அப்புறமா தான் பேச ஆரம்பிப்பான்.

வீட்டுள்ளே அடங்கி ஒடுங்கி இருக்காம என் இப்படி எல்லா பயலும் வெளிய நிக்கிறான் என்று ஒரு கேள்வி. அதற்கு விடை தர நாம் மெல்ல நகர்ந்து குடியிருப்பின் உள்ளே செல்ல வேண்டும்.

வாருங்கள். ...................

மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 3)






நம் விசா வந்து விட்டதா இல்லையா என்ற படபடத்த நெஞ்சத்துடன் ஏஜண்டை கேட்ட போது, விசா வந்து விட்டதாக சொன்னதும் மனதார அனைத்து கடவுளுக்கும் நன்றி சொல்லி பயணத்திற்கு தயாராகினேன்.

ஏர்போர்ட் அடைந்து, அங்கிருக்கும் அனைத்து விஷயங்களையும் முடிக்கும் முன் நாக்கில் நுரை தள்ளிவிட்டது. எத்தனை எத்தனை கேள்விகள்... எத்தனை எத்தனை சோதனைகள் .........

அனைத்து சோதனைகளும் முடிந்து, விமானம் உள்ளே ஏறி அமர்ந்ததும், கண்ணில் அவனை அறியாமல் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

இப்போது அயல்நாடு போனால், தன் சுற்றம், சூழத்தை பார்க்க, எப்போது திரும்பி வருவோமோ?? என்றெல்லாம் எண்ணியது மனது.

விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு கிளம்பியது. சொசுசான விமான பயணம். வண்டி போற மாதிரியே தெரியலையே நம்ம ஊரு பல்லவன் பஸ் 40 கிலோமீட்டர்ல போற போது எப்படி இருக்கும். தூக்கி தூக்கி போடும், சிவ்வுன்னு காத்து அடிக்கும். ஆனா, இது 400 கீமி வேகத்திலே போனாலும் ஒண்ணுமே தெரியலையே... ஒரு சத்தம். வயித்து வலி வந்தா முச்சு பிடிச்சு விடுற மாதிரி ஒரே முக்கல்.... அதே முக்கல்தான் கடைசிவரை.

வந்து இறங்கி தலை நிமிர்த்தி பார்த்தால் என்ன இது, விமான நிலையமா இல்லை இது தான் சொர்க்கபுரியா??. ஆச்சரியத்தில் விரிந்த வாயில், ஒரு நூறு ஈ போய் வந்தால் கூட தெரியாது. என்ன ஒரு வாசனை, சுத்தம் என்று நாட்டின் மதிப்பை இந்த இடத்தை வைத்து மனம் எண்ணி கொள்ளும்.

நாம் அதிர்ஷ்டசாலி என்று உள்ளுணர்வு கூக்குரல் இடும். மிக உயர பறந்து வந்ததால் காது லேசாய் அடைத்து, வயிறு லேசாய் குழம்பி, அசதி சேர்ந்து உடல் சற்று அவஸ்தையாய் இருக்கும்..

புரியாத மொழி, மனிதர்கள், நடப்புகள் என்று எத்தனை படித்தவர் ஆனாலும் சிறு பிள்ளை போல் திருவிழா கூடத்தில் தொலைந்த தோரணையில் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய வேண்டி இருக்கும்.
சவுதி அரேபியா அளவு (போதை மருந்து கடத்தலுக்கு மரண தண்டனை)இல்லையென்றாலும், துபாயிலும், போதை மருந்து வைத்து இருந்தாலோ, கடத்தினாலோ, பெருங்குற்றம். ஆயுள் தண்டனை நிச்சயம் (நம்மூர் போல் 14 வருடங்கள் இல்லை, இங்கு ஆயுள் தண்டனை என்பது 25 வருடங்கள்).

முதல் அதிர்ச்சி, மத்திய கிழக்கு நாடுகளின் வெப்பம் தான். வெயில் காலத்தில் வந்து இறங்கும் அத்தனை பேருக்கும் இந்த அதிர்ச்சி உண்டு. இத்தனை சூடும், இதனை பளீர் என்று சூரியனும் நாம் பார்த்திராதது. கண்கள் இந்த பளீர் ஒளி கண்டு அனிச்சையாய் மூடி கொள்ளும். தோல் இந்த சூடு பார்த்து லேசாய் சொரியும். இந்த அசௌகரியங்களையும் மீறி ஊரின் பணம் பளபளப்பு தெரியும்.

வழுக்கி ஓடும் சாலைகள் மிக பறந்து விரிந்து பிரமாண்டமாய் இருக்கும். இது தாரில் செய்த ரோடா அல்லது பளிங்கில் செய்ததா. ஒரு குண்டு, குழி இல்லையே?? இங்கேயே இல்லை விரித்து, கல்யாண பந்தி போடலாமே??

மிக நேர்த்தியான கார்கள். நம் ஊரில் சொகுசு கார் என்று நாம் சொல்லிய டப்பா வண்டிகள் (கரகாட்டக்காரன் படத்தில் வருவது) போல் இல்லை. ஆடாமல் அசையாமல் படகு போல் மிதந்து செல்லும் குளு குளு வண்டிகள்.

இங்கு ஓடும் வண்டிகளில், ஜப்பான் வண்டிகளுக்கே முதலிடம்.. நல்ல வண்டிகளாக இருந்தாலும், ஐரோப்பிய வண்டிகளின் விலையும், ஓடும் எண்ணிக்கையும் குறைவே. இல்லை என்று சொல்லமால் நம் ஊர் பியட் கார் ஒன்று ஐந்து வருடத்திற்கு முன்னால் ஓடி கொண்டு இருந்தது.. இப்போது அது இல்லை. மஹிந்திரா, ஹுண்டாய் வண்டிகள் சொற்ப அளவில் ஓடுகிறது.

ஒட்டு மொத்த துபாயை பார்த்தால், மிக மிக சிறிய ஊர்தான். சென்னையின் டி.நகர் (T.NAGAR) அளவுதான் இருக்கும்.. இதை படிக்கும் போது, மிகைப்படுத்திய வாக்கியம் என்று நினைக்க வேண்டாம்.

எங்கெங்கு காணினும் ஒருவர் மட்டுமே ஒட்டி செல்லும், படகு கார்கள். ஏனெனில், இங்கு பெட்ரோல் விலை, குடிநீர் விலையை விட குறைவு. பஸ்கள் குறைவு, சாமான்கள் ஏற்றி செல்லும் வாகனங்களும் குறைவு. நகரத்தின் சாலை நெரிசலுக்கு இதுவும் ஒரு காரணம். இதில் ஆச்சரியம் என்னவென்றால், சாலை விஸ்தரிப்புகள் நடந்து கொண்டே இருக்கிறது.

சரி, சாலை வழி கடந்து, தங்குமிடம் வந்து சேர்ந்து விட்டோம். என்ன, அந்த பிரம்மாண்டம் மட்டும் இன்னும் மனதிலும், கண்ணிலும் தேங்கி இருக்கிறது.

இங்கே என்ன !! .............

மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 2)








அன்னிய தேசம் வந்து திரவியம் தேடும் ஆசையில் தங்கள் வாழ்வை தொலைத்த எத்தனையோ கண்ணீர் கதைகள் உண்டு.

கட்டிக் கொடுத்து கரை ஏத்த இரண்டு பெண்கள், சரியான படிப்பு இல்லை, வேலையும் இல்லை. இனி என்ன செய்யலாம் என்று திகைத்த போது,வாழ்வே கேள்வி குறி ஆனது. சமுகத்தின் கேலிப் பேச்சு இதயத்தை துளைக்கும்.

அக்கம் பக்கத்து வீட்டு அனுபவம், தீர்வு போலே தோன்றும். எங்க பையன் துபாய்ல வேலை செய்யறான், மாசத்துக்கு இத்தனை பணம் அனுப்புரான் என்பது போன்ற நம்பிக்கை வார்த்தைகள்.

அப்படியா !!! வாழ்வு சிறிது நம்பிக்கை தரும்.

சரி எப்படி போவது. எவ்வளவு பணம் வேண்டும், பார்ப்போம்.....அங்கும், இங்கும், இங்கும், அங்கும் சுற்றி ஒரு வழியாக ஒரு பயணத் தரகர் அறிமுகம் கிடைத்துவிடும். அவரின் அலுவலகத்தின் உள்ளே போகும்போது, ஏதோ சொர்க்கத்தின் கதவுகளையே திறந்து கொண்டு போவது இருக்கும்.

ஆச்சரியம், பிரமிப்பு...... இந்த அலுவலகத்தின் வாசலை மிதித்த எத்தனையோ ஆயிரம் பேர், இப்போது, உங்களின் பல பகுதிகளிலும் பறந்து விரிந்து காணப்படுவார்கள் என்றெல்லாம் எண்ணியபடி.

அவரது குளுகுளு அறையும்,சுவரில் உள்ள ஆகாய விமான படமும், தலை சுற்றி ஏதோ ஒரு உலகுக்கு இழுத்து செல்லும்.

அது ஏன், என்னன்னு தெரியல எல்லா ஏஜெண்ட் ஆபிஸ்லயும் ஒரு பொம்மை விமானம் இருக்கும். … வரவேற்பறையில் கூட்டமாய் சில மனிதர்கள். நம்பிக்கை முகத்தில் ஒளிர் விட உலகையே வென்ற தோரணையில் அங்கே அமர்ந்திருக்கும் பயணம் செய்ய காத்திருக்கும் கூட்டம். இந்த கூட்டத்தில் நிச்சயம் ஒரு ப்ரஹஸ்பதி இருப்பார். அவர் முன்னமே இது போல் பல நாடுகள் சுற்றிய உலகம் சுற்றும் வாலிபர்.

அவர் அளந்து விட்ட கதைகள் நாம் முந்தைய பாகத்தில் விவாதித்தது. எது... பெட்ரோலும், பிரியாணியும். விசா, இக்காமா என்று புதிய வார்த்தைகள் சொல்லி மசாலா தடவி… போட்டு தாளிப்பார். நாடுகளை பற்றியும், நடப்புகளை பற்றியும் விளக்கம் தந்து பாடம் எடுப்பார். வேறு வேறு நாட்டின் பல காசுகளை (நோட்டையும் தான்) எடுத்து காண்பிப்பார். இந்த ரூபாய் ஒண்ணு குடுத்தா, நம்ம ஊர்ல, 10 ரூபாய், இதோ இருக்கே, இத குடுத்தா, நம்ம ஊர்ல, 130-140 ரூபாய் என்று ..........

சரேலென, சட்டை பையில் கை விட்டு, பாரின் சிகரெட் எடுப்பார். ஸ்டைலாய் பத்த வைத்து, நமக்கும் தானம் செய்வார்.

ஊரில் செய்யது பீடி குடித்தவர் சொல்லுவார், இப்போல்லாம் அது என்னவோ, "பாரின் சிகரெட் தான் ஒத்துக்குது. இல்லேன்னா, தொண்டை பிடிச்சிகுது". கனவுகளோடே இவன் சிகரெட் பிடிப்பான். துளைத்து துளைத்து கேள்விகள் கேட்பான். அவர் சட்டை பையில் திருப்பி வைத்த, அந்த நோட்டுக்களையே பார்த்து கொண்டிருப்பான். அவன் மனதில் தோணும் .....நாமும் இதுபோல் நிறைய சம்பாதிக்கணும் .........

உள்ளே சென்றால் ஏஜெண்ட், முக்காலே மூணு வீசம் தொலைபேசியிலே பேசுவார். நமக்கு சொல்ல விரும்பும் சேதிகளை அவர் போனில் பேசுவார். (இந்த காட்சி நம் கவுண்டமணி சூரியன் படத்தில் பேசும் டகால்டி தொலைப்பேசி காட்சி போலவே இருக்கும்). ஆனாலும், ஒட்டு கேட்டது உண்மை என்று நம்பியும் விடுவோம்.

நாம் அவரை உன்னிப்பாக கவனிக்கிறோமா என்று ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, தாறுமாறாக, என்ன என்னவோ பேசுவார். "நாளைக்கு ஐம்பது பேர் சவுதி போயி ஆகணும், .... என்னது, விசா கிடைக்காதா, ஹலோ, கிடைக்கலேன்னா, சவுதி ராஜா கிட்ட சொல்லு, கொல்லிமலை சோலமலை சார் கண்டிசனா சொல்லிட்டாருன்னு... ஆமா .... நாளைக்கே வந்தாகணும் ....... ஊர்ல எல்லாரையும் நாளைக்கே வர சொல்லிட்டோம்ல .....நமக்கு ஒரு நாக்கு ஒரு வாக்கு." அது என்னிக்கும் மாறாது....

அவர் பேச்சு இன்னும் தேன் தடவியது போலே இருக்கும். தம்பி, இப்போ நீங்க குடுக்கற இந்த பணம், செலவு இல்ல, முதலீடு என்று ("சிவாஜி"யில் நடிகர் சுமன் சொல்வது போல) .. ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், பயணம் நிச்சயம். ஊருக்கு போன 8-10 மாசத்துலயே அந்த லட்ச ரூபாய் சம்பாதிச்சுடலாம். நாளைக்கே பணத்தோடு வந்துடுங்க...... அடுத்த பேச்சுல (BATCH) அனுப்பிடறேன்.

அப்புறம் என்ன, பளபளப்பாய் உடை அணியலாம், பாரின் செண்ட் போடலாம். விதம் விதமாய் உண்ணலாம். சமுதாய மதிப்பு பெருகும். வீட்டின் கடன்களும், கடமைகளும் ஒரு ஐந்து வருடத்தில் முடித்து விடலாம். இதை விட வேறு என்ன வேண்டும். லேசாக கண்ணை மூடினால், புகையுடன் கூடிய கனவுதான்...........

இது போக, ஒரு 1-2 வருசத்துல, ஊருக்கு திரும்பி வந்தீன்னா, ஊர்க்கார பய அம்புட்டு பேரும், தன் பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ, கல்யாணம் பண்ணிக்கோன்னு வரிசைல வந்து நிப்பானுவ. இப்படி, கல்யாண பேச்சை கொணர்ந்து, பையனை வளைத்து விடுவார். பையனின் முகமும் 100 வாட்ஸ் பல்ப் போல பிரகாசமாகும். இதையும் கவனித்து, பையனுக்கு இப்போவே கல்யாண களை வந்துடிச்சி என்று சொல்லுவார்.

அதே மப்பில் திரும்பி வந்து, கடனை, உடனை வாங்கி, காடு கரையை வித்து, எப்படியோ பணம் தேத்தி, பாழாய் போன ஏஜெண்டிடம் தந்து ஏமாந்தவர் நிறைய பேர்.

'எனக்கு அப்பவே தெரியும் இதெல்லாம் பாரின் போற மூஞ்சியா' என்ற பொறாமையின் உச்சகட்ட வசவுகளையும் கேட்டு வாடிய மலர்கள் பல.

இதை விட கொடுமை. பயணம் எல்லாம் ஏற்பாடு ஆகி வீட்டில் எல்லாம் பிரியாவிடை பெற்று ஜம்மென்று கிளம்பி விடுவார். "இன்னைக்கு சென்னை பம்பாய் ப்ளைட், நாளை மறுநாள் பம்பாய்ல இருந்து நேர பாரின்".

இதை கேட்டதும், அன்றைய ராத்தூக்கம் போச்சு. தன் மனதுக்கு பிடித்த, நடிகைகள் கனவில் (இது கண் முழித்தே காணுவது) வந்து, நம் நாயகனின் கை பிடித்து டூயட் பாடுவார்கள்.

சில சமயம் நடப்பது என்னவோ பம்பாய் சென்று மாத கணக்கில் காத்திருக்கும் கொடுமை உண்டு. அங்கேயும் நிறைய நம்மை போலவே ஆட்கள் உண்டு. காலை விடிந்தால் இன்று விசா வரவேண்டும் என்று பிரார்த்தனைகள்.

போயிட்டு வாரேன் என்று சந்தோசமாய் சொல்லி விட்டு செல்லும் பக்கத்து அறை தோழன் . இவன் இன்று நான் என்று என்ற ஏக்கம். இந்த நிச்சயமிலாத நரகத்தில் வாழ்ந்த நிகழ்வுகளும் உண்டு.

ஒரு வழியாக விசா வந்துவிடுகிறது. ஆனால் ...............

(தொடரும்.........)

மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 1)








துபாய்.

இது என்ன ஒரு ஊரின் பெயரா, இல்லை ஒரு நாட்டின் பெயரா. ஒரு வட்டாரத்தின் பெயரா என்ற தெளிவு இல்லாது, பெயர் சொன்னதுமே மனதில் மரியாதை. கொப்பளிக்கும் மகிழ்ச்சி. ஒரு சொர்க்க புரி கண்ணில் விரியும்.

ஐக்கிய அரபு நாட்டில் உள்ள ஒரு ஊர் தான் துபாய் என்றால் நிறைய பேருக்கு தெரியாது. அதிலும் குறிப்பாக கிராமங்களில் உள்ள மக்களுக்கு, குவைத், சவுதி என்ற மத்திய கிழக்கு நாடுகள் எல்லாமே கூட துபாய் தான்.

சரி, இது என்ன புது பெயர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

அபுதாபி (தலைநகரம்) துபாய், சார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராஸ் அல் கைமா (நம்மூர் மட்டன் கைமா அல்ல), புஜைரா, அல் அய்ன் என்று நம் தமிழ் வாயில் நுழையாத அரபி பெயர்களை கொண்ட 7 குட்டி ஊர்கள் சேர்ந்த நாடே அமீரகம் என்றும் அழைக்கப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

இந்திய தேசத்திற்கு மட்டும் அல்லாது வெள்ளைக்காரனுக்கும் இந்த ஊர் பிடிக்கும். இந்த ஊரை பற்றி மரியாதையான ஒரு எண்ணம் உண்டு. வெள்ளைக்காரன் என்ற ஒரு சொல்லிலேயே, ஐரோப்பிய, சீன, மங்கோலியா வழிவகைகள் அனைத்தையும் அடக்கி விட்டேன்.

நம் தங்க தமிழ்நாட்டிலே "துபாய்" என்ற பெயருக்கும், இங்கிருந்து வாங்கிப்போகும் தங்கத்திற்கும் கொஞ்சம் (ரொம்பவே) மவுசு உண்டு. இதுவே எல்லை தாண்டி சேர நாடு (கேரளா) சென்றால் இன்னும் மவுசு, உபரியாய் பவுசு, சொகுசு எல்லாம் கிடைக்கும். சற்று மேலே நகர்ந்து வடநாடு சென்றால்... சாரி அவ்வளவு இல்லை.

துபாய் பற்றி நமக்கு தெரிந்தது, இந்த துபாய் சென்று திரும்பி வந்த சில "தலைகள்" சொன்னது. அவர்கள் சொன்ன செய்தி கேட்டு, நாம் கூட பல சமயங்களில் அதிசயித்து இருக்கிறோம்.

போய் கொண்டே இருப்போம். பெட்ரோல் காலி ஆச்சுன்னா ரொம்ப கவலை பட மாட்டோம். சரின்னு சொல்லி வண்டிய நிறுத்திவிட்டு ஒரு தண்ணிர் பாட்டில எடுத்துட்டு, ரோட்டோரமா போய், மண்ணை தோண்டி பெட்ரோல் எடுத்து ஊத்தி வண்டியை ஓட்டிடுவோம்.

இதை அட்டகாசமாக நாம் அனைவரும் நம்பும்படி சொன்ன அதிபுத்திசாலி என்ற "அதிமேதாவி அங்குராசு" போன்றவர்களை உங்களுக்கு நிச்சயம் வேறு பெயரில் வேறு ஒரு நிகழ்வில் பரிச்சயம் இருக்கும்.

இன்னொரு விஷயம், இங்கு டீக்கடைகளில் எல்லாம் ஒட்டகப்பாலிலே தான், டீயே போடுவார்கள் (இது வடிவேலு, ஒரு படத்தில் சொன்ன டகால்டி), ஆனால், உண்மையில் பல அங்காடிகளிலே ஒட்டகப்பாலை பார்த்து இருக்கிறோம், அவ்வளவுதான், பருகிய அனுபவம் இல்லை.

எங்க ஊரு மச்சான் சொன்ன கதை இது. "இங்கே சாப்பாடு எல்லாம் பைப்புல வரும். ஒரு பைப்பு தொறந்தா பிரியாணி வரும், இன்னொரு பைப்பு தொறந்தா சாம்பார் சாதம் வரும்" என்று என் பொறாமை தீயை தூண்டியதும் அல்லாமல், "மட்டன் பீசு சிக்கிக்காது" என்ற போது "அது பெரிய பைப்பு" என்ற டகால்டி எல்லாம் நமக்கு அறிமுகம்.

இறை அருளால் துபாய் மண்ணை நேரில் பார்த்து, அங்கேயே வருடங்களாய் வாழும் பாக்கியம் வாய்த்ததால், பெட்ரோல், பிரியாணி தவிர வேறு பல விஷயங்களை பற்றியும் நேரடி தகவல் தர ஆசையும், அக்கறையும் உண்டு.

இத்தகைய தாக்கம் ஏன் வந்தது.

உள்ளுரில் விலை போகாத சரக்கு, துபாய் வேலை வாங்கி அரபு மண்ணில் கால் பதிக்கும். வெப்பக்காத்து காதை உரச, சாதிக்கும் மற்றும் பாதிக்கும் சில பல, பல, சில விடயங்களை இங்கு பட்டியல் இடுகிறேன்.

***************

முதலில், சொல்ல வேண்டுமானால், யார் யார் எல்லாம் இந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு வருகிறார்கள்? எப்படிப்பட்ட வேலைக்கு வருகின்றார்கள்? இங்கு தற்போது நிலவும் சூழல் என்ன? தோள் தட்டி, புஜ பராக்கிரமம் காட்டி புறப்பட்ட அனைவரும், வெற்றி வீரர்களாக தாயகம் திரும்புகிறார்களா? மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இங்குள்ள நிறை மற்றும் குறை என்னென்ன என்ற பல விஷயங்களை விரிவாக பார்க்கலாம்.

சாப்ட்வேர் எஞ்சினியர்கள் எல்லாம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு படை எடுக்கிறார்கள். கட்டுமானம் சம்பந்தப்பட்ட படிப்பாளிகள், மற்றும் கடின உழைப்புக்கு தயாரான உழைப்பாளிகள் துபாய் (யு.ஏ.ஈ. என்ற நாட்டின் ஒரு நகரம்), கத்தார், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு படை எடுக்கிறார்கள்.

(தொடரும் ............. )